Published:Updated:

`புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாமா?' - அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பும் அமைச்சரின் அதிர்ச்சியும்

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமாகிவரும் இந்தச் சூழலில், ஆன்லைன் தேர்வுக்குத் தயாராகிவரும் அண்ணா பல்கலைக்கழகம், புதிய முறையில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

`மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்' என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு, கல்வியாளர்கள் மத்தியில் பல்வேறு சூடான விவாதங்களை எழுப்பிவருகிறது.

கொரோனா ஊரடங்கு பல்வேறு தளங்களிலும் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக, கல்வித்துறையில் பள்ளிக்கூடங்கள் கதவடைக்கப்பட்டு, ஆன்லைன் வழியே வகுப்புகள் நடைபெற ஆரம்பித்ததுமே சர்ச்சைகள் றெக்கை கட்டின. பின்னர் ஆன்லைன் வழியே தேர்வு எழுதுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வழக்குகள் பதிவாகின. கொரோனாவைக் காரணம் காட்டி, அரியர் பாடங்களுக்கு தமிழக அரசு அறிவித்த 'ஆல் பாஸ்' மிகுந்த சர்ச்சையானது.

புத்தகங்கள்
புத்தகங்கள்

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரமாகிவரும் இந்தச் சூழலில், ஆன்லைன் தேர்வுக்குத் தயாராகிவரும் அண்ணா பல்கலைக் கழகம், புதிய முறையில் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற மே மாதம் ஆன்லைன் வழியே நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வுகளின்போது மாணவர்கள், `தேவைப்பட்டால் புத்தகங்களைப் பார்த்தும் இணையதளங்களில் தேடியும் பதில்களை எழுதிக்கொள்ளலாம்' என்பதுதான் அது.

இந்தப் புதிய அறிவிப்பு மாணவர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பு கிடைத்துவந்தாலும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்புகளும் நிலவிவருகிறது. எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில், அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `புத்தகங்களைப் பார்த்து எழுதுவதுதானே என்று யாரும் எளிதாகக் கருதிவிட வேண்டாம். மாணவர்கள் நேரடியாக வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதும் வகையிலேயே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

போட்டித் தேர்வுகள் போல் விடைகள் ஒரு வரியில் இருக்காது. விரிவான பதில்களை மாணவர்கள் எழுதியாக வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்வை எழுதிமுடிக்க வேண்டும் என்பதால், புத்தகங்களை நன்றாகப் படித்திருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட கேள்விக்கான சந்தேகங்கள் புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது என்பதை புரட்டிப்பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

இந்தப் புதிய நடைமுறை ஏற்கெனவே வெளிநாடுகளில் பலவற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுதான். எனவே, மாணவர்களின் கல்வித்தரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது' என்று விளக்கமாக உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கருத்து கேட்டபோது,

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

``அண்ணா பல்கலைக்கழகம் எந்தக் காரணத்தைக்கொண்டும் அவர்களது தரத்தைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள். அதை உறுதிப்படுத்தும்விதமாகவே 'பகுப்பாய்வு முறையிலான கேள்விகள்' (analytical questions) மட்டுமே வினாத்தாளில் கேட்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுவிட்டார்கள். எனவே, புத்தகத்திலிருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியாது. புத்தகமோ இணையதளமோ ரெப்ரென்ஸாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

புதிய மாற்றங்களை இதுபோன்று தடாலடியாக அறிவித்து, அனைத்து மாணவர்களையும் புதிய முறையில் தேர்வெழுதச் சொல்லி நடைமுறைப்படுத்துவது சரியல்ல என்பதுதான் என் கருத்து. ஏனெனில், ஏற்கெனவே ஆன்லைனில் தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்ச்சி அறிவிப்பே இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருந்தாலும் நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமப்புற பகுதிகளில் மாணவர்களுக்கு போதுமான டிஜிட்டல் வசதிகள் இன்னும் கிடைக்கப்படவில்லை. தேர்வெழுதும் மாணவனுக்கு தனியறை வசதிகள் கிடையாது என்கிறபோது, வீட்டிலுள்ள குடும்ப உறுப்பினரே யாரேனும் நடமாடுவது கேமராவில் பதிவாகிறதென்றால், அது சம்பந்தப்பட்ட நபரை 'தேர்வெழுதும் மாணவருக்கு உதவுபவர்' என்று தவறாகவே தேர்வு தொழில்நுட்பம் பதிந்துகொள்ளும். ஆக, இந்த நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் கணக்கில்கொண்டுவந்து ஆராய்ந்துதான் புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், புதிய வழிமுறைகளுக்கு மாறியாகவேண்டும் என்ற சூழல் புரிகிறது. அதேநேரம் இதுபோன்ற புதிய முயற்சிகளை குறிப்பிட்ட ஒரு வருடத்திலுள்ள மாணவர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தி, அதில் கிடைக்கக்கூடிய அனுபவங்களைக் கொண்டு அடுத்தடுத்த வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டு செல்லலாம்.

புத்தகம்
புத்தகம்

வெளிநாடுகளில் இதுபோன்ற நடைமுறைகள் ஏற்கெனவே கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்த நாடுகளின் தேர்வு முடிவுகளிலிருந்து நமக்குத் தெரியவருகிற உண்மை என்னவென்றால், நன்றாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இந்தப் புதிய தேர்வுமுறை அட்வான்டேஜாக இருக்கிறது. அதேசமயம், சுமாராக படிக்கக்கூடிய மாணவர்களுக்கோ இது சேலஞ்சிங்காக இருக்கிறது என்பதுதான்.

இன்றைக்கு ஆன்லைன் வழியேதான் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நடைமுறையில் 40% கல்வியை மட்டுமே மாணவர்களுக்கு வழங்கமுடிகிறது. ஆக, மாணவனுக்கு தேர்வு நடத்தும்போதும் இந்த 40% கல்வியிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய நடைமுறை என்பது 100% கல்விக்குமான தேர்வாகவே இருக்கிறது. 40% கல்வியறிவை மட்டுமே பெற்ற மாணவனிடம் 100% கல்வியறிவுக்கான பதில்களை எதிர்பார்ப்பது நியாயமல்லவே... எனவேதான், மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் கணிசமாக குறைந்துவருகிறது.

கொரோனா: ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகள் வரை..! - சென்னை நிலை என்ன?

எனவே, இந்தப் புதிய நடைமுறைத் தேர்வு என்பது நல்ல வழிமுறைதான் என்றாலும்கூட, இப்படியொரு தேர்வை தடாலடியாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. படிப்படியாக நடைமுறைப்படுத்திப்பார்த்து அதன் அனுபவங்களைக்கொண்டு மெருகேற்றி நடைமுறைப்படுத்தலாம். அதற்கும் முன்னதாக தேர்வெழுதக்கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களின் கருத்துகளையும் கேட்டறிந்து அதன்பின்புதான் புதிய மாற்றங்களையே கொண்டுவர வேண்டும்'' என்கிறார் விளக்கமாக.

ஜெயப்பிரகாஷ் காந்தி - நெடுஞ்செழியன்
ஜெயப்பிரகாஷ் காந்தி - நெடுஞ்செழியன்

கல்வியாளர் நெடுஞ்செழியன் இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,``கல்வித் தரம்பற்றி யாரும் இங்கே கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. எப்படியாவது டிகிரி முடித்துப்போனால் சரி என்ற மனநிலையில்தான் அண்ணா பல்கலைக்கழகமும் செயல்படுகிறதா என்பதும் தெரியவில்லை. கடமைக்காக தேர்வு நடத்தி முடிப்பதைவிடவும், மாணவர்களின் வேலை வாய்ப்புக்காக இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறோம், இதை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் இந்த மாணவர்கள் வேலை வாய்ப்பை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மாதிரியான வசதி வாய்ப்பை பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

கன்னித்தன்மை பரிசோதனையால் ஒதுக்கி வைத்த சமூகம்... சகோதரிகள் எடுத்த துணிச்சல் முடிவு இதுதான்!

எளிதில், வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதற்கான கோர்ஸ்களை படிக்கச்சொல்லி மாணவர்களை ஊக்கப்படுத்தியிருந்திருக்கலாம். உதாரணமாக Moocs, Nptel எனப்படும் ஆன்லைன் கோர்ஸ்களை மாணவர்கள் படித்தால், அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் உறுதிப்படும். தொழிற்கல்வியைப் பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் Moocs மாதிரியான பல்வேரு விஷயங்களை ஆராய்ந்து மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமானது!'' என்கிறார் வேறொரு கோணத்தில்.

அமைச்சர் கே.பி.அன்பழகன்
அமைச்சர் கே.பி.அன்பழகன்

இதையடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம், அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய தேர்வுமுறை குறித்து விளக்கம் கேட்டபோது, ``புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதுவதாக இருந்தால், அப்படியொரு தேர்வே தேவையில்லையே... அப்படியா அறிவித்திருக்கிறார்கள்?! நான் அவசர வேலையாக மருத்துவமனைவரை வந்திருக்கிறேன். இதுகுறித்து விரிவாக விசாரித்துவிட்டு உங்களிடம் பேசுகிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு