Published:Updated:

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரம்: அரசும் கட்சிகளும் அணுகியது எப்படி? ஓர் அலசல் ரிப்போர்ட்!

தமிழக காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக்கூறி, அண்மையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில், தமிழக காவல்துறையின் துரித நடவடிக்கையைப் பாராட்டுகிறவர்கள், கூடவே ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியையும் எழுப்பி வருவதுதான் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் எழுப்புகிற கேள்வி என்ன என்பது குறித்துத் தெரிந்துகொள்ளும் முன், நடந்த விவரத்தை முதலில் பார்த்துவிடலாம்.

கடந்த 18-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், 'சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டம் நடைபெற்றது. கிறிஸ்தவ - இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தப் போராட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, 'இந்து மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்தியும் பாரத மாதா மற்றும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக' இந்து அமைப்பினர் காவல்துறையில் வழக்கு பதிவு செய்தனர்.

அருமனை போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
அருமனை போராட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

இதையடுத்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். ஆனாலும் இந்த விஷயத்தில் பாதிரியார் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ததோடு, அவரைக் கைதுசெய்யவும் தீவிரம் காட்டியது தமிழக காவல்துறை. இதையடுத்து பாதிரியார் தலைமறைவாகவே, தீவிர விசாரணையுடன் துரித நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறை மதுரையில் பதுங்கியிருந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தது. மேலும் இந்தப் போராட்ட நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஸ்டீபன் என்பவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்புபவர்கள், ''தமிழக அரசு, பாரபட்சமின்றி செயல்பட்டிருக்கிறது. காவல்துறையும் துரிதமாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை மிகவிரைவில் கைது செய்துள்ளது. ஆனால், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், ஓடோடி வந்து குரல் கொடுக்கும் தமிழக அரசியல் கட்சிகள், பெரும்பான்மை மதத்தைப் பற்றிய இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களை மட்டும் கண்டும் காணாமல் இருந்துவிடுகின்றனவே... ஏன்?

உதாரணமாக, ''இந்து சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள், மாற்று மதத்தினரின் மனம் புண்படும்படியாக ஏதேனும் பேசிவிட்டால், அதற்கு எதிராக கண்டன அறிக்கை, ஆர்ப்பாட்டம், போராட்டம் என கொந்தளிக்கின்றன தமிழக அரசியல் கட்சிகள். அதுவே, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த நபர்கள், இதுபோன்று அநாகரீகமாக பேசிவரும் சூழ்நிலைகளில், அப்படியொரு சம்பவமே தங்கள் கவனத்துக்கு வராததுபோல், கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்கின்றன. தி.மு.க-வினரேகூட, இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் வேறு வழியின்றி இந்த விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனாலும் தி.மு.க என்ற அரசியல் கட்சி, ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சைக் கண்டித்து அறிக்கை வெளியிடவோ, அதிருப்தி தெரிவிக்கவோ முன்வரவில்லை.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா

தி.மு.க மட்டுமல்லாமல், அ.தி.மு.க., பா.ம.க, ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு கட்சியுமே இந்த விவகாரம் குறித்து, கருத்தோ - எதிர்ப்போ தெரிவிக்காமல் கள்ள மௌனம் சாதிக்கின்றன. ஏன் இந்த பாரபட்சம்?'' என்று ஆவேசமாகின்றனர். இதையடுத்து இவர்களது ஆவேசக் கேள்விக்குப் பதில் கேட்டு தமிழக அரசியல் கட்சியினர் சிலரிடம் நாமும் பேசினோம்.

காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ''எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மற்ற மதங்களைப் பற்றி வரம்புமீறி பேசினால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதேநேரம், கடந்த காலத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பேசியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும்கூட, அதுவும் காலம் தாழ்ந்த நடவடிக்கைகளாகத்தான் இருந்தன. எனவேதான், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மதச்சார்பற்ற கட்சிகள் குரல்கொடுத்தன!'' என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், ''மாற்று மதத்தினர் மனம் புண்படும்படி பேசியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்தான்; இதில் மாற்றுக் கருத்து இல்லை!

கோபண்ணா - வன்னியரசு
கோபண்ணா - வன்னியரசு

ஆனால், கடந்த ஆட்சியில், நீதிமன்றத்தை அவமரியாதையாகப் பேசியவர்கள் மற்றும் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் பேசியவர்கள் மீது கைது நடவடிக்கை போன்று தீவிர நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதுபோன்ற சமயங்களில்தான், ''சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும்'' என வி.சி.க மற்றும் எங்களைப் போன்ற கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிடுகின்றன. இந்த விஷயத்தில், பாதிரியாரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்துவிட்டது தமிழக அரசு. எனவே, சம்பந்தப்பட்டவரைக் கைது செய்யவேண்டும் என கோரிக்கை வைப்பதற்கோ அல்லது அரசின் நடவடிக்கை குறித்து கேள்வி கேட்பதற்கோ இடமே இல்லாமல் போய்விட்டது.

அடுத்ததாக, இந்த விஷயத்தின் பின்னணியில் உள்ள அரசியலையும் எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, தமிழ்நாட்டில் கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியையும் குறிவைத்து பா.ஜ.க அரசியல் செய்துவருகிறது. இதற்காக மத வெறுப்பு பிரசாரங்களை இப்பகுதிகளில் சிலர் திட்டமிட்டு செய்து வருகிறார்கள். அண்மையில்கூட, கன்னியாகுமரி பகுதியிலுள்ள ஒரு சர்ச் வாயில் முன்பாக, இடம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி பா.ஜ.க எம்.எல்.ஏ காந்தி தலைமையில் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆக, 'மக்களாகிய நீங்கள் எல்லாம் இவருக்குத்தானே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கண்டித்துப் பேசுகிறார் பாதிரியார்.

மல்லை சத்யா - இரா.முத்தரசன்
மல்லை சத்யா - இரா.முத்தரசன்

மேலும், 'எங்களையெல்லாம் பாதுகாப்பீர்கள் என்றுதானே நாங்கள் எல்லாம் ஓட்டுப்போட்டோம்' என்றுதான் பாதிரியார் சொல்கிறார். ஆனால், உணர்ச்சி வேகத்தில் அதனை தவறான வார்த்தைகளில் சொல்லிவிடுகிறார். எதுவாகயிருந்தாலும் பாதிரியாரின் பேச்சை நாங்களும் கண்டிக்கிறோம். அதேசமயம், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மத வெறுப்பு நடவடிக்கைகளால் கிறிஸ்தவ மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற வேதனையை ஒட்டித்தான் பாதிரியார் அப்படிப் பேசியிருக்கிறார் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நம்மிடம் பேசியபோது, '' 'ஒன்றே குலம்; ஒருவனே தேவன்' என்ற அண்ணாவின் கொள்கைக்கு ஏற்ப தன் அரசியலை வடிவமைத்துக்கொண்டவர் வைகோ. எனவே, அனைத்து மதத்தினருக்குமான ஆக்கபூர்வ விஷயங்களை மட்டுமே ம.தி.மு.க பேசும். மாற்று மதத்தினரை இழிவாகப் பேசுபவர்களுக்கு ஒருபோதும் எங்கள் கட்சி துணை நிற்காது.

புதுக்கோட்டை: தொன்மை பேசும் பொற்பனைக்கோட்டை - ஜிபிஆர் கருவி மூலம் அகழாய்வு இடங்கள் தேர்வு!

எல்லா காலத்திலுமே இதுபோன்று மதவாதிகள் சர்ச்சையாகப் பேசி வந்திருக்கிறார்கள்தான். எனவே, 'கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை!' என்று சொன்ன பெரியாரின் வாக்குதான் நிஜமாகி வருகிறது. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்ற ஒரு தனி மனிதர் பேசியதைக் கண்டித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. ஆனால், மாபெரும் அரசியல் கட்சியின் பின்னணியில் தலைவராக இருந்துகொண்டு மாற்று மதத்தினரைப் பற்றி ஒருவர் தரக்குறைவாகப் பேசினால், அதைக் கண்டிக்காமல் எப்படி இருக்கமுடியும்?'' என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், ''எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மற்ற மதங்களை இழிவாகப் பேசினால், அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விவகாரத்தில், சர்ச்சை எழுந்த உடனேயே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, பாதிரியாரை கைது செய்துவிட்டது. இந்த சூழ்நிலையில், இதுகுறித்து நாம் எதிர்ப்பு தெரிவிக்கவோ, கண்டன அறிக்கை வெளியிடவோ வாய்ப்பே ஏற்படவில்லையே!'' என்றார்.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ''பொதுவாக, இதுபோன்று மதம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்படுகிறபோது, ஆளும் கட்சியோடு கூட்டணியில் இருப்பவர்கள் கண்டன அறிக்கை வெளியிடுவதில்லை. ஏனெனில், கூட்டணிக் கட்சியினர் முதல்வரோடு நேரடியாக பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். எனவே, இதுகுறித்து நேரடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்று பிரச்னைக்கான தீர்வு காணத்தான் முயல்வார்கள். இதைத்தான் இதுநாள்வரையிலும் தமிழக அரசியலில் நெறிமுறைகளாக எல்லோரும் கடைப்பிடித்து வருகிறார்கள்.

``அண்ணனா நெனச்சுகோங்க; ஏதாச்சும் தேவைன்னா போன் பண்ணுங்க!" - இளம்பெண்ணிற்கு உதவிய ஆட்சியர்

இந்தவகையில், தி.மு.க கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக அரசிடம் நேரடியாக பேசினார்கள். ஆனால், அவர்கள் பேசுவதற்கு முன்பே தமிழக அரசு, கைது நடவடிக்கையை மேற்கொண்டுவிட்டது. எனவே கூட்டணிக் கட்சிகளும் மேற்கொண்டு அறிக்கையோ, போராட்டமோ தேவையில்லை என்று முடிவெடுத்து அமைதிகாத்துள்ளன. ஆக, தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, சிறந்த மதச்சார்பற்ற அரசாகவே செயல்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி - மருத்துவர் ராமதாஸ்
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி - மருத்துவர் ராமதாஸ்

ஆனால், எதிர் தரப்பிலோ பா.ஜ.க தவிர்த்து அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் இதுவிஷயமாக இதுவரை எந்தவித அறிக்கையோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லையே ஏன்?'' என்று கேள்வி கேட்கிறார். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க தரப்பு கருத்தை அறிய நாம் முற்பட்டபோது, 'அ.தி.மு.க தரப்பிலிருந்து ஊடகத்தில் கருத்து சொல்வது தற்போது தடை செய்யப்பட்டிருப்பதாக' தகவல் கிடைத்தது. பா.ம.க தரப்பில் பேசியபோதும், 'இதுகுறித்து தலைமையின் ஒப்புதல் பெற்றுத்தான் கருத்து சொல்லமுடியும்' எனக் கூறிவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு