Published:Updated:

சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமே காரணமா? #VikatanDataStory

சாலை விபத்து
சாலை விபத்து

தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் சாலை விபத்துகளைக் கணக்கில் கொண்டு, வாகன விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகையை அதிகரித்துள்ளது மத்திய அரசு. விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பது விபத்துகளைக் குறைக்குமா? சாலை விபத்துகளில் அரசுக்குப் பங்கு இல்லையா?

பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், தனது அலுவலகப் பணியை முடித்துவிட்டு, மிதமான வேகத்தில், தலையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்துகொண்டிருந்த சுபஸ்ரீ மீது அ.தி.மு.க கவுன்சிலர் வைத்த பேனர் விழுந்ததும், சில நொடிகளில் அவர் மீது லாரி ஏறி, அவரைக் கொன்றதும் கடந்த வாரம் தமிழ்ச் சமூகத்தை உலுக்கியது. சுபஸ்ரீயின் மரணம், ஒவ்வொருவரையும் பேனர் கலாசாரத்துக்கு எதிராகப் பேச வைத்தது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான மணிகண்டன், திவ்யா ஏலகிரிக்குச் சுற்றுலா சென்று திரும்பியபோது, எதிரில் மின்னல் வேகத்தில் வந்த காரால், தடுமாறி, சுற்றுச்சுவரில் மோதினர். தன் கண் முன்னே, மூன்று நாள்களுக்கு முன்பு, தான் திருமணம் செய்த திவ்யா மரணிப்பதைக் கண்டு கதறினார் மணிகண்டன்.

சுபஸ்ரீ
சுபஸ்ரீ

சுபஸ்ரீ, திவ்யா - இருவரும் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த சில நாள்களில் நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலைகளில் தங்கள் உயிர்களை இழந்தவர்கள்.

சுபஸ்ரீ, திவ்யா போலப் பலரும், ஒவ்வொரு நாளும், உலகம் முழுவதும் தங்கள் உயிரை சாலையில் இழக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையில், மனித இறப்புகளுக்கான காரணங்களில், சாலை விபத்துகள் 8-வது இடத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறது.

உலகம் முழுவதும், ஒவ்வொரு 23 நொடிக்கு ஒரு நபர் சாலை விபத்தில் மரணிக்கிறார்!
உலக சுகாதார அமைப்பு
அரசுப் பேருந்து விபத்து
அரசுப் பேருந்து விபத்து
Vikatan

கடந்த செப்டம்பர் 1 முதல், வாகன விதிகள் பற்றிய புதிய சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது. அதன் விளைவாக, விதிமீறல்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டது. மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தப் புதிய அபராதம் வசூலிக்கப்படுவது, சாலை பாதுகாப்பை உறுதிசெய்யும் என நம்பிக்கை தெரிவித்ததோடு, அபராதம் வசூலித்து, நிதி சேர்ப்பதாக எழுப்பப்படும் பிரசாரங்களையும் மறுத்துள்ளார்.

வாகன ஓட்டிகள் விதிமீறலில் ஈடுபடும்போது, அவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதத்தை அதிகரிப்பது மட்டும் விபத்துகளைக் கட்டுப்படுத்திவிடுமா என்ற கேள்வி பல தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

விபத்து
விபத்து
Vikatan

சமீபத்தில் திருத்தப்பட்டுள்ள அபராதத் தொகைப் பட்டியலையும், இந்திய மக்களின் சராசரி வருமானத்தையும் இணைத்து ஆய்வுசெய்யும்போது, உலக அளவில் அதிக அபராதம் வசூலிக்கும் நாடாக இந்தியா உள்ளது எனத் தெரியவந்தது.

2017-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் ஏறத்தாழ 4.64 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்த விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 1.47 லட்சம். இந்த வரிசையில் இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கும் மாநிலம் தமிழ்நாடு.

Motor Vehicles
Motor Vehicles
Vikatan Infographics

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதைப் புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. தமிழகம் முழுவதும் 2.75 கோடி வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் இரு சக்கர வாகனங்கள் மட்டும் ஏறத்தாழ 2.31 கோடி வாகனங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 175 சாலை விபத்துகள் நிகழ்கின்றன; ஒவ்வொரு நாளும் சராசரியாக 33 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

தமிழ்நாட்டில், மற்ற மாவட்டங்களைவிட, சென்னையில் அதிக சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. சென்னை மாநகரில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 விபத்துகளும், அந்த விபத்துகளில் சராசரியாக 3 பேர் உயிரிழப்பதும் தொடர்ந்து வருகிறது.

தமிழ்நாடு அளவிலும், சென்னை அளவிலும் பதிவு செய்யப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை மட்டுமே இது. பதிவுசெய்யப்படாத சிறிய விபத்துகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கின்றன.

சென்னைப் பெருநகர் மாநகராட்சியின் `Master Plan 2026' அறிக்கையில் சென்னை நகரின் சாலைகளின் பிரச்னைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. வண்டியை ஓட்டுவதற்கு இலகுவாக இல்லாத சாலைகள், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நடைபாதைகள், திட்டமிடாமல் உருவாக்கப்பட்டிருக்கும் சாலை சந்திப்புகள், போதிய வெளிச்சம் இல்லாமை, வாகனங்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டிருக்கையில் சாலைகளின் எண்ணிக்கையும், அளவும் குறைவாக இருப்பது, மின்சாரம், குழாய்கள் முதலானவற்றைப் பதிப்பதற்காகத் தோண்டப்படும் குழிகள் ஆகியவை சென்னை சாலைகளில் நீடிக்கும் பிரச்னைகள் எனச் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

டெல்லியின் 'சாலைப் போக்குவரத்துக் கல்விக்கான நிறுவனம்' வெளியிட்ட ஆய்வறிக்கையில், `சாலைகள் தரமற்று இருப்பது, விபத்துகள் நிகழ்வதற்கு மிக முக்கிய காரணம்' எனக் கூறியுள்ளது.

மா.இராதாகிருஷ்ணன்
மா.இராதாகிருஷ்ணன்

சாலை விபத்துகளில் அரசின் பங்கு குறித்தும், அபராதத் தொகையை அதிகரிப்பது விபத்துகளைக் குறைக்குமா என்பது குறித்தும், அறப்போர் இயக்கத்தின் உறுப்பினர் மா.இராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``சாலை பாதுகாப்பு என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றது. ஒரு பக்கம், மக்கள். மற்றொரு பக்கம் அரசாங்கம். இது இல்லாமல், சாலை பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாது. அரசாங்கத்தின் தரப்பில் சாலை பாதுகாப்புக்கான உரிய கட்டமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை. கட்டமைப்பு என்பது போக்குவரத்து சிக்னல், பயணம் செய்வதற்காக சீரான வழிகளை வடிவமைப்பது முதலானவற்றைக் குறிக்கும். ஆர்.டி.ஓ அலுவலகங்களில் எளிதாக லைசன்ஸ் கிடைத்துவிடுகிறது. `பாரத் க்ராஷ் டெஸ்ட்' என்றோரு பரிசோதனையில் வாகனங்களில் தரம் சரிபார்க்கப்படுகிறது. ஆனால், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் தரமற்ற வாகனங்களால், விபத்துகள் உருவாகின்றன. அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது மிகச்சிறிய அளவில் விபத்துகளைக் குறைக்கலாம். ஆனால், அது லஞ்சத்தை அதிகப்படுத்தும். அபராதத்தை உயர்த்தும்போது, சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டு, அனைத்து அபராதங்களையும் மின்னணு முறையில் வசூல் செய்ய வேண்டும். அது லஞ்சத்தைக் குறைக்கும் " என்றார்.

இதுபற்றி தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தியிடம் பேசினோம். ``அரசு முடிவு செய்வதை எங்கள் துறை மூலம் அமல்படுத்துகிறோம். சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஊட்டுகிறோம். எனினும் அதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன. அவற்றை மீறி, வாகன விபத்துகளைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார். அபராதங்களை அதிகரிப்பது விபத்துகளைக் குறைக்குமா எனக் கேட்டதற்கு, அதைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை எனக் கூறி முடித்துக்கொண்டார்.

Samayamoorthy IAS
Samayamoorthy IAS

உலக சுகாதார அமைப்பு சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு, 5 வழிமுறைகளைப் பரிந்துரை செய்கிறது. சாலை பாதுகாப்பு மேலாண்மையை அதிகரிப்பது, பாதுகாப்பான சாலை கட்டமைப்பை உருவாக்குவது, பாதுகாப்பான வாகனங்களை உருவாக்குவது, சாலையில் பயணிப்பவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டு வருவது, விபத்துக்குப் பிறகான சிகிச்சைகளில் தனிக்கவனம் காட்டுவது ஆகியன சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் என உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை கூறுகிறது. இவற்றில் நம்முடைய அரசுகள் எதிலெல்லாம் கவனம் செலுத்துகின்றன என்பது நம் அனைவருக்குமே தெரிந்ததே!

அடுத்த கட்டுரைக்கு