Published:Updated:

ஜிஎஸ்டி-க்குப் பின்னால் செயல்பட்ட அந்த நான்கு ‘பிக்பாஸ்’கள் இவர்கள்தான்! #GST

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜிஎஸ்டி-க்குப் பின்னால் செயல்பட்ட அந்த நான்கு ‘பிக்பாஸ்’கள் இவர்கள்தான்! #GST
ஜிஎஸ்டி-க்குப் பின்னால் செயல்பட்ட அந்த நான்கு ‘பிக்பாஸ்’கள் இவர்கள்தான்! #GST

ஜிஎஸ்டி-க்குப் பின்னால் செயல்பட்ட அந்த நான்கு ‘பிக்பாஸ்’கள் இவர்கள்தான்! #GST

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜிஎஸ்டி., அமலுக்கு வந்துவிட்டது. நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் சரிசமமாகவே இருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்களில் கை வைக்காத அளவில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் தப்பித்தார்கள். ஆனால், நடுத்தர வர்க்கம் ‘ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல்’ சிக்கிக்கொண்டது. ஹோட்டல்கள், மருந்துகள், மொபைல் பில் என அனைத்தும் விலை ஏறிவிட்டது. 

இதுவரை வரி ஏதும் இல்லாத சமையல் எரிவாயுவுக்கு, தற்போது ஐந்து சதவிகித வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மக்கள் அதிகம் நுகரும் டீ, காபி இரண்டுக்கும் ஐந்து சதவிகித வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் மக்களின் தவிர்க்க முடியாத சேவையாக இருக்கும் வங்கிச் சேவைக்கு வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. மொத்தத்தில் கொஞ்சம் பொருள்களுக்கு வரியைக் குறைத்துவிட்டு, பெரும்பாலான பொருள்களுக்கு வரியை உயர்த்தியிருக்கிறது. மக்களின் செலவில் நிச்சயம் மாற்றம் இருக்கும். இந்த ஜிஎஸ்டி ஆயுதத்தைக் கூர்தீட்டிய அந்த நான்கு மூளைகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா? 

17 ஆண்டுகளுக்கு முன்...

பொருள்கள் மற்றும் சேவைகள் வரி மசோதாவுக்கான வேலைகள் 17 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. அந்த வரி, இந்த வரி, வரிக்கு வரி எனச் சிக்கலான வரிமுறைகளை எளிமையாக்கவே இந்த வரி சீர்திருத்தத்தைத் திட்டமிடத் தொடங்கினார்கள். மோடி அரசு வந்து ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்த பிறகு மட்டும் இதில் 175 அதிகாரிகள் 18 ஆயிரம் மணி நேரம் தங்களின் உழைப்பைக் கொடுத்து இதை உருவாகியிருக்கிறார்கள். 

அந்த நான்கு பேர்!

ஜிஎஸ்டி என்கிற மெகா சீர்திருத்தத்துக்குப் பின்னால் செயல்பட்ட அந்த நான்கு பேர் இவர்கள்தான். அசிம் தாஸ்குப்தா, விஜய் கெல்கர், ப.சிதம்பரம் மற்றும் அருண் ஜெட்லி. 

அசிம் தாஸ்குப்தா:

2000-ம் ஆண்டில், அரசு ஒரு குழுவை நியமித்து ஜிஎஸ்டி குறித்த ஆய்வை நடத்தியது. அப்போது நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ்குப்தா அதற்குத் தலைமை தாங்கினார். எம்.ஐ.டி பேராசிரியராக இருந்து மார்க்சிஸ்ட் தலைவராக மாறிய இவர், மாநிலங்களோடு பல நீண்ட கலந்துரையாடல்களை நிகழ்த்தி ஜிஎஸ்டி மாதிரியை வடிவமைக்க முயற்சித்தார். 

விஜய் கெல்கர்:

இவர் FRBM Act, 2003 நடைமுறைப்படுத்தினார். மறைமுக வரியில் உள்ள பிரச்னைகளை ஆய்வுசெய்து அவற்றுக்கு மாற்றாக ஜிஎஸ்டி வரியை உருவாக்க முயற்சிசெய்தார். மதிப்புக்கூட்டு வரி அடிப்படையிலான ஜிஎஸ்டி வரி மாதிரியை அவர் வடிவமைக்கத் திட்டமிட்டார். 12-வது நிதிக்குழுவின் தலைவராக இருந்தபோது மீண்டும் ஜிஎஸ்டி குறித்து அவர் பேசத் தொடங்கினார். தேசிய ஜிஎஸ்டி கவுன்சிலை அமைக்க முதன்முதலில் அறிவுறுத்தியவர் விஜய் கெல்கர்தான். 

ப.சிதம்பரம்: 

`தற்போதைய ஜிஎஸ்டி அல்ல, நாங்கள் திட்டமிட்ட ஜிஎஸ்டி' என்று பேசிவரும் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காலத்தில் ஜிஎஸ்டி குறித்து பரவலாகப் பேசப்பட்டது. அப்போதைய காங்கிரஸ் அரசும் ஜிஎஸ்டி-யைக் கொண்டுவருவதில் தீவிரம் காட்டியது. ப.சிதம்பரம் அதற்கான வடிவமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார். குழுக்கள், துணைக் குழுக்கள் என அமைத்து மிகத் தீவிரமாக ஜிஎஸ்டி வரி மாதிரியைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தார். அதில் அனைத்து மாநிலங்களின் நலனும் எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வுகாணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மாநிலங்கள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் சரிசெய்ய ஜிஎஸ்டி குழுவுக்கு 2012-ம் ஆண்டு டிசம்பர் வரை கெடு வைத்திருந்தார். ஆனால், 2014 பொதுத் தேர்தலுக்கான வேலைகள் நெருங்கிவரும் சமயத்தில் திட்டமிட்டபடி ஜிஎஸ்டி-யை அவரால் கொண்டுவர முடியவில்லை.

அப்போது ஜிஎஸ்டி-யை அமல்படுத்த பா.ஜ.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. பிறகு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., இதோ மூன்றே ஆண்டுகளில் ஜிஎஸ்டி வரி மசோதாவை அமோக ஆதரவுடன் நிறைவேற்றி, நடைமுறைக்கும் கொண்டுவந்துவிட்டது. அதில் முக்கியமான பங்குவகித்தவர் அருண் ஜெட்லி. 

அருண் ஜெட்லி:

உழைப்பெல்லாம், வரி போடுபவர் ஜெட்லி என்றால், பெருமையெல்லாம் மோடிக்குதான். இந்தியாவில் இதுவரை நடக்காத ஒரு சீர்திருத்தமாக வர்ணிக்கப்படும் இந்த ஜிஎஸ்டி-யை நிறைவேற்றி சாதனை படைத்ததில் அருண் ஜெட்லி வரலாறானார். பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தலிருந்தே நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு ஓய்வே இல்லை. பட்ஜெட் தாக்கல் செய்வது, ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கிய நடவடிக்கை, வங்கிகளின் வாராக் கடன்களைச் சமாளிப்பது, திவால் சட்டம், பினாமி தடைச் சட்டம், ஜிஎஸ்டி என வரிசையாக அவருக்கு தொடர்ச்சியான வேலை. 

என்ன மாயமோ மந்திரமோ, எதிர்ப்புகளைத் தெரிவித்துக்கொண்டிருந்த மாநிலங்கள் எல்லாம் ஆதரவைக் கொடுத்துள்ளன. ஜிஎஸ்டி-யும் வெற்றிகரமாக நிறைவேறிவிட்டது. இனி நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் துண்டு விழவேண்டியதுதான் பாக்கி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு