Published:Updated:

மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா தாக்கல்!

Vikatan Correspondent
மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா தாக்கல்!
மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா தாக்கல்!
மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா தாக்கல்!

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மசோதா, மாநிலங்களவையில் இன்று  தாக்கல் செய்யப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மேல்மட்ட தலைவர்களையும், உயர் அதிகாரிகளையும் விசாரிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா கொண்டுவரப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, லோக்பால் மசோதா கொண்டு வர மத்திய அரசு சம்மதித்தது. இந்த மசோதா, கடந்த ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டபோது, அமளி காரணமாக, மசோதா நிறைவேறவில்லை.

இந்நிலையில், தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மீண்டும் தனது சொந்த ஊரில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும், லோக்பால் மசோதா தொடர்பான போராட்டங்களின் பின்னணியில் தொடங்கப்பட்ட ‘ஆம் ஆத்மி’ கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் 28 இடங்களை கைப்பற்றி அமோக ஆதரவை பெற்றுள்ளது. இந்த காரணங்களால், லோக்பால் மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் கூறுகையில், ''லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கிறது. எனவே, மாநிலங்களவையில் இன்று லோக்பால் மசோதா எடுத்துக்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து, மக்களவையிலும் எடுத்துக்கொள்ளப்படும். நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை'' என்றார்.

இதற்கிடையே, ''லோக்பால், தெலுங்கானா போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. துணை மானிய கோரிக்கைகளை விவாதம் இன்றி நிறைவேற்றியதுபோல, லோக்பால் மசோதாவையும் நிறைவேற்ற வேண்டும்.

##~~##
ஏற்கனவே, அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன், மாநிலங்களவை தேர்வுக்குழு 13 சிபாரிசுகளை செய்துள்ளது. அந்த திருத்தங்களுடன், லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் இன்றும், மக்களவையில் திங்கட்கிழமையும் நிறைவேற்ற வேண்டும். அதை பா.ஜ.க. ஆதரிக்கும்'' என்று சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் கூறினர்.
லோக்பால் மசோதாவை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் கே.சி.தியாகியும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் டி.பி.திரிபாதியும் கூறியுள்ளனர். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும், லோக்பால் மசோதாவை தனது கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார்.
அதே சமயத்தில், லோக்பால் மசோதாவை எதிர்க்க போவதாக, மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. “மத்திய அரசு, மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆகவே, மத்திய அரசுக்கு எந்த மசோதாவையும் கொண்டு வர உரிமை இல்லை” என்று சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்தார்.