Published:Updated:

முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு குடியுரிமை... புதிய குடியுரிமைச் சட்டத்திருத்தம் தயார்!

Refugees / Representational Image
Refugees / Representational Image

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற முடியாமல்போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தற்போது மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், பா.ஜ.க குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த முயன்றபோது கடும் எதிர்ப்பு நிலவியது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் மசோதா காலாவதியானது. வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள்கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அஸ்ஸாம் மாநிலத்தில், ஆளும் பா.ஜ.க கூட்டணிக் கட்சியான `அஸ்ஸாம் கன பரிஷத்’ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்தது. பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு கூட்டணி சேர்ந்தார்கள் என்பது வேறு கதை. இந்த மசோதாவில் என்ன இருக்கிறது?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

என்ன சொல்கிறது சட்டத் திருத்தம்?

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இஸ்லாமிய நாடுகளிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி அல்லது கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க ஏதுவாக, 1955 குடியுரிமை சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. 31.12.2014 -க்கு முன்பாக இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, இந்தச் சட்டத்திருத்தம் பொருந்தும்.

இந்த சட்டத்திருத்தம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அரசின் வாதம் என்ன?

மூன்று அண்டை நாடுகளும் மதச்சார்புள்ள இஸ்லாமிய நாடுகள் என்பதால், அங்கு மதம் மற்றும் பிற காரணிகளால் இடர்பாடுகளைச் சந்தித்து, அந்த நாடுகளின் சிறுபான்மை அகதிகளாக இந்தியாவுக்குள் வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது, இந்தியாவில் 11 ஆண்டுகள் இருப்பதன்மூலம் ஒருவர் குடியுரிமை பெற முடியும். புதிய சட்டத் திருத்தத்தில் இந்த ஆறு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு, இனி ஆறு ஆண்டுகள் இருந்தால் குடியுரிமை பெற்றுவிடலாம் எனத் திருத்தப்படுகிறது.

இதற்கு, வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு நிலவிவந்த நிலையில், கடந்த நவம்பர் 30-ம் தேதி, வடகிழக்கு மாநிலத் தலைவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்தார். அதற்குப் பிறகு, வடகிழக்கி மாநிலங்களின் சில பகுதிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநில தலைவர்களுடன் அமித் ஷா
வடகிழக்கு மாநில தலைவர்களுடன் அமித் ஷா

எதிர்ப்பு என்ன?

`சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் அனைவரையும் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்' என என்.ஆர்.சி-யை ஆதரிக்கும் அஸ்ஸாம் மாநிலத்தவர்கள், பாரபட்சமாகக் குடியுரிமை வழங்கக்கூடாது எனக் குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்க்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் நிலை வேறு. மம்தா பேனர்ஜி-யின் திரிணாமுல் காங்கிரஸ், என்.ஆர்.சி, குடியுரிமைச் சட்டத்திருத்தம் என இரண்டையுமே எதிர்க்கிறது.

மதத்தை அடிப்படையாக வைத்து குடியுரிமை வழங்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், இது முஸ்லிம்களை குறிவைப்பதற்காகவும் இதற்கு எதிர்ப்பு நிலவிவருகிறது.

இந்த மசோதா, சிறுபான்மையினர் நலனுக்கானது என பா.ஜ.க அரசு தெரிவிக்கிறது. ஆனால், இதில் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள திபெத்திய அகதிகள், மியான்மரின் சிறுபான்மை ரோஹிங்யா அகதிகள், இலங்கையிலிருந்து வந்துள்ள சிறுபான்மைத் தமிழ் அகதிகள் பற்றி இதில் எந்தவொரு விஷயமும் இல்லை என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

என்.ஆர்.சி - குடியுரிமைச் சட்டத் திருத்தம்

அஸ்ஸாம் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய பிரச்னையாக இருக்கும் என்.ஆர்.சி-யின் குழப்பங்களே தீராத நிலையில், இந்தியா முழுவதும் என்.ஆர்.சி நிறைவேற்றப்படும் என பா.ஜ.க சொல்லிவருகிறது. `சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவோம்” என அமித் ஷா கூறிவருகிறார். ஆனால், வங்கதேசப் பிரதமர் இந்தியா வந்தபோதும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வங்கதேசம் சென்றபோதும் என்.ஆர்.சியால் வங்கதேசத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்தான் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்களை அடைத்துவைப்பதற்காக, அஸ்ஸாம் மற்றும் சில மாநிலங்களில் தடுப்பு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த என்.ஆர்.சி-யால் குடியுரிமை இழக்கும் ஆறு மதத்தைச் சேர்ந்தவர்கள், குடியுரிமை பெறுவதற்குப் புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கும்.

