Published:Updated:

முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!

முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!
முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!

“பிற மாநிலங்களில் தமிழ்மொழியை விருப்பப் பாடமாக வைக்குமாறு பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருப்பது, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிற வேலை!” என்கிறார் தியாகு.

மிழ் மொழியைப் பிற மாநிலங்களில் விருப்பப்பாடமாக வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டரில் நேற்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, சில மணி நேரத்திலேயே அந்த ட்வீட் நீக்கப்பட்டுவிட்டது.

முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, ‘‘தமிழ் மொழி, பிற மாநிலங்களில் விருப்பப்பாடமாக வைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்விட்டர் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தது, தமிழக மக்களை ஏமாற்றும் வேலை. அது அம்பலமானதால்தான், அந்தப் பதிவை அவர் உடனடியாக நீக்கிவிட்டார்” என்று குற்றம்சாட்டினார்.

தியாகு இது குறித்து மேலும் கூறுகையில், “புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் இந்தியைத் திணிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், மூன்றாவது மொழியாக இந்தியைக் கட்டாயம் கற்க வேண்டும் என்பதை மாற்றி, விரும்பினால் இந்தி கற்கலாம் என்று திருத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ‘பிற மாநிலங்களில், விருப்பப்பாடமாக தமிழ் மொழியைச் சேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக்கொள்கிறேன். இது, உலகத்தில் மிகவும் பழைமைவாய்ந்த மொழிகளில் ஒன்றுக்குச் செய்கிற மிகப்பெரிய சேவையாகும்’ என்று ட்விட்டரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதற்கு கடுமையான எதிர்வினைகள் வந்ததால், அந்த ட்வீட்டை முதல்வர் நீக்கியுள்ளார். 

முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!

இருமொழிக் கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர் செங்கோட்டையனும் கூறியுள்ளனர். அப்படியென்றால், இந்தப் புதிய கல்விக்கொள்கையைத் தமிழக அரசு ஏற்காது என்று இவர்கள் அறிவிக்க வேண்டும். அதைச் செய்வதற்கு இவர்கள் தயாராக இல்லை. மாறாக, இந்தித் திணிப்பு விவகாரத்தில் தமிழ் மக்களைச் சமாதானப்படுத்துகிற முயற்சியில்தான் ஈடுபடுகிறார்கள். அதுதான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்வீட் காட்டுகிறது” என்றார்.

ஆனால், “பிற மாநிலங்களில் இடம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழ் மொழையைப் படிப்பதற்கு வசதியாக, அங்கெல்லாம் தமிழை விருப்பப்பாடமாகக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமருக்கு முதல்வர் வேண்டுகோள் வைத்தார்” என்கிறார், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆவடி குமார். 

இது குறித்து நம்மிடம் பேசிய ஆவடி குமார், “மும்மொழிக் கொள்கை என்பது, மத்திய அரசின் கொள்கையாக தொடர்ந்து இருந்துவருகிறது. ஆனால், தமிழக அரசின் நிலைப்பாடு என்பது, இரு மொழிக்கொள்கைதான். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

முதல்வரின் ட்வீட் நீக்கமும்... அ.தி.மு.க-வின் விளக்கமும்!

கஸ்தூரி ரங்கன் வரைவு அறிக்கையிலும், ‘இந்தி கட்டாயமில்லை’ என்று திருத்தம் செய்துவிட்டார்கள். அதே நேரத்தில், மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துகிறபோது, மூன்றாவது மொழி என்பது விருப்ப மொழியாக வருகிறது. விருப்ப மொழி என்கிற அந்த வாய்ப்பை, தமிழுக்கு தாருங்கள் என்று தமிழக முதல்வர் கேட்கிறார். 

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இச்சூழலில், தமிழை விருப்ப மொழியாகக் கொண்டுவந்தால், அந்த மக்களெல்லாம் தமிழைப் படிப்பதற்கு ஒரு வாய்ப்பு உருவாகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, முடிவெடுக்கிற இடத்தில் நாம் இருக்கிறோம். மற்ற மாநிலங்கள் என்று வருகிறபோது, அப்படியொரு வாய்ப்பைத் தாருங்கள் என்று வேண்டுகோளாக வைக்கிறோம். இன்னொரு முக்கிய செய்தி. இந்தியை வளர்ப்பதற்காகப் பல மாநிலங்களில் செயல்பட்டுவரும் இந்தி பிரசார சபையைப்போல, இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும், வளர் தமிழ் மையங்களை ஏற்படுத்தும் நடவடிக்கையை தமிழ் வளர்ச்சித்துறை எடுத்துவருகிறது” என்றார் ஆவடி குமாரிடம், “ஏன் அந்த ட்வீட்டை முதல்வர் நீக்கினார்?” என்று கேட்டோம்.

அதற்கு அவர், “அந்த ட்வீட்டை போட்டவுடன் சிலர் தவறாகப் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். அதனால்தான், ட்வீட் நீக்கப்பட்டது. மொழிக்கொள்கை சம்பந்தமாக சட்டசபையில் விளக்கம் சொல்லிக்கொள்ளலாம்!” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு