Published:Updated:

"இதற்கெல்லாம் 90ஸ் கிட்ஸ் தான் காரணமா?" - நிர்மலா சீதாராமனுக்கு ஒரு `மில்லெனியலி’ன் கடிதம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, "வாகன விற்பனைச் சரிவுக்கு, ஓலா, ஊபெர் போன்ற 'ஆப்'களை நாடும் 'மில்லெனியல்'களின் மனநிலையும் காரணம்" என்று கூறியிருந்தார். மில்லெனியல்கள், அதாவது 90ஸ் கிட்ஸ்தான் இதற்கும் காரணமா?

Nirmala Sitharaman
Nirmala Sitharaman ( PTI )

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு,

வணக்கம், இந்தக் கடிதம் இந்தியாவின் 'மில்லெனியல்' குடிமகனால் எழுதப்படுகிறது. 'மில்லெனியல்' என்பதை அமெரிக்காவின் ப்யூ ஆய்வு மையம், 1981 முதல் 1996 வரை எனக் கணக்கிடுகிறது. இதனை நாங்கள் தற்போது '90ஸ் கிட்ஸ்' என்று அழைக்கிறோம்.

ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு நிர்மலா சீதாராமனின் காரணங்கள் சரியா?!

கடந்த செப்டம்பர் 10 அன்று, சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, "வாகன விற்பனைச் சரிவுக்கு ஓலா, ஊபெர் போன்ற வசதிகளை நாடும் மில்லெனியல்களின் மனநிலையும் காரணம் எனவும், மில்லெனியல்கள் ஈ.எம்.ஐ கட்டி, கார் வாங்குவதை விரும்புவதில்லை" என்று கூறியிருந்தீர்கள். ட்விட்டரில் இந்தக் கருத்து ட்ரென்ட் ஆனதோடு, இதனைப் பலரும் ட்ரோல் செய்திருந்தனர்.

நீங்கள் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது. எங்கள் தலைமுறை ஈ.எம்.ஐ கட்டுவதையும், கார் வாங்குவதையும் பெரிதும் விரும்பாததற்கான காரணத்தை இந்தக் கடிதத்தின் முடிவில் சொல்கிறேன்.

2016-ஆம் ஆண்டின் நவம்பர் 8 அன்று, பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டது. அந்த நாளையும், அதற்கடுத்த சில வாரங்களையும், நாங்கள் ஏ.டி.எம் வாசல்களின் வரிசைகளில் செலவிட்டதை மறக்க முடியாது. பணமதிப்பு நீக்கத்தால் ஏறத்தாழ பல்வேறு தொழில் துறைகள் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் குறைந்த பணப்புழக்கத்தால் பொருள்கள் வாங்குவதையே குறைத்துக் கொண்டிருக்கின்றனர் பெரும்பாலான மக்கள்.

Demonetisation
Demonetisation

கடந்த வாரம், ரிசர்வ் வங்கி இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அளித்திருக்கும் கடன் பற்றிய தகவல்களை வெளியிட்டது. இந்தத் தரவுகள் ஒவ்வொரு மாதமும் வெளியாகின்றன. கடந்த 2017-ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், நுகர்வுப் பொருட்களுக்காக நாடு முழுவதும் மக்கள் வாங்கிய மொத்த கடன் தொகை, 20.7 ஆயிரம் கோடி ரூபாய். கடந்த ஜூலை மாதத்தில், இந்தத் தொகை ஏறத்தாழ 73 சதவிகிதம் குறைந்து, 5.6 ஆயிரம் கோடியாக இருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, இந்தத் தொகை தொடர்ந்து குறைந்து வருவதை, வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பணப்புழக்கம் குறைந்ததற்கு நாங்கள் காரணம் அல்ல.

வாகன விற்பனைச் சரிவுக்கு மில்லெனியல்களின் மனநிலையைக் காரணம் காட்டியதுபோல, 'பார்லே ஜி' பிஸ்கட் விலை குறைந்ததற்கு மில்லெனியல்கள் தற்போது வளர்ந்துவிட்டதுதான் காரணம் எனக் கூறாமல் இருப்பீர்கள் என நம்புகிறேன். 'பார்லே' நிறுவனம் இந்தியாவின் தற்போதைய மில்லெனியல்கள் குழந்தைகளாக இருந்தபோதிலிருந்தே, பெரும் வளர்ச்சியைப் பெற்றது. 2003-ஆம் ஆண்டு, 'பார்லே-ஜி' உலகிலேயே அதிகமாக விற்கப்படும் பிஸ்கட் என அறிவிக்கப்பட்டது.

Parle G
Parle G

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பி.ஜே.பி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, 'பார்லே-ஜி' நிறுவனத்தின் விற்பனையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 'பார்லே' நிறுவனத்தின் அதிகாரி மாயங்க் ஷா, "பொருளாதார நிலை மோசமாக உள்ளது. மத்திய அரசு இதில் தலையிடவில்லை எனில், பார்லே நிறுவனத்தில் ஏறத்தாழ 10 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவோம்" எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பிஸ்கட் விற்பனை, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைத் தரவுகள் காட்டுகின்றன.

'பார்லே' நிறுவனத்தின் போட்டியாளரான 'பிரிட்டானியா' நிறுவனமும் இதே கருத்தைக் கூறியுள்ளது. "இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் பிரச்னைகள் காரணமாக, மக்கள் 5 ரூபாய் பிஸ்கட் வாங்குவதற்குக்கூட யோசிக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.

பிஸ்கட் விற்பனை மட்டுமல்ல, ஆடை உற்பத்தியும் தற்போது பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. 20 நாள்களுக்கு முன்பு, வட இந்திய ஆடை உற்பத்தியாளர் சங்கம் உங்கள் கவனத்தை ஈர்க்க செய்தித்தாளில் அளித்த விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். "ஆடை உற்பத்தித் துறை மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது. இது ஆடை நிறுவனங்களின் உற்பத்தியைக் குறைப்பதோடு, ஆள் குறைப்பு நடவடிக்கைக்குத் தள்ளும் சூழல் நிலவுகிறது" எனக்கூறும் வட இந்திய ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் முகேஷ் தியாகி, இதற்குக் காரணமாகப் பணமதிப்பு நீக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.

NITMA Advertisement
NITMA Advertisement
ஆடை உற்பத்தியாளர் சங்கத்தின் இந்த விளம்பரத்தை, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவுசெய்திருந்தார்.

ஆடை உற்பத்தி மட்டுமின்றி, உள்ளாடை விற்பனையும் சரிவைச் சந்தித்துள்ளதாக அந்தத் துறையினர் கூறிவருகின்றனர். இதற்கும் நாங்கள்தான் காரணமா என்பது தெரியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய உள்ளாடை உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான டாலர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குநர் வினோத் குமார் குப்தா, "தனது வாழ்நாளில் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை உள்ளாடை விற்பனை சந்தித்ததில்லை" எனக் கூறியுள்ளார். மற்றொரு உள்ளாடை உற்பத்தி நிறுவனமான ரூபா அன்ட் கோவின் இயக்குநர் ரமேஷ் அகர்வாலும் உள்ளாடை விற்பனைச் சரிவைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

Economic slowdown
Economic slowdown

இந்தப் பொருளாதாரச் சூழலில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வரிகளைத் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளீர்கள். இதனால், மத்திய அரசுக்கு ஏறத்தாழ 1,400 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டாலும், முதலீடுகள் அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அதை எதிர்வரும் காலங்களில், நாங்கள் அறிவோம்.

இந்தியாவின் தற்போதைய பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்கள் வழக்கமானவை என நீங்கள் கூறியிருப்பது மகிழ்ச்சி. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) செய்தித் தொடர்பாளர் சமீபத்தில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட, மிகவும் பலவீனமாக இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.

ஓலா, ஊபெர் போன்ற வசதிகளைப் பயன்படுத்தும் மில்லெனியல்களின் மனநிலை என நீங்கள் கூறியிருந்தாலும், சமீபத்தில் ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்களும் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்து வருவதே உண்மை. மேலும், "வாகன விற்பனைச் சரிவுக்கு ஓலா, ஊபெர் போன்ற நிறுவனங்கள் காரணம் இல்லை" என்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனைப்பிரிவு இயக்குநர் ஷஷங்க் ஸ்ரீவத்சவா கூறியுள்ளதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

உங்கள் கருத்தில் பாதி உண்மை இருப்பதாக இந்தக் கடிதத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தேன். எங்கள் தலைமுறை ஈ.எம்.ஐ கட்டுவதையோ, கார் வாங்குவதையோ விரும்பாமல் இருப்பதற்கான மிகப்பெரிய காரணம், இந்தியாவில் தற்போது நிலவும் வேலையின்மை. 15 முதல் 29 வயது வரை இருக்கும் மில்லெனியல்கள், Generation Z ஆகியோரின் வேலையின்மை விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எங்களிடையே வாழும் பட்டதாரிகள் 17.2 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லை. பட்டப்படிப்பிற்காகப் பலரும் பெற்ற கல்விக்கடன்களைக் கட்டுவதற்கே திணறிக் கொண்டிருக்கின்றனர்.
Unemployment
Unemployment

எங்கள் தலைமுறையினருக்கு கார் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும் ஆசை இருக்கிறது. எனினும், எங்களுக்கு முந்தைய தலைமுறையின் பொருளாதாரக் கொள்கையால் அவை நிறைவேறாமல் இருக்கின்றன. அவற்றை நிறைவேற்றுவதும், பொருளாதாரக் கொள்கையில் சீர்திருத்தம் மேற்கொள்வதும், மத்திய நிதியமைச்சராகிய உங்களது கைகளில்தான் உள்ளது.

நன்றி.

இப்படிக்கு,

இந்தியாவின் மில்லெனியல்களில் ஒருவன்.