Published:Updated:

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு!

Vikatan Correspondent
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு!
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு!
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் 9 திருத்தங்கள்: எதிர்ப்பிற்குப் பணிந்தது மத்திய அரசு!

புதுடெல்லி:  நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 9 திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

நிலம் கையகப் படுத்தும் சட்டம் முந்தைய காங்கிரஸ் அரசால் கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக  ஆட்சி அமைந்ததும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்தது. பிறகு கடந்த அக்டோபர் மாதம் அது அவசர சட்டமாகக்  கொண்டு வந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வரும் அவசர சட்டங்கள் அடுத்த 6 மாதத்துக்குள் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட வேண்டும். அதன்படி நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு அடுத்த மாதம்   5 ஆம் தேதிக்குள் ஒப்புதல் பெற வேண்டும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி முடிவதால் இந்த வாரமே அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா மீது நேற்று விவாதம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ், சிவசேனா, தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விவசாயிகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் செய்யாவிட்டால், இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது.

எதிர்க்கட்சிகளின் பிடிவாதம் காரணமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களைச்  செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்  வெங்கய்ய நாயுடு கூறினார். இது தொடர்பாக எம்.பி.க்கள் கொடுத்த 52 திருத்தங்களை பரிசீலனை செய்து வருவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் 9 திருத்தங்களை மத்திய அரசு செய்துள்ளது. இந்த 9 திருத்தங்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

சமூக உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விலக்கப்பட்ட பிரிவில் நிலம் கையகப்படுத்த முன்பு வகை செய்யப்பட்டிருந்தது. அது நீக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளின் இரு புறமும் ஒரு கிலோ மீட்டர் வரை நிலம் கையகப்படுத்துதலை கட்டுப்படுத்துவது தொடர்பான திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேம்பாட்டு திட்டங்களுக்கு காலி நிலங்களை மாநில அரசுகள் கையகப்படுத்தி கொடுக்கும் பிரிவிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டப்படி நிலத்தை இழப்பவர்கள், முதலில் நீதிமன்றத்திற்கு  செல்வதற்கு பதில் மாவட்ட நிர்வாகத்தை அணுகும் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

பாஜக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் சிவசேனா, ‘‘விவசாயிகள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு பதில் குத்தகைக்கு எடுக்கலாம். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும்’’ என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆதரவை பெற நேற்று மத்திய அமைச்சர்கள் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளில் எந்தப்  பலனும் கிடைக்கவில்லை.

என்றாலும் திருத்தம் செய்யப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதா மீது பாராளுமன்ற மக்களவையில் இன்று ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பாஜக எம்.பி. கள் அனைவரும் அலுவல்கள் நடக்கும் போது தவறாமல் அவையில்  இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவிட்டுள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறும்  காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அதன் கொறடா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.