Published:Updated:

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறுக: பி.ஜே.பி.

Vikatan Correspondent

புதுதில்லி, ஜன.15:  உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பி.ஜே.பி. வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது நியாயமற்றது என்றும் பொதுமக்களை அதிகம் பாதிக்கச் செய்யும் என்றும் பி.ஜே.பி. கண்டனம் தெரிவித்துள்ளது.

இது, சாதாரண பொதுமனிதனிடம் இருந்து கொள்ளை அடிக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்துள்ள பி.ஜே.பி. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர், 30 ரூபாய் விலையுள்ள ஒரு பொருள் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றால், அதற்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று ஆகிறது என்று தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் எண்ணெய் கம்பெனிகளின் நஷ்டத்தை சரிகட்டவே இந்த விலை உயர்வு என்று தெரிவிக்கப் பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இது சரியான வழியாகத்தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த 6 மாத காலத்தில் 7ஆவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது.

டீசல் விலையும் இதனால் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. விலை உயர்வு மற்ற பொருள்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும் என்று பிரகாஷ் ஜாவேத்கர் தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.