Election bannerElection banner
Published:Updated:

பா.ஜ.க தேர்தல் அறிக்கை: செய்த ஐந்தும், செய்யப்போகும் ஐந்தும் செய்யவேண்டிய பத்தும்! #BJPManifesto2019

BJPManifesto2019
BJPManifesto2019

நான்கு மாதங்கள் முடிவில், ஜம்மு - காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு, புதிய கல்விக் கொள்கை, NIA சட்டத்திருத்தம் என்று பா.ஜ.க இறங்கியடிக்கிறது. அந்தப் பட்டியலில் இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கின்றன?

`முதல்வன்’ படத்தில் ஒரு காட்சி வரும், பேட்டியாளரான நடிகர் அர்ஜுன், முதல்வராய் நடித்த ரகுவரனிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி, ``இது என்ன... ஞாபகம் இருக்கா?" என்று கேட்பார். ``பார்த்தமாதிரி இருக்கு" என்று ரகுவரனிடமிருந்து பதில் வரும். அர்ஜுன் காட்டுவது ரகுவரன் கட்சியின் தேர்தல் அறிக்கை. நடைமுறைக்கும் இந்தக் காட்சிக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருந்ததில்லை, இதுவரை. ஆனால், அதை அப்படியே புரட்டிப் போட்டிருக்கிறது பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றைத்தான் செய்கிறது நடுவண் அரசு என்பது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது தெரிந்தது.

#BJPManifesto2019
#BJPManifesto2019

இந்தியாவின் 17-வது மக்களவையில், பெரும்பான்மை பெற்று கோலோச்சுகிறது, மத்திய பா.ஜ.க அரசு. 2014 முதல் 2019 வரையிலான ஐந்தாண்டுக் காலங்களில் பணமதிப்பிழப்பு தொடங்கி GST வரி வரை அடுக்கடுக்காகப் புதிய அறிவிப்புகளால் மக்களைத் திணறவைத்தது.

ஒரு மசாலா திரைப்படத்துக்கான அத்துணை அம்சங்களையும் கொண்ட பா.ஜ.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சிக்கு, ஆக்‌ஷன் கிளைமாக்ஸாக பாலகோட் தாக்குதல் அமைய, உணர்ச்சி மழையில் பொங்கிய இந்தியத் தேசம் மீண்டும் மோடி 2.0-வை ஆதரிக்க,பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க. கடந்த முறையைவிட இன்னும் பலமாக, திடமாக, மசாலா தூக்கலாக அடுத்த படத்தைத் துவங்கியிருக்கிறது. நான்கு மாதங்கள் முடிவில், ஜம்மு - காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து பறிப்பு, புதிய கல்விக் கொள்கை, NIA சட்டத்திருத்தம் என்று இறங்கியடிக்கிறது.

உற்றுநோக்கினால், இரண்டாவது படத்துக்கான கதையம்சத்தை ஏற்கெனவே நம்மிடம் கொடுத்துவிட்டது பா.ஜ.க. மேற்சொன்ன அனைத்து விஷயங்களைப் பற்றியும் தங்கள் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க குறிப்பிட்டிருக்கிறது. எனில், அந்த அறிக்கையைச் சற்று அலசினால், பா.ஜ.க சொன்னதைத்தான் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சொன்னவற்றில் எதைச் செய்திருக்கிறது என்பதையும், அடுத்து என்ன செய்வார்கள் என்பதையும் அந்தத் தேர்தல் அறிக்கையைப் படித்தாலே ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையை அலசினோம்.

பா.ஜ.க. செய்த ஐந்து!

1. தேசியப் புலனாய்வு அமைப்பு சட்டத்திருத்தம்

பா.ஜ.க ஆட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த முதல் விஷயம், தீவிரவாதத்துக்குப் பதிலடி கொடுப்பது. அறிக்கையின் 11-ஆவது பக்கத்தில், `Zero Tolerance' எனத் தலைப்பிட்டு, பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தீவிரவாதத்தை ஒழிக்க முழுச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளது. அதன் செயல் வடிவம் NIA சட்டத்திருத்தம். 2008-ம் ஆண்டில் நடைபெற்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, 2009-ம் ஆண்டு, தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கச் சிறப்பு அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) சட்டம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது. இந்த நிலையில், தேசியப் புலனாய்வு அமைப்புக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதாதான் சமீபத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசியப் புலனாய்வு அமைப்பு
தேசியப் புலனாய்வு அமைப்பு

2. ரஃபேல் போர் விமானங்கள்

'நம் படைகளுக்குத் தேவையான உயர்ரக ஆயுதங்கள் வாங்குவது நிலுவையில் இருக்கிறது. அவற்றை வாங்குவதை அரசு துரிதப்படுத்தும்' என்று கூறியுள்ளது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், 11-ஆவது பக்கத்தில் `Nation First' என்ற தலைப்பில், `தேசப்பாதுகாப்பு' என்ற பகுதியில் 2-வது பாயின்ட்டாக இது கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் பா.ஜ.க மீது வைக்கப்பட்ட மிகத் தீவிர குற்றச்சாட்டு, ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தைக் குறித்தானது. ரஃபேல் விமானம் வாங்குவதில் நிறைய முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அரசுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் எனவும், சில தொழிலதிபர்கள் நலனுக்காகத் தேச நலன் விற்கப்படுவதாகவும் பெரும் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியும், ஊடகங்களும் முன்வைத்தன. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவையெல்லாம் ஒருபுறம் இருப்பினும், மறுபுறம் நினைத்ததை முடித்து, முதல் ரஃபேலை வெற்றிகரமாகப் பெற்றிருக்கிறது பா.ஜ.க அரசு என்பது குறிப்பிடத்தக்கது. இது பா.ஜ.க.,வின் கடந்த ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல இந்த ஆட்சியிலும் முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்கான பல்வேறு கொள்முதல்களுக்கு முதல் 50 நாள்களிலேயே அனுமதி அளித்திருக்கிறது இந்த பா.ஜ.க ஆட்சி. பாகிஸ்தானோடு அண்மையில் ஏற்பட்ட மோதல்போக்கும் இதற்கு காரணம்.

ரஃபேல் போர் விமானங்கள்
ரஃபேல் போர் விமானங்கள்

3. தேசியக் குடிமக்கள் பதிவேடு

NRC எனப்படும் தேசியக் குடிமக்கள் பதிவேடு என்பது, இந்தியக் குடிமக்கள் அனைவரின் குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம். சட்டவிரோதமாகக் குடியேறி இருப்பவர்களை அடையாளம் காணவே இந்தப் பதிவேடு என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கை கூறுகிறது. அசாம் மாநிலத்தில் தற்போது செயல்படுத்தப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு பற்றி பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில், 11-வது பக்கத்தில் `Nation First' என்ற தலைப்பில், `ஊடுருவலைத் தடுத்தல்' என்ற பகுதியில் 7-வது பாயின்ட்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

தேசியக் குடிமக்கள் பதிவேடு
தேசியக் குடிமக்கள் பதிவேடு

4. ஜம்மு - காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்குதல்

பா.ஜ.க-வின் 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 12-வது பக்கத்தில் `Nation First’ என்ற தலைப்பின்கீழ், 14-வது பாயின்ட்டாக ஜம்மு - காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை நீக்குவது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அதில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்காக நாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைக்கிறோம். ஜன் சங் (RSS -ன் அரசியல் பிரிவு) அமைப்பின் நிலைப்பாட்டை அடியொற்றி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவோம். சட்டப்பிரிவு 35A-வை நீக்கி காஷ்மீரி பண்டிட்களை மீண்டும் காஷ்மீரில் குடியமர்த்துவோம் உள்ளிட்ட விஷயங்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்
`காஷ்மீர் முதல் பொருளாதாரம் வரை..' மோடி ஆட்சியின் 100 நாள்கள்! -  நிர்மலா சீதாராமன் விளக்கம்

