Published:Updated:

"சீக்கிரம் அங்கிருந்து நகருங்கள்!" - காஷ்மீர் நேரடி அனுபவக் குறிப்புகள்!

காஷ்மீர்
காஷ்மீர்

லால்சவுக் ஏரியாவில் 'சடன் பிரேக்' அடித்து காரை நிறுத்திய டிரைவர், அதற்கு மேல் தன்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டு விருட்டென காரைக் கிளப்பினார்

விகடன் செய்தி ஆசிரியர் பாலகிஷன், காஷ்மீரின் கள நிலவரத்தை அறிய நேரில் சென்றார். அதன் அனுபவக் குறிப்பில் இருந்து...

இரவு நேரத்தில் வாகனத்தின் உள்ளே விளக்கு எரியவேண்டும். கண்ணாடிகளை இறக்கியிருக்க வேண்டும். வெளியிலிருந்து விசில் சத்தம் கேட்டால், உடனே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும். கைகளைத் தூக்கியபடி இறங்க வேண்டும். இதைச் செய்யவில்லையென்றால் யாராயிருந்தாலும் அவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள். இவையெல்லாம் இந்தியாவில்தான். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரில்தான் இந்த நிலை. யாரோ சொல்லிக் கேட்டதில்லை இவை. நேரில் பார்த்தவை. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/32tiUDI

2019 அக்டோபர் 18... சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட 74ஆம் நாளில் நானும் போட்டோகிராபர் கார்த்திகேயனும் ஸ்ரீநகரில் இருந்தோம். பகல் நேர காஷ்மீரைப் பார்த்துப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்ட எங்களுக்கு இரவில் எப்படியிருக்கிறது காஷ்மீர் என்று அறிந்துகொள்ள ஆசை. இருவரும் வெளியே போகலாம் என்று கிளம்பினோம்.

நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் மேனேஜர் முதியவர், எங்களைப் பார்த்து ''எங்கே கிளம்பிட்டீங்க?'' என்று கேட்டார். ''சும்மா... அப்படியே டெளன்டவுன் ஏரியா பக்கம் ஒரு ராத்திரி ரவுண்ட் அப் போயிட்டு வரலாம்னு...'' என்று முடிப்பதற்குள் பதறிக்கொண்டு எங்கள் பக்கத்தில் ஓடிவந்தார்.

காஷ்மீர்
காஷ்மீர்

''ஸ்ரீநகரின் முக்கியமான ஏரியா அது. டிரை ஃப்ரூட்ஸ், சால்வை, கம்பளம், தங்கம் என பிஸியான கமர்சியல் ஏரியா. நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுக்க 10 சதவிகித வன்முறைச்சம்பவங்கள் நடந்தால், மீதி 90 சதவிகிதம் டெளன்டவுன் ஏரியாவுலதான் நடக்கும். அங்கே தடை உத்தரவு அமலில் இருக்கிறது. பார்லிமென்ட் எலக்ஷன்ல அந்த ஏரியாவுல இருக்குற 90 வாக்குச்சாவடிகள்ல ஒரு ஓட்டுகூடப் பதிவாகலை. மத்திய அரசின் நடவடிக்கையில் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். யாராவது மாட்டினால், சுட்டுப்பொசுக்க ராணுவம் அலைகிறது. அங்கே போய் மொழி தெரியாத நீங்கள் மாட்டிக்கொண்டால் சின்னாபின்னமாகிவிடுவீர்கள். பேசாமல் போய்த்தூங்குங்கள்!'' என்று அன்பாய் அதட்டினார்.

அவரிடம் 'வாக்கிங்' போய் வருவதாக பொய் சொல்லிவிட்டு, 'டெளன்டவுன் செல்லவேண்டும்' என்று அங்கிருந்த டாக்ஸி டிரைவரிடம் கேட்க நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், ''வருகிறேன். குறிப்பிட்ட தூரம்தான் வரமுடியும். அதற்கு மேல் வரமாட்டேன்!'' என்று கண்டிஷன் போட்டார். கிளம்பினோம்.

லால்சவுக் ஏரியாவில் 'சடன் பிரேக்' அடித்து காரை நிறுத்திய டிரைவர், அதற்கு மேல் தன்னால் வர இயலாது என்று சொல்லிவிட்டு விருட்டென காரைக் கிளப்பினார். வெறிச்சோடிய தெருக்கள். தடித்த நாய்கள் கும்பல்கும்பலாக குரைத்தபடி நடமாடின. தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். பூட்டிக்கிடந்த கடைகளின் கதவுகளின் ஷட்டர்களில்...'கோ இண்டியா... கோ பேக்... வீ வான்ட் ஃப்ரீடம். சேவ் காஷ்மீர்!'' என்கிற வார்த்தைகளை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வைத்திருந்தார்கள். ஸ்ரீநகரின் லேண்ட்மார்க் இடங்களில் லால்சவுக் ஏரியாவும் ஒன்று. அங்கே ஒரு மணிக்கூண்டு இருக்கிறது. அதைச்சுற்றிலும் ஏகப்பட்ட கடைகள். மூடிக்கிடந்தன. ஆங்காங்கே மத்திய ரிசர்வ் படையினரின் கூண்டு வண்டிகள் நின்றிருந்தன.

காதைச்சுற்றியிருந்த குல்லாவைத் தாண்டி விசில் சத்தம் செவிப்பறையைக் கிழிக்க உள்ளுக்குள் உதறல் அடித்தது. கூண்டு வண்டி ஒன்று நம்மை நோக்கி வந்தது. அதிலிருந்து இறங்கி வந்த ராணுவ அதிகாரி, ''யார் நீங்கள்...என்ன செய்கிறீர்கள்?'' என்று விசாரித்தார். நம்மைப்பற்றிச் சொன்னோம். தீவிரவாதிகள் இல்லை என்பதை பல்வேறு சோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டபின், அவரின் முகத்தில் மாற்றம். ''இந்த நேரத்தில் இங்கே வந்ததே தப்பு. புகைப்படமெல்லாம் எடுக்கிறீர்கள். உடனே, கிளம்புங்கள். இல்லாவிட்டால், கைது செய்யவேண்டிவரும்!'' என்று எச்சரித்தார்...

காஷ்மீர்
காஷ்மீர்

டெளன்டவுன் ஏரியாவை நோக்கி நடந்தோம். நம்மைப் பார்த்த பலரும் 'சீக்கிரம் அங்கிருந்து நகருங்கள்' என்று அவசரப்படுத்தினர். அப்போது ராணுவ ட்ரக்கில் பார்சல்கள் வந்து இறங்கின. அவற்றை இறக்கிக்கொண்டிருந்த வீரர்களில் தமிழர்கள் சிலர் இருந்தனர்.

...ரெயினாவாரி என்கிற இடத்தருகே போனபோது, தெரு ஓரத்தில் இருந்த பங்கரிலிருந்து ஒரு குரல்... ''தமிழ்நாடா?'' என்றது. மத்திய ரிசர்வ் படையின் 144வது பிரிவைச் சேர்ந்த வீரர் அவர். காவேரிப் பட்டினத்தைச் சேர்ந்தவர். அவரிடம் பேசினோம்...

- இந்தக் கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எரியும் காஷ்மீரில் இரவுப்பயணம்! https://www.vikatan.com/news/general-news/a-visit-to-the-much-debated-kashmir

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |

அடுத்த கட்டுரைக்கு