அரசியலமைப்பைத் திருத்தும் 10 சதவிகித இடஒதுக்கீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்! #DoubtOfCommonMan

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு நியாயமானதா என்று விவாதிப்பதற்கு முன்பு, இடஒதுக்கீடு என்றால் என்ன என்கிற புரிதல் அவசியமானதாகிறது.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்கிறார்கள்... அது எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்? யாரெல்லாம் பயன்பெறலாம்?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார், வாசகர் அருந்தவச்செல்வன். அந்தக் கேள்வியை முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியின் முன் வைத்தோம்.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல குழப்பங்களையும் எதிர்ப்புகளையும் சந்திக்கவேண்டியுள்ளது. அண்மையில், எஸ்.பி.ஐ வங்கி வேலைக்கான தேர்வில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கான கட் ஆஃப் 28.5/100. அதுவே, தபால் துறைக்கு 40.5/100.
இப்படி குழப்பமாக நிர்ணயிக்கப்படும் மதிப்பெண்கள் வேறு ஒரு பக்கம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு நியாயமானதா என்று விவாதிப்பதற்கு முன்பு இடஒதுக்கீடு என்றால் என்ன என்கிற புரிதல் அவசியமானதாகிறது.

சமூகப் படிநிலை என்பது தனிநபர் அளவீட்டில் இல்லாமல் சாதியப் படிநிலை அடிப்படையில்தான் அளவிடப்படுகிறது. இதுதான் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைச் சித்தாந்தம். அந்த அடிப்படையில்தான் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு இங்கே வரையறுக்கப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 10 சதவிகித இடஒதுக்கீடு தனிநபர் பொருளாதாரத்தை அளவீடாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பையே திருத்தி எழுதும் பொருளாதார இடஒதுக்கீடு குறித்த கேள்விகளுக்குப் பதில் பகிர்கிறார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கான தகுதிகள் என்ன?
பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே செல்லும்.

குடும்பத்தின் சொத்து மதிப்பு, வருவாயைப் பொறுத்து பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கான தகுதி நிர்ணயிக்கப்படும். குடும்பத்தின் வருடாந்திர வருமானம் எட்டு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் இருக்க வேண்டும். ஆயிரம் சதுரஅடிக்கும் குறைவான இடத்தில் வீடு கட்டப்பட்டிருக்க வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு ஏற்கெனவே அமலில் இருப்பதால் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே செல்லும்.
நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதன் நடைமுறை மற்றும் பொருளாதார இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான செயல்முறை (Implementation) என்ன?

மசோதா முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆனால், அதுபோன்ற விவாதம் பொருளாதார இடஒதுக்கீட்டு மசோதாவில் நடக்கவில்லை. தேர்தலுக்கு முன்பு அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்ற அவையில் பாரதிய ஜனதாவுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதால், தற்போது இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருந்தாலும் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த மசோதாவில் நிறைய சிக்கல்களும் இருக்கின்றன. தனக்கு எட்டு லட்ச ரூபாய்க்கு கீழ்தான் வருடாந்திர வருமானம் என்று யார் வேண்டுமானாலும் வருமானச் சான்றிதழ் வாங்கலாம். இடஒதுக்கீடு இதுபோன்று தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கான தீர்வுகள், விதிமுறைகள் என்ன என்பதை அவர்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வளவு காலம்வரை எந்தவொரு அரசின் திட்டமும் பரிசோதனை முறையில்தான் (Trial and Error) வெற்றி தோல்வி கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டின் செயல்பாடும் பரிசோதனை முறையில்தான் தெரியவரும்.

சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார்களே?

பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு தரலாமா? 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக பொருளாதார இடஒதுக்கீடு தரலாமா என்று பல சட்டரீதியான கேள்விகளை இது முன்வைக்கிறது.முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி
பட்டியல் சமூகத்துக்கான ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு என அத்தனை கோட்டாக்களும் நிரப்பப்பட்டதும், மெரிட் மதிப்பெண்கள் இருக்கும் யார் வேண்டுமானாலும் இந்த ஓபன் கோட்டாவில் போட்டியிடலாம். அரசின் பத்து சதவிகித இடஒதுக்கீட்டுக்கான மசோதாவின்படி, பொதுப்பிரிவில் இருப்பவர்கள் மட்டும்தான் தற்போது இதில் போட்டியிட முடியும். இந்த 10 சதவிகிதம் நிச்சயம் 69 சதவிகிதத்தைப் பாதிக்கும்.
ஒருபக்கம், ஜனாதிபதியிடமிருந்து இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. மறுபக்கம், உச்ச நீதிமன்றத்தில் பொருளாதார இடஒதுக்கீடு மீதான விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக என்ன நிலைப்பாடு எடுக்க வாய்ப்புள்ளது?

உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை. அரசியல் சாசனத்துக்குப் புறம்பான வகையில்தான் இந்த இடஒதுக்கீடு மசோதாவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு தரலாமா, 50 சதவிகிதத்துக்கும் அதிகமாகப் பொருளாதார இடஒதுக்கீடு தரலாமா என்று பல சட்டரீதியான கேள்விகளை இது முன்வைக்கிறது.
