Published:Updated:

“சசிகலா வெளியே வந்தால் தினகரனால் அவருக்கு எதுவும் நடக்கலாம்!”

ஆர்.டி.ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி.ராமச்சந்திரன்

அனல் கிளப்பும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

“சசிகலா வெளியே வந்தால் தினகரனால் அவருக்கு எதுவும் நடக்கலாம்!”

அனல் கிளப்பும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

Published:Updated:
ஆர்.டி.ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.டி.ராமச்சந்திரன்

“அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும்”, “மக்களிடம் நம் கட்சி நம்பிக்கை இழந்துவிட்டது”, “பிஜே.பி-யிடம் அ.தி.மு.க சிக்கியிருக்கிறதா?” - இப்படி அ.தி.மு.க-வில் அடிக்கடி எழும் அதிரடி குரலுக்குச் சொந்தக்காரர் குன்னம் எம்.எல்.ஏ-வான ஆர்.டி.ராமச்சந்திரன். இவர் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும்கூட. இப்போது அமைச்சர்கள் பலரும் சசிகலா விடுதலைகுறித்து பல்வேறு கருத்துகளை உதிர்த்துவரும் நிலையில், “சசிகலா வெளியே வரும்போது தினகரனால் அவருக்கு எதுவும் நடக்கலாம்; சசிகலா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று பேசி பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார். அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம். அதிரடியாகவும் நக்கலாகவும் வந்துவிழுந்தன பதில்கள்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘தொடர்ந்து ஆட்சிக்கு எதிராகக் கருத்துக்களைச் சொல்லிவருகிறீர்கள். உங்களைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?’’

“மற்றவர்களைப்போல அமைச்சர் பதவிக்கோ, கட்சியில் மாநிலப் பதவிக்கோ ஆசைப்பட்டுக் காய்நகர்த்துபவன் அல்ல நான். எனது அதிகபட்ச ஆசை, மாவட்டச் செயலாளர் பதவிக்கு வர வேண்டும் என்பதே. அதுவும் நிறைவேறிவிட்டது. என் மாவட்டத்தில் கட்சியை நல்லபடியாக வழிநடத்திக்கொண்டிருக்கிறேன். அதுபோதும் எனக்கு. கட்சிக்கு எதிராகப் பேசுகிறேன் என்கிறார்கள். உண்மையைதானே பேசுகிறேன். என்னைக் கட்சியை விட்டே நீக்கப்போவதாகச் சொல்கிறார்கள். அதற்கெல்லாம் அஞ்சுபவன் அல்ல நான். அப்படியே என்னை ஓரங்கட்டினாலும் என் காரிலுள்ள கொடியையும், இடுப்பிலிருக்கும் கரை வேட்டியையும் யாராலும் பறிக்க முடியாது. இப்போது எப்படிப் பேசுகிறேனோ... அப்படிதான் பேசுவேன். அதை யாராலும் தடுக்க முடியாது.”

‘‘நீங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் தரப்பினர், முட்டுக்கட்டைப் போடுவதாகத் தகவல் வருகிறதே?”

“என்னை அவர் எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை நான் அவரைத் தாண்டிச் சென்றுவிடுவேன் என்று நினைக்கிறாரோ என்னவோ... நாங்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இப்போதுகூட அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஓர் அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால், எங்கே நான் அந்தப் பதவிக்கு போட்டியாக வந்துவிடுவேன் என்று அவருடன் இருப்பவர்கள் தூண்டி விடுகிறார்கள் போலிருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன்... எனக்கு அமைச்சர் பதவி எல்லாம் வேண்டாம். என் இன்னோர் ஆசை, என்னை மாவட்டச் செயலாளராக்கி, எம்.எல்.ஏ-வாக்கி அழகுபார்த்த எங்கள் அண்ணன் வைத்திலிங்கத்துக்கு மத்தியில் பதவி கிடைக்க வேண்டும்.”

‘‘அ.தி.மு.க ஆட்சியைக் கலைத்துவிடுவேன் என்று ஸ்டாலின் சொல்லி வருகிறாரே?’’

‘‘அட போங்கப்பா... இதைத்தானே ஸ்டாலினும் தினகரனும் பல வருடங்களாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஸ்டாலினின் முதல்வர் கனவு கடைசி வரை பகல் கனவு மட்டுமே. வேண்டுமானால் மக்களிடம் பேசி கைத்தட்டல் வாங்கலாம் அவ்வளவுதான். அவர்களால் எங்களை ஒன்றுமே செய்ய முடியாது.’’

‘‘பா.ஜ.க-விடம் உங்கள் கட்சி அடிமைப்பட்டு கிடப்பதால்தான் தொடர் தோல்விகளைச் சந்தித்துவருவதாகத் தொண்டர்கள் மனம் வெதும்புகிறார்களே?”

“இது உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாக இருக்கலாம். ஆனால், பா.ஜ.க-வினரிடமிருந்து நாங்கள் எப்படி வெளியே வரப்போகிறோம் என்பதுதான் புதிராக உள்ளது. நீங்கள் சொல்வதுபோல தொண்டர் களின் மனதிலிருந்து இந்தக் கருத்தை நீக்க என்ன செய்யப்போகிறோம் என்றும் தெரியவில்லை.”

‘‘நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க-வுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?’’

“எங்களுடைய வாக்குவங்கி எங்களிடம்தான் இருக்கிறது. கடந்த முறை தி.மு.க பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்; நாங்களும் ஏமாற மாட்டோம். எங்களுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.’’

‘‘சசிகலா வெளியில் வந்தால் அ.தி.மு.க-வில் என்ன மாற்றம் ஏற்படும்?”

“எந்தச் சந்தேகமும் வேண்டாம். கட்டாயம் அ.தி.மு.க தொடர்ந்து செயல்படும். அதுவும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலேயே செயல்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை.”

‘‘அ.தி.மு.க-வை சசிகலா கைப்பற்ற முடியுமா?”

“வாய்ப்பே இல்லை. அவர் வெளிவே வந்தால் அ.ம.மு.க-வுக்கு தலைவர் ஆவார். இரண்டாம்கட்டத் தலைவராக தினகரன் இருப்பார். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவராக இருப்பதை தினகரனால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்போது, தினகரனால் சசிகலாவுக்கு எதுவும் நடக்கலாம். எனவே, சசிகலா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தினகரனின் கேரக்டர் மிகவும் மோசமானது. நான் சொல்வது இப்போது புரியாது. அவரிடம் பழகியவர்களிடம் கேட்டால் நான் சொல்வது நன்கு புரியும்!’’