Published:Updated:

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் ஹெல்த் ஐடி... வரமா அல்லது சாபமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
டிஜிட்டல் ஹெல்த் மிஷன் ஹெல்த் ஐடி
டிஜிட்டல் ஹெல்த் மிஷன் ஹெல்த் ஐடி

மக்கள் வழக்கமாக மருந்தகங்களுக்குச் சென்று தங்கள் நோயை விவரித்து மாத்திரைகளைக் கேட்டு வாங்குகிறார்கள் - பல நேரங்களில், ஆன்டிபயாடிக்குகள் போன்ற ஷெட்யூல் H மருந்துகள்கூட தகுதியான மருத்துவரின் முறையான பரிந்துரை இல்லாமல் வழங்கப்படுகின்றன.

இந்திய ஒன்றிய அரசு ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் கீழ் டிஜிட்டல் ஹெல்த் ஐடிகளை (Health ID) செப்டம்பர் கடைசி வாரத்தில் தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் (NDHM) கீழ் அறிமுகப்படுத்தியது. இது தற்போது சோதனைக் கட்டத்தில் இந்தியாவின் ஆறு யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. சிலர் அதை வரவேற்கிறார்கள், சில எதிர்ப்புகளும் வந்துள்ளன, இதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

உடல்நலப் பதிவுகளின் (Health Record) தேவை

நம்மில் பெரும்பாலோர், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் வரும்முன் காத்தலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆரோக்கியத்தைப் பற்றிய அணுகுமுறைக்கே முக்கியத்துவம் இல்லாதபோது, ​​​​தங்கள் உடல்நலத்தின் ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளைக்கொண்டவர்கள் சொற்பம் என்பதில் ஆச்சர்யமில்லை.

நாம் மருத்துவர்களைச் சந்திக்கும்போதெல்லாம், அவர்கள் ஒரு காகிதத்தில் பரிந்துரைப்பார்கள். மருந்துச்சீட்டில் பொதுவாகப் பிறந்த தேதி (அல்லது வயது), வருகைத் தேதி, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், உயரம், எடை, நோய், பரிந்துரைக்கப்பட்ட நோயறிதல் சோதனை (Diagnostic tests) மற்றும் மருந்துகள் போன்ற முக்கியமான விவரங்கள் உள்ளன.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரச்னை என்னவென்றால் ​​நம்மில் பெரும்பாலோர் மருந்துச் சீட்டை பாதுகாப்பாக வைப்பதில்லை. மருத்துவரை மீண்டும் சந்திக்கும்போது, மருத்துவர் உரிய ஆவணங்கள் இல்லாமல், நோய் நிலை, கொடுக்கப்பட்ட சிகிச்சை, மீள் விவரங்கள் இல்லாமல் அனுமானத்திலேயே சிகிச்சை அளிக்க முடியும்.

நமது மருந்தகங்கள் செயல்படுவதிலும் சிக்கல் உள்ளது; மக்கள் வழக்கமாக மருந்தகங்களுக்குச் சென்று தங்கள் நோயை விவரித்து மாத்திரைகளைக் கேட்டு வாங்குகிறார்கள் - பல நேரங்களில், ஆன்டிபயாடிக்குகள் போன்ற ஷெட்யூல் H மருந்துகள் கூட தகுதியான மருத்துவரின் முறையான பரிந்துரை இல்லாமல் வழங்கப்படுகின்றன. மருந்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தியோ அல்லது மருந்துப் பெயர்களைப் பயன்படுத்தியோ மருத்துவம் என்றென்றும் தொடரும் மற்றொரு நடைமுறை உள்ளது. இந்த நடைமுறைகள் பல நேரங்களில் நோயை முற்றவைத்து சிகிச்சையைக் கடினப்படுத்துகின்றன.

எலெக்ட்ரானிக் ஹெல்த் ரெக்கார்டுகள் (EHR - மின்னணு உடல் தரவுகள்) மேலே குறிப்பிட்டுள்ள சிக்கல்களைத் தீர்க்க உதவுகின்றன. எளிமையாகச் சொன்னால், அது உங்கள் டிஜிட்டல் ஹெல்த் டைரி - ஒவ்வொரு நோய், ஒவ்வொரு முறையும் மருத்துவரைச் சந்தித்த பதிவுகள், அறிகுறிகள், மருத்துவரின் கண்டுபிடிப்புகள், மருத்துவ சோதனை முடிவுகள், மீண்டும் சந்திக்கவேண்டிய நாள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஆகியவை இதில் இருக்கும். இதை சில மருத்துவமனைகள் மின்னணு முறையில் அவர்களின் நெட்வொர்க்கிலுள்ள மருந்தகங்களுக்கும் அனுப்புகின்றன.

