Published:Updated:

முத்தலாக் தடைச் சட்டம்: வழக்கு தொடர்ந்த இஸ்லாமியப் பெண்கள் கூட்டமைப்பு என்ன சொல்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முத்தலாக்குக்கு எதிராக  வழக்கு தொடர்ந்த பெண்கள்
முத்தலாக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பெண்கள்

செயற்பாட்டாளர்கள் சிலரே இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் நிலையில், இவர்களது பதில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அமைப்பின் நூர்ஜெஹான் நம்மிடம் பேசினார்.

முத்தலாக் தடைச் சட்ட மசோதா பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்படி, மூன்றுமுறை உடனடி தலாக் சொல்லப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட மனைவியோ அல்லது அவருக்கு ரத்தத்தொடர்புடைய உறவினரோ காவல் துறையில் புகார் கொடுக்கலாம். புகாரின்படி, அந்தக் கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்த நிலையில் முத்தலாக்குக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மும்பையைச் சேர்ந்த பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன் அமைப்பினரிடம் பேசினோம்.

நூர்ஜெஹான், பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன்
நூர்ஜெஹான், பாரதிய முஸ்லிம் மகிளா அந்தோலன்

'3 seconds divorce' என்கிற ஆவணப்படம், முத்தலாக்குக்கு எதிரான இவர்களது போராட்டம் குறித்த கதையைச் சொல்கிறது. இஸ்லாமியப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் இந்த அமைப்பு, இஸ்லாமியத் தனிச்சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த ஆட்சியில் மனு ஒன்றையும் அளித்திருந்தார்கள். சீரிய செயற்பாட்டாளர்கள் சிலரே, இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் நிலையில் இவர்களது பதில்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அமைப்பின் நூர்ஜெஹான் நம்மிடம் பேசினார்.

இத்தனை ஆண்டுகள் போராட்டத்துக்குக் கிடைத்த இந்த வெற்றியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

முத்தலாக்
முத்தலாக்

எங்களது போராட்டம் வெறும் ஏழு வருடங்கள்தான். ஆனால், பெரும்பான்மையான இஸ்லாமியப் பெண்களுக்கு இது 70 ஆண்டுகாலப் போராட்டம். 1965-ல் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரும் இந்து திருமணச் சட்டத்தை வரைவு செய்தபோதே இஸ்லாமியப் பெண்களுக்கும் அதுபோன்றதொரு சட்டம் தேவையானதாக இருந்தது. அதற்கான பலன்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து எங்கள் பெண்களுக்குத் தற்போது கிடைத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாரதிய ஜனதா கட்சி இந்தச் சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்தது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துவருகிறதே?

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

பல தசாப்தத்திற்கு மேலாக இஸ்லாமியப் பெண்களின் குரல் இங்கு கேட்கப்படாமலேயே இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இதுபற்றி நாங்கள் புகாரளித்தும், எங்களுக்கு யாரும் எதுவும் செய்யவில்லை. அரசியலமைப்பின்படி எங்கள் உரிமை என்னவோ, இவர்கள் அதை எங்களுக்குச் செய்கிறார்கள்; அவ்வளவே. இஸ்லாமியப் பெண்கள் வெறுமனே இஸ்லாமிய மத அடையாளம் தாங்கியவர்கள் மட்டுமல்ல, அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள். நாங்கள் ஆப்கானிஸ்தான் அரசிடமோ அல்லது பாகிஸ்தான் அரசிடமோ எங்கள் கோரிக்கையை வைக்கவில்லை. இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசிடம்தான் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம்.

உச்ச நீதிமன்றத்தில் உங்களை வழக்கு தொடரத் தூண்டியது எது?

