Published:Updated:

79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு!

பட்டாசு

இந்த இரண்டு குரல்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது பட்டாசுக்கு மட்டும்தான். அவர்கள், தொழில் சார்ந்து பேசுகின்றனர். இவர்கள், அதனால் காயம்பட்டதால் பேசுகின்றனர். பட்டாசைப் பற்றி முழுவதுமாக அலசுகிறது இந்தக் கட்டுரை...

"இதுதான் எங்களுக்குத் தொழில்; இதை விட்டா எங்களுக்கு வேறெதுவும் தெரியாது. இதை வைத்துத்தான் எங்களுக்கு பொழப்பு ஓடுது" என்கின்றனர், ஒருபக்கம். மறுபக்கம், "படு பாவிங்க... காச கரியாக்குறதோட, மனுச உயிரையும் எடுக்குறாங்களே..." என்கின்றனர்.

பட்டாசு
பட்டாசு

இந்த இரண்டு குரல்களுக்கும் நெருக்கமான தொடர்பிருப்பது, பட்டாசுக்கு மட்டும்தான். அவர்கள், தொழில்சார்ந்து பேசுகின்றனர். இவர்கள், அதனால் காயம்பட்டதால் பேசுகின்றனர். பட்டாசைப் பற்றி முழுவதுமாக அலசுகிறது இந்தக் கட்டுரை...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சீனாவில் பிறந்த பட்டாசு!

'பட்டாசு' என்கிற இந்த ஒற்றை வார்த்தையை உதடுகளால் உச்சரிக்கும்போதுகூட பட்டாசாய் வெடிக்கிறது. அப்படிப்பட்ட பட்டாசு, சீனாவின் கண்டுபிடிப்பு எனச் சொல்லப்படுகிறது. அந்த நாட்டில், பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட்) அதிக அளவில் இருந்ததாகவும், அது தவறுதலாக நெருப்பில் படும்போது தீ ஜுவாலை ஏற்பட்டதாகவும், அதை மேம்படுத்தியே சீனர்கள் பட்டாசை உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, சீனாவில் ஒரு தினமே (ஏப்ரல் 18) கொண்டாடப்படுகிறது. அந்தக் காலத்தில், மூங்கிலுக்குள் வெடிமருந்தை நிரப்பி பட்டாசு உருவாக்கப்பட்டது. போருக்கு மட்டுமே சீனர்கள் இதைப் பயன்படுத்தினர். இத்தகைய பட்டாசுகளை அறிந்துகொள்ள மற்ற நாடுகளும் ஆர்வம் காட்டின. அரேபிய, ஐரோப்பா நாடுகளும் அதில் வெற்றிபெற்றன. இங்கிருந்து தொடங்கிய பட்டாசின் வளர்ச்சி, 19-ம் நூற்றாண்டில் வேகம் பிடித்தது.

பட்டாசு
பட்டாசு

இந்தியாவைப் பொறுத்தவரை, 1922-ம் ஆண்டு வரை கொல்கத்தாவில்தான் தீப்பெட்டித் தொழில் நடைபெற்றிருக்கிறது. அந்தச் சமயத்தில், சிவகாசியிலிருந்து பி.ஐயன், ஏ.சண்முகம் போன்றவர்கள் தீப்பெட்டி தொழிலைக் கற்பதற்காக கொல்கத்தா சென்றதாகவும், அங்கேயே 6 ஆண்டுக்காலம் தங்கி தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தயாரிப்புகளைக் கற்றுக்கொண்டதாகவும், பின்னர் 1928-ம் ஆண்டு சிவகாசி திரும்பிய அவர்கள், தீப்பெட்டித் தொழிற்சாலையை ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும், 1940-ம் ஆண்டுக்குப் பிறகுதான் சிவகாசியில் தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.

சிவகாசி பட்டாசும்... சீனப் பட்டாசும்!

இன்று, உலகில் பட்டாசு வர்த்தகத்தில் முதலிடம் பிடிக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, 'குட்டி ஜப்பான்' என்றழைக்கப்படும் சிவகாசி. இங்கு, 90 சதவிகித பட்டாசுகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. நாடு முழுமைக்கும் இங்கிருந்தே பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெரும்பாலும், இந்தப் பகுதி மக்கள் பட்டாசுத் தொழிலைச் சார்ந்திருக்கின்றனர். இங்கு, ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அதற்கேற்றபடி, சிறிதும் பெரிதுமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. குறிப்பாக, 850-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் பெற்றவையாகவும், 700-க்கும் மேற்பட்ட ஆலைகள் உரிமம் இல்லாத ஆலைகளாகவும் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பட்டாசு விற்பனையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த சிவகாசி நகரம், சமீபகாலமாக 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் முடங்கிவருகிறது. இதற்குக் காரணம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் சிவகாசி பட்டாசுகளுக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்த கதையும் உண்டு.

சிவகாசி பட்டாசு ஆலைகள்
சிவகாசி பட்டாசு ஆலைகள்
Vikatan Infographics

சீனாவில் விலை குறைவான பொட்டாசியம் குளோரைடை மூலப்பொருளாகப் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இது, அதிக சத்தத்துடன் வெடிக்கும் தன்மையுடையது. விலையும் குறைவு. இதனால் மக்கள், சீனப் பட்டாசு பக்கம் சாயத் தொடங்கினர். பொட்டாசியம் குளோரைடைப் பயன்படுத்தி இந்தியாவில் பட்டாசு தயாரிக்கத் தடை உள்ளது. இந்தியாவில் சீனப் பட்டாசு விற்கத் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் சட்டவிரோதமாக சீனப் பட்டாசு இறக்குமதி செய்யப்பட்டு, பல மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. இதனால் சிவகாசிப் பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 315 டன் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டெல்லியில் 12 கோடி ரூபாய் மதிப்பிலும் மும்பையில் 7.2 கோடி ரூபாய் அளவிலும் சீனப் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, 2,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய மார்க்கெட்டில் சீனப் பட்டாசுகள் புழங்கிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இது, சிவகாசியின் இந்தியச் சந்தை மதிப்பில் 35 சதவிகிதத்தை சீனப் பட்டாசுகள் பிடித்திருந்ததாகக் கூறப்பட்டது.

சீனப் பட்டாசு
சீனப் பட்டாசு
depositphotos.com

சீனப் பட்டாசின் தன்மைகுறித்து அப்போது பேசிய சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியின் முன்னாள் வேதியியல் துறை துணைத்தலைவர் தனசேகரன், "சீனப் பட்டாசுகளைத் தொடர்ந்து அதிகமாக வெடித்தால், அதிலிருந்து வெளியாகும் புகையினால், முதலில் மூச்சுத் திணறல் ஏற்படும். பிறகு, மயக்கம் ஏற்படும். உதாரணமாக, ஆயிரம் வாலா சீனப் பட்டாசை வெடித்தால், அதிலிருந்து வெளிவரும் கரும்புகை, ஆயிரம் சிகரெட்டை ஒரே நேரத்தில் குடித்து வெளியேற்றும் புகைக்குச் சமம். ஏனென்றால், சீனப் பட்டாசில் இருக்கும் பொட்டாசியம் குளோரைடு அவ்வளவு வீரியம்" என்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தியிருந்தார்.

இலவச பட்டாசுக்கு எதிராக விளம்பரம்!

இதுகுறித்து அந்தச் சமயத்தில் கருத்து தெரிவித்த, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "சீனாவில் உற்பத்தியாகும் தரம் குறைந்த நச்சுத்தன்மை மிக்க, ஆபத்தான பட்டாசுகள் இந்தியாவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதால்தான், சிவகாசியில் 50 சதவிகித பட்டாசுகளைக்கூட விற்பனை செய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய அரசே காரணம்" என்றார். இதே கோரிக்கையைப் பட்டாசு உற்பத்தியாளர்களும் இன்னும் பலரும் வைத்தனர்.

ஓசி பட்டாசு குறித்த விளம்பரம்
ஓசி பட்டாசு குறித்த விளம்பரம்

இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும் சீனப் பட்டாசுகளுக்கு எதிராக அரசு சார்பில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. துறைமுகங்களில் சீனப் பட்டாசு இறக்குமதி கண்காணிக்கப்பட்டது. சீனப் பட்டாசுகள் வைத்திருந்தால் கடும் தண்டனை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. சீனப் பட்டாசுகளின் வரவால் நஷ்டமடைந்த சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள், 'இலவச பட்டாசு கேட்டு வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றில் வந்த விளம்பரத்தில், "அன்பார்ந்த அதிகாரிகளே, எங்கள் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு இலவச பட்டாசு கேட்டு வருவதை அடியோடு நிறுத்துங்கள். எந்தத் தொழிலிலும் இல்லாத ஓசி கேட்கும் பழக்கத்தை பட்டாசுத் தொழிலில் மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். நசிந்துவரும் பட்டாசுத் தொழிலைக் காத்திட உறுதுணையாக இருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அப்போதைய விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர், ஓசி பட்டாசுகள் வாங்கக்கூடாது என எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டாசுத் தொழில் நலிவடைய என்ன காரணம்?

இப்படி, சிவகாசி பட்டாசு விற்பனைக்கு சீனப் பட்டாசுகள் வேட்டுவைத்தது ஒருபுறமென்றால், மறுபுறம் டெல்லிக் குழந்தைகள் தாக்கல்செய்த மனுக்களும் பட்டாசுத் தொழிலை நலிவடையச் செய்தன.

"தீபாவளிப் பண்டிகையன்று நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், காற்றில் மாசு அதிகரிக்கிறது. டெல்லியில் பட்டாசு வெடிப்பதால் நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, உறுப்புகள் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்" என உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இது, மூன்றுமாத மற்றும் 14 மாதக் குழந்தைகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.

பட்டாசு விற்பனை மட்டும்தான் காற்று மாசுக்கும், தீபாவளியின்போது ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் காரணம் என்று சொல்ல முடியாது.
பட்டாசுத் தொழிலாளர்கள்

பட்டாசு விற்பனை தடைகுறித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "சுத்தமான காற்றை சுவாசிப்பது, மக்களின் உரிமையாகும். வளர்ச்சிக்கு சுத்தமான காற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழலும் அவசியமாகும். டெல்லி, தற்போது உலகிலேயே மிக அசுத்தமான நகரமாக மாறியுள்ளது. காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்படுவது இளம்வயதினர்" என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் எனப் பட்டாசுத் தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டால், அது பலரின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஒரு தொழில் துறையையே மூடும் நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, தலைநகர் டெல்லியில், 2016-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது, பட்டாசு விற்பனைக்கு இடைக்காலத் தடைவிதித்தது. டெல்லியின் காற்று மாசு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருந்தது. மேலும் அந்த ஆண்டு, உலகின் மிக அதிக காற்று மாசுள்ள நகரம் என்ற பெயரையும் டெல்லி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு டெல்லி பட்டாசுத் தடைக்குப் பிறகு, அங்கு, காற்றின் மாசு அளவு 30 விழுக்காடு குறைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது எனப் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே காற்று மாசினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு குறித்து கவலை தெரிவித்தது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், டெல்லி பட்டாசுத் தடை உத்தரவைத் திரும்பப் பெற்ற நீதிமன்றம், அக்டோபர் முதல் மீண்டும் தடை உத்தரவை அமலுக்குக் கொண்டுவந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த நிலையில், பட்டாசு வழக்கில் இடைவாதிகளாகச் சேர்ந்தவர்களும் தங்கள் வாதங்களை வைத்தனர். "சுவாசப் பிரச்னையுள்ள நோயாளிகளே பண்டிகைக் காலங்களில் அதிகம்" என்றார், மரு.அரவிந்தகுமார். "காற்று மற்றும் இரைச்சல் மாசினால் விலங்குகள் மற்றும் பறவைகள் பாதிக்கப்படுகின்றன" என்றார், கெளரி மெளலேகி.

இப்படித் தொடர்ந்து பட்டாசுக்குத் தடை விதிக்க எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில், இதனால் பாதிக்கப்பட்டவரும் வழக்கறிஞருமான பல்லவி பிரதாப், "கலாசாரத்தை நிலைநிறுத்த பட்டாசு வெடிப்பது ஒரே வழியல்ல" என்றார். அதற்கேற்றவாறு, மத்திய சுற்றுச்சூழல் சமர்ப்பித்த தீபாவளி கண்காணிக்கை அறிக்கையிலோ (2018), "பட்டாசு வெடிப்பதிலிருந்து வெளியாகும் துகள்களின் (Particulate Matter) வெளியீடு அதிகமாக உள்ளது" எனத் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பு!

இதற்கிடையே, பட்டாசுக்கு முற்றிலும் தடைவிதிக்க எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் எனக் கருத்து தெரிவித்தது. 2018-ம் ஆண்டு இறுதி விசாரணையின்போது, இதைக் கவனத்தில்கொண்ட உச்ச நீதிமன்றம், "நாட்டு மக்களின் நலனையும் பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொள்வோம்" என்றது. அதன்படி, இந்த வழக்குக்கான தீர்ப்பை 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி வழங்கியது.

அதில், "உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பட்டாசு தயாரிப்புக்குப் புதிய கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது" என்றது. மேலும், பட்டாசு தயாரிப்புக்குப் பயன்படுத்தக்கூடிய முக்கிய மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தவும், சரவெடி தயாரிக்கவும் தடைவிதித்ததுடன், பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க வேண்டும் என்றது.

பட்டாசுத் தொழிலாளி
பட்டாசுத் தொழிலாளி

உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்!

 • பட்டாசுத் தொழிலை நம்பி எட்டு லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது.

 • தீபாவளியன்று, இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

 • கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாள்களில் நள்ளிரவு 11.45 மணி முதல் 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

 • அதிக சத்தம், அதிக புகைவரும் பட்டாசுகளைத் தயாரிக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.

 • ஆன்லைன் மூலமாக பட்டாசுகளை விற்கக்கூடாது.

 • உரிமம் இல்லாதவர்கள் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது.

 • பட்டாசு விவகாரத்தில் விதிமுறைகளை மீறுவோர்மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பட்டாசுத் தொழிலாளர்களின் போராட்டம்!

இதற்கு கருத்து தெரிவித்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் பஞ்வானி, "பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், மிகவும் கண்டிப்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கவில்லை" என்று கூறியிருந்தார்.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால், பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் வழங்கக் கோரி, தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், "வட மாநிலங்களில், தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் விடியற்காலையில் கொண்டாடுகின்றனர். எனவே, தமிழகத்தில் அதிகாலையில் பட்டாசு வெடித்துப் பண்டிகையைக் கொண்டாட அனுமதி வேண்டும்" என்று கூறப்பட்டது.

"தீபாவளிக்குப் பட்டாசு விற்றால் மட்டுமே எங்களுக்கு வாழ்வாதாரம். அதனால், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்" எனப் பட்டாசு உற்பத்தியாளர்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிப்பது என்பது பற்றி தமிழக அரசு இறுதி முடிவெடுக்கலாம்" என அறிவுரை வழங்கியது. பின்னர், அதற்கான நேரத்தையும் தமிழக அரசு [கடந்த (2018) தீபாவளிப் பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம்] அறிவித்தது. இந்த நிலையில் பட்டாசுகளைப்போலவே, அதற்கு மாற்றாக இ-பட்டாசுகளைத் தயாரித்திருந்தனர், ராஜஸ்தானைச் சேர்ந்த மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சியாளர்கள்.

பட்டாசு போராட்டத்தின்போது கஞ்சி காய்ச்சிய மக்கள்
பட்டாசு போராட்டத்தின்போது கஞ்சி காய்ச்சிய மக்கள்

இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பால் சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வேதனையடைந்தனர். இதனால் பட்டாசுத் தொழில் நலிவடையும் நிலைக்குச் சென்றது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டிகள் திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்றே இவர்களுக்கு விளக்கமளிக்காத காரணத்தால், ஒரு மாதத்திற்கும் மேலாக சிவகாசியைச் சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் முழுவதுமாக மூடப்பட்டன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றித் தவித்தனர். இந்த நிலையில், உடனடியாகப் பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பட்டாசுத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.

மூன்று அம்ச கோரிக்கைகள்!

அதில் கலந்துகொண்டு பேசிய சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன், "தற்போது பட்டாசுத் தொழிலுக்குக் கடும் கட்டுப்பாடு விதித்ததால், பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தீபாவளியிலிருந்து பசி, பட்டினியால் தவித்துவருகின்றனர். பட்டாசுத் தொழில் அழிவு என்பது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார அழிவாக மாறும். பட்டாசுத் தொழிலைக் காப்பாற்றி, தமிழகப் பொருளாதாரத்தைக் காக்க வேண்டும்" என்றார்.

பட்டாசுத் தொழில் என்பது பாரம்பரிய தொழில்களில் ஒன்று. இந்தத் தொழிலை எப்படி நடத்த வேண்டும் என்ற வழிமுறையை நமக்கு யாரும் கற்றுத் தரவில்லை. நாமாகவே கற்றறிந்தோம். எனவே, மூடவேண்டும் எனக் கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.
சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் ஆர்.சௌந்தரராஜன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, "தற்போது அழியும் நிலையில் உள்ள பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க, மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். பட்டாசுத் தொழிலைத் தவிர, இந்தப் பகுதியில் வேறு தொழில் இல்லை. அந்தத் தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு வேறு தொழில் இல்லை. மக்கள் விரும்பாத ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பட்டாசுத் தொழிலைக் காக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

பட்டாசு ஆலை
பட்டாசு ஆலை

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, "பட்டாசு ஆலைகளைத் திறக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மூச்சுவிடுவதே மாசுதான். மாசைக் குறைக்க வேண்டும். பட்டாசு காரணமாகத்தான் மாசு ஏற்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என்பதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புரிந்துகொள்ள வேண்டும். பட்டாசுத் தொழிலை நடத்த தமிழக அரசு எந்தச் சூழலிலும் துணை நிற்கும்” என்றார்.

பசுமைப் பட்டாசு என்பதே தவறு. பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு எப்படித் தயாரிக்க முடியும்? அறிவியல்ரீதியாகப் பட்டாசுகளை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ, "உச்ச நீதிமன்றம் விதித்துள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகளைத் திரும்பப் பெற வேண்டும்; பட்டாசுக்குத் தடை ஏற்படாத வகையில், மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்களித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்; வேலையில்லாத நாள்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதற்கிடையே, பட்டாசுக்குத் தடைவிதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு வந்தது. பட்டாசு தயாரிப்பாளர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையால், ஆண்டுக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. இந்தத் துறையில், ஐந்து லட்சம் பேர் வேலை செய்கின்றனர். பட்டாசுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டால், ஐந்து லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும்; மாநில வருவாயும் பாதிக்கப்படும். எனவே, பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

இதற்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், "பட்டாசால் ஏற்படும் மாசைவிட, வாகனங்கள் விடும் புகையால் ஏற்படும் மாசு அதிகம் எனத் தெரிகிறது. அப்படியிருக்கையில், பட்டாசுத் தொழிற்சாலைகள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு ஆர்வம் காட்டுவது ஏன்? பட்டாசு மாசு - வாகனப் புகை மாசு, இந்த இரண்டில் அதிக மாசு ஏற்படுத்துவது எது என்பது குறித்த ஒப்புமை ஆய்வை, மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பட்டாசு தொழிலாளர்கள்
பட்டாசு தொழிலாளர்கள்

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதில், நீதிமன்றத்துக்கு விருப்பமில்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். பட்டாசுத் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், வேலையிழந்தோருக்கு வருமானம் கிடைக்காது; அவர்களது குடும்பத்தாருக்கு ஆதரவும் கிடைக்காது. இது, சரியானதல்ல. தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாதபோது, அவர்கள் செய்யும் வேலைகளைப் பறிக்கக்கூடாது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிக அளவில் உள்ளதை அரசு உணர வேண்டும். பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளிடம் அதற்கான உரிமம் உள்ளபோது, அந்தத் தொழிலை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? அதன்மூலம், ஏராளமான தொழிலாளர்களை வேலையற்றோராக மாற்றுவது சரியல்ல" என்றனர்.

முன்னதாக, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, "பட்டாசு தயாரிப்பில் பேரியம் என்ற வேதிப்பொருள் தடை செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை உருவாக்கியுள்ளது" என்றார்.

பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன?

சீனப் பட்டாசின் வருகையால் சிறிது நலிவடைந்த பட்டாசுத் தொழில், தற்போது பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கச் சொல்லியிருப்பதால், முழுவதுமாக நலிவடைந்திருக்கிறது என்றே சொல்லலாம். பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்தச் சொல்வதற்குக் காரணம், நாட்டில் அதிகரித்துவரும் காற்று மாசுதான். பசுமைப் பட்டாசுகள் என்பது, தற்போது புழக்கத்திலிருக்கும் பட்டாசுகள் அளவுக்கு இவை சூழலுக்குக் கேடு விளைவிக்காதவை. இவற்றில், வேதிமக் கலவையின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். அதனால், இதில் வாயு உமிழ்வும் குறைவாகவே இருக்கும். அதன் விளைவாகக் காற்று மாசுபாட்டு அளவும் குறைவாகவே இருக்கும். இதைத் தயாரிக்க, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மூலப்பொருள்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெடிக்கும்போது சத்தம் வரச் செய்யும் கந்தக அமிலத்தைத் தவிர்த்தாலும்கூட, அதேபோன்ற சத்தம் வரச்செய்யும் திறனோடு இருப்பவை இந்த பசுமைப் பட்டாசுகள். வெடித்தபின் கந்தக அமிலம் வெளியாகி, வளிமண்டலக் காற்றின் தரத்தைப் பாதிக்கும் என்ற பிரச்னை இவற்றால் இருக்காது. இந்த யோசனை முதலில் மத்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தின் (Cousil of Scientific Institute for Research- CSIR) விஞ்ஞானிகளால் முன்வைக்கப்பட்டது. அவர்களோடு மத்திய மின் வேதிம ஆராய்ச்சிக் கழகம், இந்திய வேதிமத் தொழில்நுட்பக் கழகம், மத்திய தாவரவியல் ஆய்வு நிறுவனம் போன்ற நிறுவனங்கள் இணைந்து, பசுமைப் பட்டாசுகளை உருவாக்குவதற்கு முயன்றார்கள்.

பசுமைப் பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, இந்தத் தொழிலை நம்பியிருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அதைத் தொடர்ந்து 348 பட்டாசு தயாரிக்கும் ஆலைகளுக்கு, பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமங்கள் CSIR-NEERI இந்த ஆண்டு வழங்கப்பட்டன. அந்த ஆலைகள் மட்டுமே, இந்த ஆண்டுக்கான பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்கும். அதேநேரத்தில், இந்தத் தீபாவளிக்கு வரும் அனைத்துப் பட்டாசுகளும் பசுமைப் பட்டாசுகள் அல்ல. தற்போது புழக்கத்தில் இருக்கும் 400 வகை பட்டாசுகளில், 25 சதவிகித பட்டாசுகளே பசுமைப் பட்டாசுகளாக மாற்றமடைந்துள்ளன. மற்ற அனைத்தும் வழக்கமான பட்டாசுகள்தாம்.

மத்திய அமைச்சரின் வேண்டுகோள்!

இன்னும் சில தினங்களில் தீபாவளி வர இருக்கிறது. இதற்காக, மக்கள் இப்போது பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில், "பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்" என்கிறார், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மேலும் அவர், “பண்டிகைக் காலங்களில் பசுமைப் பட்டாசுகளை வெடிப்பதைக்கூட பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை வாங்க வேண்டாம் என்று குழந்தைகள், தங்கள் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறுங்கள். பண்டிகையைக் கட்டாயம் கொண்டாட வேண்டுமென்றால் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடியுங்கள்" என்றார்.

தீபாவளி, புத்தாண்டு, தசரா, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள் போன்ற பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பது வழக்கம். இதைத் தவிர்த்து, தற்போது திருமண விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிக்கப்படுகிறது. மேலை நாடுகளிலும் பட்டாசு வெடித்து பண்டிகை தினங்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக, கய் பாக்ஸ் திருவிழா (Guy Fawkes night), அமெரிக்க சுதந்திர தினம் (American Independence Day), சீனப் புத்தாண்டு (Chinese New Year), யான்சு திருவிழா (Yanshui Fireworks Festival) போன்ற விழாக்காலங்களில் மேலைநாட்டினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர்.

79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு!

அதேநேரத்தில், இன்றும் பட்டாசு வெடிப்பதற்கு சில இடங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகங்கை (கொள்ளுகுடிப்பட்டி), திருநெல்வேலி (கூந்தன்குளம்), விழுப்புரம் (கழுப்பெரும்பாக்கம்), வேலூர் (சண்டத்தூர்), ஈரோடு (வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி) உள்ளிட்ட மாவட்டங்களில் பறவைகள் மற்றும் வெளவால்களுக்காகப் பட்டாசுகள் வெடிக்கப்படுவதில்லை. அதேநேரத்தில், பட்டாசு வெடிக்க ஒதுக்கப்பட்ட நேரத்தைவிடக் கூடுதலாக வெடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இப்படி, பட்டாசு வெடித்துக் கொண்டாடப்படுவதால் அதிக அளவில் ஆபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பொதுவாக, பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தம் 125 டெசிபல் முதல் 145 டெசிபல் வரை இருக்கும். அதேநேரத்தில், 60 முதல் 80 டெசிபலுக்கு மேல் கேட்கும் சத்தம் நம் காதுகளைச் சேதப்படுத்தும். உரிய பாதுகாப்பின்மையால் குழந்தைகள் தீக்காயமடைவதும், குடிசைகள் தீப்பற்றி எரிவதும் தொடர்கதையாகின்றன. குறிப்பாக, 2014 முதல் 2018 வரை தீவிபத்துகளால் 1,373 பேர் (2014 - 56 பேர், 2015 - 84 பேர், 2016 - 835 பேர், 2017 - 166 பேர், 2018 - 232 பேர்) உயிரிழந்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, உரிய உரிமமின்றியும், உரிமத்தை மீறியும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, டி.ஆர்.ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலை ஒன்றில் சீனி வெடி, குருவி வெடி போன்ற சாதாரண வெடிகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், காசுக்கு ஆசைப்பட்டு பேன்ஸி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்கின்றனர். இதற்காக, சட்டவிரோதமாகப் பட்டாசு உற்பத்திக்கான மருந்து வாங்கப்படுகிறது. மேலும், 15 முதல் 20 தொழிலாளர்கள் மட்டுமே இங்கு பணிபுரிய வேண்டும். ஆனால், 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். குறிப்பாக, இந்த ஆலைகளின் அறைகளுக்கு வெளியே டென்ட் அமைத்து தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதனால்தான் பட்டாசுத் தொழிற்சாலைகளில் அதிகம் விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக, 2000 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை 251 விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதன்மூலம் ஏற்பட்ட விபத்தில் 381 பேர் உயிரிழந்துள்ளனர்.

79 ஆண்டுகள்... 7 லட்சம் தொழிலாளர்கள்... 1,000 ஆலைகள் - பட்டாசு... ஒரு A to Z வரலாறு!

பட்டாசு குறித்து சிலரிடம் பேசினோம். சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், "பட்டாசு வெடிப்பதால் ஓசோனில் மாசு ஏற்படுவதுடன், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் கடுமையாகப் பாதிப்படைகின்றனர். முக்கியமாக, அதிகமான வெடிச் சத்தத்தால், குழந்தைகள் மற்றும் இருதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இதனால் உயிர் ஆபத்துகளே ஏற்படும். தீபாவளியன்று நமக்குக் கொண்டாட்ட நாள் என்றால், நகரத்தில் இருக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் துக்கநாள்" என்றார்.

பட்டாசால் ஏற்படும் நோய்கள் குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர், டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். "பட்டாசு வெடிப்பதால் பொதுவாக சுவாசப் பிரச்னைகள் போன்ற நோய்கள் வரத்தான் வாய்ப்பு அதிகம். குறிப்பாக, ஆஸ்துமா பாதிப்புள்ளவர்கள், இதுபோன்ற நச்சுப் புகையை மேலும் சுவாசிப்பதால் இறப்புகள்கூட வர வாய்ப்பிருக்கிறது. இதற்கு, பட்டாசுகளில் பயன்படுத்தப்படும் நச்சு மற்றும் வேதிப்பொருள்களே காரணம். எந்த வகை பட்டாசுகளாக இருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு கொண்டாடவேண்டியது சிறப்பு. பட்டாசு இல்லாத தீபாவளியை வரவேற்போம்" என்றார்.

பட்டாசு டெசிபல்
பட்டாசு டெசிபல்
Vikatan Infographics

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன், "கடந்த வருடமே பட்டாசு விற்பனை குறைந்திருந்தது. அப்போதே உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் போதிய அளவுக்கு விற்பனையாகாததால், அவை தேங்கியிருந்தன. அதனால், இந்த வருட உற்பத்தியும் குறைவாகிவிட்டது. இந்த நிலையில் இந்த வருடமும் பட்டாசு விற்பனை மிகவும் குறைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்தான். சென்னையில் தி.நகர் உள்ளிட்ட சில இடங்களில் பட்டாசு விற்பனை சுமாராக இருக்கிறது. மற்ற இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால், பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களிடம் பணம் இல்லை. இதனால் அவர்கள், புத்தாடைகள்கூட எடுக்க முடியாத சூழலில் உள்ளனர்" என்றார், வருத்தத்துடன்.

பட்டாசின் தாக்கத்தைக் குறைப்பது எப்படி?

சூழலியல் ஆர்வலரும் 'வான்வெளியின் புலிகள்' நூல் ஆசிரியருமான பேராசிரியர் தா.முருகவேள், "நச்சுத்தன்மை மற்றும் வேதிப்பொருள்கள் அடங்கிய பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் மாசு ஏற்படுகிறது. இதுகுறித்துப் பலர் ஆய்வுசெய்திருக்கின்றனர். இது, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பொதுமக்களுக்குத் தெரிவதில்லை. இதனால் மூச்சுத்திணறல், கண்ணீர் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இதன் தாக்கம் அதிகமிருக்கும். தீபாவளி நேரத்தில் மழைப்பொழிவு இருப்பதால், இதன் மாசு விரைவாகக் காற்றில் கலந்துபோகாத தன்மையைக் கொண்டிருக்கிறது.

போகிப் பண்டிகையின்போது, இதுபோன்ற தாக்கம் இருப்பதால்தான் கொளுத்துவது அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டது. அதுபோல், தீபாவளியின்போதும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதை மக்கள் பெரிதாகக் கருத்தில்கொள்வதில்லை. கடந்த ஆண்டு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் மாசு அளவு குறைந்திருந்ததாகச் சொல்லப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் செயல்படுத்தப்பட்டால், மாசு குறைய வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில், தனி மனிதன் ஒருவன் செய்யும் முயற்சியினாலும் கட்டுப்பாட்டினாலும் மட்டுமே பட்டாசால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க முடியும்" என்றார் நம்பிக்கையுடன்.

இந்தியப் பட்டாசு சங்கத்தின் தலைவர் ஜெயராமன் தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். "தற்போது, பட்டாசு உற்பத்தியை ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆயுத பூஜைக்கு முன்பு பொரி வாங்குவதுபோல் உள்ளது. எப்போது இந்தியத் தொழில்மீது நீதிமன்றங்கள் தலையிட்டதோ, அப்போதே அது நாசமாகிவிட்டது. உதாரணத்துக்கு, 2ஜி லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டபோது, யுனிநார் என்ற நெதர்லாந்து நிறுவனமும் அதில் முதலீடு செய்திருந்தது. லைசென்ஸ் கேன்சல் செய்யப்பட்டபிறகு, அந்த நாட்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர், 'எங்கள் நாட்டு மக்களின் பென்ஷன் பணத்தைத்தான் இந்தியாவில் முதலீடு செய்திருந்தோம். அந்தப் பணம் அரசாங்கத்தின் பணம் அல்ல. உங்களுக்குள் ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருக்கலாம். அதேநேரத்தில், நீதிமன்றம் சொன்னதற்காக அந்த லைசென்ஸை கேன்சல் செய்துவிட்டீர்கள். ஆனால் நாங்கள், இந்திய அரசை நம்பி, அது சொன்ன வாக்குறுதியை நம்பி முதலீடு செய்தோம். ஆனால், இப்படி கேன்சல் செய்துவிட்டதால், எங்கள் மக்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்?' என்று அவர் பிரஸ்மீட்டில் கண்ணீர்விட்டு அழுதார்.

இன்னொரு விஷயம், வோடபோன் நிறுவனத்தின் இன்டர்நேஷனல் சி.இ.ஓ, ஒரு இன்டர்வியூ கொடுத்திருந்தார். அப்போது அவர், 'இந்தியாவில் முதலீடு செய்வதும் ஒன்றுதான்... கழுத்தில் கயிற்றைமாட்டி தூக்கில் தொங்குவதும் ஒன்றுதான்' என்று சொல்லியிருந்தார். பசுமைப் பட்டாசில் அடிப்படை அறிவில்லாத நீரி அமைப்பு உள்ளே நுழைந்திருக்கிறது. அது தவிர, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் பட்டாசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. டெல்லியில் மாசு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அனைத்து வண்டிகளும் அங்கே காஸில் ஓடுகின்றன.

இன்று, நம்மால் ஒரு கால் மணிநேரம் காற்றாடியை அணைத்துவிட்டு வீட்டின் சமையலறையில் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும். வீட்டுக்குள்ளேயே இப்படியென்றால், வெளியில் லட்சக்கணக்கான வாகனங்கள் காஸில் ஓடுகின்றன. காற்றில் இருக்கும் ஈரப்பதம் முற்றிலும் உறிஞ்சப்படுகிறது. எந்தவொரு புகை வந்தாலும், அந்தப் புகை ஆவியாகி மறைவதில்லை. சிகரெட் மற்றும் பீடியின் மூலம் வரும் புகையை அவர்கள் முற்றிலும் மறந்துவிட்டார்கள். சாதாரண பட்டாசின் புகையை மட்டும் அவர்கள் நினைவில்கொள்கிறார்கள். பட்டாசுத் தொழிலில் நீதிமன்றம் தலையிட எந்த உரிமையும் கிடையாது என நீதிமன்றத்தில் சொல்ல வேண்டும் என இந்தத் தொழிலில் ஈடுபடும் சிவகாசி மக்களிடம் சொன்னேன்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்ல நம் மக்களுக்குத் தைரியம் இல்லை. இதுதான் உண்மை. இந்தத் தொழில் எப்போதோ முடிந்துவிட்டது. இது, இறுதியின் விளிம்பில் இருக்கிறது. பட்டாசு வெடிப்பதால் மட்டும் மாசு ஏற்படுவதில்லை எனச் சொல்லும் நீதிபதிகள், அதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். அப்புறம் ஏன், பட்டாசு வெடிப்பதற்கு மட்டும் இரண்டு மணி நேரம் கொடுக்கிறார்கள்.

குடித்தால் உடம்புக்குக் கெடுதல் என்று எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள். நீதிமன்றமும் சொல்கிறது. ஆனால், அவர்கள் குடிப்பதற்காக அரசாங்கமே கடைகளை எட்டு மணி நேரம் திறந்துவைத்திருக்கிறது. ஆனால், பட்டாசு விவகாரத்தில் அப்படியில்லையே?

பெற்றோர்கள் பண்டிகையைக் கொண்டாடுவார்களா அல்லது குழந்தைகளின்மீது கேஸுக்காக வாதாடுவார்களா? எந்தப் பெற்றோர்களாவது 'தீபாவளி நேரத்தில் உனக்குப் பட்டாசு வேண்டாம்... மொபைல் போன் வாங்கிக்கோ' என்று சொல்வார்களா? 'ஒரு மணி நேரத்துக்கு மேல் நீ பட்டாசு வெடித்தால், உன்மீது கேஸ் போடுவேன்' என்று போலீஸ்காரர் மிரட்டினால், அது நன்றாக இருக்குமா? அப்படிச் சொன்னால், எந்தப் பெற்றோர் மற்றும் குழந்தைகள் பட்டாசுகளை வாங்குவார்கள்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும். குறிப்பாக, இன்னொரு விஷயம் சொல்லப்படுகிறது. சீனப் பட்டாசுகளின் வரவால் சிவகாசிப் பட்டாசுகள் வீழ்ச்சியடைகின்றன. அப்படி, சீனப் பட்டாசுகள் எதுவும் இந்தியாவுக்குள் வருவதில்லை. மக்களைத் திசைதிருப்ப இதுபோன்ற வதந்தியைக் கிளப்புகிறார்கள். அப்படியே வந்திருந்தாலும், பர்த்டே கேன்டிலாகத்தான் வந்திருக்கின்றன. நீங்கள் வேண்டுமானால், ஆர்.டி.ஐ-யில் கேட்டுப்பாருங்கள். கடந்த ஐந்து வருடங்களில், சீனப் பட்டாசுகள் அப்படி எதுவும் பிடிபடவில்லை என்பார்கள். இதுதான் உண்மை" என்றார்.

இப்படி, பட்டாசுகளால் பாதிப்புகள் ஒருபுறமென்றாலும், மறுபுறம் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வு, அழிவின் விளிம்பில் இருக்கிறதென்பது நிஜம். இதை வைத்துதான் ஒரு கவிஞன்,

"பட்டாசைச்

சுருட்டிய

தொழிலாளிகளின்

வீடுகளில்

பட்டாசாய்ச்

சிரிப்புச் சப்தம்

கேட்பதில்லை..."

என்று எழுதியிருந்தான். ஆம். வலி நிறைந்த வரிகள்தாம் அவை.