அதுல் போரா
அதுல் போரா

தற்போது, அஸ்ஸாம் கன பரிஷத்தின் (ஏ.ஜீ.பி) தலைவர் அதுல் போரா, குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கிறார். சமீபத்திய பேட்டியொன்றில், ``கடந்த தேர்தலில் குடியுரிமை சட்டத்தை எதிர்ப்போம் என்றுதான் நாங்கள் பிரசாரம் மேற்கொண்டோம். மக்களிடம் அது எடுபடவில்லை. மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் விரும்பவில்லையென்றாலும் பா.ஜ.க அதை எப்படியும் நிறைவேற்றிவிடும். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதைவிடவும், இதைவைத்து எங்களுக்கான தேவைகளைப் பேரம் பேசமுடியும் என நம்புகிறோம். ஏற்கெனவே, அஸ்ஸாம் பல அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது, மேலும் சிலரையும் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” என்றிருக்கிறார்.

அதுல் போரா கூறியவற்றை முற்றிலுமாக மறுக்கிறார், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் அபூர்பா பரூஆ. அவர் நம்மிடம் பேசுகையில், ``இது பா.ஜ.க-வின் நேஷனல் அஜெண்டா. அடிப்படையில் மதத்தை வைத்து குடியுரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு மட்டுமல்ல, சர்வதேச அகதிகள் தொடர்பான சட்டங்கள், உடன்படிக்கைகளுக்கும் எதிரானது. இதில், அகதிகள் நலன் என்பது மேம்போக்கான பிரசாரம். என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக குடியுரிமை சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்து, என்.ஆர்.சி-யால் குடியுரிமை இழக்கும் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடே இது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் விவகாரமும், அகதிகள் பிரச்னையும் தனித்தனியாகப் பார்க்கவேண்டியவை. இதை பி.ஜே.பி அரசியல் லாபத்துக்காக இணைத்துப் பார்க்கிறது.”

அபூர்பா பரூஆ
அபூர்பா பரூஆ

``மேலும், அஸ்ஸாமின் வரலாறு வேறுபட்டது. சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிரான பெரும் மக்கள் இயக்கங்கள் 1980 -களில் அஸ்ஸாமில் தோன்றின. அதன் விளைவாகத்தான் இந்திய அரசால் 1985-ல் அஸ்ஸாம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு என்.ஆர்.சி மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மற்ற எந்த மாநிலத்துக்கும் இதுபோன்ற வரலாறோ பின்னணியோ கிடையாது. அடுத்து, ரூ.1000 கோடிக்கும் மேல் செலவுசெய்து, ஐந்து ஆண்டுகளாக அஸ்ஸாம் போன்ற சிறிய மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட என்.ஆர்.சியே பெரும் குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது. மாநில பா.ஜ.க-வே இதை எதிர்க்கிறது. இந்நிலையில், இந்தியா முழுமைக்கும் பொதுவான என்.ஆர்.சி என்பதில் தர்க்கமே இல்லை. கல்வித் திட்டங்களுக்கே செலவுசெய்ய பணம் இல்லை என மத்திய அரசு தெரிவிக்கிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் என்.ஆர்.சி மேற்கொள்வதற்கான பொருளாதார செலவுக்கு எங்கே போவார்கள். நடைமுறையில் இது சாத்தியமே இல்லை. 2024 தேர்தலுக்கான அஜெண்டாவாகவே பா.ஜ.க இதை வளர்த்துவருகிறது. இது ஆபத்தான போக்கு.”

``வடகிழக்கு மாநில முதல்வர்களைச் சந்தித்தற்குப் பிறகு, 6-வது அட்டவணையில் உள்ள பழங்குடிப் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என அரசு கூறுகிறது. ஆனால், காஷ்மீர் நடவடிக்கையைத் தொடர்ந்து பழங்குடி மக்கள் அரசை நம்பத் தயாராக இல்லை. 370 பிரிவை நீக்கியதைப் போல வடக்கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் 371 பிரிவை எதிர்காலத்தில் நீக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? பழங்குடி மக்கள், மாணவ அமைப்புகள் என அஸ்ஸாம் முழுவதும் இதை எதிர்த்து வலுவான போராட்டங்கள் நடந்துவருகின்றன. ஏ.ஜீ.பி கட்சியிலுமே பதவியில் உள்ள மூன்று அமைச்சர்கள் மட்டுமே இதற்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். பி.கே. மகந்தா போன்ற மூத்த தலைவர்கள் பலரும் இதற்கு எதிராகத்தான் உள்ளனர். இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும் வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு நீண்டகால அளவில் எதிர்ப்புகள் இருக்கும்” என்றார்.

எதிர்ப்பு போராட்டம்
எதிர்ப்பு போராட்டம்
Vikatan

தற்போது, புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படத் தயாராக இருக்கிறது. மக்களவையில் எளிதில் நிறைவேற்றப்பட்டாலும் மாநிலங்களைவில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இல்லையென்பதால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். எவ்வாறாகினும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு