Published:Updated:

அரசுப் பேருந்துகளைக் காக்க 10 அதிரடி கட்டளைகள் - கண்டக்டர்களுக்கு கிடுக்கிப்பிடி!

அரசுப் பேருந்துகளைக் காக்க  10 அதிரடி கட்டளைகள்  - கண்டக்டர்களுக்கு கிடுக்கிப்பிடி!
அரசுப் பேருந்துகளைக் காக்க 10 அதிரடி கட்டளைகள் - கண்டக்டர்களுக்கு கிடுக்கிப்பிடி!

நலிவடைந்தநிலையில் இருக்கும் அரசுப் பேருந்துக் கழகங்களை மீட்டெடெடுப்பதற்காக, பயணச்சீட்டு வருவாயில் தீவிர கவனம்செலுத்த அரசுத் தரப்பில் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக என்னென்ன செய்யலாம் என ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்தின் சார்பிலும் செயல்திட்டத்தை உருவாக்கி அரசுக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிதிநிலை மிகவும் பலவீனமாகவே இருந்துவருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெறும் ஊழியர்களுக்கான இறுதிப் பணப்பயனைக்கூட அளிக்கமுடியாத அளவுக்கு தொடர்ச்சியாக அரசுப் பேருந்துக் கழகங்கள் இழப்பைச் சந்தித்துவருகின்றன. அவ்வப்போது அரசிடமிருந்து சிறப்பு நிதியுதவியைப் பெற்றுதான் அன்றாடச் செயல்பாடுகளை ஓட்டும் நிலைமை உள்ளது. இந்த நிலையில், கழகங்களின் நிதிநிலைமையை மேம்படுத்துவது குறித்து போக்குவரத்துத் துறையின் புதிய செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். 

ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்குவதற்கே பல போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் திணறுகின்றன என்றும் இதற்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு ஜனவரியில் அரசுப் பேருந்துப் பயணக் கட்டணத்தை உயர்த்தியும் அதன் மூலம் வரவேண்டிய வருவாய் இன்னும் வந்துசேரவில்லை என்றும், இதனால் பயணச்சீட்டு வருவாயை அதிகரிக்கவேண்டியது உடனடி அவசியம் என்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாயைக் கூட்டுவது, செலவைக் குறைப்பது, பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது ஆகிய மூன்று அம்சங்களை மையமிட்டதாக, ‘செயல்திட்டம்’ இருக்கவேண்டும் என்று போக்குவரத்துத் துறைச் செயலரின் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு அரசுப் பேருந்துகளுக்கான (தனியாருக்கு அல்ல) பயணக்கட்டணத்தை உயர்த்தியதற்கு முன்னர் இருந்த பயணிகளின் எண்ணிக்கை, தினசரி 25 இலட்சம் பேர் அளவுக்குக் குறைந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதைய நிலவரத்தில் அரசுப் பேருந்துகளில் பயணம்செய்யாமல் இருக்கும் அந்தப் பயணிகளை, மீண்டும் பயணிக்கவைப்பது முக்கியமானது; பயணிகளோடு நேரடித் தொடர்பில் உள்ள பேருந்து நடத்துநர்களின் பணித்தன்மையை மதிப்பீடுசெய்யவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கிளையிலும் நாள்தோறும் பயணச்சீட்டு வருமானம் குறித்து ஆய்வு நடத்தவேண்டும்; மேலாளர், போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், பேருந்துநிலைய நேரக்க்காப்பாளர், வருவாய் எழுத்தர் ஆகியோரைக் கொண்ட குழு இதைச் செய்யவேண்டும். மண்டல அளவில், வணிகப் பிரிவு துணைமேலாளர் தலைமையிலான குழுவினர் அன்றாட/வாராந்திர ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். கார்ப்பரேட் அலுவலக அளவில் கார்ப்பரேட் வணிக மேலாளர் தலைமையிலான குழுவினர் வாராந்திர/ மாதாந்திர ஆய்வுகளில் ஈடுபடவேண்டும். 

இந்த ஆய்வில், நன்றாகச் செயல்படும் நடத்துநர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. பயணிகளை மதிக்காமல், கூட்டமே இல்லாத பேருந்திலும் இருக்கையைவிட்டு நகராமல், பயணிகளிடம் இணக்கத்துடன் நடந்துகொள்ளாமல் இருக்கும் பிரிவினர் மட்டும் கிடுக்கிப்பிடியை எதிர்கொள்ளவேண்டி இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் நடை(சர்வீஸ்) வாரியாக வசூலிக்கவேண்டிய தொகையைத் தீர்மானிப்பது; அதன்படி ஒவ்வொரு நடத்துநரின் கட்டணவசூல் தொகையைக் கணக்கில்கொள்வது, நடத்துநர்களின் வசூல்தொகைக்கு இடையிலான வேறுபாடு, நடைவாரியாக வசூல்தொகை மாறுபாடு, குறைந்தபட்சம் பயணம்செய்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுதல், கூட்டம் அதிகமாக வரும் சமயத்தில் தேவையான பேருந்துகளை இயக்குவது, தனியார் பேருந்துகளின் இயக்கத்தைக் கறாராக கவனிப்பது, வேன், ஆட்டோ, டாட்டா மேஜிக், கார் போன்ற வாகனங்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதை உரிய அதிகாரிகளின் மூலம் கட்டுப்படுத்துவது, பயணச்சீட்டு இல்லாத பயணத்தைத் தடுக்க அடிக்கடியும் சரியாகவும் பரிசோதனைசெய்வது, பயணிகளுடன் நல்லுறவு மேற்கொள்வதற்கான நிகழ்வுகளை நடத்துவது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ஆய்வில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு தொடர்பாக ஊழியர்களுக்கு தொடர்ச்சியாகவும் சீராகவும் பயிற்சி அளிக்கவேண்டும்; விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைத் தவிர மற்ற நீண்ட தொலைவுப் பேருந்துகளின் அதிகபட்ச வேகம் 70 கி.மீ.ஆகவும் நகரப் பேருந்துகளுக்கு 55 கி.மீ. ஆகவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்; ஒரே வகையான பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச்செல்வதைத் தவிர்க்கவேண்டும்; தேவையான ஓய்வு இல்லாமல் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியான பணி வழங்குவதைத் தவிர்க்கவேண்டும்; விபத்தில்லாமல் ஓட்டும் ஓட்டுநர்களின் சேவையைப் பாராட்டி விருதளிக்கவேண்டும்; உயிராபத்து விபத்தை உண்டாக்கும் ஓட்டுநர்களை வேறு கிளைகளுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என்பனவற்றை, அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர்களும் மண்டல மேலாளர்களும் உறுதிப்படுத்தவேண்டும் என்று போக்குவரத்துத் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.