Published:Updated:

தகரக் கொட்டகையில் தவித்த 864 குடும்பங்கள்... கவனப்படுத்திய ஆனந்த விகடன், களத்துக்கே வந்த அமைச்சர்!

கேசவப் பிள்ளை பூங்கா
கேசவப் பிள்ளை பூங்கா

சென்னை புளியந்தோப்பில் உள்ளது கேசவப்பிள்ளை பூங்கா. வடசென்னையின் நதிக்கரைகளிலும் சாலையோரங்களிலும் வாழ்ந்த மக்களுக்காக இங்கு 1980-ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் 1,536 வீடுகளைக் கட்டியது.

குடிசை மாற்று வாரியத்தில் தங்களுக்கான வீடுகள் கிடைக்குமா என நிச்சயமின்றித் தவித்த 864 குடும்பங்களுக்கு, அமைச்சரை நேரில் அழைத்துவந்து நம்பிக்கை தந்திருக்கிறது ஆனந்த விகடன்.
கேசவப் பிள்ளை பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்
கேசவப் பிள்ளை பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்

''குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்'' என்கிற முழக்கத்துடன் 1970-களில் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நிறுவப்பட்டது குடிசை மாற்று வாரியம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த வாரியத்தின் தற்போதைய இலக்கு 2023-க்குள் குடிசைகள் இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான்.

சாலையோரங்களிலும் நதியோரங்களிலும் அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு இடையே வாழும் மக்களைக் கான்க்ரீட் வீடுகளில் குடியமர்த்துவது இந்த வாரியத்தின் முதன்மைச் செயல்பாடு.

சென்னை புளியந்தோப்பில் உள்ளது கேசவப்பிள்ளை பூங்கா. வடசென்னையின் நதிக்கரைகளிலும் சாலையோரங்களிலும் வாழ்ந்த மக்களுக்காக இங்கு 1980-ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் 1,536 வீடுகளைக் கட்டியது. தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட அந்த குடியிருப்பில் ஒவ்வொரு வீடும் 280 சதுர அடிகள் கொண்டதாக அமைக்கப்பட்டது.

கேவசப் பிள்ளை பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்; முன்னணியில் தகரக் கொட்டகைக்  குடியிருப்புகள்
கேவசப் பிள்ளை பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்; முன்னணியில் தகரக் கொட்டகைக் குடியிருப்புகள்

இந்த வீடுகள் நீண்ட காலப் பயன்பாட்டின் காரணமாக சிதிலமைடைந்ததால், 2008-ம் ஆண்டில் இவை இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டும்பணி தொடங்கியது. அதன்படி 672 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகளில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமிருக்கும் 864 வீடுகள் 2016-ல் இடிக்கப்பட்டன. அங்கு குடியிருந்த மக்களிடம் விரைவில் வீடு கட்டித் தருவதாக வாக்களித்த குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், அங்கேயே சுமார் 150 சதுர அடிகள் கொண்ட தகரக் கொட்டகையில் அவர்களைத் தற்காலிகமாகக் குடியமர்த்தியிருக்கிறார்கள்.

தகரக் கொட்டைகளில் வாழ்க்கை
தகரக் கொட்டைகளில் வாழ்க்கை

ஆனால், பல நூறு பேர் வாழும் இந்தப்பகுதியில் வெறும் 2 கழிப்பறைகள், 3 குளியலறைகள் மட்டுமே உள்ளன. எலித்தொல்லை, கொசுத்தொல்லை, சுகாதாரப் பிரச்னைகள் இருந்ததால் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் படிப்படியாக இந்த இடத்திலிருந்து வெளியேறி மீண்டும் சாலையோரங்களுக்கும், வாடகை வீடுகளுக்கும் குடிபெயர்ந்திருக்கிறார்கள். இதனால் சுமார் 120 குடும்பங்கள் மட்டும் போக்கிடம் இல்லாமல் அந்தத் தகரக் கொட்டகைகளிலேயே ஐந்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கிறார்கள்.

இதற்கிடையில், அந்த மக்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே 112.61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 மாடிகள் கொண்ட குடியிருப்பு அமைக்கும் பணியை 2018 ஜனவரியில் குடிசைமாற்று வாரியம் தொடங்கியிருக்கிறது. 864 வீடுகள் கொண்ட இந்தக் குடியிருப்பு, 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தின்படி ஒவ்வொரு வீடும் 400 சதுர அடிகள் கொண்டவை. ஒரு வீட்டின் திட்டமதிப்பு 9.50 லட்சம் முதல் 13.17 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு, இதில் ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு அதிகபட்சமாக 1.50 லட்சமும் மாநில அரசு 7 லட்சமும் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. பயனாளிகள் பங்களிப்புத் தொகையாக 1.50 லட்சம் செலுத்தவேண்டும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்

18.05.2019-ல் வீடுகள் கட்டும்பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால், வீடு கட்டி முடியும்வரை இந்தப் பணிகள் 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் கட்டப்படுவதையோ, பயனாளிகள் 1.50 லட்சம் பங்களிப்பு செய்யவேண்டும் என்பதையோ அதிகாரிகள் அந்த மக்களிடம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள். 15.10.2020 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டபிறகே பங்களிப்புப்பணம் செலுத்தவேண்டும் என்பது மக்களுக்குத் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து 5.2.2021 அன்று குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஆனால் பங்குத்தொகையாக 1.50 லட்சம் தந்தபிறகே குடியேறமுடியும் என்பது அதிகாரிகளின் முடிவு.