5 . ரயில்வே துறையில் தனியாரை அனுமதித்தல்

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில், 21-வது பக்கத்தில், ரயில்வே துறையைப் பற்றியே தனிப்பகுதி இருக்கிறது. அதில் முதல் விஷயமாக அவர்கள் சொல்லியிருப்பது, 'ரயில் பயணங்களைப் பாதுகாப்பானதாகவும், சுத்தமாகவும் பராமரிக்க பணியாற்றுகிறோம். தொடர்ந்து சிறந்த ரயில் சேவையை வழங்க ரயில்வே துறையின் பல சேவைகளைத் தனியார்வசம் ஒப்படைப்பதை நாங்கள் ஊக்குவிப்போம்' என்பதே. அதன்படியே அக்டோபர் மாதம் நான்காம் தேதி இந்தியாவின் முதல் தனியாரால் இயக்கப்படும் லக்னோ - டெல்லி இடையிலான தேஜாஸ் விரைவு ரயிலை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.

ரயில்வே துறையில் தனியாரை அனுமதித்தல்
ரயில்வே துறையில் தனியாரை அனுமதித்தல்

இவை சில உதாரணங்கள் மட்டுமே. தங்களின் திட்டவரைவைத் திட்டவட்டமாக அறிவித்த பின்னரே, ஆட்சியில் அமர்ந்திருக்கும் பா.ஜ.க, ஒன்றொன்றாக அதை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறது.

பா.ஜ.க செய்யப்போகும் ஐந்து

சரி அப்படியானால் அடுத்து?

பா.ஜ.க செய்வதாகச் சொல்லியிருக்கும் சில விஷயங்களைப் பார்ப்போம். இவற்றை இந்தப் பதவிக்காலத்திலேயே செய்ய மத்திய அரசு நிச்சயம் முயற்சிகள் மேற்கொள்ளும். அப்படியான ஐந்து விஷயங்களைப் பார்ப்போம்:-

Prime Minister Modi
Prime Minister Modi

1.ராமர் கோயில்

'அயோத்தியில் வெகு விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்.'

பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் 36-வது பக்கத்தில், இந்தியக் கலாசார பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் விஷயம் இதுவே. `ராமர் கோயில் குறித்த எங்களின் முந்தைய நிலைப்பாட்டை நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும், முயன்று விரைந்து ராமர் கோயிலைக் கட்டிமுடிப்போம்' என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறது பா.ஜ.க. இன்றுவரை டிசம்பர் 6-ம் தேதி வந்தால் பாதுகாப்பு பலப்படுத்தப்படுத்தப்படும் என்று பதற்றம்கொள்கிறது, இந்தியா. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட ரணங்கள் இன்னும் ஆறாது இருக்கும்வேளையில், தர்க்கரீதியாக, சட்டரீதியாகத் தீர்வுகள் இன்னும் எட்டப்படாது இருக்கும் நிலையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தைப்போல அதிரடி காட்டி இந்த வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றக் கூடும்.

ராமர் கோயில்
ராமர் கோயில்

2. தேசியக் குடிமக்கள் பதிவேடு

ஏற்கெனவே நாம் பார்த்ததுதான். அசாமில் செயல்படுத்தப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேடு நாளை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறது, பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை. ஆனால், நடைமுறை தெளிவற்ற இந்த ஆவண தயாரிப்பு சிறுபான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலாக மாறும் என்பதே இதன்மீதான விமர்சனம். இந்திய மக்கள் என பா.ஜ.க யாரை அங்கீகரிக்கிறது என்பதில்தான் இதற்கான சிக்கலே தொடங்குகிறது.

தேசியக் குடிமக்கள் பதிவேடு
தேசியக் குடிமக்கள் பதிவேடு

3. சபரிமலை

கடந்த ஆண்டு அதிகம் விவாதிக்கப்பட்ட ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பு. ஆண், பெண் சமத்துவத்தின் அதிமுக்கிய வெற்றியாக இது கருதப்பட்டபோதும், வெளிப்படையாகவே ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் இதை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் பா.ஜ.க அரசின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், `சபரிமலையில் மத நம்பிக்கைகள், பாரம்பர்யம், தரிசன வழிமுறைகள் பற்றிய விரிவான பார்வையை உச்ச நீதிமன்றத்தின் முன்வைப்போம். மேலும், நீண்டகால நம்பிக்கைகளை அடிப்படையாகவைத்து எழும் பிரச்னைகளை முன்னிட்டு, அவற்றுக்கு அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்பு வழங்க ஆவன செய்யப்படும்' என்று கூறியிருக்கிறது.

அதாவது, பழங்கால நம்பிக்கைகள், மதக் குறியீடுகள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் மக்கள் எதிர்ப்பதைத் தடுக்க, அதே நம்பிக்கைகளையும், குறியீடுகளையும் முன்னிறுத்தி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம் என்றே, பா.ஜ.க தேர்தல் அறிக்கையின் 36-வது பக்கத்தில், சபரிமலை என்ற தனி தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சபரிமலை
சபரிமலை

4. சம்ஸ்கிருதம்

பா.ஜ.க அதன் தேர்தல் அறிக்கையில் 36-வது பக்கத்தில், `மொழி பாதுகாப்பு’ என்ற தனி தலைப்பில், சிறப்புப்படை அமைத்து இந்தியாவின் அனைத்து மொழிகள், வட்டார வழக்குகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து, அழிந்துவரும் மொழிகளை உயிர்ப்பிக்கப் பாடுபடுவோம் என்று சொல்கிறது. இந்தியாவின் பல மொழிகளையும் பாதுகாப்பது பற்றி முதல் பத்தியில் பேசினாலும், மொழிப் பாதுகாப்பு பகுதியின் இரண்டாம் பகுதியை, `சம்ஸ்கிருதத்தை மேம்படுத்தக் கூடுதல் கவனம் செலுத்தப்படும்' என்று தொடங்குகிறது. குறிப்பாகச் சம்ஸ்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலே அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்தும் நோக்கத்தை விவரித்துள்ளது.

சம்ஸ்கிருதம்
சம்ஸ்கிருதம்

5 . பொது சிவில் சட்டம்

பல வேறுபாடுகள் நிறைந்த இந்தியாவில், பல்வேறு மதங்களுக்குமான தனித்தனி சிவில் சட்டங்கள் இருப்பதை மாற்றியமைத்து, பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவோம் என்று வாக்குறுதியளித்திருக்கிறது, பா.ஜ.க அரசு. அப்படிக் கொண்டுவந்தால், சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் கூடவே எழுந்திருக்கிறது. வேறுபட்ட மக்களுக்கு நீதி வழங்க ஒரே மாதிரியான தராசு சரிவராது என்பதால்தான் வெவ்வேறு மதங்களுக்கான பிரத்யேக உரிமையியல் சட்டங்களும், மொழி, இன பாதுகாப்புக்காக வலிமையுள்ள மாநில அரசுகளும் கொண்டு கட்டமைக்கப்பட்டது இந்தியா. இந்த நிலையில், இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளின்கீழ் உள்ள 44-வது பிரிவு `இந்தியா முழுமைக்கும் குடிமக்களுக்கு ஒரேவிதமான பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம்' என்று சொல்வதைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க தேர்தல் அறிக்கையின் 37-வது பக்கத்தில், `நாட்டில் பாலினச் சமத்துவம் வேண்டுமெனில், அதற்குப் பொது சிவில் சட்டம் ஒன்றே வழி; அதை நிறைவேற்றுவோம்' என்று பா.ஜ.க கூறியிருக்கிறது.

பொது சிவில் சட்டம்
பொது சிவில் சட்டம்

பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் இந்த விஷயங்கள் நிறைவேற்றப்பட்டால், பெரும் விவாதங்கள் எழலாம். எதிர்ப்புகள், விமர்சனங்கள், கேள்விகள் எனப் பலவற்றைச் சந்திக்கும் பா.ஜ.க. ஆனால், அதே தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை நிறைவேற்றினால், வரவேற்புகளையும், வாழ்த்தொலிகளையும் செவியுறும் பா.ஜ.க. `மக்கள் நலனுக்காக பா.ஜ.க' என்ற நற்பெயரும் பெறக்கூடும்.

அப்படி, பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும், உடனடியாகச் செய்து மக்கள் மனதில் இடம்பெற வேண்டிய திட்டங்களாக பத்து விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, கீழ்காணும் திட்டங்களில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அவை இன்னும் முழு வீச்சில் செயல்படுத்தப்படவில்லை, அறிவிக்கப்பட்ட எத்தனையோ திட்டங்கள் செயல் வடிவம் பெறாது போகும் நிலையில், மக்கள் நலன் சார்ந்த இந்த திட்டங்களுக்கும் அந்நிலை ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ளுதல் வேண்டும்.

பா.ஜ.க. செய்யவேண்டிய பத்து

1. பக்கம் 13 : விவசாயிகள் பென்ஷன்: 60 வயதைக் கடந்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளுக்கு அரசு பென்ஷன் வழங்கும் திட்டம்.

2. பக்கம் 13 : விவசாய உற்பத்திகளுக்குச் சேமிப்புக் கிடங்கு : வளமான இந்தியாவின், விவசாய உற்பத்திப் பொருள்களைச் சேமிக்கும் புதிய கிடங்குகளை நிர்மாணித்தல், அவற்றைப் பராமரித்தல்.

3. பக்கம் 14 : நீர்ப்பாசனத் திட்டங்கள் : எஞ்சியிருக்கும் நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றி, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நூறு சதவிகிதம் நாட்டின் நீர்ப்பாசனத்தைப் பலப்படுத்துதல்.

4. பக்கம் 17 : ஜிஎஸ்டி : ஜிஎஸ்டி வரி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவின் ஒட்டுமொத்த வரி விகிதங்கள் குறைந்து அதேசமயம் மாநிலங்களின் வரி வருமானம் 2015-2016 ஆம் ஆண்டை விட ஐம்பது சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி முறையை மேலும் எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

5. பக்கம் 19 : பொருளாதார வெளிப்படைத்தன்மை : பினாமி சொத்துகளை அழித்தல், பொருளாதாரக் குற்றங்கள் செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர்களைக் கண்டுபிடித்து தண்டனை அளித்தல்.

6. பக்கம் 21 : `ஜல் சக்தி' : இந்தியாவின் நீர் மேலாண்மையை உயர்த்தி, குடிநீர்த் தேவையை முழுவதுமாகத் தீர்க்க வழிவகை செய்தல். 2024-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் அமைத்து அதன்மூலம் நீர் வழங்குதல்.

7. பக்கம் 23 : உடல்நலம் : இந்தியா முழுமைக்கும் பூரண ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மருந்து விலைகளைக் குறைப்பது, டி.பி நோய் ஒழிப்பு, நோய் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற அனைத்து உடல்நலம் சார்ந்த விஷயங்களையும் மேம்படுத்துவது.

8. பக்கம் 24 : ஊழலற்ற ஆட்சி : இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியைக் கொண்டுவருவதற்காக, சட்டத்திருத்தங்களைக் கொண்டுவருதல், சட்டங்களைக் கடுமையாக்குதல், தீவிரமாகச் செயல்படுத்துதல்.

9. பக்கம் 27 : வேலைவாய்ப்பு : இந்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துதல். புதிய தொழில்முனைவோராக மாற இளைஞர்களை ஊக்கப்படுத்துதல், அதற்கு உதவுதல்.

10. பக்கம் 32 : பெண்களுக்கான இட ஒதுக்கீடு : நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான 33 சதவிகிதம் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துதல்.

தேர்தல் அறிக்கைகளை வெறும் தேர்தல் சடங்காக மட்டுமே கவனத்தில் கொள்கிறது இந்தியா. தேர்தல் நேரப் பரபரப்புகளுக்காக அவை பயன்படுகின்றன. ஆனால், அந்தத் தேர்தல் அறிக்கையைக் கட்சியைச் சார்ந்த தலைவர்களே முழுவதும் படிப்பதில்லை என்பதுதான் நடைமுறை. இந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றைச் செய்து கொண்டிருக்கும் பா.ஜ.க., மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தேவையான விஷயங்களை முதலில் செய்து மக்களின் நன்மதிப்பை மேலும் பெற்றால் சிறப்பாக இருக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு