Published:Updated:

இந்திய சிறைகளில் மூன்றில் இருவர் விசாரணைக் கைதிகள்.! #VikatanInfographics

வழக்கு முடியாமல் விசாரணைக் கைதிகளாகவே இருப்பவர்கள் 68 சதவிகிதம் பேர் என்கிற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

கைதி
கைதி

சிறைக் கைதிகள் பற்றி ‘விசாரணை’ போன்ற பல தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. தீபாவளியை ஒட்டி ஆயுள் தண்டனைக் கைதியை மையப்படுத்தி நடிகர் கார்த்தியின் `கைதி’ திரைப்படம் வந்திருக்கிறது. உண்மையில் விசாரணைக் கைதிகளின் நிலை என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறது சிறைத்துறையின் சமீபத்திய அறிக்கை.

சிறை
சிறை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டுதோறும், குற்றம் தொடர்பான தரவுகளைத் தொகுத்து வெளியிட்டு வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் அறிக்கை கடந்த 2017-ம் ஆண்டிற்குப் பிறகு வெளியிடப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது, நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஓராண்டு தாமதமாக 2017-ம் ஆண்டிற்கான தரவுகளை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. குற்ற அறிக்கையோடு சேர்த்து சிறை தொடர்பான அறிக்கையும் தனியாக ஆண்டுதோறும் வெளியிடப்படும். அவ்வாறு 2017-ம் ஆண்டிற்கான சிறை அறிக்கையில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

கைதி இன்ஃபோ
கைதி இன்ஃபோ

அதில், இந்திய சிறைச்சாலைகள் அதன் திறனளவை விடவும் அதிகமாக கைதிகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிறையில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் விசாரணைக் கைதிகள் என்கிற அதிர்ச்சித் தகவலும் தெரியவந்துள்ளது. இதில் பெரும்பகுதியினர் 18 - 30 வயதிற்குள்ளானவர்கள் என்பதும், 70 சதவிகிதத்திற்கும் மேலானோர் பத்தாம் வகுப்புக்கும் குறைவாக மட்டுமே படித்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் விசாரணைக் கைதிகளின் சதவிகிதம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 17-வது இடத்தில் உள்ளது.

முன்னாள் சிறைத்துறை அதிகாரி ராமச்சந்திரன் இதுதொடர்பாக நம்மிடம் பேசுகையில், “இது பெரும்பாலும் நீதித்துறையின் தரப்பில் சரி செய்யப்பட வேண்டியது. ஒரு வழக்கை குறிப்பிட்ட காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தெளிவான வரையறை எதுவும் கிடையாது. ஒரு வழக்கில் பல சாட்சியங்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டிய சூழ்நிலைகள் எழும். அப்போது ஏதாவது சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தோன்றவில்லை என்கிறபோது அந்த வழக்கு விசாரணை தள்ளிப்போடப்படும். இவ்வாறு தேங்கிப்போகிற வழக்குகள் தான் அதிகம்.

பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் இருப்பவர்களும் உண்டு. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள கைதிகளிடம் பிணையில் செல்வதற்கான வசதி இருக்காது. அதுபோன்ற சூழலில் கைதிகள் வெளியில் சென்று கஷ்டப்படுவதை விடவும் சிறையிலே இருந்துவிடலாம் என நினைப்பவர்களும் இருக்கின்றனர். பலரும் விசாரணையின் போது சிறையில் செலவிடுகிற காலத்தை தண்டனையில் கழித்துக்கொள்ள முடியும் என்கிற காரணத்தாலும் கைதிகள் பிணையில் செல்ல விரும்புவதில்லை” என்றார்.

ராமச்சந்திரன் & அரிபரந்தாமன்
ராமச்சந்திரன் & அரிபரந்தாமன்

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் நம்மிடம் பேசுகையில், “நீதித்துறையை மட்டும் முழுவதுமாக குறை கூறுவது சரியாக இருக்காது. அனைத்துத் தரப்பினருக்கும் இதில் சமபங்கு இருக்கிறது. குற்றப் பத்திரிகைய தாக்கல் செய்வது, சாட்சிகளை ஆஜர்படுத்துவது என காவல்துறை தரப்பிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு. போக்ஸோ வழக்குகளில் ஒரு வருடத்திற்குள் விசாரணை முடிக்கப்பட்டாக வேண்டும் என சட்டத்தில் குறிப்பிட்டிருந்துமே போக்ஸோ வழக்குகள் சரியான நேரத்தில் விசாரித்து முடிக்கப்படுவதில்லை. நீதிபதிகளுமே வழக்கு விசாரனையில் காவல்துறையின் மீது கடினமாக நடந்துகொள்வதில்லை. அனைத்துத் தரப்பும் இணைந்துதான் இதற்கு தீர்வு காண வேண்டும். அதற்கான முதல்படியை நீதிமன்றம் எடுக்க வேண்டும். வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட வேண்டிய கால அளவை தெளிவாக வகுத்து செயல்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்” என்றார்.

தவறுகளை ஏற்றுக்கொண்டு அதைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

100 kmph... துவம்சம் செய்யும் லாரி... டாப் கியருக்கு முன்..?! - கைதி +/- ரிப்போர்ட்