முத்தலாக்குக்கு எதிரான போராட்டங்கள்
முத்தலாக்குக்கு எதிரான போராட்டங்கள்

நாங்கள் 15 மாநிலங்களில் மொத்தம் 12-க்கும் மேற்பட்ட மையங்களை நடத்திவருகிறோம். அந்த மையங்களின் வழியாக இந்த பத்தாண்டுகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்களைச் சந்தித்துப் பேசி இருக்கிறோம். அவர்களது கதையைக் கேட்டிருக்கிறோம். நாங்கள் சந்தித்தவர்களில் மட்டும் மொத்தம் 78 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மூன்றாவது நபர் வழியாகத் தனக்கு, 'தலாக்' கொடுக்கப்பட்டது அந்தப் பெண்ணுக்குத் தெரியவரும் அல்லது நிக்காஹ் நடத்திவைத்த குவாஸியிடமிருந்து இவருக்குத் தலாக் கொடுக்கப்பட்டது என்கிற கடிதம் வரும் அல்லது பேஸ்புக், வாட்ஸ் அப் மெசேஜ்களில் தலாக் கொடுக்கப்பட்டிருப்பார்கள்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பெண் மூன்றே நொடிகளில் தலாக் கொடுக்கப்பட்டு நிராதரவாக நிறுத்தப்பட்ட கொடுமைகளும் அரங்கேறி இருக்கின்றன. தன்னுடைய மனைவி என்ன ஆவார், எப்படிப் பிழைப்பார் என்று எவ்வித சிந்தனையுமில்லாமல் எங்கிருந்தோ தலாக் சொல்லும் அவலங்கள் நிறைய இடங்களில் அரங்கேறி இருக்கின்றன. தலாக் சொல்லப்பட்டு இப்படி நிராதரவாக விடப்பட்ட ஒவ்வோர் இஸ்லாமியப் பெண்ணுமே ஏதோ ஒருவகையில் நாங்கள் வழக்கு தொடர உந்துதலாக இருந்தார்கள்.

இஸ்லாமிய நலவாரியத்தால் சாதிக்க முடியாததையா சட்டம் சாதித்துவிடப் போகிறது? நீங்கள் அவர்களிடம் முறையிட்டிருக்கலாமே?

முத்தலாக்
முத்தலாக்

முத்தலாக்குக்கு எதிரான எங்களது பத்து வருடப் பயணத்தில் முதல் ஐந்து வருடங்கள் இஸ்லாமிய நலவாரியங்களிடம்தான் தொடர் விவாதங்களை மேற்கொண்டு வந்தோம். ஆனால், அவர்களோ முத்தலாக்தான் விவாகரத்து கொடுக்க சிறந்த வழி என்று எங்களை மூளைச்சலவை செய்யத் தொடங்கினார்கள். தனக்கு தலாக் கொடுக்கப்பட்டது மூன்றாவது நபர் வழியாகத் தெரிய வருவதுதான் சிறந்த வழியா? நாங்கள் சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஒருகட்டத்தில், அவர்களிடம் பேசிப் பயனில்லை என்று உணர்ந்த பின்னர்தான், நாங்கள் சட்டரீதியாக இதை எதிர்கொள்வது என்று முடிவுசெய்தோம்.

முத்தலாக் தடைச் சட்டம் பலத்த எதிர்ப்பைச் சந்திக்கிறதே... இஸ்லாமியப் பெண்கள் இதை எதிர்க்கிறார்களே... நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸிகூட இதற்கு எதிராகக் கடுமையாகப் பேசியிருக்கிறாரே?

முத்தலாக்
முத்தலாக்

ஒவைஸி எங்களைப் போன்று பெண் இல்லையே... ஒரு பெண்ணாக நாங்கள் என்ன துன்பங்களை அனுபவிக்கிறோம் என்பது அவருக்கு என்றுமே புரியப்போவதில்லை. அவரும் அவரது கூட்டமும் ஆணாதிக்கச் சிந்தனையில் ஊறியவர்கள். இன்னமும் பண்டைய மனிதர்களைப்போலவே சிந்திப்பவர்கள். மேலும், டெக்னிக்கலான வார்த்தைகளைச் சொல்லி மக்களை எப்படி மூளைச்சலவை செய்ய முடியும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மற்றபடி, தங்கள் வீட்டுப் பெண்களை படுகுழியில் தள்ளிய முத்தலாக்குக்கு எதிராக எத்தனையோ இஸ்லாமியச் சமூகத்து அண்ணன்களும் அப்பாக்களும் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். இஸ்லாமியப் பெண்கள் பெரும்பாலானவர்கள் இதை வரவேற்கிறார்கள். எத்தனை காலத்திற்குத்தான் இந்த ஒடுக்குமுறைகளை எதிர்க்காமல் அமைதியாகவே கடக்க முடியும்? துன்பம் அழுத்தும்போது ஒருகட்டத்தில் வெடித்துத்தான் ஆக வேண்டும். அப்போது சட்டம்தான் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

சட்டத்திருத்தம் இயற்றப்பட்ட பிறகு, உங்களுக்கோ அல்லது உங்கள் அமைப்புக்கோ ஏதேனும் அச்சுறுத்தல் வந்ததா?

Triple Talaq
Triple Talaq

இல்லை. இதுவரை அப்படி எந்த அச்சுறுத்தலும் வரவில்லை.

இஸ்லாம் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் வாழ்க்கை நெறி என்கிற வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அமைப்பின் ஜாகியா மற்றும் நூர்ஜெஹான்
அமைப்பின் ஜாகியா மற்றும் நூர்ஜெஹான்

நாங்கள் இப்போதும் அதைத்தான் சொல்கிறோம். இஸ்லாம், பெண்களுக்கான முழுச் சுதந்திரத்தையும் உரிமைகளையும் தரும் மதம். ஆனால், இங்கிருக்கும் மதக்குழுக்கள்தான் அதற்கு எதிரான வகையில் செயல்பட்டு வருகின்றன. நாங்கள் எங்களது உச்சநீதிமன்ற வாதத்தில்கூட குரானில் குறிப்பிடப்படும் வாசகங்கள்தான், இதுபோன்ற பிரச்னைகளை எப்படிச் சுமூகமாக முடித்துவைப்பது என்பது குறித்து தெளிவாகவே பேசுகிறது. எங்களுக்கான அத்தனை தீர்வும் குரானில் இருக்கிறது. ஆனால், எங்கள் சமூகத்து ஆண்கள் பலர் அதைப் பின்பற்றுவதில்லை. இவர்களது வசதிக்கேற்ப வகுத்துக்கொண்ட சட்டங்களைத்தான் இங்கே இவர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

காஷ்மீரின் இஸ்லாமியப் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக இதுபோன்று ஒருமித்த குரல்கள் எழுவதில்லையே?

காஷ்மீர் பெண்கள்
காஷ்மீர் பெண்கள்

அவர்கள் குறித்த கவலையும் எங்களுக்கிருக்கிறது. இருந்தும், நாங்கள் மிகச்சிறிய அளவில் இயங்கும் பெண்கள் அமைப்பு. அவரவர்கள் உரிமைக்கு, அவரவர்கள் போராடியாக வேண்டிய காலமிது. எல்லோரும் ஏதோ ஒருவிதத்தில் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து நிற்கமுடியவில்லை என்றாலும் காஷ்மீர் பெண்களுக்கான எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

ஆளும் கட்சியின் தூண்டுதலின் பெயரில் நீங்கள் செயல்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் உங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்ததே?

முத்தலாக்
முத்தலாக்

இல்லை. நாங்கள் கட்சி சார்பற்ற அமைப்பு. எங்களுக்கும் ஆளும் கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் எங்கள் பெண்கள் உரிமைகளுக்காக மட்டும் இயங்கிவருபவர்கள். இதை நாங்கள் பலமுறை கூறிவிட்டோம்.

'மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு, அந்த மனைவி என்ன கணவனை ரோஜாப்பூக்கள் தூவியா வரவேற்பார்?' என்று ஒவைஸி நாடாளுமன்றத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைத்தாரே?

அசாதுதீன் ஒவைஸி
அசாதுதீன் ஒவைஸி

புகாரளிக்கும் வரை செல்பவர்கள், மூன்று ஆண்டுகள் கழித்து சேர்ந்து வாழும் மனநிலையில் இருக்கப்போவதில்லை. மேலும், எந்தச் சட்டமுமே புகாரளித்தவுடன் உடனடியாக மூன்றாண்டுகள் சிறையில் அடைத்துவிடப் போவதில்லை. புகார், சட்டரீதியாகப் பல கட்டங்களைக் கடக்க வேண்டும். எங்கள் மதக்குழுவின் தலைவர்கள் எங்களுக்குச் செய்யாததை இனி சட்டம் கையிலெடுத்துச் செய்யப்போகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு