Published:Updated:

சூர்யாவின் கருத்து ஏற்படுத்திய சர்ச்சை: முன்னாள் நீதிபதி, கல்வியாளர், ஊடகவியலாளர்கள் கருத்து!

`கல்வி சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவிக்க நடிகர் சூர்யா என்ன கல்வியாளரா...’ என்றும், `தன் படங்களுக்கான புரொமோஷனுக்காக இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார்’ என்றும் சூர்யாவின் மீது பலமுனைத் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன.

பொதுவாக பள்ளித் தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில், தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமான மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் முன்னர் வெளியாகும். சமீபமாக அது போன்ற செய்திகள் குறைந்திருக்கின்றன. ஆனால், தேர்வெழுதுவதற்கு முன்பாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் தற்போது அரங்கேறிவருகிறது. அதுவும் நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய தினம், தேர்வு பயத்தின் காரணமாக மன அழுத்தம் உண்டாகி அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி பலரும் இந்த மரணங்கள் குறித்துத் தங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர்.

சூர்யா அறிக்கை
சூர்யா அறிக்கை

அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா, மிகக் காட்டமான அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில்,

`அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு ருகிறது. ஏழை, எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள். கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, நீதிமன்றம் நடைபெறுவது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்திருக்கும் கருத்து, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் ஒன்றை எழுதினார். மறுபுறம் `கல்வி சார்ந்த விஷயங்களில் கருத்து தெரிவிக்க நடிகர் சூர்யா என்ன கல்வியாளரா?’ என்றும், `சூர்யா தன் படங்களுக்கான புரொமோஷனுக்காக இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறார்’ என்றும் சூர்யாவின் மீது பலமுனைத் தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன.

`நடிகரான சூர்யாவுக்கு கல்வி குறித்துக் கருத்து தெரிவிக்க உரிமையில்லை’ எனக் கூறுவது பற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்.

``நடிகர் சூர்யா வரி கட்டவில்லையா... அவர் ஓட்டுப் போடவில்லையா... அவர் இந்தியன் இல்லையா... ஒரு இந்தியனாக அவருக்கு இந்திய நாட்டில் நடக்கும் ஒரு சிக்கல் குறித்துக் கருத்து சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது. தன் குழந்தைகளைப்போல, பெரும்பாலான குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் அவருக்கு கல்வி குறித்துக் கருத்துச் சொல்வதற்கு தார்மிக உரிமை இருக்கிறது. எனக்குத் தெரிந்து அவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாரும் இல்லை.

`குழந்தைகளின் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தோடு இல்லாததால்தான் இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன’ என்றும் சிலர் முன்வைக்கிறார்கள். குழந்தைகள் சிறுவயதிலிருந்து ஒரு கனவை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதற்காகத் தங்களைத் தயார்படுத்திவருகிறார்கள். குழந்தைகள் விரும்புவதைப் பூர்த்தி செய்வதுதான் பெற்றோர்களின் கடமை. அதிலென்ன தவறு... படித்து, நன்றாக மதிப்பெண் பெற வேண்டும் என பெற்றோர் விரும்புவதிலும் என்ன தவறு இருக்கிறது... காரணம், அந்த மாணவர்கள் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்களே... நீட் தேர்வைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு குழந்தைகளை, பெற்றோர்களைக் குறை சொல்வது எந்தவகையிலும் நியாயமில்லை. அதேபோல மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்ற செய்தியும் பரவிவருகிறது. அதுவும் தவறான தகவல். கடந்த சில ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு 11-ம் வகுப்பு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. அதேபோல, 11-ம் வகுப்பில் பயாலஜி பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதையே புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கின்றன.

என்னைப் பொறுத்தவரை கலைஞர்களுக்கு இயல்பாகவே சமூகம் குறித்த ஓர் அக்கறை உணர்வு இருக்கும். அதுவும் குழந்தைகளுடன் இருக்கும் சூர்யாவுக்கு அந்த உணர்வு கூடுதலாகவே இருக்கும். அதனால், சூர்யா இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காமல் இருந்திருந்தால்தால்தான் `அது தவறு’ என நான் சொல்லியிருப்பேன்” என்றார்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழக பா.ஜ.க துணைத் தலைவரும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியுமான அண்ணாமலையைத் தொடர்புகொண்டு இது குறித்துக் கேட்டோம்.

``நடிகர் சூர்யாவுக்கு கருத்து சுதந்திரம் இருந்தாலும் இவ்வளவு காட்டமான அறிக்கை வெளியிடத் தேவையில்லை'' என்று ஆரம்பித்தவர், ``சூர்யாவுக்கு கருத்து தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஆனால், மாணவர்கள் நீட் தேர்வெழுதுவதற்குத் தயாராகிவிட்டனர். வருடந்தோறும் தேர்வெழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாகும்போது அது மீண்டும் நிரூபணமாகும். சாமானிய மாணவர்களுக்கு இந்தத் தேர்வு எதிராக இருப்பதாக சூர்யா கருத்து தெரிவித்திருக்கிறார். அது தவறு. நீட் தேர்வு, ஏழை மாணவர்களும் எளிமையாக மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கொண்டுவரப்பட்டது. அந்த அறிக்கையில் சூர்யா தெரிவித்திருக்கும் கருத்துகளை நான் ஏற்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவறான புரிதலோடு இப்படியான கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா. தவிர ஊடகங்கள் இந்த விஷயங்களைக் கையாண்டதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. 'Press Council of India' செப்டம்பர், 2019-ம் ஆண்டில் தற்கொலைகளை எப்படிச் செய்தியாக்க வேண்டும் என்ற வழிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. அதை ஊடகங்கள் சரியாகப் பின்பற்றுவதில்லை. ஒரு தற்கொலையை ஊதிப் பெரிதாக்கும்போது அது தொடருவதற்கான வாய்ப்பு உளவியல்ரீதியாகவே இருக்கிறது. ஊடகங்கள் கொஞ்சம் கவனமாக இந்த விஷயத்தைக் கையாண்டிருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து'' என்றார் அவர்.

பா.ஜ.க அண்ணாமலை
பா.ஜ.க அண்ணாமலை

`ஊடகஙகள் இந்தத் தற்கொலை மரணங்களை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டுமா?’

மூத்த பத்திரிகையாளர், ஆர்.கே.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``மன்னராட்சிக் காலத்தில், தவறான செய்திகளைக் கொண்டுவரும் எதிர் நாட்டுப் படை வீரர்களின் தலையை வெட்டிக் கொலை செய்யும் வழக்கம் இருந்தது. செய்தி எழுதி அனுப்பிய மன்னரை விட்டுவிட்டு, தகவல் கொண்டு வரும் வீரரைக் கொல்வதற்கு ஒப்பானதுதான், `செய்தி வெளியிட்ட ஊடகங்கள்தான் தற்கொலைக்குக் காரணம்’ என்று திசை திருப்புவது. தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது நீட் தேர்வால்தானே தவிர அதைப் பற்றிய செய்தி வெளியிட்டதால் அல்ல. அந்த மாணவர்கள் படிக்காமல் செய்தி சேனல்களை பார்த்துக்கொண்டிருந்தார்களா என்பதுகூடத் தெரியாத நிலையில், இப்படி மீடியாவின் மீது குற்றம் சுமத்துவது அபாண்டமானது. அதுபோக தற்கொலை குறித்து அடிப்படை அறிவுகூட இல்லாதவர்கள்தான் இது போன்ற கருத்துகளைத் தெரிவிப்பார்கள்'' என்றார் காட்டமாக.

நீட் தேர்வு: நடிகர் சூர்யா அறிக்கை.. `நீதிமன்ற அவமதிப்பு’ என தலைமை நீதிபதிக்கு கடிதம்

இந்தநிலையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கூட்டாக தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், `நடிகர் சூர்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், `நான்கு மாணவர்கள் மரணம் தொடர்பாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்றும், `நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதைப்போல எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன்,

``சூர்யாவின் கடிதத்தில் நீதிமன்றத்தை அவமதிக்கும்விதத்தில் எந்தக் கருத்தும் இல்லை. அவர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். சமூக அக்கறையோடு தன் கருத்துகளை முன்வைக்கிறார் அவ்வளவுதான். இதில் எந்தத் தவறும் இல்லை. சூர்யாவின் கருத்தை சமூக வலைத்தளங்களில் நான் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்களின் பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்கள். அனைவரும் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

அரி பரந்தாமன்
அரி பரந்தாமன்

சூர்யா, `நீதிமன்றம்’ எனப் பொதுவாகக் குறிப்பிட்டாலும் அவர் உச்ச நீதிமன்றத்தைத்தான் குறிப்பிடுகிறார். நீட் தேர்வை எழுத உத்தரவிடும் உச்ச நீதிமன்றம், ஆன்லைனில்தான் நடக்கிறது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வரவே பயப்படுகின்றனர். ஆனால், மாணவர்கள் நேரடியாகச் சென்று தேர்வெழுத வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிடுகின்றனர். உலக அளவில், நம் நாட்டில்தான் தினமும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தநேரத்தில் இப்படியொரு தேர்வு அவசியம்தானா... அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளெல்லாம் ஆன்லைனில்தானே நடக்கின்றன?

தேர்வெழுதச் செல்லுமிடத்தில் கொரோனாநோய்த்தொற்று ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? அவர்கள் மூலம் அவர்களின் குடும்பத்திலுள்ள வயது மூத்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது... இதைத்தான் சூர்யா கேள்வி கேட்டிருக்கிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. அதைக்கூட தெரிவிக்கக் கூடாது என்றால் என்ன ஜனநாயகம் இருக்கிறது இந்த நாட்டில்...'' என்றார் அவர்.

``நடிகர் சூர்யா தன் பட புரொமோஷனுக்காகத்தான் இது போன்ற கருத்துகளை வெளியிடுகிறாரா?'' இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம்,

''சூர்யா மிகவும் நல்ல பொறுப்புள்ள பையன். அறிவுஜீவி. அறக்கட்டளை நடத்திவருபவர். சமூகத்தின் மீது அக்கறையுள்ள பையன். நடிகன் என்பதைத்தாண்டி இவ்வளவு குவாலிட்டி அவரிடம் இருக்கிறது. மக்களுக்கு அது தெரியும்'' என்றார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு