அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

“அமித் ஷா சொல்வது பொய்!” - வரலாறு சொல்லும் உண்மை என்ன?

அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
News
அமித் ஷா

- மாயா

உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் கொண்டுவந்தபோது ‘‘காங்கிரஸ் கட்சி நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்தாமல் இருந்திருந்தால், இந்தச் சட்டத்தை தற்போது கொண்டுவர வேண்டிய அவசியமே இருந்திருக்காது’’ என்று பேசினார். இது, பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது. அமித் ஷா சொன்னதில் உண்மை இருக்கிறதா? பார்ப்போம்...

பா.ஜ.க மூத்த தலைவரான எல்.கே.அத்வானியின் வலதுகரமாகச் செயல்பட்டவர் சுதீந்திர குல்கர்னி. அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தனது ட்விட்டரில், ‘இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஒன்றுபட்ட இந்தியாவைப் பிரித்தது, முஸ்லிம் லீக் கட்சிதான். இந்தியாவை, அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கிய மதச்சார்பற்ற நாடாக உருவாக்கவே காங்கிரஸ் முயற்சி எடுத்தது. இது வரலாறு. இது தெரியாமல் நாடாளுமன்ற வரலாற்றில் மூத்த அமைச்சர் ஒருவர் கறுப்புச் சட்டத்தைக் கொண்டுவர பச்சைப்பொய்யைக் கூறியுள்ளார்” என்று பாய்ந்துள்ளார்.

சுதீந்திர குல்கர்னி, இர்பான் ஹபீப், மணிஷ் திவாரி
சுதீந்திர குல்கர்னி, இர்பான் ஹபீப், மணிஷ் திவாரி

வரலாற்று எழுத்தாளரான இர்பான் ஹபீப், ‘வரலாற்று உண்மைகளைப் படிக்காமலும், நடந்த உண்மைகளைப் புரிந்துகொள்ளாமலும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பொய்யைப் பதிவு செய்துள்ளார்’ என, ட்விட்டரில் பதிவுசெய்துள்ளார்.

மற்றொரு வரலாற்று ஆசிரியரான ராகவன், “இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் எனப் போராடியவர்களின் கருத்துப்படி, அப்போதைய அரசும் முஸ்லிம் லீக் கட்சியும் இணைந்து இந்தியாவை இரண்டாக்கின. பிரிவினை முடிந்த பிறகு, முஸ்லிம் லீக் கட்சியைக் கலைத்துவிட்டார்கள். தற்போது இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியானது, ‘இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்’ என வலியுறுத்திவரும் கட்சியாகும்” என்று கூறியிருக்கிறார்.

அமித் ஷா
அமித் ஷா

வரலாற்று ஆவணங்களும் அமித் ஷா சொல்வதற்கு எதிராகவே இருக்கின்றன. `இந்தியா இந்துக்களின் நாடாகவும், பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாகவும் இருக்க வேண்டும்’ என்று பிரிவினைக்கு முன்பு பெரும்பான்மை சாரார் கூறி வந்தனர். குறிப்பாக, சங் பரிவார் அமைப்பின் மூத்த தலைவரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், 1923-ம் ஆண்டு எழுதிய ‘இந்துத்துவா’ என்ற புத்தகத்தில் மேற்கண்ட கருத்தையே வலியுறுத்தினார். இந்தப் புத்தகம் வெளியாகி பத்து ஆண்டுகள் கழித்து முகமது அலி ஜின்னாவும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசினார். தவிர, 1940, மார்ச் 23-ம் தேதி முஸ்லிம் லீக் கட்சி லாகூரில் நடத்திய கூட்டத்தில், ‘பாகிஸ்தான், முஸ்லிம் களுக்கான நாடு’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

மத அடிப்படையிலான பிரிவினையை எதிர்த்த நேரு, தனது ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்தில் ‘ஏன் இந்தியாவை இரண்டாகப் பிளக்க வேண்டும்?’ என கேள்வி எழுப்பினார். மேலும், ‘இந்தியாவில் பல்வேறு மத வழிபாடுகள் உள்ளன. அதன் அடிப்படையிலெல்லாம் பிரிக்க முயன்றால் நாடு என்னவாகும்?’ என்றும் தன் வருத்தத்தை அதில் குறிப்பிட்டார்.

1937-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபா மாநாட்டில் பேசிய சாவர்க்கர், ‘‘இரு விதமான மத உணர்வுகளைக்கொண்டு வெறுப்புணர்வுடன் வாழும் மக்களிடம், ‘இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு’ என்று ஒருசில அரசியல் வாதிகள் பிதற்றிக்கொண்டிருப்பார்கள். கலாசாரரீதியாக, மதரீதியாக பல நூற்றாண்டுகளாகப் பிரிந்து உள்ளவர்களை எப்படி அடக்கியாள முடியும்? அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்தாக வேண்டும். இப்படி புரையோடியுள்ள நோயை உடனடியாக குணப்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, கண்டுகொள்ளமால் இருக்க முடியாது. இந்தியாவை ஒரே நாடாகப் பார்த்தாலும், அதில் இந்து நாடு, முஸ்லிம் நாடு என்கிற இரு நாடுகளும் இருந்துவருகின்றன. இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’’ என்று பேசியுள்ளார். இவை எல்லாம் வரலாறு. இந்த நிலையில்தான் அமிஷ் ஷாவின் பேச்சு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

அமித் ஷாவின் பேச்சை மக்களவையில் கண்டித்த காங்கிரஸ் கட்சியின் மணிஷ் திவாரி, ``இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆளுங்கட்சி ஏன் கொண்டுவருகிறது என்பது எங்களுக்கும் தெரியும்... மக்களுக்கும் தெரியும். அரசியல் லாபத்துக்காக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்கிறது பா.ஜ.க’’ என்றார்.

காங்கிரஸ் கட்சியும் தனது சமூக வலைதளத்தில், ‘பிரிட்டிஷார், தங்கள் வல்லமையை நிலைநிறுத்த பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்து நமது நாட்டின் வளங்களைச் சுரண்டிச் சென்றனர். இப்போதைய மத்திய அரசும் மக்களைத் துண்டாட நினைக்கிறது’ என விளாசியிருக்கிறது.

வரலாற்றைத் திரிக்க முயல்வது, வரும் தலைமுறையினரை பாதிக்கும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.

‘‘இந்தியாவைத் துண்டாடியதே காங்கிரஸ்தான்!’’

“அமித் ஷா சொல்வது பொய்!” - வரலாறு சொல்லும் உண்மை என்ன?

`மத அடிப்படையில் நாட்டைப் பிளவுப்படுத்தியதே காங்கிரஸ்தான்’ என்று அமித் ஷா கூறியது குறித்து பா.ஜ.க-வின் துணைத்தலைவர் ஏ.பி.முருகானந்தத்திடம் கேட்டதற்கு...

``அமித் ஷா கூறியதில் என்ன தவறு இருக்கிறது? இந்த நாட்டை மத, இன, மொழிவாரியாகத் துண்டாடியதே காங்கிரஸ்தான். நேருவின் தவறான வெளியுறவுக் கொள்கைகளால்தான் இந்தியாவின் அங்கமாக இருந்த பல பகுதிகள் அண்டைநாடுகளுக்குச் சென்று விட்டன. இந்துக்களின் புனிதபூமியான கயிலாச மலைக்குச் செல்லவேண்டும் என்றால், இன்று சீனாவிடம் விசாவுக்கு விண்ணப்பித்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவழித்த பிறகே செல்ல முடியும். இதற்கெல்லாம் காங்கிரஸ்தானே காரணம்!’’ என்றார் உஷ்ணமாக.

- பொன்குமரகுருபரன்