Published:Updated:

''ஓபிஎஸ் மகன், யோசிக்காமலே ஆதரவு தெரிவித்துவிட்டாரோ?''- விஜய் வரி விலக்கு விவகாரம்; - கஸ்தூரி கேள்வி

``சச்சினுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு, விஜய்க்கு கிடையாதா என்றரீதியில் ஜெய பிரதீப் கேள்வி கேட்கிறாரே... 2012-ல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்தது...’’ என்று கேள்வி கேட்கிறார் நடிகை கஸ்தூரி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நடிகர் விஜய்யின் 'ரோல்ஸ் ராய்ஸ் கார்' வரி விலக்கு விவகாரத்தில், கடந்த வாரம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்த 'ஆதரவு - எதிர்ப்பு' விமர்சனங்கள் இணைய உலகை கிடுகிடுக்கவைத்தன!

இதையடுத்து, கார் வரி விலக்கு விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து விஜய் தரப்பு மேல்முறையீடு சென்றது. அதில், `இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை ரத்து செய்யவும் தன் மீதான தனிப்பட்ட விமர்சனத்தை நீக்ககவும்' விஜய் கோரியுள்ளார் எனத் தகவல் வெளியானது. நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் உரிய அமர்வுக்கு மாற்ற பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், விஜய் கார் வரி விலக்கு தொடர்பான தனது கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட்டுவரும் நடிகை கஸ்தூரியிடம் இந்த விவகாரம் குறித்த நமது கேள்விகளை முன்வைத்தோம்...

விஜய்
விஜய்

``தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்ட நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அபராதம் விதித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறதே..?’’

``வரியைக் குறைப்பதற்காக சட்டரீதியான முயற்சியைத்தான் விஜய் மேற்கொண்டிருக்கிறார். மற்றபடி வரி கட்டுவதைத் தவிர்க்கவோ அல்லது ஏய்க்கவோ அவர் முயலவில்லை. சாதாரணமான கார் வாங்குபவர்களேகூட, அதிக வரி கட்டுவதைத் தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யக்கூடிய சூழலை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். எனவே, சட்டரீதியாக வரி குறைப்புக்கு முயன்ற விஜய் மீது எந்தத் தவறும் இல்லை!''

``சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றெல்லாம் நீதிமன்றம் கண்டித்திருப்பது சரிதானா?''

''சட்டம் என்பதே மக்களுக்கானதுதான். சட்டம் காட்டுகிற வழிமுறைகளை மீறி நடந்தால், அது சமூகத்திலும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். எனவேதான் சட்டத்தை உருவாக்குபவர்களும், அதைப் பாதுகாப்பவர்களும் இது போன்ற அறிவுரைகளை வழங்குகிறார்கள்.

நடிகர் விஜய்யின் ரோல் ஸ்ராய்ஸ் கார்
நடிகர் விஜய்யின் ரோல் ஸ்ராய்ஸ் கார்

இந்த வழக்கைப் பொறுத்தவரையில், மனுதாரர் 'நடிகர் விஜய்' என்பதும் குறிப்பிடப்படவில்லை என்பதால்தான், நீதிபதி அது குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், இது போன்ற வழக்குகளில், 'நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறோம்' என்று வெறுமனே சொல்லி, கடந்துபோய்விட முடியாது. 'ஏன் இந்த அபராதத் தொகை விதிக்கப்படுகிறது, கடந்த காலங்களில் இது போன்று எத்தனை வழக்குகள் வந்தன, இன்றைய தீர்ப்பு நாளைய சமுதாயத்தில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்பதையெல்லாம் யோசித்து தீர்ப்பு வழங்குவதுதான் ஒரு நல்ல நீதிபதிக்கு அழகு!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''வரி குறைப்பு கேட்பது, குடிமக்களின் உரிமை; அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு என கார்த்தி சிதம்பரம் சொல்கிறாரே?''

''இல்லையில்லை... விஜய் ஒரு நடிகர் என்பதாலேயே இப்படியோர் உத்தரவு கிடைத்திருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. சமூகத்தில் பெரும்புள்ளியாக, கோடிக்கணக்கான மக்களுக்கு முன் உதாரணமாக நடிகர் விஜய் இருக்கிறார். படங்களில் ஹீரோயிசமாக நடிப்பவர்கள், நிஜ வாழ்க்கையிலும் தங்கள் செயல்பாட்டை பிரதிபலிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நீதிமன்ற உத்தரவில் சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

என்னைப் பொறுத்தவரையில், மக்களுடைய பார்வையில் இருப்பவர்கள் எப்போதுமே கொஞ்சம் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும். இது சினிமா உலகில் இருப்பவர்களுக்கேயான சாபம்! நாட்டில் எத்தனையோ பேர் எப்படியெல்லாம் நடந்துகொண்டாலும் கண்டுகொள்ளாத உலகம், சினிமா உலகில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே தொடர்ந்து கிசுகிசு பரப்பிவரும்.

பணத்துக்குக் குறைவில்லாத, எல்லோராலும் போற்றக்கூடிய இடத்திலும் இருக்கிற விஜய், நியாயம் தன் பக்கத்தில் இருப்பதாக நினைத்திருந்தாலும்கூட நாட்டுக்குக் கொடுக்கக்கூடிய நன்கொடையாக நினைத்து வரியைக் கட்டியிருந்திருக்கலாம்!

கடந்தகாலத்தில், சச்சின் டெண்டுல்கரும் இதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கினார். சமூக ஊடகம் பிரபலமாகாத அந்த நாள்களிலேயே சச்சின் டெண்டுல்கரை மக்கள் கழுவி ஊற்றினார்கள். 'பிரபலங்கள் மக்களுக்கு உதாரண புருஷர்களாக இருக்க வேண்டும்' என்ற விமர்சனங்களும் அப்போதே எழுந்தன.''

மும்பை: `நான் நலமுடன்தான் இருக்கிறேன்!’ - மரணம் தொடர்பான வதந்திக்கு மேயர் கிஷோரி விளக்கம்

''ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கரின் வெளிநாட்டு காருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிற முன்னுதாரணம் இருக்கிறதுதானே?''

''நடிகர் விஜயை தென்னிந்தியா முழுக்கத் தெரியும் என்று சொன்னால், சச்சின் டெண்டுல்கரை உலகம் முழுக்கவே தெரியும். அவரை கிரிக்கெட் துறையில் கடவுளாகவே பார்க்கிறார்கள். ஆனால் அவரும்கூட 2002-ல் தனக்குப் பரிசாகக் கிடைத்த வெளிநாட்டு காருக்கு, இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கும்படி நேரடியாக மத்திய அரசிடமே கேட்டார். அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான அரசும், வரிவிலக்கு அளித்தது. ஆனால், 'கோடி கோடியாக சம்பாதிக்கும் சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய காருக்குக்கூட வரி செலுத்த மாட்டாரா...' என அப்போது பொதுமக்கள் அவரைக் கழுவி ஊற்றினர்.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

நடிகர் விஜய், கடந்த 2012-ம் ஆண்டு இறக்குமதி வரியை செலுத்தித்தான் இந்த ரோல்ஸ்ராய் காரை வாங்கியிருக்கிறார். பின்னர் அந்த காரை தமிழ்நாட்டுக்குள் பயன்படுத்துவதற்காக பதிவு செய்ய முற்படும்போதுதான் நுழைவு வரி கட்டியாக வேண்டும் என்ற பிரச்னை எழுகிறது. ஆக, மாநில அரசு கேட்ட நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்டுத்தான் அவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.''

கோவை: ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள்! - ரயில் நிலையத்தில் சிக்கிய நைஜீரியா நாட்டுக்காரர்

''ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெய பிரதீப், சச்சின் டெண்டுல்கருக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே?''

''2012-ம் ஆண்டு தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருந்தது ஜெயலலிதாதான். சச்சினுக்கு அளிக்கப்பட்ட வரி விலக்கு, விஜய்க்கு கிடையாதா என்ற ரீதியில் ஜெய பிரதீப் கேள்வி கேட்கிறாரே... 2012-ல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சி செய்தது, முதலமைச்சராக யார் இருந்தார் என்பதையெல்லாம் யோசிக்காமலேயே கேட்டுவிட்டாரோ ஜெயபிரதீப்?''

ஜெயபிரதீப்
ஜெயபிரதீப்

''கார் வரி விலக்கு விவகாரத்தில் தனி நீதிபதியின் தீர்ப்பு ஆட்சேபகரமாக இருப்பதாகக் கூறி விஜய் தரப்பு மேல் முறையீடு செய்திருக்கிறதே..?''

''நான் சட்டம் படித்திருந்தாலும்கூட, வழக்கறிஞராகப் பயிற்சி செய்யவில்லை. எனவே, இன்றைய சூழலில் உள்ள நீதிமன்ற நடைமுறையைத்தான் நான் சொல்கிறேன். எந்தவொரு தீர்ப்புமே ஒரு வரியில், மணி ரத்னம் பட பாணியில் இருக்காது. ஒரு முன்னுரை, தீர்ப்பு, பின்னுரை, நீதிபதியின் சொந்தக் கருத்து என எல்லாம் கலந்துதான் இருக்கும். மற்றபடி, தீர்ப்புகளைத் தங்களது சொந்த விருப்பு, வெறுப்புகளை முன்வைத்துத்தான் எழுதக் கூடாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு