Published:Updated:

பயங்கரவாத அச்சுறுத்தல் தகவல்களை பகிர இந்தியா - பாக். உடன்பாடு

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி, மார்ச் 29, 2011

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்திய உள்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை செயலாளர் இடையே ஹாட் லைன் ஏற்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

தண்டனைக் காலம் முடிவடைந்த சிறைக் கைதிகள் மற்றும் மீனவர்களை ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி விடுவிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே செயலாளர்கள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை புதுதில்லியில் இன்று நிறைவடைந்தது.

இந்திய தரப்புக்கு உள்துறை செயலாளர் கோபால் கே பிள்ளை தலைமை தாங்கினார். பாகிஸ்தான் குழுவினர்  அந்நாட்டு உள்துறை செயலாளர் காமர் சமான் சௌத்ரி தலைமையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருதரப்பினரும் பேச்சு வார்த்தையை முன்னெடுத்து சென்றனர்.  இதனைத் தொடர்ந்து இருதரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது.அதன் விவரம் வருமாறு :

இருதரப்பு முக்கிய பிரச்னைகள் குறித்து உள்துறை செயலாளர்கள் நிலையிலான பேச்சு வார்த்தை வருடத்திற்கு இரண்டுமுறை நடத்தப்படும். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்திய உள்துறை செயலாளர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை செயலாளர் இடையே ஹாட் லைன் ஏற்படுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராடுவதற்கு இருதரப்பிலும் மீண்டும் உறுதி ஏற்கப்பட்டது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் குறித்து தற்போது நடைபெற்று வரும் வழக்கு மற்றும் புலன் விசாரணைக்கு பாகிஸ்தான் தரப்பில் விவரங்கள் அளிக்கப்பட்டன. இதேபோல சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு புலன் விசாரணையில் இந்திய தரப்பில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டன. 
கடந்த சுற்று பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கு இருதரப்பிலும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. தண்டனையை முடித்த மீனவர்கள் மற்றும் சிறைக் கைதிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி விடுவிக்க இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய கைதிகள் மற்றும் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தான் சிறைக் கைதிகள் தொடர்பான முழுமையான பட்டியலை ஜூலை முதல் தேதி இருதரப்பிற்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்படும். எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை விடுவிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க இந்திய கடலோர காவல் படை மற்றும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு ஏஜென்ஸியை பணியில் ஈடுபடுத்த இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதற்கு இருதரப்பினரும் கவலை வெளியிட்டனர்.  போதைக் கடத்தல் தடுப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு மே மாதம் முறைப்படி கையெழுத்திடப்படும்.

விசா வழங்கும் நடைமுறைகளை வரன்முறை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்வதற்கு கூட்டுப் பணிக்குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது.  செயலாளர்கள் நிலையிலான அடுத்த பேச்சுவார்த்தையை பாகிஸ்தானில் நடத்த இந்திய உள்துறை செயலாளருக்கு பாகிஸ்தான் உள்துறை செயலாளர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.