Published:Updated:

அவதூறு பிரசாரம் எதிரொலி... லோக்பால் மசோதா குழுவில் இருந்து விலக சந்தோஷ் ஹெக்டே முடிவு?

பெங்களூரு, ஏப்.21,2011

அவதூறு பிரசாரம் எதிரொலி... லோக்பால் மசோதா குழுவில் இருந்து விலக சந்தோஷ் ஹெக்டே முடிவு?

தங்களுக்கு எதிரான அவதூறு பிரசாரம் தீவிரமடைந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள சந்தோஷ் ஹெக்டே, லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் இருந்து தாம் விலகுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலுவானதாக இயற்றுவதற்கான வரைவுப் பணியில், பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர்களான அன்னா ஹஸாரே, சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே, அர்விந்த் கேஜ்ரிவால் ஆகிய ஐவரும் இடம்பெற்றுள்ளனர். ##~~##

லோக்பால் மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

அதேவேளையில், இந்தக் கூட்டுக்குழுவின் இணைத் தலைவரான பிரபல சட்ட வல்லுனருக்கு எதிராக சி.டி. மற்றும் நில விவகார சர்ச்சை எழுந்தது.

'சாந்தி பூஷனை குற்றச்சாட்டும் சி.டி., போலியானது இல்லை' என்பது மத்திய தடய அறிவியல் ஆய்வுக்கூடத்தின் ஆய்வறிக்கை தெரிவிப்பதாக இன்று டெல்லி காவல்துறை மூலமாக இன்று தகவல் வெளியானது. (செய்தி - சர்ச்சை தீவிரம்: 'பூஷன் CD போலியானது அல்ல') 

இந்த நிலையில், மசோதா வரைவுக் கூட்டுக் குழுவில் உறுப்பினராக உள்ளவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, அண்மையை நிகழ்வுகள் தொடர்பாக கவலை வெளியிட்டார்.

"முதலில் அன்னா ஹஸாரேவுக்கு எதிராகவும், இப்போது பூஷன்களுக்கு (சாந்தி பூஷன், அவருடைய மகன் பிரஷாந்த் பூஷ்ன்) எதிராகவும் அவதூறு பிரசாரம் நடக்கிறது," என்றார் ஹெக்டே.

கூட்டுக்குழுவில் நீடிப்பது குறித்து தாம் பரிசீலித்து வருவதாக கூறிய அவர், "முதலில் இப்பிரச்னைகள் குறித்து எங்கள் குழுவுடன் விவாதித்து, அதன் அடிப்படையில் முடிவு எடுப்பேன்," என்றார்.

சர்ச்சைக்குரிய சி.டி. விவகாரம் குறித்து கேட்டதற்கு, "அது பற்றி இரு வெவ்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன. எனவே, இப்போதைக்கு கருத்துகூறுவது கடினம்," என்றார் ஹெக்டே.

மேலும், "இந்த சி.டி வெளியிடப்பட்ட தருணத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். இப்போது அதுபற்றிய சர்ச்சை எழுப்பப்பட்ட உண்மையான நோக்கம் என்ன? அந்த சி.டி. மீடியாவுக்கு இந்த நேரத்தில் அளிக்கப்பட்டதன் காரணம் என்ன?" என்று லோக்பால் மசோதா குழு அமைக்கப்பட்ட பிறகு தொடர்ச்சியாக அன்ன ஹசாரே குழுவினரின் மீது சர்ச்சை எழுந்து வருவதைச் சுட்டிக் காட்டி கேள்வி அவர் எழுப்பினார்.

ஊழலுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவரான சந்தோஷ் ஹெக்டே, 'லோக்பால் மசோதா'வின் மாதிரி 'ஜன் லோக்பால்' மசோதா உருவாக்கப்பட்டதற்கு பெரும் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.