Published:Updated:

கடலைக்கு 12% பிஸ்தாவுக்கு 5% - ஜி.எஸ்.டி வரி! குமுறும் சிறு வணிகர்கள்

கடலைக்கு 12%  பிஸ்தாவுக்கு 5% - ஜி.எஸ்.டி வரி!  குமுறும் சிறு வணிகர்கள்
கடலைக்கு 12% பிஸ்தாவுக்கு 5% - ஜி.எஸ்.டி வரி! குமுறும் சிறு வணிகர்கள்

கடலைக்கு 12% பிஸ்தாவுக்கு 5% - ஜி.எஸ்.டி வரி! குமுறும் சிறு வணிகர்கள்

"குழந்தைங்க பசி போக்குற பால்ல இருந்து,  அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்கள் வரை, அருகாமையில் உள்ள மளிகை கடைகளில்தான் வாங்குவோம். தமிழ்நாட்டுல மட்டும் சுமார் 18 லட்சம் கடைகள் இருக்கு.  அத்தனை கடைகளும் மூடப்பட்டால்....? யோசித்துப் பாருங்கள்... அப்படியான சூழலுக்குத்தான் எங்களை மத்திய அரசு தள்ளியுள்ளது" வேதனை குரலை வெளிப்படுத்துகின்றனர் தமிழ்நாட்டில் பெட்டிக் கடை முதல் மளிகை கடை வரை வைத்திருக்கும் சிறு வணிகர்கள். இதற்குக் காரணம் 'ஜி.எஸ்.டி ' என்கின்றனர் . 

"ஜி.எஸ்.டி-யால் இந்த ஒரு மாசமா  நாங்கள் படுற வேதனை மாளல. ரொம்பவே கஷ்டப்படுறோம். மாநில அரசாவது பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்கணும்" என்ற கோரிக்கையோடு  தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பை சார்ந்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். தங்கள் பிரச்னைகளை விளக்கியவர்கள், இதற்குத் தீர்வு தர முயற்சிக்காவிட்டால், வருகின்ற '22-ம் தேதி மிகப்பெரிய அளவில் போராட்டம் செய்யப் போகிறோம்' என்றும் அறிவிக்க, எதிர்ப்பட்ட மளிகை கடைக்காரரிடம் பேசினோம்.

"20 லட்சத்துக்குள்ள வியாபாரம் இருந்தா ஜி.எஸ்.டி இல்லைன்னு சொல்றாங்க. இன்னைக்கு விக்கிற விலைவாசியில இது சாதாரண தொகை தான். அப்படியிருக்க, சின்ன பெட்டிக் கடை முதல் பெரிய கடைகள் வரை எல்லோரும் வரி கட்டணும்ங்கிறததான் சுத்தி வளைச்சு சொல்றாங்க" என்றார்.  "நான் டீ கடை வச்சிருக்கேன். இங்கே கம்ப்யூட்டர் வாங்கி, பில் போடுறது எல்லாம் நடக்குற காரியமா? அப்படி போடணும்னா அதுக்கு தனியா ஒருத்தர வேலைக்கு வச்சு சம்பளம் தரணும். இப்படியெல்லாம் செஞ்சு ஜி.எஸ்.டி வரியும்  கட்டணும். ஒரு டீ வித்தா அதில் 12 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி கட்டணும். ஒரு டீ 10 ரூபாய்னா, பத்து பேரு டீ வாங்கினா, 12 ரூபாய் வரி கட்டணும். ஏற்கெனவே, டீ வாங்குறவங்க பை டூ , பை த்ரீ-ன்னுதான் வாங்குறாங்க. பல டீ கடன்ல தான் போகுது. இப்படி நடந்துக்கிட்டிருக்கிற கொஞ்சநஞ்ச  வியாபாரமும் ஜி.எஸ்.டி-யால சுத்தமாக் குறைஞ்சுடுச்சி" என்கிறார் வேதனையோடு.

இப்படி பல்வேறு தரப்புமே குமுற, நாம் வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜாவிடம் பேசினோம். 

"ஜி.எஸ்.டி வரி '- வணிகர்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தமாக உணர்கிறோம். குறிப்பாக சிறு வணிகர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அரிசிக்கு 5 விழுக்காடு  வரி போட்டாங்க. அதுவே மாவாக மாறினால் 12 விழுக்காடு, கடைக்கு இட்லியாக வந்தால் 18 விழுக்காடு ஜி.எஸ்.டி வரி.  இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு வரி விதிப்பது  மிகப்பெரிய சுமை. பாதாம், பிஸ்தா போன்ற பொருளுக்கு 5 விழுக்காடு வரி, அதுவே வறுத்த கடலைக்கு 12 விழுக்காடு வரி. பொதுவாக  ஏழைகள் சாப்பிடுறது கடலை, பணக்காரங்க  சாப்பிடுறது பாதாம்ன்னு சொல்வாங்க. அப்படினா ஏழைக்கு வரி விதிக்கிறதுதான் ஜி.எஸ்.டி-யின் சாதனையா? தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பலன் கொடுப்பது நிலக்கடலை. தமிழ்நாட்டில் கடலை பயன்படுத்துபவர்கள் அதிகம். ஆனா பாதாம், பிஸ்தா என்பது வடநாட்டினர் அதிகம் பயன்படுத்துவது. இது, தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது போல. மேலும் பிஸ்தா  இறக்குமதியாகும் பொருளாகும். நிலக்கடலை நம்ம நாட்டில் உற்பத்தியாகும் பொருள். நம்ம நாட்டு பொருளுக்கு கடுமையான வரி விதிப்பதுதான் மேக் இன்  இந்தியாவின் சாதனையான்னு எங்களை

சந்திக்கிற சிறு வணிகர்கள் குமுறுறாங்க. இந்த ஒரு மாதத்தில் பெருமளவு வியாபாரம் படுத்துவிட்டது. எனவே,  ஊறுகாய், வெண்ணெய் மற்றும் நெய், பேரீட்சைப்பழம், சீனி மிட்டாய், பஜ்ஜி மாவு உள்ளிட்ட 11 பொருட்களுக்கு வரியைக்  குறைக்கணும். கடலைமிட்டாய், இட்லி தோசை மாவு, குடிநீர் கேன், ஜவ்வரிசி உள்ளிட்ட 16 பொருளுக்கு வரி ரத்து  பண்ணணும்னு கோரிக்கை வைக்கிறோம். மேலும், ஜி.எஸ்.டி வரிவிலக்குக்கான  20 லட்சம் ரூபாய்  என்ற மதிப்பீட்டை 50 லட்சம் என்று உயர்த்த வேண்டும் என  கோரிக்கை வைக்கிறோம்.  தமிழ்நாடு முழுக்க சிறு, பெரு என சுமார் 21 லட்சம் வர்த்தகர்கள் இருக்காங்க. இவ்வாறு உயர்த்தினால்   சுமார் 60 விழுக்காடு சிறு வணிகர்கள் ஓரளவேனும் சுதாரிக்க முடியும்.  எங்கள் பாதிப்புகளை மத்திய அரசிடம் தெரிவித்தால் , 'உங்க மாநில மந்திரிகளிடம் சொல்லுங்கள். அவங்க மூலமா ஜி.எஸ்.டி கவுன்சிலில் பேசச் சொல்லுங்க' என்கின்றனர். மாநில அரசிடம் கூறினால், 'மத்திய அரசு கையில் உள்ளது' என்கின்றனர். இந்தநிலையில்தான் ஆகஸ்ட் 8-ம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவித்தோம். அதை அறிந்து எங்களை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். குறிப்பாக , 'கடலை மிட்டாய்க்கு 5 விழுக்காடு என்ற வகையில் ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க முயற்சி செய்கிறேன் என உறுதி அளித்துள்ளார். வருகின்ற 22-ம் தேதியன்று, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், லட்சத்தீவு ஆகிய தென்மண்டல ஒருங்கிணைப்புக் கூட்டத்தை சென்னையில் கூட்டுகிறோம். ஜி.எஸ்.டி. தொடர்பாக எங்க  கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறினால், இந்த 5 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் இணைந்து 22-ந் தேதியே, எங்கள் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம்" என்றார் அழுத்தமான குரலில். 

அடுத்த கட்டுரைக்கு