Published:Updated:

நூலகங்களை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை: அமைச்சர்

Vikatan Correspondent

சென்னை: தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பொது நூலக இயக்ககம் சார்பில் நல் நூலகர் விருது வழங்கும் விழா வியாழக்கிழமை சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப்பாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களில் பணிபுரியும் 32 சிறந்த நூலகர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு அவர்களுக்கு நல் நூலகர் என்ற விருதையும் தலா ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "இந்தியாவில் பொதுநூலகங்கள் முறையான அமைப்புடன் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் முடிந்துள்ளன. 1910-ம் ஆண்டு பரோடா மன்னர் 2-ம் கெய்க்வாட் ஆங்கிலேய நூலக வல்லுனர்களின் ஆலோசனைபடி முறையான அமைப்புடன் செயல்படும் நூலகங்களை தொடங்கினார்.

இதைத்தொடர்ந்து 1919-ம் ஆண்டு சென்னை பிராட்வே பகுதியில் அமைந்துள்ள கோகலே ஹாலில் அகில இந்திய நூலக ஆர்வலர்களின் மாநாடு நவம்பர் 14-ல் நடைபெற்றது. 1932-ம் ஆண்டு அகில இந்திய அளவில் இந்திய நூலக சங்கம் ஏற்படுத்தப்பட்டு சங்கத்தின் முதல் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் நூலக அறிவியலில் தலைசிறந்த இடத்தை பெற்றவருமான டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் பணியாற்றினார். அவரது முயற்சியால் முதல் முதலாக தமிழகத்தில் 1948-ம் ஆண்டு பொது நூலக சட்டம் இயற்றப்பட்டு 1950-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் 4041 நூலகங்கள் உள்ளன. இதில் ஊர்ப்புற நூலகங்கள் 1795, கிளை நூலகங்கள் 1664, நடமாடும் நூலகங்கள் 10, பகுதி நேர நூலகங்கள் 539, மாவட்ட நூலகங்கள் 32, மாநில மத்திய நூலகம் 1 ஆகும்.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆணையின்படி பொது நூலகங்களுக்கு ரூ.25 கோடிக்கு புத்தகம் வாங்கவும், ரூ.25 கோடிக்கு புதிய நூலக கட்டிடங்கள் கட்டவும், ரூ.10 கோடி செலவில் கட்டிட பராமரிப்பு பணிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மாவட்ட நூலகங்களில் 1093 ஊர்ப்புற நூலகர் பணியிடங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பூர்த்தி செய்யவும் 260 மூன்றாம் நிலை நூலகர் பணியிடங்களை ஊர்ப்புற நூலகர்களை கொண்டு பதவிஉயர்வு மூலம் பூர்த்தி செய்யவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் கல்வி மற்றும் நூலகத் துறையில் புரட்சி ஏற்படும்," என்றார் அமைச்சர் சி.வி.சண்முகம்.