Published:Updated:

``ஹர்ஷ் மந்தரை ஒடுக்குவதில் மோடி அரசுக்கு இந்த 3 நோக்கங்கள்தான்!" - கொதிக்கும் செயற்பாட்டாளர்

``எந்தவோர் அரசு அதிகாரியும் பதவியேற்கும்போது அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் என்றுதான் உறுதிமொழி எடுக்கிறார்கள். அரசைப் பாதுகாப்பேன் என்று இல்லை. ஆனால், இன்று பதவிக்கு வருகிறவர்கள் ஆளும் அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் செயல்படுகிறார்கள்." - வழக்கறிஞர் சுரேஷ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான ஹர்ஷ் மந்தர் வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) ரெய்டு நடத்தியது. அதுவும், ஹர்ஷ் மந்தர் மற்றும் அவரின் மனைவி இருவரும் பணி நிமித்தமாக ஜெர்மனிக்கு கிளம்பிய அடுத்த சில மணிநேரங்கள் கழித்து இந்த ரெய்டை நடத்தியுள்ளார்கள்.

டெல்லியிலுள்ள வசந்த் குன்ச் என்ற இடத்தில் அமைந்திருக்கும் அவருடைய வீடு, மற்றும் மெஹ்ரௌலி என்ற சமூக ஆர்வலரால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றில் காலை 8 மணிக்கு ரெய்டு தொடங்கியது. இதேபோல், சமீபத்தில் நியூஸ் க்ளிக், நியூஸ் லாண்டரி ஆகிய ஊடகங்களின் அலுவலகங்களிலும் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

அமலாக்கத்துறை
அமலாக்கத்துறை
Photo: Twitter/ @dir_ed

இப்படியாக, இந்திய அரசாங்கத்தின் ரெய்டு நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அரசை விமர்சித்தவர்கள்.

யார் இந்த ஹர்ஷ் மந்தர்?

கலவரம் போன்ற பெரிய வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்படும் மக்கள், பட்டினியாலும் வீடின்மையாலும் பாதிக்கப்படுவோர், ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காகச் செயல்பட்டு வருகிறார் ஹர்ஷ் மந்தர்.

1980-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக மத்தியப் பிரதேசத்தில் பதவி ஏற்றார். நான்கு ஆண்டுகள் கழித்து, சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களும் அதைத் தொடர்ந்து நடந்த இந்திரா காந்தி படுகொலையும் நிகழ்ந்தபோது, இந்தூரில் கூடுதல் கலெக்டராக இருந்தார்.

பின்னர், 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செயல்படத் தொடங்கினார். 2019-ம் ஆண்டு, அவர் எழுதிய `Partitions of the Heart: Unmaking the Idea of India' என்ற நூலில், குஜராத் கலவரத்தின்போது இஸ்லாமியர்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப் போராடிய காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களைப் புறந்தள்ளிய நீதிபதி மற்றும் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்து ஹர்ஷ் மந்தர் பேசியிருந்தார்.

மேலும், தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்படும் மக்களுக்காகவும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் போராடி வரும் ஹர்ஷ் மந்தர், சி.ஏ.ஏ சட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தினிடையே நிகழ்ந்த வன்முறையில், 200 பேர் காயமடைந்தனர், 47 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, இது மக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்க வீதிக்கு வந்து போராட வேண்டிய நேரம் என்று அவர் கூறிய வீடியோ வைரலானது. மேலும், சி.ஏ.ஏ சட்டம் இயற்றப்பட்டால் இஸ்லாமியராக தன்னைப் பதிவு செய்துகொள்வதாகவும் தெரிவித்தார். கூட்டு வன்முறையில் பாதிக்கப்படும் மக்களுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்தர்.

ஹர்ஷ் மந்தர்
ஹர்ஷ் மந்தர்

தொடரும் அதிகாரத் தாக்குதல்

இதுபோல், அரசுக்கு எதிரான கருத்துகளை முன் வைப்பவர்கள் மீது குறி வைத்து, பழி வாங்கும் நடவடிக்கையாகவும் மக்களிடையே அச்சுறுத்தலை விளைவிப்பதற்குமே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து, சமூக செயற்பாட்டாளர், மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர்.வி.சுரேஷிடம் பேசினோம்.

``ஹர்ஷ் மந்தர் மீது இதற்கு முன்னரும் பல அச்சுறுத்தல்கள், அவமானங்களை நிகழ்த்தினார்கள். அவற்றில் ஓர் ஆதாரம்கூடக் கிடைக்கவில்லை. தற்போது அவர் ஜெர்மனிக்கு செல்லும்வரை காத்திருந்து, அவர் இல்லாத நேரத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். மோடி அரசு 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அவர்களிடம் இருக்கக்கூடிய அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற புலனாய்வுத் துறைகளைக் கைகளுக்குள் வைத்துக்கொண்டு, தங்களை எதிர்க்கும் அனைவர் மீதும் அதிகாரத் தாக்குதல் நடத்தக்கூடிய நிலைப்பாட்டை உருவாக்கியுள்ளார்கள். இவையனைத்துமே பழிவாங்கும் நோக்கத்தோடு செய்யப்படுகின்றன. இதில் மூன்று விஷயங்களைச் செய்ய நினைக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலில், யார்மீது இந்த அச்சுறுதல்களும் அதிகாரத் தாக்குதல்களும் நிகழ்த்தப்படுகின்றனவோ அவர்களை மேற்கொண்டு செயல்பட விடாமல் தடுக்கவேண்டும். இரண்டாவதாக, அவர்களைச் சார்ந்திருக்கும் நண்பர்கள், உடன் இயங்குபவர்கள், தொழில்ரீதியாக அவர்களோடு இணைந்திருப்பவர்கள் என்று அனைவருக்கும்கூட, இதுபோன்று நிகழலாம் என்ற அச்சத்தை விளைவிப்பது. மூன்றாவதாக, பொதுமக்களிடையே முக்கியமான நபர்கள் மீதே இப்படியான நடவடிக்கைகளை எடுக்கிறோம், நாளை உங்களுக்கும் இதுதான் நடக்கும் என்ற பீதியைக் கிளப்பிவிடுவது. இந்த பயத்தை உருவாக்குவதன் மூலம், அவர்களை யாருமே கேள்வி கேட்கமுடியாது என்ற நிலைப்பாட்டை உருவாக்கிவிட்டார்கள்.

Enforcement Directorate
Enforcement Directorate
நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு! - 6 நகரங்களில் நடந்த சோதனை குறித்து வருமான வரித்துறை

இது தெளிவாகத் திட்டமிடப்பட்ட நடவடிக்கைதான். இதுவே, பெரியளவில் கறுப்புச் சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் மீதோ, கறுப்புப் பணம் பதுக்குவோர் மீதோ பாய்வதுபோல் தெரியவில்லை. இதுபோன்ற ஜனநாயக அரசு இயந்திரங்களை துஷ்பிரயோகம் செய்வதால், இந்திய ஜனநாயகம் ஆபத்திற்கு உள்ளாகிறது.

அம்பேத்கர் போன்ற தலைவர்கள், தேர்தல் ஆணையம், தணிக்கைத் துறை, அமலாக்கத்துறை போன்ற ஜனநாயக அமைப்புகளை, சட்டத்தின் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்படும் வகையில்தான் வடிவமைத்தார்கள். இதுபோன்ற தன்னிச்சையாக இயங்கக்கூடிய ஜனநாயக நிறுவனங்கள், எந்தவோர் அரசியல் கட்சிக்கும் சார்ந்ததாக இருக்காது. இவை ஆளும் அரசுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்களாகவே இந்த ஜனநாயக நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இன்று பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றுக்குச் சார்பான நபர்களையே இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் அமர்த்துவதால், சுதந்திரமாகச் செயல்படவேண்டிய அமைப்புகள் இன்று சுதந்திரமாகச் செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றன.

நம்முடைய மொத்த அரசியலமைப்புமே `சட்டத்தின் ஆட்சி (Rule of Law)' என்ற அடிப்படையில்தான் அடங்கியுள்ளது. அப்படியென்றால், பிரதமரோ, ஜனாதிபதியோ யாராக இருந்தாலும், அனைவருமே சட்டத்திற்கு உட்பட்டவர்கள்தாம். இங்கு சட்டமே தலைமைப் பீடத்தை வகிக்கிறது என்று அர்த்தம். இதற்கு, சட்டம் அனைவருக்கும் சமமானதாகவும் காழ்ப்புணர்ச்சி இல்லாததாகவும் இருக்கவேண்டும். ஆனால், இன்று அத்தகைய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் அமைப்புகளே அரசின் அடியாட்களாகச் செயல்படுகின்றன.