நோயாளிகள் மருத்துவமனைகள்/மருத்துவர்களை மாற்றும்போது, ​​பதிவுகள் இழக்கப்படாமல் இருக்க, இந்த EHR-கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு எளிதாக மாற்றக்கூடியவையாக இருக்க வேண்டும்.

இதில் மற்றொரு கோணம் உள்ளது: தனிப்பட்ட உடல்நலப் பதிவு (PHR - Perosnal Health Record); இவை ஒரு தனிமனிதனின் கட்டுப்பாட்டிலுள்ள உடல் சார்ந்த பதிவுகள். ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் சேமிக்கும் உடற்பயிற்சி, தூக்கம், இதயத் துடிப்பு, உடல்நலம், அவசரத் தகவல்கள், ஒவ்வாமை போன்ற தரவுகள் அனைத்தும் PHR-ஆகக் கருதப்படுகின்றன. சில நேரங்களில் EHR அமைப்புகள் நோயாளியுடன் சில தரவுகளைப் பகிர்ந்துகொள்கின்றன - மருத்துவமனையில் தங்கியிருப்பதைக் கோடிட்டுக் காட்டும் டிஸ்சார்ஜ் சுருக்கம் போன்றவை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.

மேலை நாடுகளும் EHR-ம்

அமெரிக்காவில், 1970-களில் இருந்து சில வகையான EHR-கள் உள்ளன. இப்போது அவை மிகவும் வலுவான அமைப்புகளாக உருமாறியுள்ளன. அமெரிக்க சுகாதாரத்துறையால் நிறைய கட்டுப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முறைகளைப் பின்பற்ற மருத்துவர்களை ஊக்குவிக்கப் பிரபலமான ஒபாமா பராமரிப்பு திட்டம் போன்ற சலுகைகள் உள்ளன.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் ஹெல்த் ஐடி... வரமா அல்லது சாபமா?

அங்கும் சில சிக்கல்கள் உள்ளன. பல அமைப்புகள் அவர்களுக்கே உரித்தான முறையில் பதிவு செய்வதும், ஓர் அமைப்பிலிருந்து மற்றோர் அமைப்புக்கு மாற்றும் வழிமுறைகளில் உள்ள பலதரப்பட்ட வழிமுறைகளும், தரநிலைகளும் (standard) பல சிக்கல்களை உருவாக்குகின்றன. மேலும் தரவு யாருக்குச் சொந்தம் (ownership of data) என்பதிலும் நிறைய குழப்பங்கள் உள்ளன.

அமெரிக்காவில் மிகப்பெரும் தனியார் நிறுவனங்கள் இந்த Healthcare IT துறையிலிருந்தாலும், அவர்களால் மிகப்பெரும் அளவில் கூட்டமைத்து ஏய்க்க முடியவில்லை (Cartelization is prevented). நோயாளியின் தனியுரிமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் மற்றும் அமைப்புகள் உள்ளன; எடுத்துக்காட்டாக, HIPAA சட்டம், நோயாளியின் தனியுரிமை மற்றும் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் சந்தாதாரரின் தனியுரிமையைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்தச் சட்டத்தை மீறும் எவருக்கும் மிகக் கடுமையான தண்டனைகள் உள்ளன. இந்தியா போன்ற பல்வேறு வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள்கூட ஓர் அமெரிக்க குடிமகனின் தனிப்பட்ட சுகாதாரத் தரவைக்கொண்ட IT Project பணிகளைச் செய்தால் HIPAA-ன் வரம்புக்குள் வருவார்கள்.

இந்தியாவின் டிஜிட்டல் ஹெல்த் ஐடி - அது என்ன?

National Digital Health Mission (NDHM) உடல்நலப் பதிவுகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களின் டிஜிட்டல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. NDHM ஒரு நபரின் ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது மொபைல் எண்ணுடன் ஒரு ஹெல்த் ஐடியை உருவாக்கும். ஹெல்த் ஐடியானது, அந்தத் தனிநபருக்கான உடல்நலப் பதிவை உருவாக்கப் பயன்படுகிறது. NDHMல் பங்கேற்கும் அமைப்புகள் இந்த உடல்நலப் பதிவேட்டைப் பகிர்ந்துகொள்ளலாம்.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் ஹெல்த் ஐடி... வரமா அல்லது சாபமா?

ஹெல்த் ஐடி அந்த தனிநபரின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், நோயாளி சம்மதிக்கும் வரை தனிநபரின் பதிவு பகிரப்படாது என்றும் அரசு கூறுகின்றது .

இந்த அமைப்பு மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பிற தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்கூட பதிவு செய்வதற்கான பதிவேட்டைக் (registry) கொண்டுள்ளது. இந்த அனைத்து நிறுவனங்களும் நோயாளியின் தரவைப் பயன்படுத்துவதற்கும், மேலதிகத் தகவல் சேர்ப்பதற்கும் உரிமை உள்ளது.

இது நல்லதா, இல்லையா?

அக்டோபர் இரண்டாவது வாரத்தில், முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்ததால் சர்ச்சை வெடித்தது. இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நகைமுரணாக, நோய்வாய்ப்பட்ட ஒரு முன்னாள் பிரதமரின் தனியுரிமையை ஒன்றிய சுகாதார அமைச்சர் மீறியுள்ளார். இந்தியாவில் உடல்நலப் பாதுகாப்பில் தனியுரிமை என்பது சிறிதும் புரிந்துகொள்ளப்படாத கருத்தாகும்.

தனிநபரின் தரவின் தனியுரிமை (privacy) மற்றும் ஒப்புதலைப் (consent) பலர் புரிந்துகொள்வதில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசும் இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவில்லை. டிஜிட்டல் ஹெல்த் ஐடி சட்டப் பாதுகாப்பாக தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (Personal Data Protection - PDP) மசோதா, 2019-ஐ மேற்கோள் காட்டுகிறது. ஆம், அது இன்னும் ஒரு மசோதா, இன்னும் ஒரு சட்டமாகவில்லை. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு இன்னும் பரிசீலனை செய்யவில்லை. எவ்விதச் சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் இந்த ஹெல்த் ஐடி-யை செயல்படுத்துவது பெரும் முறைகேட்டுக்கு வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் உதவியோடு பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் 140 கோடி மக்களின் உடல்நல தரவுகளைத் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு கட்டமைப்போ அல்லது சட்டமோகூட இல்லாமல் ஆன்லைனில் எடுத்துச் செல்வது நியாயம் அல்ல.

இங்கே மற்றொரு அறியப்படாத உண்மை உள்ளது. இந்தியாவில் கோவிட் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட அனைவருக்கும் ஏற்கெனவே ஒரு ஹெல்த் ஐடி உருவாக்கப்பட்டுள்ளது. CoWin தளத்தில் தடுப்பூசி முன்பதிவு செய்தவர்களுக்கு ஹெல்த் ஐடி-யை உருவாக்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் ஆயுஷ்மான் பாரத் இன்ஷூரன்ஸ் திட்டத்தின் தகுதியைத் தீர்மானிக்க பல்வேறு நிறுவனங்கள் ஹெல்த் ஐடி-யைப் பயன்படுத்தும் என்பது அரசு செல்லும் மற்றொரு காரணம். இருப்பினும், காப்பீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கெனவே இந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட சுகாதார அட்டைகள் உள்ளன. அரசு ஹெல்த் ஐடி கட்டாயம் இல்லை என்றாலும், அரசாங்கத்தின் சுகாதார மற்றும் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பலன்களைப் பெறக் கட்டாயமாக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பல நிறுவனங்கள் எல்லாவற்றுக்கும் ஆதாரை கட்டாயப்படுத்துவதுபோல இதுவும் ஆக்கப்படும் - சண்டிகரில் உள்ள பிஜிஐ, மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் ஹெல்த் ஐடி-யை உருவாக்குவது கட்டாயம் என்றது. இருப்பினும் எதிர்ப்பு கிளம்பியதும் இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதில் மிகப்பெரிய அச்சுறுத்தல் தனியார் நிறுவனங்களால் சுரண்டுதல் சாத்தியமாகும். உதாரணமாக, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் மற்றும் மக்களை ஒதுக்கிவைக்க, காப்பீட்டை மறுக்க அல்லது மிக அதிக அளவில் பிரீமியத்தை வசூலிக்க இதைப் பயன்படுத்தலாம்.

“Data is New Oil” - பொதுவாகக் காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி கொடுக்கும் முன்னர் ஒருவரிடம் அவர்களின் நோய்கள், புகைபிடித்தல் மற்றும் வாழ்க்கைமுறை, உடல்நலம் பற்றி கேள்விகள் கேட்பது வழக்கம். பொய்யான தகவல் அளித்தல் பாலிசியை ரத்து செய்ய வழிவகுக்கலாம். இவ்வாறு ஒரு வழிமுறை நடைமுறையில் உள்ளபோது, இந்தத் NDHM ஹெல்த் ஐடி ஒருவரின் அனுமதி இல்லாமலேயே அவரின் அனைத்துத் தகவல்களையும் எடுக்கப் பயன்படுத்தப்படலாம்.

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்யும் தரவை நீங்களாக முன்வந்து கொடுத்து, அதற்கு ஒரு நிறுவனம் பாலிசி பிரிமீயத்தில் தள்ளுபடி கொடுத்தால், ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் நிறுவனமாக பின கதவு வழியாக வேவு பார்த்து நீங்கள் ஒரு மாதத்தில் 10 சீஸ் பீட்சா சாப்பிடுவதால் உங்கள் பிரிமியம் கூட்டப்படடது என்பது கொடுமை!

விளம்பரங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் தனிநபர்களைக் குறிவைக்க நிறுவனங்கள் தரவுகளைப் பயன்படுத்துகின்றன. உலகெங்கிலும் Facebook போன்ற நிறுவனங்களின் மேல் கடுமையான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்தத் தரவுகளில் சில, மக்கள் குழுக்கள் மற்றும் நாடுகளுக்கு எதிராக ஆயுதமாக்கப்படுகின்றன.

தேசிய டிஜிட்டல் ஹெல்த் மிஷனின் ஹெல்த் ஐடி... வரமா அல்லது சாபமா?

பிராக்டோ, 1mg போன்ற நிறுவனங்கள், NDHM-க்கு தங்கள் தீர்வுகள் மற்றும் செயலிகளை வழங்குகின்றன. தனியார் பங்களிப்பில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், NDHM போதுமான பாதுகாப்புகளை வைக்க வேண்டும். iSpirt மற்றும் SWASTH ஆகிய நிறுவனங்கள் தளத்தின் திட்டமிடல் மற்றும் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ளன; எடுத்துக்காட்டாக, SWASTH, ஜெனரல் அட்லாண்டிக், ஃபிளிப்கார்ட் போன்ற பிற நிறுவனங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டுள்ளது. ஊடகங்கள், பொதுமக்கள் இந்த நிறுவனங்களின் பங்கு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளனர். தேசிய சுகாதார நிறுவனம் (NHA), இவை அனைத்தையும் மறுத்து, போதுமான பாதுகாப்புகள் இருப்பதாகக் கூறுகிறது.

கடைசியாக, சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது. ஒன்றிய அரசு இது போன்ற திட்டங்களை ஒருதலைபட்சமாக அமல்படுத்துவது கூட்டாட்சி அமைப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

முடிவில், இந்தியாவில் சுகாதாரத்துறையில் செய்ய வேண்டியவை பல உள்ளன, எடுத்துக்காட்டாக, பல மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல், சுகாதாரக் கட்டமைப்பு மேம்படுத்துதல், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துதல், மருத்துவர்-நோயாளி விகிதங்கள், குறைந்த விலையில் தரமான சிகிச்சை கிடைக்கப் பெறுதல் போன்றவை. இவற்றை ஒப்பிடும்போது ஹெல்த் ஐடி உருவாக்குவது மிக முக்கியம் அல்ல.

குறிப்பாக 50 ஆண்டுகளாக EHR - மின்னணு உடல் தரவுகள் கொண்ட நாடுகள்கூட அதைச் சரியாக நிர்வாகிக்க இன்னும் போராடிக்கொண்டிருக்கின்றன. கூகுள் மைக்ரோசாஃப்ட் மற்றும் Amazon போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் PHR சந்தையில் நுழைய முயன்று, தோற்று திட்டங்களைக் கைவிட்டனர். அத்தகைய நுட்பமான வேலைக்கு, ஒரு நாடாக முன்னுரிமை அளிக்கவேண்டிய நேரம் இதுவல்ல.

"நரகத்துக்கான பாதை நல்ல நோக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது" என்று ஒரு புத்திசாலி கூறினார். சிக்கல்களைச் சரிசெய்வதும், கவலைகளைத் தீர்ப்பதும், மேலும் ஒரு ஃபிரான்கென்ஸ்டீன் அரக்கனை (Frankenstien Monster) உருவாக்குவதை நிறுத்துவதும் ஒன்றிய அரசின் கைகளில் உள்ளது.

- சத்யன் இராசேந்திரன், ஹெல்த்கேர் ஐடி நிபுணர், அரசியல் விமர்சகர், தக்‌ஷசிலா மாணவர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு