Published:Updated:

தட்டிக் கொடுக்கப்படும் தனியார் நிறுவனங்கள்... இழுத்து மூடும் அபாயத்தில் பி.எஸ்.என்.எல்!

தற்போது இந்திய தொலைத்தொடர்புத்துறை 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் 5ஜி அலைக்கற்றை சேவையை அளிக்கத் தயாராகி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கே இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. அதாவது, அரசாங்கமே அரசு நிறுவனத்தைப் புறக்கணிக்கும் அல்லது சிதைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

தட்டிக் கொடுக்கப்படும் தனியார் நிறுவனங்கள்... இழுத்து மூடும் அபாயத்தில் பி.எஸ்.என்.எல்!
தட்டிக் கொடுக்கப்படும் தனியார் நிறுவனங்கள்... இழுத்து மூடும் அபாயத்தில் பி.எஸ்.என்.எல்!

னது ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை உரிய தேதியில் கொடுக்கத் திணறிய பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனம், 2018 டிசம்பர் மாதம் வரை சுமார் 90,000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அரசு நிதியுதவி அளித்து, இந்த நிறுவனத்தைக் காப்பாற்றாவிட்டால், நிலைமை மேலும் மோசமாகிவிடும் என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேற்கொண்டு நஷ்டத்தைத் தொடராமல் இருக்க வேண்டுமானால், நிறுவனத்தை இழுத்து மூடிவிடலாம் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டுள்ளதால், அதில் பணிபுரியும் ஊழியர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். 

`பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ எனப்படும் பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனம் 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில், 2009-ம் ஆண்டு வரை அந்த நிறுவனம் நல்ல லாபம் பார்த்துதான் வந்தது. அந்த ஆண்டில், வரிக்கு முந்தைய லாபமாக ( EBIT) 1,721.72 கோடி ரூபாயை ஈட்டியிருந்தது. ஆனால், அதற்குப் பின்னர் 2010-ம் ஆண்டு  1,840.7 கோடி ரூபாய், 2011-ல் 6,185.4 கோடி, 2012-ல் 8,636.8 கோடி, 2013-ல் 7603.9 கோடி, 2014-ல் 6,904.6 கோடி, 2015-ல் 8,339.6 கோடி, 2016-ல் 4,272.2 கோடி, 2017-ல் 4,643.8 கோடி, 2018-ல் 8,689.9 கோடி ரூபாய் எனத் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது. 2010 - 2018-ம் நிதியாண்டு வரை 57,117 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைந்து வந்துள்ளது. இதன் காரணமாக, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் `நவரத்னா’ அந்தஸ்தைப் பெற்ற நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்த இந்த நிறுவனம், தற்போது அந்தப் பெருமையை இழந்துவிட்டது. 

நஷ்ட பாதையில் தள்ளப்பட்டது எப்படி? 

2009-ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதிலிருந்தே இதன் நஷ்ட அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது. ``நஷ்டத்துக்கு முக்கிய காரணம், மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி அரசுகள் பின்பற்றிய கொள்கைகள்தான். 2000 முதல் 2009-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம், ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் ஈட்டி வந்தது. அதே சமயம் ஊழியர்களின் எண்ணிக்கை, தற்போதுள்ளதைவிட அதிகமாக இருந்தது’’ என்று சொல்லும் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் துணை பொதுச் செயலாளரான ஸ்வபன் சக்ரபர்த்தி, தற்போதைய ஊழியர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்துக்கும் மேல் என்கிறார். 

2010-ம் ஆண்டு 3ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடந்தபோது பி.எஸ்.என்.எல் நிறுவனம், தான் இயங்கி வந்த 22 சர்க்கிளில் 20 சர்க்கிள்களுக்கான 3ஜி அலைக்கற்றையைப் பெற்றது. இதனால், அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு 10,187 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியதிருந்தது. இதன் துணை நிறுவனமான மஹா நகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் எனப்படும் எம்.டி.என்.எல் நிறுவனத்துக்கும்கூட, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது. இந்த ஏலத்தில் பார்தி ஏர்டெல், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், ஐடியா, வோடஃபோன், டாடா டெலிசர்வீசஸ் மற்றும் எஸ்-டெல் ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பங்கேற்றன. இந்த ஏலம் மூலம் மட்டும் மத்திய அரசுக்கு சுமார் 67, 718. 95 கோடி கிடைத்தன. இதில் 50,968.37 கோடி ரூபாய் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும், மீதத் தொகை மேற்கூறிய இரு பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகவும் கிடைத்தன. 

பின்னர் 2015-ம் ஆண்டில் 3ஜி அலைக்கற்றைக்காக இன்னொரு ஏலமும் நடைபெற்றது. அப்போது 4ஜி சேவைகளை மட்டுமே அளித்து வந்த டாடா டெலிசர்வீசஸ், யுனினார், ஏர்செல் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களும், 3 ஜி சேவைகளை அளித்து வந்த மற்ற தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்றன. 

இதனிடையே  2010-ம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் சேவை 2016-ம் ஆண்டு செப்டம்பர் முதல்தான் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கத் தொடங்கியது. அதற்கு அடுத்த மாதமே, அதாவது 2016, அக்டோபரில் 4ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஐந்து நாள்கள் நடைபெற்றது. இந்த ஏலம் மூலம் 5.6 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்த்திருந்த நிலையில், அதில் 11% மட்டுமே, அதாவது 65,789 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்குக் கிடைத்தது. இதில் பங்கேற்ற தனியார் நிறுவனங்களில் ஏர்டெல் 14,244 கோடி ரூபாய், ரிலையன்ஸ் ஜியோ 13,672 கோடி ரூபாய் மற்றும் ஐடியா நிறுவனம் 12,798 கோடி ரூபாய் என மிக அதிக தொகைக்கு 4ஜி அலைக்கற்றையைப் பெற்ற நிறுவனங்களாக இருந்தன. 

தனியாருக்கு ஊக்குவிப்பு

இவ்வாறு தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு 4ஜி அலைக்கற்றை சகாப்தத்துக்குள் நுழைந்தபோது, மேற்கூறிய 2 பொதுத்துறை  நிறுவனங்களுக்கு மட்டும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கப்படவில்லை. தற்போது இந்திய தொலைத்தொடர்புத்துறை 2019-ம் ஆண்டின் பிற்பாதியில் 5ஜி அலைக்கற்றை சேவையை அளிக்கத் தயாராகி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கே இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது. அதாவது, அரசாங்கமே அரசு நிறுவனத்தைப் புறக்கணிக்கும் அல்லது சிதைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 

``இவ்வாறு எங்கள் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்காததன் மூலம், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர உதவும் மத்திய அரசின் நிலைப்பாடு அப்பட்டமாகத் தெரிகிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார் ஸ்வபன் சக்ரபர்த்தி.

மேலும், `மத்திய திட்டக்குழுவுக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிதி ஆயோக் அமைப்பு, அனைத்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4ஜி சேவையை ஏற்கெனவே வைத்திருப்பதால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றைத் தேவையில்லை என்று சொல்லி வருகிறது. மேலும், ஒருவேளை 4ஜி அலைக்கற்றையைப் பெற்றாலும் எங்களால் லாபம் ஈட்ட முடியாது என்றும் நிதி ஆயோக் கூறுகிறது. இதற்கு என்ன அர்த்தம்? அரசு நிறுவனங்கள் 4ஜி அலைக்கற்றையைக் கொண்டிருக்கக்கூடாது என்பதுதானே’’ என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.   

இந்த நிலையில், இந்த நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து மீட்டெடுப்பதற்கான யோசனைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக அகமதாபாத் ஐ.ஐ.எம் ( Indian Institute of Management - Ahmedabad) கல்வி நிறுவனம் அளித்த இடைக்கால அறிக்கையில், ``4ஜி அலைக்கற்றையை ஒதுக்காததன் மூலம், சந்தையில் இன்னும் அதிகமான வாடிக்கையாளர்கள் இழப்பையும் வருவாய் இழப்பையும், நஷ்டத்தையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு பி.எஸ்.என்.எல் தள்ளப்பட்டுள்ளது. அத்துடன் ஊழியர்கள் மத்தியிலும் தங்களால் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லையே என்ற ஆதங்கத்தையும் நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகுமே என்ற கலக்கத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கூறிய இத்தனை கடினமான சூழ்நிலைகளுக்கு இடையேயும், நாட்டின் மிகப் பெரிய சேவைகள் வழங்கும் நான்காவது நிறுவனமாக இந்த நிறுவனம் திகழ்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ``தொலைத்தொடர்பு சேவைச் சந்தையில் ஒருவேளை பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாமல் போனால், அது தனியார் நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்துக்கு வழி வகுத்து விடுவதோடு, அவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம் என்ற நிலையும் ஏற்பட்டுவிடும். அப்படியான ஒரு நிலை ஏற்பட்டால், கடைசியில் அதனால் பலனடையப் போவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்தான்’’ என்று எச்சரிக்கிறார் ஸ்வபன் சக்ரபர்த்தி.

அவர் சொல்வது உண்மை என்று நிரூபிக்கும் விதமாக, ஜியோ வருகைக்குக்குப் பின்னரே, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிக அதிக அளவில் வருவாய் வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கின. எதிர்காலத்தில் தொலைத்தொடர்புத்துறை சந்தையை ஏகபோகமாக கைப்பற்றிக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில், தொடக்கத்தில் நஷ்டம் அடைந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் அதிக அளவில் ஈர்ப்பதற்காக அளவில்லாத இலவச டாக் டைம் உடன், குறைந்த விலையில் இணையதள டேட்டாக்களை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் போட்டிபோட முடியாமல் மற்ற தனியார் நிறுவனங்கள் திணறுகின்றன. சந்தையில் தாக்குப்பிடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் மற்ற தனியார் நிறுவனங்களும் ஜியோ போன்ற சலுகைகளை அளித்ததால், அவை தொடர்ந்து வருவாய் இழப்புடன் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றன. மற்ற தனியார் நிறுவனங்களின் கதையே இதுவென்றால், இன்னும் 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கே மத்திய அரசின் தயவை எதிர் நோக்கி உள்ள பி.எஸ்.என்.எனல் நிறுவனத்தின் நிலைமையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். 

நஷ்டம் ரூ. 90,000 கோடி

இப்படி அடிப்படையே ஆட்டம் கண்டுள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வருவாயில் பாதிக்கும்மேல் ஊழியர்களுக்கான சம்பளம், போனஸ் உள்ளிட்ட செலவினங்களுக்கே போய்விடுகிறது. 2017-18-ம் நிதியாண்டில் மட்டும் 53% இவ்வாறு செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் தற்போதைய சவாலே, நாளுக்கு நாள் குறைந்து வரும் அதன் வருவாய்தான். தனது வருவாய் ஈட்டலில் 2006-ம் நிதியாண்டில் மிக உச்சமாக 40,176.58 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய பி.எஸ்.என்.எல், 2018-ம் நிதியாண்டில் அதிலிருந்து 38 சதவிகிதம் குறைவாக 25,070.64 கோடி ரூபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. 

2008-ம் நிதியாண்டின் பேலன்ஸ் ஷீட்டில் (வரவு செலவு கணக்கு விவரம்) ரொக்க கையிருப்பாக 37,163 கோடி ரூபாயாகக் காட்டப்பட்டிருந்த நிலையில், 2018-ம் நிதியாண்டில் ரொக்க கையிருப்புக்குப் பதிலாக ரொக்க கடன் 16,093.4 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகைய சூழ்நிலையில், புரோக்கரேஜ் நிறுவனமான கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் ( Kotak Institutional Equities), பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நஷ்டம் கடந்த டிசம்பரில் 90,000 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகவும், எனவே இந்த நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் மத்திய அரசு நிதி அளித்து உதவ வேண்டும் அல்லது மேலும் நஷ்டம் ஏற்பட வேண்டாம் எனக் கருதினால், இந்த 90,000 கோடி ரூபாய் இழப்பைத் தாங்கிக்கொண்டு நிறுவனத்தை இழுத்து மூடிவிட வேண்டியதுதான் என்றும் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் ஸ்வபன் சக்ரபர்த்தியோ, ``இந்திய தொலைத்தொடர்புத்துறையில் ஜியோ வருகைக்குப் பின்னர் எந்த நிறுவனம் லாபம் ஈட்டுகிறது என்பதைப் பாருங்கள். இப்படியான சூழலில் பி.எஸ்.என்.எல் மட்டும் எப்படித் தப்ப முடியும்? மத்திய அரசு, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தைக் கட்டுப்படுத்துவதுகூட இல்லை. அரசின் ஒரே நோக்கம் இந்தப் பொதுத்துறை நிறுவனத்தைக் கொல்வதுதான்’’ என்று குமுறுகிறார். என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?