Published:Updated:

144 தடை உத்தரவு... என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? சில கேள்விகளும் விடைகளும்! #FAQ

ஊரடங்கு (கோவை)
ஊரடங்கு (கோவை)

மார்ச் 24 மாலை 6 மணி முதல், ஏப்ரல் 1 காலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு என்ன சொல்கிறது, மீறினால் என்ன மாதிரியான நடவடிக்கை இருக்கும்? கேள்விகளுடன் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருடன் பேசினோம்...

மார்ச் 24 மாலை 6 மணி முதல், ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோக, பிரதமர் மோடி அறிவித்திருக்கும் ஏப்ரல் 14-ம் தேதி வரையிலான ஊரடங்கு உத்தரவு தனி.

இந்த 144 தடை உத்தரவு என்ன சொல்கிறது, மீறினால் என்ன மாதிரியான நடவடிக்கை இருக்கும், மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களைக் கட்டாய சுய முடக்கத்திற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அறிவுறுத்தலை மீறுபவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அவ்வாறு முடக்க முடியுமா, பிரதமரின் ஊரடங்கு உத்தரவினால் தமிழக அரசு விதித்துள்ள 144 தடை நீடிக்கப்படுமா... இந்தத் தடை எவ்வளவு காலம் நீடிக்க வாய்ப்பு உள்ளது உள்ளிட்ட கேள்விகளுடன் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருடன் பேசினோம். சூழ்நிலையின் தன்மை கருதி பெயர் வெளியிட வேண்டாமென்ற கோரிக்கையுடன் நம்மிடம் விளக்கினார்.

corona-india
corona-india

தமிழக அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவு, பிரதமர் அறிவித்த முடக்கம்... இரண்டுக்கும் வித்தியாசம் என்ன?

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையும் பொது அமைதிக்கு பாதகம் விளைவதைத் தடுப்பதற்காகவும் 144 தடை உத்தரவு விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மாவட்ட மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் இருப்பவர்கள் விதிக்கலாம். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும், நகர்ப்புறங்களில் ஆட்சியர் அல்லது காவல் ஆணையர், இந்த 144 தடை உத்தரவை விதிக்க முடியும்.

இந்தத் தடை அமலுக்கு வந்தால், பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் ஒன்று கூடினாலோ, தடையை மீறி அனுமதியின்றி கடைகள் திறக்கப்பட்டாலோ அவர்களை போலீஸார் கைதுசெய்யலாம், அபராதம் விதிக்கலாம். அனுமதியின்றி திறக்கப்பட்ட கடைகளை சீல் வைக்கலாம். இந்தத் தடையை மீறுபவர்களுக்கு 3 வருடம் வரை சிறைத்தண்டனை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.

மாறாக, முடக்கம் என்பது இதைவிட சீரியஸாக அணுகப்பட வேண்டியது. நாட்டின் ஒரு பகுதியை முடக்குவதாக அரசு அறிவித்துவிட்டால், போதிய காரணம், அரசின் அனுமதிக் கடிதம் இல்லாமல் மக்களால் அப்பகுதியை விட்டு வெளியேற முடியாது. அரசு நிர்ணயிக்கும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேறலாம். (உதாரணமாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முடக்கம் அமலில் இருந்தது) மற்ற நேரங்களில் தனியாக வெளியே சென்றால்கூட அவர்கள் கைது செய்யப்படலாம்.

தற்போது தமிழகத்தில் கொண்டுவரப்பட்டிருப்பது 144 தடை உத்தரவு மட்டுமே. இது Epidemic Diseases act 1897 பிரிவு 2-ன் படி கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கவே இக்கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. மக்கள் வெளியே செல்லும்பட்சத்திலும், கவனமாக தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும்.

சில மாநிலங்களில் 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்துவதாக வீடியோக்கள் வெளிவந்துள்ளதே?

