Published:Updated:

தனியார்மயமாகும் விமான நிலையங்கள்!- வேகமெடுக்கும் மத்திய அரசு

விஷ்ணுராஜ் சௌ

அரசின் தரப்பில் 20-25 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

விமான நிலையங்கள்
விமான நிலையங்கள்

அரசுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும், 20 முதல் 25 வரையிலான விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ) தலைவர் குருபிரசாத் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.

விமான நிலையம்
விமான நிலையம்

இதுகுறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய குருபிரசாத் மோகபத்ரா, ``அரசின் தரப்பில் 20-25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

மேலும் பேசியவர், ``தனியார் துறையின் உதவியுடன் நாட்டில் விமான நிலையங்களை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது. அனைத்து விமான நிலையங்களும் தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், ஒரு நாளில் குறைந்தபட்சம் 50 முதல் 60 விமானங்கள் இயங்கக் கூடிய விமான நிலையங்கள் மட்டும் தனியார் நிறுவனங்களை ஈர்க்கக் கூடியதாக அமையும். ஆனால், நாடு முழுவதும் விமான நிலையங்களின் தேவைகள் மிகுந்த மாவட்டங்கள் அதிகம் உள்ளன. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அரசு கவனமாக உள்ளது" என்றார்.

குருபிரசாத் மோகபத்ரா
குருபிரசாத் மோகபத்ரா

கடந்த ஆண்டு, லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், மங்களூர், திருவனந்தபுரம் மற்றும் கவுஹாத்தி ஆகிய விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டு (பி.பி.பி) மாதிரி மூலம் தனியார் மயமாக்க அரசு ஒப்புதல் அளித்தது.

அதேபோல் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டுத் தொடரில் கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், விமான நிலையங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றதா, கொல்கத்தா விமான நிலையம் தனியார்மயமாக்கப்படுமா? என்ற கேள்விகளை முன்வைத்தார் .

விமான நிலையம்
விமான நிலையம்

அதற்குப் பதிலளித்துப் பேசிய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஹர்தீப் சிங் புரி, ``விமான நிலையங்களைத் தகுதியின் அடிப்படையில் தனியார் மயமாக்குவது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. அதனடிப்படையில் ஏற்கெனவே 6 விமானநிலையங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால், உடனடியாக கொல்கத்தா விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் ஏதும் இல்லை” என்றார்.