Published:Updated:

79,000 கி. மீ நடை, மலேரியா பாதிப்பு... மகாத்மா காந்தியின் ஹெல்த் ரிப்போர்ட் வெளியீடு!

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உடல் நலம் எவ்வாறு இருந்தது என்பது குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், காந்தி எடை குறைவானவராக இருந்ததாகவும், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

79,000 கி. மீ நடை, மலேரியா பாதிப்பு...  மகாத்மா காந்தியின் ஹெல்த் ரிப்போர்ட் வெளியீடு!
79,000 கி. மீ நடை, மலேரியா பாதிப்பு... மகாத்மா காந்தியின் ஹெல்த் ரிப்போர்ட் வெளியீடு!

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் உடல் நலம்  எவ்வாறு இருந்தது என்பது குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதில், காந்தி எடை குறைவானவராக இருந்ததாகவும், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மகாத்மா காந்தியின் உடல் நலம் குறித்து பேணப்பட்டு வந்த ஆவணங்களை மத்திய அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. "Gandhi and Health @ 150" என்ற தலைப்பில் இன்று வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் பத்திரிகை தகவலில், காந்தியின் உடல் நலன் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 

அதில், அவர் (காந்தி) இயற்கை வைத்திய முறையில் மிகச் சிறந்தவராக இருந்ததாகவும், நிலத்தில் இருக்கும் பல பொருள்களைக் கொண்டும், நீரை வைத்தும் தனது உடலை இயற்கை வைத்திய முறைக்கு உட்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், 1939-ம் ஆண்டு காந்தி 5 அடி உயரத்துடன் வெறும் 46.7 கிலோ உடல் எடையை  மட்டுமே கொண்டிருந்ததாகவும், அவரது பாடி மாஸ் இண்டெக்ஸ் (body mass index) எனப்படும் உடல் பருமன் அளவீடு 17.1 ஆக இருந்ததாகவும், தற்போதைய நவீன மருத்துவ வரையறைகளின்படி சொல்வதனால், அவரது வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைக் கொண்டிருக்காமல் மெலிந்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும். காந்திக்கு 1927-ம் ஆண்டிலிருந்தே உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும், 1939-ம் ஆண்டு அவரது உயர் ரத்த அழுத்த அளவீடு 220/110 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த உயர் ரத்த அழுத்தத்துக்கு இடையேயும் அவர் உடல் நலத்துடன் இருந்ததற்கு நடப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம்தான் காரணம் என்றும், நாளொன்றுக்கு அவர் சுமார் 18 கிலோ மீட்டர் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து, 1913-ம் ஆண்டு தொடங்கி 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொல்லப்படும் வரை காந்தி சுமார் 79,000 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளதாகவும், இது பூமியை ஏறக்குறைய இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமம் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைவரும் பிரபல இதயவியல் நிபுணருமான டாக்டர் பல்ராம் பகர்காவா அதில் தெரிவித்துள்ளார். 

``சில இயற்கை வைத்திய முறைகளை அவர் தனது உடலில் சோதித்துப் பார்த்தபோது கூட அவரது  இதயம் நல்ல ஆரோக்கியமாக இருந்ததாக அவரது இசிஜி ஆவணங்கள் சொல்கின்றன. 

காந்தி 3 முறை மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதன் பாதிப்பு அவருக்கு மிகச் சில தினங்களுக்கே இருந்துள்ளது. மேலும், பைல்ஸ் எனப்படும் மூலநோய் மற்றும் அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வால் நோய் ஆகியவற்றுக்காக அறுவை சிகிச்சையும் செய்துகொண்டுள்ளார். அத்துடன் தசையின்கீழ் ஏற்படும் எரிச்சல் பாதிப்பும் அவருக்கு இருந்துள்ளது. 

காந்தி அடிக்கடி இருக்கும் உண்ணா நோன்பு, அவரது உடலை மிகத் தீவிரமாக பாதித்திருந்தது. சில நேரங்களில் இந்த உண்ணா நோன்பால் அவர் சாவின் விளிம்பு வரை கூட சென்று திரும்பியிருக்கிறார் என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.