144 தடை உத்தரவின்போது, பொதுமக்கள் கூடுவதைத்தான் போலீஸார் தடுக்க வேண்டுமே ஒழிய, வெளியே நடமாடுவதை தடுக்கும் உரிமை போலீஸாருக்கு இல்லை. இதுபோன்ற அத்துமீறல்களைத் தடுக்க காவல்துறை தலைமை கண்காணித்து வருகிறது. அத்துமீறலில் தமிழக போலீஸார் ஈடுபட்டால், காவலன் எஸ்.ஓ.எஸ் ஆப் மூலம் வீடியோ பதிவிட்டு, பொதுமக்கள் புகாரளிக்கலாம்.

janata curfew
janata curfew

144 தடை அமலாகியிருக்கும் காலத்தில், எந்தெந்தப் பணிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன?

1. காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல்படை ஆகிய துறைகள் முழுதாகச் செயல்படும். ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படவில்லை. மற்ற அரசின் துறைகள் அனைத்தும் மிகக் குறைவான பணியாளர்களைக்கொண்டே இயங்கும்.
2. உள்ளாட்சி அமைப்புகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், வணிகவரி அலுவலகங்கள், கருவூலங்கள், ரேஷன் கடைகள் வழக்கம்போல செயல்படும். அம்மா உணவகங்கள் செயல்படும். ஆவின், பால் கூட்டுறவு பண்ணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், ஒரு மீட்டர் சமூகத் தொலைவை நடைமுறைப்படுத்தி, மக்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
3. தபால் அலுவலகங்கள், விமானநிலையங்கள், ரயில்வே நிலையங்கள், வருமானவரித்துறை அலுவலகங்கள் போன்ற மத்திய அரசின் அலுவலகங்களுக்குத் தடை இல்லை.
4. மருத்துவமனைகள், மெடிக்கல் ஷாப்புகள் வழக்கம்போல செயல்படும். மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால் விற்கும் கடைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பார்சல் சாப்பாடுகளுக்கு மட்டும் உணவகங்கள் திறந்திருக்கும். டீக்கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, மறு உத்தரவு வரும் வரை டீ கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
5. வங்கிகள், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். ஏடிஎம்-கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
6. ஐ.டி நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை முடிந்தமட்டும் வீட்டிலேயே இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இது சாத்தியமில்லாத இடங்களில் மட்டும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுத்துக்கொண்டு பணிபுரியுமாறு கூறப்பட்டுள்ளது.
7. வழக்கம்போல பெட்ரோல் நிலையங்கள் செயல்படும். எந்தத் தடையும் இல்லை.
8. மருந்து கம்பெனிகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் செயல்படலாம். எல்லா தொழிற்சாலைகளும் 50 சதவிகித தொழிலாளர்களைக்கொண்டு சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இது, சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கும் பொருந்தும்.
9. ஐ.டி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாளர்களை அழைத்துச்செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை. ஆனால், இடைவெளி விட்டு அமர வேண்டும். ஆம்புலன்ஸ், சரக்கு வாகனங்கள், அரசு வாகனங்கள், விமானநிலையம் மற்றும் மருத்துவமனையில் இருந்து பயணிகளை அழைத்துச்செல்லும் வாகனங்களுக்குத் தடை இல்லை.
10. குடிநீர் கேன்கள் உற்பத்தி, விநியோகத்திற்குத் தடை இல்லை.
11. பத்திரிகைகள் மற்றும் டி.வி மீடியாக்கள் வழக்கம்போல செயல்படலாம்.
12. அத்தியாவசிய கட்டுமானத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் உடல்நிலையை அவ்வப்போது கட்டுமான நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
13. பெண்கள் ஹாஸ்டல்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் செயல்படத் தடையில்லை.
14.மின்சார வாரியம் மூலமாக மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுபோல, பொதுமக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசிய பொருள்கள் கிடைக்க அரசு வழிவகை செய்துள்ளது. ஆக, பொருள்கள் கிடைக்காதே என மக்கள் யாரும் பதட்டப்பட வேண்டாம். ஒரு குடும்பத்திலிருந்து ஒருவர் கடைக்குச் சென்றால் போதுமானது. கடைகளுக்குச் செல்லும் மக்கள், கவனமுடன் ஒரு மீட்டர் சமூக தொலைவை கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் பதட்டமின்றி கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள தடையுத்தரவின்படி, மார்ச் 31-ம் தேதி வரை என்னென்ன பணிகள் தடைபட்டுள்ளன?

1.அத்தியாவசிய பொருள்கள் அல்லாது மற்ற பொருள்களை விற்கும் கடைகள், டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள், ஆகியவை இயங்காது.
2. பொது போக்குவரத்துக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், டாக்ஸிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
3. பொதுமக்கள் கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தளங்கள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அன்றாட பூஜைகள் நடைபெற தடையில்லை.
5. வரும் 26-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 1 தேர்வுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டியதில்லை.
6. திருமணத்திற்காக மார்ச் 16-ம் தேதி அல்லது அதற்கு முன்னதாக திருமண மண்டபங்களை புக் செய்தவர்கள் மட்டும் திருமணத்தை மண்டபங்களில் நடத்திக்கொள்ளலாம். ஆனால், 30 பேருக்கு மேல் கூடக் கூடாது.
‘இலவச அரிசி, பருப்புடன் ரூ.1000 நிதியுதவி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #Corona

இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? மார்ச் 31-ம் தேதியையும் தாண்டிச்செல்லும் வாய்ப்பு உள்ளதா?

அதை கொரோனா வைரஸ் பரவும் வீரியத்தைப் பொறுத்துதான் முடிவெடுக்க முடியும். தற்போது, தமிழகத்தில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்கள் மூலமாக சமூகத் தொற்று பரவியுள்ளதா என்பதை, இந்த ஊரடங்கு மூலம் கண்காணிக்கிறோம்.

எவ்விதமான வெளிநாட்டுப் பயணங்களும் மேற்கொள்ளாத மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் சீரியஸான விஷயம். சமூகத் தொற்றாகப் பரவுவதற்கு முன்னர் இதை நாம் தடுத்தாக வேண்டும்.

ஒரு கொரோனா கேஸ்கூட தமிழகத்தில் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அரசின் கட்டுப்பாடுகள் தளரும். ஆனால், பிரதமர் மோடி 21 நாள்கள் முடக்கம் அறிவித்துள்ளதால், தற்போது மாநில அரசு விதித்துள்ள தடை உத்தரவு ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நிலைமை சரியாக ஜூன் மாதம் ஆகலாம். அதுவரை கண்காணிப்பும் கட்டுப்பாடும் தொடரும்.

இன்றே பால், காய்கறிகள் உட்பட அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவில்லை என மக்களிடம் கோபம் எழுந்துள்ளதே?

மக்கள் பயத்தில் தங்கள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால்தான் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப நம்மிடம் பால், காய்கறிகள் உள்ளன. இவற்றை விற்பதற்கும் வாங்குவதற்கும் எந்தத் தடையும் இல்லை. முதல்முறையாக தமிழகம் தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால், சிற்சில குழப்பங்கள் ஏற்படலாம். அவை விரைவில் சரியாகிவிடும்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அரசு கூறியுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என அமைச்சர் கூறியிருக்கிறாரே, அவ்வாறு செய்ய முடியுமா?

மார்ச் 1-ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்களை சுய தனிமைப்படுத்துதல் செய்துகொள்ளுமாறு அரசு கூறியுள்ளது. இவர்களின் பட்டியல் அரசிடம் உள்ளது. இவர்களின் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டுகிறோம், சம்பந்தப்பட்டவர்களின் கைகளில் முத்திரையும் பதிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டை மீறி பொதுவெளியில் உலா வருபவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட்டை முடக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கப்படும். இதனடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கப்படும். இதுபோக, Epidemic diseases Act-ன் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது தனியாக வழக்கு பதியப்படும். வழக்கு பதிந்தாலே அவர்களுக்கு மீண்டும் விசா கிடைக்காது, பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும் முடியாது. அரசு விடுத்திருப்பது வேண்டுகோள் அல்ல, உத்தரவு. மக்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நமது வாசகரிடமிருந்து ஒரு கேள்வி. ``பெற்றோர் ஒரு ஊரில் இருக்கிறார்கள். நான் மற்றொரு இடத்தில் இருக்கிறேன். இந்த ஊரடங்கு அமலாகியிருக்கும் நேரத்தில், வயதான என் பெற்றோரை கவனித்துக்கொள்ள நான் செல்ல முடியுமா?”

அதிகாரபூர்வமாக முடியாது. ஆனால், அத்தியாவசிய பணிகளுக்குள் வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனித்துக் கொள்வதும் அடக்கம். பொது போக்குவரத்து வாகனங்கள் தடைபட்டுள்ள சூழலில், உங்களிடம் தனியார் வாகனங்கள் இருந்தால் அதில் பயணிக்கலாம். பெற்றோரின் வயதுக்கான ஆதாரம், மருத்துவ ரெக்கார்டுகள் இருந்தால், அவற்றை வாட்ஸ் அப்பில் வைத்துக்கொள்ளலாம். பெற்றோர் இருக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் தேவைப்பட்டால் அணுகி, சூழலின் தீவிரம் உணர்த்தி, வெளியூரிலிருந்து மகன் வர உதவி கோரலாம். ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் நிறுத்தப்பட்டுள்ள போலீஸாரிடம் சூழ்நிலையின் தீவிரத்தை நீங்கள் விளக்க வேண்டும். பயணத்தின்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுங்கள். முடிந்தவரை இந்த 21 நாள்களும் வெளியே செல்வதைத் தவிர்ப்பதே நல்லது.

காய்கறிகள் விற்பனை செய்ய சில இடங்களில் சந்தைகள் திறக்கப்படுகிறதே... இதனால் கொரோனா பரவாதா?

மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குள் காய்கறிகளும் வருகின்றன. ஒவ்வொரு காய்கறிக் கடைக்கும் 100 அடி இடைவெளி இருக்க வேண்டும், பொதுமக்கள் ஒவ்வொருவராகச் சென்று காய்கறிகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

தினசரி பத்திரிகைகள் விற்பனைக்குத் தடை ஏதும் உள்ளதா?

எந்தத் தடையும் இல்லை. வீட்டுக்கே பத்திரிகைகளை டோர் டெலிவரி செய்வதற்கு நபர்கள் இல்லாததால், அது மட்டும் தடைபட்டுள்ளது. மற்றபடி, பத்திரிகைகள் விற்க தடையில்லை. பத்திரிகைகளைப் பிரிக்கும் இடத்தில் கும்பலாக இல்லாமல், தனித்தனியாக அமர்ந்து பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உட்பட பெருநகரங்களில் வீட்டுக்கே உணவு டோர் டெலிவரி செய்யப்பட்டது. இது தடைசெய்யப்பட்டுள்ளதா?

ஆமாம். உணவு டோர் டெலிவரி தடை செய்யப்பட்டுள்ளது. ஸ்விகி, உபேர், சோமாட்டோ போன்ற ஆப்கள் மூலமான உணவு டோர் டெலிவரி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், உணகவகங்களில் பார்சல் உணவுகள் அளிக்க தடை இல்லை.

`தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று!’ - குஜராத்தில் இரண்டாவது உயிரிழப்பு #NowAtVikatan

பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு இப்போதும் மக்கள் கூட்டம் வருகிறதே?

பத்திரப்பதிவுக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் குறைக்கப்பட்டு, அன்றாட அலுவல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்ளூரில் உள்ள பணியாளர்களை மட்டும் தினமும் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வருகை தந்தாலும், அவர்கள் பிரச்னையின் தன்மை கருதி அணுகப்படுகிறது. இல்லையெனில், அவர்கள் வீட்டுக்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள். எல்லா அரசுத் துறைகளிலும் இதுதான் நிலைமை.

அடுத்த கட்டுரைக்கு