சாலையோரத்தில் பழ வியாபாரம் செய்பவர்கள், மீன்பாடி வண்டி ஓட்டுபவர்கள், பூ கட்டுபவர்கள், சாலையோர உணவகம் நடத்துபவர்கள் என விளிம்பு நிலையில் தவிக்கும் இந்த மக்களால் ஒன்றரை லட்சம் உடனே பிரட்டிக் கொடுப்பது இயலாத காரியம் என்பதால் எல்லோரும் அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் தத்தளிக்கிறார்கள்.

தகரக் கொட்டகைக்குள் குடித்தனம்
தகரக் கொட்டகைக்குள் குடித்தனம்

‘‘நிச்சயம் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 6 வருடங்களாக மக்கள் இந்த தகரக் கொட்டகையில் வாழ்ந்து வருகிறார்கள். எல்லோருமே அன்றாடம் காய்ச்சிகள். கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மொத்தமாக வாழ்வாதாரம் பாதித்து பசியும் பட்டினியுமாகக் கிடக்கிறார்கள். இந்த சூழலில் ஒன்றரை லட்சம் பணம் புரட்டுவது எளிதல்ல. தற்போது, கட்டப்பட்ட வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது. அரசு எங்களின் நிலையறிந்து வீடுகளில் குடியேற அனுமதிக்க வேண்டும்‘‘ என்கிறார் கே.பி.பார்க் மக்கள் கமிட்டி நிர்வாகி விமல்.

இந்த மக்களின் நிலையை தமிழக ஊரக தொழிற்துறை மற்றும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அமைச்சர் தா.மோ. அன்பரசனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். ‘‘ஒரு மணி நேரம் மட்டும் தாருங்கள்... அதுகுறித்த தகவல்களைச் சேகரித்துக்கொண்டு உங்களை அழைக்கிறேன்’’ என்றார். சரியாக ஒரு மணி நேரத்தில் அமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘‘முழுத் தகவல்களையும் எடுத்துவிட்டேன். அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். சனிக்கிழமை அதிகாலை, தீர்வோடு அந்த மக்களை நேரடியாகச் சந்திக்க வருகிறேன்’’ என்றார்.

அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு
அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர் பாபு

இன்று (26.06.21) காலை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கேசவப்பிள்ளை பூங்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்புக்கு வந்தார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், குடிசை மாற்று வாரிய கூடுதல் மேலாண் இயக்குநர் இளம்பகவத், முதன்மைப் பொறியாளர் சேதுராமன் உள்ளிட்டோரும் வந்தார்கள். குடியிருப்பைப் பார்வையிட்ட அமைச்சர்கள், அங்கேயே அதிகாரிகளோடு ஆலோசித்தார்கள். தொடர்ந்து மக்களிடமும் பேசி நம்பிக்கை அளித்தார்கள்.

அப்போது நம்மிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், ‘‘வழக்கமாக குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் 200 சதுர அடியில் கட்டப்படும். மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை இணைத்து 400 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்களை இங்கேயே குடியமர்த்த வேண்டும். அப்போதுதான் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது. அதனால், இருந்த இடத்தைப் பயன்படுத்தி 9 அடுக்குகளாக கட்டியிருக்கிறார்கள்.

அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் அடிப்படையே பயனாளிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இந்த பங்களிப்புத் தொகையைப் பயனாளிகள் தவணை முறையில் கட்டும் வகையில் வங்கிக்கடன் பெற்று செலுத்த முடியுமா என்பது குறித்து இந்த வாரத்துக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும். இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடமும் பேசியிருக்கிறேன். மேலும் இந்த மக்கள் குறித்து சமூக ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். நிச்சயம் ஆடி மாதத்துக்குள் இந்த மக்கள் தங்கள் வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள்’’ என்று உறுதியளித்தார்.

குடிசை மாற்று வாரிய கூடுதல் மேலாண் இயக்குநர் இளம்பகவத்
குடிசை மாற்று வாரிய கூடுதல் மேலாண் இயக்குநர் இளம்பகவத்
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் தகரக் கொட்டகைக்குள் தவித்து வரும் மக்களின் நிலையை சுட்டிக்காட்டியதும், அந்த மக்களை நேரடியாகச் சந்தித்து நம்பிக்கை அளித்ததோடு, பிரச்னைக்குத் தீர்வும் காணப்படும் என உறுதியளித்திருக்கும் அமைச்சருக்கு ஆனந்த விகடனின் நன்றியும் வாழ்த்தும்!
அடுத்த கட்டுரைக்கு