Dr.V.Suresh, General Secretary, PUCL
Dr.V.Suresh, General Secretary, PUCL
`பிரசாந்த் பூஷண் குற்றவாளி’ என தீர்ப்பு... கருத்துரிமையை நெரிக்கிறதா உச்சநீதிமன்றம்?

இதனால், இந்தியாவின் ஜனநாயக கலாசாரம் அழிந்துகொண்டிருக்கிறது. எந்தவோர் அரசு அதிகாரியும் பதவியேற்கும்போது அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் என்றுதான் உறுதிமொழி எடுக்கிறார்கள். அரசைப் பாதுகாப்பேன் என்று இல்லை. ஆனால், இன்று பதவிக்கு வருகிறவர்கள் ஆளும் அரசைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு தான் செயல்படுகிறார்கள்.

இப்போது ஹர்ஷ் மந்தர் மீதான நடவடிக்கை காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்படுகிறது என்பது தெரிந்தால், குறிப்பிட்ட அதிகாரி அதைச் செய்திருக்கக்கூடாது. ஆனால் அப்படிச் செய்யவில்லையே. ஏனெனில், இப்போது வரக்கூடிய பெரும்பாலான அதிகாரிகளுடைய மனநிலை, அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்றில்லாமல், ஆளும் அரசைப் பாதுகாக்க வேண்டுமென்றுதான் இருக்கிறது. அதனாலேயே இத்தகைய அதிகாரத் தாக்குதல் கட்டளைகளைக் கேள்வியின்றிப் பின்பற்றுகிறார்கள். இதன்மூலம், ஜனநாயக இயந்திரத்தின் பணிக் கலாசாரத்தையே மாற்றியமைத்துவிட்டார்கள்.

இப்படியே தொடர்ந்து செயல்பட்டு, பிறகு ஜனநாயக இயந்திரங்கள், தன்னிச்சையாகச் செயல்படலாம் என்பதே யாருக்கும் தெரியாமல் போய்விடும். இந்தச் செயலாக்க இயக்ககம், வருமான வரித்துறை போன்ற அத்தகைய தன்னிச்சை அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்வது, வெறுமனே அரசியல் லாபத்திற்காக மட்டுமில்லை, மக்களுடைய எதிர்ப்புகளை அடக்குவது மட்டுமல்ல.

ஜனநாயக இயந்திரங்களின் தன்னிச்சையாகச் செயல்படக்கூடிய வழிமுறையை, கலாசாரத்தை மாற்றி, ஆளுங்கட்சியின் சேவகர்களாக்க வேண்டும் என்பதே இந்த நடவடிக்கைகளில் இருக்கும் உள்ளார்ந்த நோக்கம். இதுதான் நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கே ஆபத்தாக உருவெடுத்திருக்கிறது.

ஹர்ஷ் மந்தர்
ஹர்ஷ் மந்தர்
Tamil News Today: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்!

இதையெல்லாம் உடைக்க வேண்டுமெனில், பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, பல வகைகளில் கேள்விகளைக் கேட்க வேண்டும். சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தவேண்டும். அரசாக இருந்தாலும் நாங்கள் கேள்வி கேட்போம் என்று முன்வரவேண்டும். வெவ்வேறு வகைகளில் போராட்ட முறைகளையும் வடிவங்களையும் ஒருங்கிணைக்கவேண்டும். அவரவர் பகுதியில் வரும் திட்டங்களில் தொடங்கி, நீதிபதிகள் நியமிக்கப்படுவது வரை அனைத்திலுமே கேள்வியெழுப்பியாக வேண்டும். அனைத்து மக்களுமே ஒன்றிணைந்து, அச்சப்படாமல், எதிர்க்கவேண்டும். இந்தப் பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது" என்று கூறினார்.

ஆம், அரசியலமைப்புச் சட்டம் மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கிறது. அதைப் பாதுகாக்க வேண்டிய ஜனநாயக நிறுவனங்கள், ஆளும் அரசைப் பாதுகாக்க முனையும்போது, நாட்டின் ஜனநாயகம் ஆபத்திற்கு உள்ளாகிறது. அந்த ஆபத்தைக் களைவது மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு