Published:Updated:

‘ வெள்ளை அறிக்கை கொடுங்கள் பிரதமரே!’  -வரிந்து கட்டும் வங்கி ஊழியர்கள் 

‘ வெள்ளை அறிக்கை கொடுங்கள் பிரதமரே!’  -வரிந்து கட்டும் வங்கி ஊழியர்கள் 
‘ வெள்ளை அறிக்கை கொடுங்கள் பிரதமரே!’  -வரிந்து கட்டும் வங்கி ஊழியர்கள் 

புத்தாண்டு தினத்திலும் ஏ.டி.எம் வாசல்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பெரும்பாலான ஏ.டி.எம்கள் மூடியே கிடந்தன. ' மக்களின் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஐம்பது நாட்களில் என்ன மாதிரியான முன்னேற்றம் கிடைத்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' எனக் கொந்தளிக்கின்றனர் வங்கி ஊழியர்கள். 

" ஊழல், கறுப்புப்பணம் போன்றவற்றால் நாட்டு மக்கள் சிறைபட்டுக் கிடக்கின்றனர். ஊழலுக்கு முன்பு நேர்மையானவர்கள்கூட மண்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஊழலின் பிடியில் இருந்து விடுதலை பெறவே நாட்டு மக்கள் அனைவரும் விரும்புகின்றனர். அதற்காவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்டோம். கடந்த ஐம்பது நாட்களும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் சிரமங்களையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வங்கிகளில் நீண்ட நேரம் காத்திருந்ததையும் வங்கி அதிகாரிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அறிவேன். நாட்டின் நலன் கருதி அனைத்து சிரமங்களையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். நமது நாட்டில் பணப்பரிவர்த்தனைதான் பிரதானம். இதன் காரணமாக கறுப்புப் பணம் பதுக்கப்பட்டது. கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதை ஒழிப்பதற்காகவே பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊழலை ஒழிக்க மக்களோடு இணைந்து மத்திய அரசு ஒரு போரை தொடுத்துள்ளது. இதன்மூலம் நாட்டை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிடிபடும் வரிஏய்ப்பாளர்கள், கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" - பொதுமக்களுக்கு புத்தாண்டு உரை நிகழ்த்தியபோது பிரதமர் மோடி குறிப்பிட்ட வார்த்தைகள் இவை. பிரதமரின் உரைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரே குரலில் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளன. 

பிரதமரின் உரைக்குப் பதில் அளித்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, " நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட கறுப்புப் பணத்தின் மதிப்பு எவ்வளவு? பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? எத்தனை பேர் வேலை இழந்தனர்? பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் இறந்தவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்கப்பட்டதா? 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்வது குறித்து யார் யாரிடம் பிரதமர் விவாதித்தார்? நிபுணர்கள், ரிசர்வ் வங்கியிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை?" எனக் கொதித்தார். 

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் (தமிழ்நாடு) சி.பி.கிருஷ்ணனிடம் பேசினோம். “ ஐம்பது நாட்கள் கடந்துவிட்டன. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், புதிய இந்தியா மலரப் போகிறது என்றார்கள். வங்கிக்குள் வராது என்று எதிர்பார்க்கப்பட்ட கறுப்புப் பணம் வந்துவிட்டதா? அதைப் பற்றி இவர்கள் பேசவில்லை. மக்களிடம் புழக்கத்தில் இருந்த, 14 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்குள் வந்துவிட்டது என்கிறார்கள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரையிலும் வெளிநாடுவாழ் (என்.ஆர்.ஐ) இந்தியர்களுக்கு ஜூன் 30 வரையிலும் தங்கள் பணத்தை மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி அளித்திருக்கிறது. இந்தப் பின்னணியில் எந்த அளவுக்கு கறுப்புப் பணம் இருந்தது என்பதைப் பற்றியும் கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டது பற்றியும் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சென்ற பணத்தைப் பற்றியும் தெரிவிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

வரும் காலங்களில் புதிய 500, 2000 ரூபாய் ரூபாய் கள்ளப் பணம் வராது என்பதற்கு அரசு என்ன உத்தரவாதம் தரப் போகிறது? லஞ்ச லாவண்யம் ஒழியும் என்பதை எந்த ஆவணத்தின் அடிப்படையில் இவர்கள் சொல்கிறார்கள். விலைவாசி குறையும் என்று சொல்லிக் கொண்டே, நேற்று பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. இதன்மூலம் விலைவாசி குறையாது என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்வளவு விரைவாக புதிய 500 ரூபாய் தாள்களை மக்களுக்கு விநியோகிக்கப் போகிறார்கள் என்பதற்கு எந்த விடையும் கிடைக்கவில்லை. வங்கிகளில் தினம் தினம் வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்லியே ஓய்ந்துவிட்டோம். 24 ஆயிரம் ரூபாய்களைக் கொடுப்பதற்குள்ளேயே மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறோம். நிலைமை எப்போது கட்டுக்குள் வரும் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறது?” என்றார் குமுறலோடு. 

- ஆ.விஜயானந்த்