Published:Updated:

இந்தியா முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் குடியுரிமை எப்படி வழங்கப்படும்? #Walkthrough

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த இந்த Interactive Walkthrough-வில் குடிமக்கள், சந்தேகத்துக்குரிய குடிமக்கள், குடியுரிமை இழந்தவர்கள் முதலான அனைத்து சாத்தியக்கூறுகளும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இதன் முடிவில் என்ன நடக்கும் என்பதை வாசகர்கள் பரிசோதனை செய்து நேரடியாக அறியலாம்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு முழுக்க தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) ஆகியவை குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்புக்காக 3,941 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கியுள்ளது. வரும் 2020-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, நாடு முழுவதும் அஸ்ஸாம் மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் சில பெயர்கள் விடுபட்டுப் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆயினும் பெயர் விடுபட்டவர்களுக்கு குடியுரிமை பறிபோகும் என்று அர்த்தம் இல்லை. ஏனெனில் இது தேசிய குடிமக்கள் பதிவேடுக்கான செயல்முறை அல்ல. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது தனி செயல்திட்டம் கொண்டது" என சந்தேகங்களை விலக்குவதற்காகப் பேட்டியளித்துள்ளார்.

எனினும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவதைத் தாண்டி, 2014-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புகள் தேசிய குடிமக்கள் பதிவேடும், தேசிய மக்கள்தொகை பதிவேடும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையவை என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன. 2014-ம் ஆண்டு ஜூலை 15 அன்று வெளியான அறிவிப்பில், ``குடியுரிமைச் சட்டம் 1955-ன் படி, நாட்டில் வாழும் குடிமக்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது; குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுக்கப்பட்டு, அதை தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டில் சரிபார்த்து, இந்திய குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்" எனக் கூறுகிறது.

`தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான முதல் கட்டப் பணியாக, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது" எனக் கூறுகிறது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பு. இது 2014-ம் ஆண்டு, நவம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது.
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு
குடியுரிமைத் திருத்தச்சட்டம் -  என்.ஆர்.சி தெரிந்து கொள்ளவேண்டியவை என்ன? #VikatanInfographics

மத்திய உள்துறை அமைச்சர் கூறும் கருத்துகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் இடையே முரண் நிலவுகிறது. மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த பிறகு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு குறித்தும் மக்களிடையே சந்தேகம் அதிகரித்துள்ளது. இதைப் போக்க, மத்திய அரசு செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், இணையத்திலும் விளம்பரம் செய்து வருகிறது. அந்த விளம்பரத்தில், தேசிய அளவிலான என்.ஆர்.சி எடுக்கப்படாது என உறுதி அளித்துள்ள போதிலும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்காக 3,941 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருப்பது மக்களிடையே சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்துள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிவித்தால் மட்டுமே, மற்ற மாநிலங்களுக்கான திட்ட வரைவு, தேவையான ஆவணங்கள் முதலான விவரங்கள் முழுமையாகத் தெரியவரும். எனினும், தென் மாநிலங்களில் பி.ஜே.பி ஆளும் கர்நாடகத்தில் தடுப்புக்காவல் முகாம்கள் கட்டப்படுவதால், இதற்கும் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும், நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள தேசிய இந்திய குடிமக்கள் பதிவேட்டுக்கும் பெரிய அளவிலான வேறுபாடுகள் இருக்காது எனக் கருதப்படுகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா எரிப்பு
குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா எரிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்ததுபோல, நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்தக் கணக்கெடுப்பில் இருந்து தேசிய, இந்திய குடிமக்கள் பதிவேடு உருவாக்கப்படும். இதில் `சந்தேகத்துக்குரிய நபர்' என்று, ஆவணங்கள் இல்லாத, குடியுரிமை வழங்கப்படாத மக்கள் வகைப்படுத்தப்படுவர். இது எப்படிச் செயல்படும் என்பது பற்றிய Interactive Walkthrough ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்கீழ் அமல்படுத்திய திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த Interactive Walkthrough..

இதில் குடிமக்கள், சந்தேகத்துக்குரிய குடிமக்கள், குடியுரிமை இழந்தவர்கள் முதலான அனைத்து சாத்தியக்கூறுகளும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. இந்த walkthrough-வில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் என்ன நடக்கும் என்பதை வாசகர்கள் ஒவ்வொரு சாத்தியக்கூறுகளையும் பரிசோதனை செய்து, அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை நேரடியாக அறியலாம்.

அடுத்த கட்டுரைக்கு