Published:Updated:

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | புது வழியால் புறப்பட்ட அகதி | பகுதி - 25

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )

இங்கு யாருக்கோ உதவி செய்கிறோம், அவர் துயரில் பங்குகொள்கிறோம், அவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற திருப்தியில் திரிந்த மனம், இன்று எல்லாவற்றையும் களைந்துவிட்டு, இந்த முகாம் அகதிகள் அத்தனை பேருக்கும் முன்னால் அம்மணமாக நிற்பதுபோல உணர்ந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | புது வழியால் புறப்பட்ட அகதி | பகுதி - 25

இங்கு யாருக்கோ உதவி செய்கிறோம், அவர் துயரில் பங்குகொள்கிறோம், அவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற திருப்தியில் திரிந்த மனம், இன்று எல்லாவற்றையும் களைந்துவிட்டு, இந்த முகாம் அகதிகள் அத்தனை பேருக்கும் முன்னால் அம்மணமாக நிற்பதுபோல உணர்ந்தது.

Published:Updated:
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு ( pixabay )
``இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” - ஆசிரியர்.

மெல்லிய வெயிலை விலக்கிக்கொண்டு எனது கார் முகாம் வீதிக்குள் திரும்பியது. அசாதாரணமாக நான்கைந்து போலீஸ் வாகனங்கள் முகாமின் வெளியிலுள்ள யூகலிப்டஸ் மரங்களுக்குக் கீழ் வரிசையில் நின்றன. ஆஸ்திரேலியக் குடிவரவு அமைச்சின் இலச்சினை பதித்த வாகனங்கள் இரண்டும்கூட அங்கு நின்றுகொண்டிருந்தன. அவை முதல் நாளிரவு பெரிய சம்பவமொன்று முகாமில் இடம்பெற்றிருப்பதற்கான அபசகுனங்களை அவிழ்த்துவைத்திருந்தன.

ஆனால், அது ஆச்சர்யமில்லை.

முகாமில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள்களிலெல்லாம், ஏதாவதொரு பதற்றத்தை இங்கு எதிர்பார்க்கலாம். கூரையில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள்; சவரம் செய்யும் பிளேடை எடுத்துக் கையை அறுத்துக்கொள்வார்கள்; அறையைப் பூட்டிவிட்டு `விஸா தந்தால்தான் வெளியில் வருவேன்’ என்பார்கள்; `இமிக்ரேஷனைக் கூப்பிட்டால்தான் கழுத்திலிருந்து கயிற்றைக் கழற்றுவேன்’ என்பார்கள். இவ்வாறு வெவ்வேறு நாட்டவர்கள் முகாமுக்குள் வருகின்றபோதெல்லாம், அவர்களது போராட்ட வடிவங்களும் வித்தியாசமானவையாக இந்தக் கம்பிவேலிகளுக்குள் எமக்குப் புதிர்போட்டிருக்கின்றன.

“உதடுகளை ஊசி, நூல் கொண்டு தைத்துவிட்டு, நடு மைதானத்திலிருந்து போராட்டம் நடத்திய ஆப்கன் அகதிகளையே இந்த முகாம் முன்பு கண்டிருக்கிறது”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்று எனக்கு முதல் பணிபுரிந்த முகாம் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

அசம்பாவிதங்களின் பருமன் பெரிதாகிவிடுகின்ற சந்தர்ப்பங்களில், பொலீஸ் வாகனங்கள், அம்புலன்ஸ் போன்றவையும் முகாமைச் சூழ்ந்துவிடுவது வழக்கம்.

அன்று நடந்தது என்ன சம்பவம் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. முகாமை கார் நெருங்க நெருங்க, உள்ளே யாருக்குப் பிரச்னையாக இருக்கும் என்று ஒவ்வோர் அகதியின் முகத்தையும் தாயக்கட்டைபோல உருட்டி உருட்டி யோசித்துப் பார்த்தேன்.

ஆனால்,

காலம் தனது அழுகிய கைகளால் நீதனின் உயிரை இவ்வளவு கொடூரமாகக் கொய்திருக்கும் என்று நான் இம்மியும் எதிர்பார்த்திருக்கவில்லை.

முதல்நாள் என்னோடு பேசியபோது, அவன் ஓரளவுக்குத் தன்னளவில் ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

ஒரு பக்கம், குடும்பம், குழந்தைகள்.

மறுபக்கம், ராதா.

தலைக்கு மேல், ஆஸ்திரேலியப் புலனாய்வுப் பிரிவு

என்று அமிழ்ந்துகிடந்தவனுக்கு, கீற்றளவு ஒளி கிடைத்துவிட்டதாகத்தான் நம்பினான். நானும் நம்பினேன்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

பதறிய கண்களோடு வாசல் ஏறிய மாத்திரத்திலேயே, முகாம் அறைகளுக்கான திறப்பு மற்றும் ரேடியோ கருவியை எடுத்து மேசையில் வைத்த வரவேற்பு உத்தியோகத்தர் ஸ்டெப்னி,

``நீதன் பாஸ்டு எவே லாஸ்ட் நைட்” என்றாள்.

கசங்கிய முள் செடியொன்று என் உடலுக்குள் திடீரென்று விரிந்துகொண்டதுபோல எல்லாத் தசைகளிலும் அவள் சொன்ன வார்த்தை குத்திக் கிழித்தது.

என் உதடுகள் உலர்ந்து உறைந்தன. செவிகளுக்கு அருகில் தீ மூட்டிவிட்டது போன்று அனல் கொதித்தது.

இந்த முகாமில் எத்தனையோ அகதிகள், எத்தனையோ வடிவங்களில் துயரங்களைச் சந்தித்திருக்கிறார்கள். அவர்களின் அனுபவங்களை நானும் உணர்ந்திருக்கிறேன். உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். அந்த வலிகளை எனது உணர்வுகளும் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஒருபோதும் இந்த முட்கம்பி முகாம் ஓர் அகதியின் மரணச் செய்தியை எதிர்கொண்டதில்லை.

நீதனின் களைத்த கண்களும், பேசிய சொற்களும் மீண்டும் மீண்டும் வந்து முகத்தில் அறைந்தன. வெளியில் காண்பித்துக்கொள்ள முடியாத இறுக்கம், எனக்குள் பெரும் வாதையாக மனதைப் பிசைந்தது.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

அல்பா கம்பவுண்டுக்குள் நுழைந்தேன். சப்பாத்தை மீறிக் கால் வழியாக குளிர் நுழைந்ததுபோல, உடல் உதறியது. ஏதோவொரு மூலையில் நின்று “அண்ணே...” என்றவாறு நீதன் வந்துவிடப்போகிறான் என்ற நம்பிக்கையில், கண்கள் அலைந்தன.

முதல் நாளிரவு பணி செய்தவர்கள் அனைவரும் ஓரளவுக்கு வெளியேறிவிட்டார்கள். பொறுப்பதிகாரிகள் அனைவரும் பொலீஸாருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் முக்கியச் சந்திப்பிலிருந்தார்கள். குடிவரவு அதிகாரிகள் சிலர் அந்த அறைக்குள்ளிருந்து வெளியேறுவதும், தமது அலுவலகத்துக்குச் சென்று சில கோப்புக்களுடன் உள்ளே போவதுமாயிருந்தார்கள்.

அல்பா கம்பவுண்டுக்கு வெளியே வந்து நின்று, நானும் நீதனும் முதல்நாள் பேசிவிட்டு அகன்ற தகரக் கொட்டகையைப் பார்த்தேன். சிதையாக எழு தீயில் எம் உரையாடல்கள் உருகி விழுவதுபோல் தெரிந்தது.

ஒரே இடத்தில் நின்றுகொண்டிருந்தால், ஒருவேளை நான் நிலைகுலைந்து விழுந்துவிடக்கூடும் என்பதாக உணர்ந்தேன். ஜீரணிக்க முடியாத சாவும், அந்தச் செய்தியும் என்னை அந்த முகாம் நிலத்தில் விழுத்தி விழுத்தி எழுப்புவதுபோலிருந்தது.

நாட்டற்றவர்களின் கடவுச்சீட்டு
நாட்டற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

நீதன் கடைசியாக வெற்றுத் தேநீர் குவளையை எறிந்த குப்பைத் தொட்டி –

சாதுவாகச் சரிந்து நின்று உதை பந்தாட்டம் பார்க்கின்ற அந்த அல்பா கம்பவுண்ட் தூண் -

தேநீருடன் நடக்கின்ற உதை பந்தாட்ட மைதானத் தடம் -

அவன் பொங்கிய இடம் -

எல்லாத் திசைகளிலும் ஒரு புகாராக நெளிந்தான்.

முகாம் முழுதாக விடியவில்லை. யாரும் இன்னும் எழுந்துகொள்ளவில்லை. எழுந்த பிறகு, முகாமின் நிலை என்னவாகும்... எல்லோருக்கும் விருப்பமான ஓர் அகதியின் இழப்பு இங்கு என்ன செய்யும்?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதையுமே நினைத்துக்கொள்ள முடியாமல் வாசலுக்கு நடந்தேன். என்னைச் சுற்றி அதே அதிர்ச்சியுடன் பல உத்தியோகத்தர்கள் தங்களுக்குள் பல கதைகள் பேசினார்கள். ஒருவருடனும் என்னால் முகம் கொடுத்து உரையாட முடியவில்லை. நான் உட்பட பார்ப்பவர்கள் எல்லோரும் ஒருவகையில் நீதனின் சாவுக்குக் காரணமாகிவிட்டோமோ என்ற எரிச்சல் புரையேறிக்கொண்டிருந்தது.

ஓர் அகதியின் உயிரைக் காப்பாற்ற முடியாத இந்த முகாமுக்குள் யாருக்கு என்ன வசதி செய்துகொடுத்து என்ன பயன்?

இந்தத் தேசம் மனித உரிமை – மாண்பு – மதிப்பு என்றெல்லாம் அழகான கலைச்சொற்களை அள்ளி அள்ளி வீசிக்கொண்டு திரிவதில் என்ன பயன்?

இடுப்பிலிருந்த சாவிக்கொத்தை எடுத்து சுவரில் ஓங்கிக் குத்திவிடலாமா என்றிருந்தது.

அதற்குமேல், அந்த நிலத்தில் நிற்க முடியவில்லை. முகாமின் சுவர்கள்கூட என்னைக் குற்றவாளியைப்போல மிரட்டுவதாக உணர்ந்தேன்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
நாடற்றவர்களின் கடவுச்சீட்டு
pixabay

நேற்றுவரை, இங்கு யாருக்கோ உதவி செய்கிறோம், அவர் துயரில் பங்குகொள்கிறோம், அவர்களைப் பாதுகாக்கிறோம் என்ற திருப்தியில் திரிந்த மனம், இன்று எல்லாவற்றையும் களைந்துவிட்டு, இந்த முகாம் அகதிகள் அத்தனை பேருக்கும் முன்னால் அம்மணமாக நிற்பதுபோல உணர்ந்தது.

பெரும் போராட்டத்திலிருந்து தவறி, பெரும் கடல் பயணமொன்றில் உயிர் தப்பி, சகல வசதிகளும் நிறைந்த முகாமுக்கு வந்தவனை, எவ்வளவு அழுத்தங்களால் நிறைத்துக் கொன்றுவிட்டோம்...

நீதனின் இதயத்தை எந்தக் காரணம் இறுக்கிப் பிடித்து பலியெடுத்தது என்று யாருக்கும் தெரியாதுதான். என்றாலும், அந்த பலிக்குக் கூட்டுப்பொறுப்பேற்க வேண்டியவர்களாக எல்லோரும் வரிசையில் நிற்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

அவன் நிராயுதபாணியாக, தஞ்சம் கோரி வந்த உலகின் மிகப் பலகீனமான அகதிகளில் ஒருவன்.

அன்று என்னால் வேலை செய்ய முடியவில்லை. வாசலுக்கு வந்த திறப்புகளையும் ரேடியோவையும் திருப்பிக்கொடுத்தேன். ஸ்டெப்னி ஓரளவுக்கு அதை எதிர்பார்த்தவள்போல, அனைத்தையும் திருப்பி எடுத்து வைத்துக்கொண்டாள்.

வெளியில் வெயில் பரவியிருந்தது. சந்திப்பு முடிந்து ஸ்ருவேர்ட் சிகரெட்டோடு நின்றுகொண்டிருந்தான். சாவுக்கான கடைசிச் செய்தியை என்னிடம் ஒப்படைத்துவிட்டுப்போனதுபோல அவன் என்னிடம் நீதன் பற்றிச் சொல்லியிருந்தான். அவன் குறிப்பாக நீதனில் எதையோ கணித்திருந்தான். அதை நான் என்னால் இயன்ற அளவு நீதனுடன் பேசித்தானிருந்தேன். ஒரு மாரடைப்பு அவனுக்குள் விதியாக இறங்கி ,உயிரை உருவிச் சென்றுவிடும் என்று யார் எதிர்பார்த்தார்?

ஸ்ருவேர்ட்டுடன் பேசுவதற்கு என்னிடம் எந்த வார்த்தையும் இருக்கவில்லை. காரை நோக்கி நடந்தேன்.

முற்றும்

வாசகர்களுக்கு வணக்கம்

`நாடற்றவர்களின் கடவுச்சீட்டு’ என்ற இந்தத் தொடரை கடந்த இருபத்தைந்து வாரங்களாகப் படித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இதுவொரு தொடர் என்பதற்கு அப்பால், ஒரு வாழ்வியல் அனுபவம். ஆஸ்திரேலியாவின் ஓர் அகதி முகாம் வாழ்வெனப்படுவது பலருக்குத் தெரியாத கொடிய இருள் பயணம். இந்த நாட்டில் வசிப்பவர்களுக்குக்கூட இந்தக் கரிய பக்கங்கள் குறித்து அதிகம் தெரியாது.

படகேறிப் பரதேசம் போகும் கனவோடு வருபவர்கள், கடல் மட்டும்தான் பெருந்துன்பம் என்று எண்ணுவதுண்டு. ஆனால், கரை வந்த பிறகு பெரும்பூதமாகக் காத்திருக்கும் தடுப்பு முகாம்கள் பற்றித் தெரிவதில்லை.

அங்கு சிறிது காலம் பணிபுரிந்தவன் என்றாலும், நான் சந்தித்த சம்பவங்கள், மனிதர்கள், அவர்களின் அனுபவங்கள், அவர்களின் காயங்கள் எல்லாம் மிகவும் விசித்திரமானவை. அவை என் வாழ்வையும் உணர்வையும்கூடப் புரட்டிப்போட்டவை. நான் பயணித்த முகாம் வாழ்விலிருந்து ஒரு துளியை மாத்திரம்தான் இங்கு இருபத்தைந்து வாரங்களாகத் தொடராக்கியிருந்தேன்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு | புது வழியால் புறப்பட்ட அகதி | பகுதி - 25

இந்தத் தொடரை வாசகர்களிடம் நெருக்கமாக எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக புனைவுக்கும் உண்மைக்கும் இடையில், கதைகளை நகர்த்துகின்ற புதியதோர் எழுத்து வகைமையாய் தொடர்ந்திருந்தேன். அதை வாசகர்களாகிய நீங்களும் விரும்பியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தத் தொடர் பயணத்தில், ஒவ்வொரு பகுதியையும் படித்துவிட்டுத் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டவர்கள், முகநூல் வழியாகவும் ஏனைய சமூக வலைதளங்களின் ஊடாகவும் தொடர்ந்து ஊக்கம் அளித்தவர்கள், இந்தத் தொடர் குறித்த தகவலை எடுத்துச் சென்றவர்கள் ஆகியோர் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.

எல்லாவற்றுக்கும் மேலாக, இப்படியான ஓர் இருண்ட வாழ்வின் பயணத்தடங்களை எழுதுவதற்குக் களம் தந்த விகடனுக்கு நிறைந்த நன்றிகள். ஓவ்வொரு தொடரையும் காலம் தவறாமல் வாசகர்களுக்கு எடுத்துச் சென்றதுடன், அதற்குரிய படங்கள் - பக்க வடிவமைப்பு அனைத்தையும் நேர்த்தியாக நெறிப்படுத்திக்கொண்ட விகடன் ஆசிரியர் பீட நண்பர்கள் அனைவரது கைகளையும் இறுகப் பற்றி என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எழுத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்.

நன்றி

தெய்வீகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism