Published:Updated:

``கோட்டைக்கு எதிரே இருப்புப் போராட்டம்!'' - தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மாநாட்டில் முடிவு

டெல்லி கலவரம், வண்ணாரப்பேட்டை, ஷாஹின் பாக், ரஜினி பேச்சு, ஹெச்.ராஜா ட்வீட், ட்ரம்ப் விசிட் எனப் பல தரப்பையும் பேசி அடுத்த போராட்டத்துக்கு தேதி குறித்து நடந்து முடிந்திருக்கிறது குடியுரிமை பாதுகாப்பு மாநாடு.

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் இந்தப் போராட்டம் விதவிதமான வடிவங்களில் நடைபெற்று வருகிறது. `தமிழக மக்கள் ஒற்றுமை மேடை' அமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், `குடியுரிமை பாதுகாப்பு மாநாடு' ஒன்றை நேற்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தினார்கள்.

குடியுரிமை பாதுகாப்பு மாநாடு
குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

மாநாட்டில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ஒய்.எம்.சி.ஏ திடலுக்கு அருகிலிருந்த பள்ளி மைதானம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் பஸ், வேன்களில் மாநாட்டுக்கு வந்ததால் திடல் நிரம்பி வழிந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

மாநாட்டின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்ட பேனரில், "சி.ஏ.ஏ-வை திரும்பப் பெறும் அதிகாரம் மாநிலத்துக்கு இல்லை'' என்கிற எடப்பாடியின் வாசகத்தைப் போட்டு, ''ஆனால், எதிர்க்கும் அதிகாரம் உண்டு. எதிர்த்து நில்லுங்கள் என்றுதான் சொல்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். மாநாடு தொடங்குவதற்கு முன்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்த பேனர்..
அந்த பேனர்..

மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய `தமிழக மக்கள் ஒற்றுமை மேடை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணன் எடுத்த எடுப்பிலேயே "அனைவருக்கும் போராட்ட வாழ்த்துகள்'' என்றார். "நாடு நல்லா இருந்தால் வாழ்த்துகள் சொல்லலாம். போராட்டங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், போராட்ட வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்திய பி.ஜே.பி-யினர் 'அமெரிக்காவிலும் துபாயிலும் வேலை பார்க்க மாட்டோம்' எனச் சொல்லத் தயாரா? மற்றவர்கள் தாய் மண்ணை முத்தமிடுகிறார்களோ இல்லையோ, முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழுகையின்போது முத்தமிடுகிறார்கள். என்.ஆர்.சி தயாரிக்க என்.பி.ஆர் வேண்டும். அதனால், என்.பி.ஆரில் கேட்கப்படும் கூடுதல் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள். கேள்விகள் அல்ல... என்.பி.ஆரே வேண்டாம் என்பதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். டெல்லியில் கலவரம். சூப்பர் ஸ்டார் எங்கே? உடனே வீதிக்கு வாங்க ராஜா?'' என ரஜினியைச் சீண்டினார் அருணன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழாவில் பேசியவர்கள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைப் புகழ்ந்தார்கள். அவர் மைக் பிடித்தபோது, "ஆளுநர் கிரண் பேடி எனக்கு ரகசியக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தை நான் பிரித்துப் படிக்கவில்லை. அதில் என்ன இருக்கும் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அதன்பிறகு சட்டசபையைக் கூட்டி குடியுரிமை சட்டத்தைப் புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம் எனத் தீர்மானம் போட்டோம். `யார் பாதிக்கப்பட்டார்கள்' எனக் கேட்கிறார் எடப்பாடி. பி.ஜே.பி ஆதரவுடன் ஆட்சி நடக்கும் பீகாரில் என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம் எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியே எதிர்த்து குரல் கொடுக்கிறது. எடப்பாடியோ ஆதரிக்கிறார்'' என்றார்.

அருணன்
அருணன்
சாதியைத் தூக்கிப் பிடிக்கிறதா தி.மு.க? - ஒரு விரிவான அலசல்!

அடுத்து பேசிய ஸ்டாலின், "வன்முறையாளர்கள் கையில் டெல்லி போயிருக்கிறது. உள்துறை மந்திரி அமித்ஷா என்ன செய்துகொண்டிருக்கிறார்? சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற மத்திய அரசுக்கு மனம் இல்லை. எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டுவதாகச் சொல்கிறது பி.ஜே.பி. கேரள முதல்வர் பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ்காரர். நான் தி.மு.க-வைச் சேர்ந்தவன். நாங்கள் வெவ்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள். நாங்கள் ஒன்று சேர்ந்திருப்பது பி.ஜே.பி ஆட்சியை எதிர்க்க என நினைக்க வேண்டாம். இந்தியாவைக் காப்பாற்ற, இந்திய மக்களைக் காப்பாற்ற ஒன்றாக நிற்கிறோம்'' என்றார்.

பத்திரிகையாளர் என்.ராம் அடுத்ததாகப் பேச அழைக்கப்பட்டார். ''இந்த மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு மகிழ்ச்சி அல்ல. கடமை என்றுதான் சொல்ல வேண்டும். ட்ரம்ப் இங்கே வந்தபோது இந்த விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை. `உள்நாட்டுப் பிரச்னை' எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ரஜினி எனக்கு நண்பர்தான். 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக வருவேன்' என ரஜினி சொன்ன நிலையில், டெல்லியில் கலவரம் நடக்கிறது. அவருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் ரஜினியின் நிலைப்பாடு மாற வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்தார்.

ஸ்டாலின் உரையாற்றுகிறார்...
ஸ்டாலின் உரையாற்றுகிறார்...
ஆகஸ்ட் மாநாடு... டிஜிட்டல் பிரசாரம்... ரஜினி என்ட்ரி! - ரஜினியின் தேர்தல் ப்ளான்

"காந்தி சாகடிக்கப்பட்டார். ஆனால், காந்தியம் சாகவில்லை. எதற்கும் அஞ்ச மாட்டோம் என அமைதியாகப் போராடி வருகிறார்கள். வர்ணாசிரம கொள்கையால் இந்துக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்கள் மற்ற மதங்களுக்கு மாறுகிறார்கள். முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் இல்லாமல் போனால், வஞ்சிக்கப்படும் இந்துக்களுக்குத்தான் அது பாதிப்பை உண்டாக்கும். இங்கே நடப்பது எடப்பாடி ஆட்சி அல்ல. டெல்லி ஆட்சி'' எனக் கர்ஜித்தார் ஆன்மிக தலைவர் பாலபிரஜாபதி அடிகள்.

''குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாங்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாகத் தலைவர்கள் அனைவரும் கைகோத்து நிற்பார்கள்'' என அருணன் சொல்ல... தலைவர்கள் அனைவரும் கைகோத்தபடி போஸ் கொடுத்தார்கள்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடல் நலக்குறைவு காரணமாக மாநாட்டில் பங்கேற்கவில்லை. இதைக் குறிப்பிட்டுப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "வண்ணாரப்பேட்டை போராட்டத்தைப் பற்றி ரவுடி போல மோசமான கருத்தை வெளியிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா. நெல்லை கண்ணனைக் கைது செய்தவர்கள் ஹெச்.ராஜாவை மட்டும் ஏன் விட்டு வைத்தார்கள்? பி.ஜே.பி கூட்டணியில் இருந்தும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் சி.ஏ.ஏ-வை எதிர்க்கிறார். பாதிப்பு என்ன என்பது அவருக்குப் புரிந்திருக்கிறது. அந்த அளவுக்குக்கூட எடப்பாடி இல்லை?'' என்றார்.

மேடையில்
மேடையில்

தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா, ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், பேராயர் எஸ்றா சற்குணம், இந்தியத் தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் எனப் பலரும் மேடையில் இருந்தபோதும் அவர்கள் பேசவில்லை. ''எங்களையும் பேச அனுமதித்திருக்கலாம்'' எனச் சிலர் ஆதங்கப்பட்டார்கள்.

மாநாட்டில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மார்ச் மூன்றாவது வாரத்தில் கோட்டைக்கு எதிரே 24 மணி நேர இருப்புப் போராட்டம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

குடியுரிமை பாதுகாப்பு மாநாடு
குடியுரிமை பாதுகாப்பு மாநாடு
`வெல்கம்' கமல்; சைலன்ட் மோடில் ரஜினி...! - மய்யத்தோடு கூட்டணி சேருமா மன்றம்?

கோட்டை நோக்கி கடந்த வாரம் தடையை மீறி கிடுகிடு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்திய நிலையில் 24 மணி நேர இருப்புப் போராட்டத்துக்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் நிலையில் இந்த போராட்டம் முக்கியத்துவம் பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு