Published:Updated:

ரஃபேல் போர் விமானம்... காங்கிரஸ் முதல் பி.ஜே.பி. வரை... நடந்தது என்ன? #AtoZReport

ரஃபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி முதல் இன்றைய பி.ஜே.பி ஆட்சிவரை நடந்தது என்ன என்பது குறித்து ஒரு A to Z அலசல்.

ரஃபேல் விமானம்
ரஃபேல் விமானம் ( © Dassault Aviation - G. Gosset )

ரஃபேல்... இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும். அதற்குக் காரணம்... ஒன்று, ரஃபேல் போர் விமானத்தின் தன்மை. மற்றொன்று, இந்தப் போர் விமானம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் பி.ஜே.பி அரசு ஊழல் செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டு.

Rafale
Rafale
© Dassault Aviation - A. Pecchi

ஆம், ரஃபேல் போர் விமானம் தொடர்பாக காங்கிரஸ் ஆட்சி முதல் இன்றைய பி.ஜே.பி ஆட்சிவரை நடந்தது என்ன என்பது குறித்து பார்ப்போம்... மேலும், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று, ஒப்பந்தப்படி முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றதையும், அதன் சிறப்பம்சங்களையும் பார்ப்போம்.

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம்

2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, இந்தியாவை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸிடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவுசெய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம், 2012-ல் இறுதிசெய்யப்பட்டது. இதில், பறக்கத் தயாரான நிலையில் உள்ள 18 ரஃபேல் போர் விமானங்களை இறக்குமதி செய்யவும், மீதமுள்ள 108 ரஃபேல் போர் விமானங்களை பிரான்ஸ் நாட்டின் 'டசால்ட்' விமான நிறுவனம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் விமான நிறுவனத்துடன் இணைந்து 'தொழில்நுட்ப பகிர்வு' மூலம் இந்தியாவிலேயே கட்டமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

2014-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிரதமராய்ப் பதவியேற்ற மோடி அரசு, 126 ரஃபேல் விமானங்கள் வாங்க ஏற்படுத்திவைத்திருந்த ஒப்பந்தத்திலிருந்து சில காரணங்களால் பின்வாங்கியது. அதாவது, இரட்டை இன்ஜின் கொண்ட ரஃபேல் விமானங்கள் மிகவும் அதிக விலையுள்ளதாக இருந்தன. ஒப்பந்தங்களுக்குள் விவாதம் நடைபெற்றும் நீண்டநாள்களாகியிருந்தன. எனினும், இந்திய விமானப் படையைப் புதுப்பிக்கவும், தரத்தை உயர்த்தவும் உடனடி அவசியம் இருந்ததனால், தொழில்நுட்ப பகிர்வுசெய்த, 126 ரஃபேல் போர் விமானங்களுக்குப் பதிலாக, பறக்கத் தயாரான நிலையில் உள்ள 36 ரஃபேல் விமானங்கள் வாங்க மோடி அரசு முடிவுசெய்தது.

மோடி அரசின் ஒப்பந்தம்

2016-ம் ஆண்டு உறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், பிரான்ஸின் டசால்ட் விமான நிறுவனம், இன்ஜின் உற்பத்தி நிறுவனமான சாஃப்ரான் மற்றும் மின்னணு அமைப்பு நிறுவனமான தேல்ஸ் இணைந்து தொழில்நுட்பங்களை டி.ஆர்.டி.ஓ உடன் பகிர்ந்து உற்பத்தி செய்வதாக முடிவானது.

Rafale
Rafale
AP

2016-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றபோது, பிரான்ஸ் - இந்தியா இடையிலான இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. இரண்டு நாடுகளுக்கிடையே இறுதிசெய்யப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில், 36 விமானங்களுக்கு 59,000 கோடி ரூபாய் தர ஒப்புக்கொள்ளப்பட்டது. அதற்காக, 15 சதவிகித முன்பணம் செலுத்தவும் முடிவுசெய்யப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் மற்ற ஆயுதங்கள், உதிரிபாகங்கள் மற்றும் விண்கற்களைத் தாக்கும் உலகின் அதிநவீன ஏவுகணை ஆகியவை பற்றியும் குறிப்பிடப்பட்டது. ரஃபேல் விமான உதிரிபாகங்கள் இந்தியாவில் தயார் செய்யவும், பாதுகாப்பு ஆராய்ச்சி கருத்தரங்குகள் போன்றவை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

காங்கிரஸ் வைத்த குற்றச்சாட்டு

இந்த ஒப்பந்தம் வெளியான சில மாதங்களிலேயே, அதன்மீது காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தது. குறிப்பாக, விமானம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது எனவும், இதன் காரணமாக, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்துக்கு வெறும் 10 நாள்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது எனவும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. இதற்குக் காரணம், இந்த ஒப்பந்தம் கையொப்பமானபோது பதவியிலிருந்த பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஹோலாந்த். அவர், ‘‘இந்த ஒப்பந்தத்தின்படி டசால்ட் நிறுவனத்தின் இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்தை இறுதிசெய்தது இந்திய அரசுதான்’’ என்று கூறியிருந்தார்.

Rafale Fighter Aircraft
Rafale Fighter Aircraft
Vikatan Infographics

"அரசு, பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை, வெளிப்படைத்தன்மையில்லாமல் மூடிமறைக்கிறது. மேலும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மூலம் போர் விமானங்களை இந்தியாவில் கட்டமைக்கப்பட இருந்ததை ரத்துசெய்தது 'மேக் இன் இந்தியா' சந்தித்த மிகப்பெரும் தோல்வி" என காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும், "வெளிப்படைத்தன்மையினைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று சொன்னதுடன், அந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்." எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுத்தன.

இதுகுறித்து அந்த சமயத்தில் பிரான்ஸ் நாட்டின் புலனாய்வுச் செய்தி நிறுவனமான மீடியாபார்ட், செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. அதில், "ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில், இந்தியப் பங்குதாரராக ரிலையன்ஸ் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கட்டாயப்படுத்தப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்தத் தகவல் டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது என அது குறிப்பிட்டிருந்தது. இது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாய் அமைந்ததால், இந்தப் பிரச்னையைத் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருந்தன.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு

‘‘இந்தியாவின் பிரதமர் ஊழல் செய்திருக்கிறார் என நாங்கள் நம்புகிறோம். இந்தத் தேசத்தின் பாதுகாவலர் ஒரு திருடரா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. இந்திய இளைஞர்கள் மிகவும் நம்பிய நரேந்திர மோடி, நம் பாக்கெட்டுகளிலிருந்து 30,000 கோடி ரூபாயை எடுத்து அனில் அம்பானியின் பாக்கெட்டில் வைத்துவிட்டார். தன் வாழ்நாளில் ஒரே ஒரு விமானத்தைக்கூடச் செய்திருக்காத அனில் அம்பானிக்கு போர் விமான ஒப்பந்தம் தரப்பட்டிருக்கிறது. இதுபற்றிக் கேட்டால் மோடி வாய்திறக்க மறுக்கிறார்.

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் முறையாக விசாரிக்கப்பட்டால், மோடி, அனில் அம்பானி போன்றவர்களுடன் சேர்ந்து சிறையில் இருப்பார். ரஃபேல் ஊழல் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்" என்று தொடர்ந்து மத்திய அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார், அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதிலளித்த அப்போதைய மத்திய நிதி மந்திரியும், சமீபத்தில் மறைந்த பி.ஜே.பி. மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, "ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபருக்குச் சாதகமாக நடந்துகொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. ரஃபேல் தொடர்பாக, காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை; ரஃபேல் தொடர்பான குற்றச்சாட்டுகள் கற்பனையானவை; மத்திய அரசு வெளியிட்ட அனைத்துத் தரவுகளும் உண்மையானவை; ராகுல் காந்தி தெரிவித்த அனைத்துத் தரவுகளும் போலியானவை. உண்மைக்கு எப்போதும் ஒரேயொரு வடிவம்தான். பொய்கள்தான் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும். அதனால், ராகுல் காந்தி பல்வேறு தரவுகளை முன்வைக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் வெறும் விமானத்தின் விலைக்கும், ஆயுதங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானத்தின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. போர் விமானம் பற்றிய அடிப்படை புரிதல்கூட இல்லாத ஜென்டில்மேன், காங்கிரஸின் தலைவராக இருப்பது மிகவும் சோகமானது" என்றார்.

"காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையைவிட, 9 சதவிகிதம் விலை குறைவாகவே ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. பிரதமர் மோடி ஊழல்வாதி அல்ல" என அப்போது ராணுவ மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

இந்த வழக்கில் காங்கிரஸால் குற்றஞ்சாட்டப்பட்டவரும், தொழிலதிபருமான அனில் அம்பானி, "தம்மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது; துரதிர்ஷ்டவசமான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவர்களாலும், தொழில்முறைப் போட்டியாளர்களாலும் பரவுகிறது. உண்மை மட்டுமே வெற்றிபெறும். இதுகுறித்து தனிப்பட்ட முறையில் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்" என்றார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக அவப்பெயர் ஏற்படுத்தியதாக 5,000 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்கக்கோரி, அனில் அம்பானி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. "இதில், ராகுல் காந்தி பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை" எனப் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்கு, அனில் அம்பானி பதில் சொல்லவில்லை.

மக்களவையில் புயலைக் கிளப்பிய ரஃபேல் விவகாரம்

இதற்கிடையே, ரஃபேல் ஊழல் விவகாரத்தை மக்களவையில் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி-க்கள், கடும் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால் அவையில், கூச்சல் குழப்பம் நிலவியது. 'மத்திய அரசுக்குத் தைரியமிருந்தால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என காங்கிரஸ் வலியுறுத்தியது.

எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கையைத் தாக்கல் செய்தார். 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன. விமானப்படையின் மற்ற கொள்முதல் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

Rajnath Singh
Rajnath Singh
AP
Vikatan

தேர்தல் நேரத்தில், ரஃபேல் குறித்து ராகுல் காந்தி பேசியது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதவிர தமிழகத்தில், `நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிடவிடாமல் தடைசெய்து, புத்தகங்களையும் பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

"ரஃபேல் ஊழல் தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறி வழக்கறிஞர்கள் எம்.எல்.சர்மா, வினீத் தாண்டா, ஆம் ஆத்மியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், 'இதுதொடர்பாகப் புலனாய்வுத் துறை விசாரணை வேண்டும்' என காங்கிரஸ் கட்சி சார்பில் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Vikatan

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 'ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கை கொடுத்துள்ளது. அது, நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என தெரிவித்தது. இதுதொடர்பாக, மத்திய அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையை ஏற்ற, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, "ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை" எனச் சொல்லி மனுக்களைத் தள்ளுபடி செய்தது.

"மத்திய அரசு கொடுத்த அறிக்கை தவறானது" எனச் சொல்லி, பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் அந்த வழக்கு மீது மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்தனர். அத்துடன் நாளிதழ் ஒன்றில் வெளியான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "ராணுவ அமைச்சகத்திடமிருந்த ரஃபேல் போர் விமானம் பேரம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் துறை ரீதியான விசாரணை நடந்துவருகிறது. எனவே, அந்த ஆவணங்களின் அடிப்படையில் எதிர்தரப்பு தாக்கல் செய்திருக்கும் சில குறிப்புகளை இந்த நீதிமன்றம் ஏற்கக்கூடாது" என்று வாதாடினார்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Vikatan

"திருடப்பட்ட ஆவணங்கள் என்றால், அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துவிட முடியுமா?" என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியதுடன், "அந்த ஆவணங்கள் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியது. இந்தத் தீர்ப்பை வரவேற்ற ராகுல் காந்தி, "ரஃபேல் விவகாரத்தில், தன்னைக் குற்றமற்றவர் என உச்சநீதிமன்றம் முன்னர் கூறிவிட்டதாக மோடி சொல்லிக்கொண்டிருக்கிறார். புதிய ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்த சம்மதித்ததன்மூலம் நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி திருடன் என உச்ச நீதிமன்றம் கருதுகிறது" என்னும் பொருள்படி கூறியிருந்தார்.

ராகுல் காந்திமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

உச்சநீதிமன்றம் சொல்லாமல், இப்படியொரு கருத்தை ராகுல் காந்தி சொன்னதற்காக, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பி.ஜே.பி கூறியதுடன், அவர்மீது வழக்கும் தொடரப்பட்டது. இதுகுறித்து கருத்த தெரிவித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரஃபேல் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல் காந்தி திரித்துக் கூறுகிறார். அவரின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரஃபேல் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட சில ஆவணங்கள் மட்டும் திருடப்பட்டிருக்கின்றன. ரஃபேல் குறித்து வெளியான ஒருசில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின. ரஃபேல் வழக்கில் ஆவணங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பதுதான் கேள்வி? ராகுல் காந்தி ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி வருகிறார்." என்றார்.

ரஃபேல் விமானத்தில் ராஜ்நாத் சிங்
ரஃபேல் விமானத்தில் ராஜ்நாத் சிங்
AP
Vikatan

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 17-வது நாடாளுமன்றத் தேர்தலில், பி.ஜே.பி. அபார வெற்றிபெற்றதுடன், மீண்டும் மோடியே பிரதமரானார். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில், கடந்த ஜூலை மாதம் (2019) முதல் வாரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்தியாவுக்கான பிரான்ஸ் தலைமைத் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர், "பிரான்ஸிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர் விமானம் இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும். மற்ற போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத் சிங்

இதற்கிடையே, பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தப்படி, ரஃபேல் போர் விமானங்களில் முதல் போர் விமானம் அக்டோபர் 8-ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ரஃபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸில் உள்ள மெரிக்நாக் நகருக்குச் சென்றார்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
AP
சந்தனப் பொட்டு; டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' - முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத்!

அங்குச் சென்ற ராஜ்நாத் சிங், அந்த நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடி ராணுவ விமானத்தில் பயணித்தார். பின்னர், பிரான்ஸிடமிருந்து முதல் ரஃபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டார். விமானம் பெற்றபிறகு பேசிய ராஜ்நாத் சிங், "உரியநேரத்தில் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ரஃபேல் என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு வாயு எனப் பொருள். அதன்படி, இந்த ரஃபேல் போர் விமானங்கள் பெயருக்கேற்றபடி பறந்து இந்தியாவைப் பாதுகாக்கும் என நம்புகிறேன்" என்றார்.

ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அந்த விமானத்தின் மீது 'ஓம்' என்று எழுதியும், சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சைப் பழம் வைத்தும் பூஜை செய்தார். இதற்கு நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
Vikatan

இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இதில் என்ன தவறு? அதை, நீங்கள் அங்கீகரிக்காமல் இருக்கலாம்; மூடநம்பிக்கை என்று நினைக்கலாம். அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செய்யட்டும். ராஜ்நாத் சிங் செய்ததெல்லாம் சரியென்றே நான் கருதுகிறேன். இவையெல்லாம் இந்தியக் கலாசாரத்தைச் சேர்ந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இதைச் செய்கிறார்கள். முன்பு, ராணுவ மந்திரியாக இருந்தவரும், அவருடைய மனைவியும் கடற்படைக் கப்பலைத் தொடங்கிவைத்தபோது அவர்களது மத நம்பிக்கைப்படி செயல்பட்டுள்ளனர். இப்போது கவலைப்படுபவர்கள், அப்போது எங்கேயிருந்தனர்?” என்றார்.

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சங்கள்

காங்கிரஸ் அரசு செய்யமுடியாத, செய்யத் தொடங்கி பாதியில் கைவிடப்பட்ட பல திட்டங்களை, சமீபகாலமாக பி.ஜே.பி. அரசு அதிரடியாய் நிறைவேற்றிவருகிறது. அதில், ரஃபேலும் ஒன்று. கடந்த ஆண்டு அதிகம் உச்சரிக்கப்பட்ட வார்த்தைகளில் ரஃபேலும் அடக்கம். எத்தனை எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதும், அதைத் தற்போது பிரான்ஸிடமிருந்து முறையாகப் செய்துள்ளது.

இந்த ரஃபேல் போர் விமானங்கள்மூலம் இலக்குகளைக் குறிவைத்து துல்லியமாகவும், விரைவாகவும் ஆயுதங்களை வீரர்கள் பயன்படுத்த முடியும். மணிக்கு 2,130 கிலோ மீட்டர் வரை பறக்கும் திறன்கொண்டது. இதில், ஒருமுறை எரிபொருள் நிரப்பிவிட்டால், 3,700 கிலோ மீட்டர் தூரம்வரை பயணிக்கலாம்.

ரஃபேல் சக்கரத்தில் எலுமிச்சம்பழம்... சமூக வலைதளங்களில் சூடுபறக்கும் விவாதங்கள்!

எதிரிகளை அடையாளம் காண்பதற்கான ரேடார் எச்சரிக்கை செய்யும் கருவியும் ரஃபேல் விமானத்தில் உள்ளது. விமானத்தை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளைத் தடுத்து அழிக்கும் அமைப்பும் இருக்கிறது. கூடவே, இதில் அணு ஆயுதங்களையும் கொண்டுசெல்ல முடியும். இந்திய விமானப் படையில் உள்ள திறன்மிக்கதாகக் கருதப்படும் சுகோய் விமானத்தைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு வலிமை வாய்ந்தது.