Published:Updated:

செயற்கைக்கோள் அறிவிப்பு: தேர்தல் விதிமுறைகளை மீறினாரா மோடி?

``'பி.ஜே.பி-க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது தவறு' என்று இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

செயற்கைக்கோள் அறிவிப்பு: தேர்தல் விதிமுறைகளை மீறினாரா மோடி?
செயற்கைக்கோள் அறிவிப்பு: தேர்தல் விதிமுறைகளை மீறினாரா மோடி?

டுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதன் எதிரொலியாக, தேர்தல் கமிஷன் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி, `இந்திய விண்வெளித் துறையின் சாதனை' என்கிற தலைப்பில் திடீரென நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்தினார். `இது, தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல். பி.ஜே.பி-க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது தவறு' என்று இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 

தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறுவது மோடிக்கு ஒன்றும் புதியது இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர், வாரணாசி தொகுதியில் போட்டியிட்டார். வாக்குப்பதிவு நாளன்று தனது வாக்கைப் பதிவுசெய்துவிட்டு வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்தவர், 100 மீட்டர் தொலைவுக்குள் தாமரைச் சின்னத்தைக் கையில் பிடித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். இதற்காக, மோடி மீது அப்போது தேர்தல் கமிஷன் வழக்குப் பதிவுசெய்தது. இதேபோல், வாரணாசியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த பி.ஜே.பி. முடிவு செய்தது. ஆனால், முறைப்படி, அனுமதி பெறவில்லை. இதைக் காரணம் காட்டி, 2014-ம் வருடம் தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்த சம்பத், அந்தப் பொதுக்கூட்டத்துக்குத் தடை விதித்தார். `அதேபோலத்தான் இப்போதும் விதிமீறலைப் பிரதமர் மோடி செய்திருக்கிறார்' என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. 

அதிகார துஷ்பிரயோகம் செய்வதிலும் தனக்கென முத்திரையைப் பதித்து வருகிறார் பிரதமர் மோடி. இரண்டு நாள்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிவிப்பில் ஏழை விவசாயிகளுக்காக வருடத்துக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவியைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார். இது பி.ஜே.பி-யில் அதிர்வலையை உண்டாக்கியது. உடனே, மத்திய அரசின் நிதி ஆயுக் அமைப்பின் துணைத் தலைவர், ``ராகுல் அறிவித்த திட்டம் சாத்தியமில்லை" என்று ட்வீட் செய்திருந்தார். இதற்காகத் தேர்தல் ஆணையம் நிதி ஆயுக்கின் துணைத் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

மோடி அப்படி என்னதான் உரை நிகழ்த்தினார்?   

``இந்தியா இன்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா இன்று தனது பெயரைப் பதிவுசெய்துள்ளது. விண்வெளித் துறையில், இது இந்தியாவின் வியத்தகு சாதனை ஆகும். விண்ணில் செயற்கைக்கோள் ஒன்றைச் சுட்டுவீழ்த்தும் `மிஷன் சக்தி' சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. சாட்டிலைட் வெப்பன் கி-ஷிகிஜி `மிஷன் சக்தி' என்ற சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக விண்வெளியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தச் சோதனை, இந்தியாவின் செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல. இதன் மூலம், செயற்கைக்கோளைத் துல்லியமாகத் தாக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. சோதனை மூன்று நிமிடங்களிலேயே வெற்றியடைந்தது. புவியிலிருந்து 380 கி.மீ. தொலைவில் இருக்கும் செயற்கைக்கோள் `மிஷன் சக்தி' மூலம் துல்லியமாக அழிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே இந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த வெற்றியால் நாட்டின் பாதுகாப்பு பலம் பெறும். இந்தச் சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய ஆய்வாளர்களுக்கு வாழ்த்துகள்" என்று உரையில் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து இந்தியத் தேர்தல் கமிஷனின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``பிரதமர் மோடி பேசியதில் என்ன தவறு? இது, தன்னுடைய அல்லது தன் கட்சியுடைய சாதனை என்று அவர் சொல்லவில்லையே? விஞ்ஞானிகளின் சாதனை என்றுதானே அவர் சொல்லியிருக்கிறார். இந்தச் சாதனை ஒன்றும் புதிய விஷயம் கிடையாதே? ஏற்கெனவே நடந்துகொண்டிருந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சிதானே? அதைப் பிரதமர் சொல்லியதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இருந்தாலும், இதற்கு இப்போதுள்ள தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்கவேண்டும்" என்றார். 

டெல்லியில் உள்ள ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனின் முக்கிய அதிகாரி ஒருவர், ``தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபிறகு, பிரதமர் முதல் கீழ்மட்ட ஊழியர் வரை அனைவரும் விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்களே. இந்த விதிகளை யாரும் மீற முடியாது. விண்வெளி தொடர்பாகப் பிரதமரின் உரை நிச்சயமாக விதிமீறல்தான். பாதுகாப்பு தொடர்பான விண்வெளி பற்றிய அறிவிப்பை, தேர்தல் நடைபெறும் நேரத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் துறை அல்லது விண்வெளித் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் அறிவித்திருக்கலாம். அதை பிரதமர், நாட்டு மக்களுக்குத் தேர்தல் நேரத்தில் சொல்வதில் உள்நோக்கம் தவிர, வேறு என்ன இருக்கமுடியும்?" என்றார், மிகத் தெளிவாக. 

தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, ``இது, அப்பட்டமான தேர்தல் விதிமீறல். இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனி அமைப்பு. பல வருடங்களாகத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் விஞ்ஞானிகள். அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது மிஷன் சக்தி சோதனை நடந்திருக்கிறது. இது முழுக்க முழுக்க விஞ்ஞானிகளின் சாதனை. இவர்களின் சாதனையை, தனது சாதனை என்று பிரதமர் மோடி பிரகடனப்படுத்தியிருக்கிறார். இது மிகப்பெரிய மோசடி. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைக் கவருவதற்காக இப்படிச் செய்திருக்கிறாரா என்பது வெளிப்படையாகத் தெரிகிறது" என்றார். 

வேண்டுமானால், விஞ்ஞானிகளை விட்டே அவர்களின் சாதனையை பிரதமர் மோடி சொல்ல அனுமதித்திருந்தால், இந்த மாதிரி சர்ச்சைகள் எழுந்திருக்காது. அப்போதும்கூட, `இதுவும் பி.ஜே.பி-க்கு மறைமுக தேர்தல் பிரசாரம்' என்றுகூட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்திருக்கும்.