Published:Updated:

விக்டோரியா மகாராணி உத்தரவிட்டு இயற்றப்பட்ட `தொற்றுநோய் சட்டம் 1897’ - இன்றைய நடைமுறைக்கு சரியா?

Representational Image
Representational Image

இந்தச் சட்டம், 123 ஆண்டுகளாகப் பெரியளவில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பதால், இதில் பல்வேறு குறைபாடுகளும் உள்ளன.

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது இந்தியா. கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்குக் கைகொடுப்பதற்காக, 123 ஆண்டுகள் பழைமையான காலனியச் சட்டம் அமலுக்கு வருகிறது. `தொற்று நோய் சட்டம், 1897’ என்று அழைக்கப்படும் இந்தச் சட்டம், மாநில அரசுகளுக்குச் சுகாதாரம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரங்களை வழங்குகிறது. மத்திய அரசு இந்தச் சட்டத்தை, மாநில அரசுகளைப் பின்பற்றக் கோரி உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 அன்று, இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடக மாநிலத்தில் தொற்று நோய் சட்டம் அமல்படுத்தப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி, கோவா, ஹரியானா முதலான மாநிலங்களைத் தொடர்ந்து, தற்போது தமிழக அரசும் இந்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் எல்லைகளும் மூடப்படவுள்ளன. தொற்று நோய் சட்டத்தின் இரண்டாவது பிரிவின் கீழ், மாநில அரசுகளுக்கு இந்த உரிமை வழங்கப்படுகிறது. எனினும், இந்தச் சட்டம், 123 ஆண்டுகளாகப் பெரியளவில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்பதால், இதில் பல்வேறு குறைபாடுகளும் உள்ளன.

1896 தொற்று நோய்
1896 தொற்று நோய்
`144 தடை உத்தரவு; மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளுக்கு சீல்!’- முதல்வர் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

`தொற்று நோய் சட்டம், 1897’ என்பதன் பின்னணி என்ன?

1896-ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் பம்பாய் மாகாணம் பல்வேறு கிராமங்களிலிருந்து, பிழைப்புக்காக வந்த தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தது. அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பம்பாய் நகரம் முழுவதும் தொற்று நோய் ஒன்று கடுமையாகப் பரவியது. அந்தத் தொற்றுநோய் பரவிய காலத்தில், ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 1900 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏறத்தாழ 4 மாதங்கள் மருத்துவர்கள், ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் கடுமையாகப் பாடுபட்ட போதும், நோய் பரவுவது முழுமையாகத் தடுக்கப்படவில்லை.

1897-ம் ஆண்டு, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராணி விக்டோரியா, ``தொற்று நோய் பரவலைத் தடுப்பதற்காக எந்த வித நடவடிக்கையையும் எடுக்குமாறு எனது அரசுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். `தொற்று நோய் சட்டம், 1897’ அங்கிருந்துதான் உருவானது. கல்கத்தாவின் கவர்னர் ஜெனரல் கவுன்சிலில், `தொற்று நோய் சட்ட மசோதா’ அறிமுகப்படுத்தப்பட்டது. அதை அறிமுகப்படுத்திய உறுப்பினர் ஜான் வுட்பர்ன், ``தொற்று நோய் சட்டம் கடுமையானது என்ற போதும், மிகவும் அவசியமானது. இதுபோன்ற ஆபத்தான சூழல்களில், பொதுமக்கள் அரசு அதிகாரிகளின் முடிவுகளைப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார். ஒரு வாரம் விவாதத்திற்குப் பிறகு, 1897-ம் ஆண்டு, பிப்ரவரி 4 அன்று இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட போது, இதை வரவேற்ற திலகர் முதலான விடுதலைப் போராட்ட வீரர்கள், இந்தச் சட்டத்தைப் பிற்காலத்தில் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர்.

1896 தொற்று நோய்
1896 தொற்று நோய்

நோயால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் ஏழைகளாக இருந்ததால், பிரிட்டிஷ் காவல்துறையினரால் கடுமையாக நடத்தப்பட்டனர். நோயாளிகள் மட்டுமல்லாமல், நோயாளிகளின் உறவினர்கள் முதலானோரும் காவல்துறையினரால் இழிவுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அப்போதைய செய்திகள் உணர்த்துகின்றன. மேலும் இந்தச் சட்டத்தினால் அரசு யாரை வேண்டுமானாலும், எந்த இடத்தை வேண்டுமானாலும், `நோய் அச்சம்’ என்ற அடிப்படையில் சோதனையிடலாம் என்ற பிரச்னையும் காலனிய ஆட்சியில் எழுந்தது.

கொரோனாவுக்கு முன்பே கூட, இந்தச் சட்டம் குறுகிய நிலப்பரப்புகளில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. 2009-ம் ஆண்டு, பூனே நகரத்தில் பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக, இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டு, பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு, இதே சட்டம் மலேரியா, டெங்கு ஆகிய நோய்களைக் கட்டுப்படுத்த சண்டிகர் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு, குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் கேத்கரம்சியா என்ற கிராமத்தில் 31 பேருக்குக் காலரா தொற்று இருந்ததால், அங்கு அமல்படுத்தப்பட்டது.

தொற்று நோய்
தொற்று நோய்

கடந்த 123 ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கும் இந்தச் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக விமர்சனங்கள் உள்ளன. `தொற்று நோய்’ என்பதைக் குறிக்கும் விளக்கம் இந்தச் சட்டத்தில் இல்லை. மேலும், தற்போதைய மருத்துவத் தொழில்நுட்பமோ, மருந்துகளோ இந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இல்லை. மாநில அரசுகள் தங்களுக்கேற்ற விதிமுறைகளை அமல்படுத்துமாறு வலியுறுத்தும் தொற்று நோய் சட்டம், மத்திய அரசு நாட்டுக்குள் வரும் கப்பல்களைச் சோதனையிட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. விமானங்களின் சேவை இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டதால், அதைக் குறிப்பிடாமல், இன்றும் அதே சட்டம் தொடர்ந்து வருகிறது.

தொற்று நோய் சட்டத்தில் குறைபாடுகள் இருந்த போதும், 2008-ம் ஆண்டு, மத்திய அரசு, உயிரியல் பேரிடர் மேலாண்மை என்ற தலைப்பில் 156 பக்க ஆவணம் ஒன்றை வெளியிட்டது. அதில், ``தொற்று நோய் சட்டம் என்பது 1897-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது; அது தற்காலத்திற்கு ஏற்றாற்போல் அமல்படுத்தப்பட வேண்டும். உயிரியல் பேரிடர்கள் ஏற்பட்டால், அதைத் தடுக்க மத்திய அரசுக்குப் பெரியளவிலான உரிமைகளை இந்தச் சட்டம் வழங்கவில்லை. அதனால் இந்தச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டம் ஒன்றை உயிரியல் போர் (Bio war), எதிரிகளால் உயிரிகளை வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல், சர்வதேச அளவில் ஏற்படும் தொற்று நோய்கள் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரத்திற்கான தேவைகளை வரையறுக்க வேண்டும்” என்று கூறியிருந்தது. எனினும் அது பின்பற்றப்படவில்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

எனினும், 2009-ம் ஆண்டு தேசிய சுகாதார மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவம் அடிப்படை உரிமை என்றும், ஒவ்வொருவருக்கும் மிகச்சிறந்த மருத்துவம் பெற்று உயிர் வாழ்வதற்கு உரிமையுண்டு எனவும் இந்த மசோதாவில் கூறப்பட்டது. அதன்படி, பொதுச்சுகாதாரத்தை அரசு கட்டமைக்கும் எனவும் கூறப்பட்டது. எனினும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படவில்லை.

2017-ம் ஆண்டு, மத்திய அரசு பொது சுகாதாரம் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. 1897-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொற்று நோய் சட்டத்தின் அதிகாரங்களை மத்திய அரசு முழுமையாக எடுத்துக்கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டதாக எதிர்ப்புகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இருந்த போதும், பி.ஜே.பி அரசு இந்த மசோதாவைப் பின்பற்றவில்லை. இந்த மசோதா சட்டமாகியிருந்தால், தற்போதைய ஊரடங்குச் சூழலில் அதை மீறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.

தற்போதைய கொரோனாவின் சூழலில், விதிமீறல் ஏற்பட்டால் சட்டப்பிரிவுகள் 269, 270 ஆகியவை, அலட்சியம், ஆபத்தான நோயைப் பரப்புவது ஆகிய சட்டங்களின் கீழ் தண்டனை வழங்கப்படுகின்றன.
கொரோனா
கொரோனா
`கொரோனா பாதித்த 80% நோயாளிகள் தாமாகவே குணமடைவர்!' -இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம்

தேசியப் பேரிடர் மேலாண்மைப் படை 2018-ம் ஆண்டு, பாட்னா விமான நிலையத்தில் எபோலா நோயைக் கண்டறிந்து, அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒத்திகையை மேற்கொண்டது. எனினும், அதன்பிறகு அதுபோன்ற ஒத்திகை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. `பேரிடர் மேலாண்மையைப் போன்ற உறுதியான, தற்காலத்திற்கு ஏற்ற சட்டமாகவும் தொற்று நோய் சட்டத்தின் அம்சங்கள் இல்லை’ என்று இதுகுறித்து 2013-ம் ஆண்டு, மருத்துவ ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள் பினோத் பத்ரோ, ஜெயபிரசாத் த்ரிபாதி, ரஷ்மி காஷ்யப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ், பி.ஜே.பி ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும், பொது சுகாதாரம் பெரும்பாலும் கவனிக்கப்படாத துறையாகவே இருந்திருக்கிறது. தனியார்மயமாக்கலுக்குப் பிறகு, மருத்துவம் பணம் கொழிக்கும் வியாபாரமாக மாற்றப்பட்டிருக்கிறது. தற்போது கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், அந்தச் சுமையும் மக்கள் மீதே இறக்கப்படுகிறது. எனினும் தற்காலச் சட்டங்கள் அமலில் இல்லாத சூழலில், மக்களுக்கு அரசு வழங்கியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதே தொற்று நோயிலிருந்து தப்பிப்பதற்கான ஒரே வழி!

அடுத்த கட்டுரைக்கு