அலசல்
அரசியல்
Published:Updated:

விதிகளை மீறும் டோல்கேட்கள்... கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!

டோல்கேட்
பிரீமியம் ஸ்டோரி
News
டோல்கேட்

ஓர் அலசல் ரிப்போர்ட்!

நெடுஞ்சாலைகளில் செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட டோல்கேட் திட்டம், காலப்போக்கில் மக்களிடம் அடாவடி வசூல் செய்வதாக நாடு முழுவதுமே குற்றச்சாட்டு உண்டு.

உண்மையில், புதிதாக ஒரு வாகனத்தை வாங்கி அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுசெய்யும்போதே, குறிப்பிட்ட ஒரு தொகையை ‘சாலை வரி’ என வசூலித்து விடுகிறார்கள். அரசு அமைத்திருக்கும் சாலைகளைப் பயன்படுத்துவதற்காகத்தான் அந்தச் சாலை வரி. அதன் அடிப்படையில், மக்களுக்கு சாலை அமைத்துத் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால், சாலை அமைக்கும் பணியை தனியாருக்கு அளித்து, அவர்கள் சாலையைப் பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்க அரசே வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. இதுகுறித்து கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள், ‘‘இந்தத் திட்டத்தில் அமைச்சர் களுக்கும் அதிகாரிகளுக்கும் சாலை அமைக்கும் தனியார் நிறுவனங்கள் பல கோடி ரூபாயை கமிஷனாக அளித்துவருகின்றன. இதனால், பல டோல்கேட்களில் அனுமதிக்காலம் முடிந்த பிறகும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்றனர். இந்த நிலையில்தான் டோல்கேட்களில் நடக்கும் முறைகேடுகள்குறித்து விசாரிக்க, களம் இறங்கியது ஜூ.வி டீம்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் நான்குவழிச் சாலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் ஒரு டோல்கேட், மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் ஒரு டோல்கேட் என இரண்டு டோல்கேட்கள் அமைக்கப்பட்டிருந்தன. சமீபத்தில், மாட்டுத்தாவணியிலிருந்து கப்பலூர் செல்லும் சுற்றுச்சாலை புதுப்பிக்கப்பட்டு அதில் 27 கிலோமீட்டர் தூரத்துக்குள் மூன்று டோல்கேட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மதுரை சிட்டம்பட்டி டோல்கேட்
மதுரை சிட்டம்பட்டி டோல்கேட்

மேலூர் அருகே சிட்டம்பட்டி டோல்கேட் அமைந்துள்ள பகுதி, விவசாய பூமி. ஏராளமான விவசாயிகள் தினமும் இந்த டோல்கேட்டைக் கடந்தே தங்கள் விவசாய நிலங்களுக்குச் செல்ல வேண்டும். விளைபொருள்கள், இடுபொருள்கள், கால்நடை தீவனங்கள் ஆகியவற்றை தினமும் எடுத்துச்செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், விவசாயிகள் சில கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்கே சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

இதே நிலைமைதான், கப்பலூர் டோல் கேட்டிலும். கப்பலூரைக் கடந்து விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ஊர்களுக்குச் செல்பவர்கள் கட்டணம் செலுத்துவதில் நியாயமுள்ளது. ஆனால், டோல்கேட்டைத் தாண்டி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லம் சாலையில் திரும்பி டி.கல்லுப்பட்டி, பேரையூர், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை ஆகிய ஊர்களுக்குச் செல்பவர்களிடம் கட்டணம் வசூலிப்பது அந்தப் பகுதிகளின் மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அன்றாடம் பிரச்னைகளும் வாக்குவாதங்களும் எழுகின்றன. நியாயம் கேட்கும் மக்களை கூலியாட்களைவைத்து மிரட்டுவதும் அடித்து விரட்டுவதும் தொடர்கதையாக உள்ளன. இதை முன்வைத்து திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சிலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்ததில், ‘உள்ளூர் வாகனங்களுக்கு இந்த டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதையும் மதிப்பதில்லை டோல்கேட் நிர்வாகத்தினர்.

‘கப்பலூர் பகுதியில் நான்குவழிச் சாலை அமைக்க எவ்வளவு செலவு செய்தீர்கள், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு கட்டணம் வசூல் செய்வீர்கள்?’ என்ற கேள்விகளோடு, தென்காசித் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வழக்குரைஞர் வெங்கட்ரமணா வழக்கு தொடுத்திருக்கிறார். அது நிலுவையில் இருக்கிறது.

திருச்சி துவாக்குடி டோல்கேட்
திருச்சி துவாக்குடி டோல்கேட்

தற்போது, ‘ஃபாஸ்ட் டேக்’ கட்டாயமாக்கப் படுவதால், கடந்த நவம்பர் 30-ம் தேதி அதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ‘உள்ளூர் வாகனங்களுக்காக 0 மற்றும் 11 ஆகிய லைன்கள் உருவாக்கப்படும். இந்த லைன்களில் உள்ளூர் வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படும்’ என்று டோல்கேட் நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. ‘இதை உத்தரவாக அறிவிக்கவில்லையென்றால், கப்பலூர் டோல்கேட் அகற்றும் போராட்டத்தை நடத்துவோம்’ என்று திருமங்கலம் மற்றும் பேரையூர் பகுதி வாகன உரிமையாளர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில்தான், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக்கழகம் சமீபத்தில் மதுரை சுற்றுச்சாலையில் மூன்று டோல்கேட்களைத் திறந்து கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், வாகன உரிமையாளர்கள் கூடுதல் சுமைக்குள்ளாகி உள்ளனர். போக்குவரத்து நெரிசலும் அதிகமாகி யுள்ளது. இதனால் மேலூர் - மதுரை சாலையில் பயணித்து விருதுநகர் செல்பவர்கள், 36 கிலோமீட்டர் தூரத்துக்குள் ஐந்து டோல்கேட்டு களில் கட்டணம் செலுத்த வேண்டும். மேலூர் - மதுரை சாலையில் பயணித்து தூத்துக்குடிக்குச் செல்பவர்கள், 31 கிலோமீட்டர் தூரத்துக்குள் நான்கு டோல்கேட்டுகளில் கட்டணம் செலுத்த வேண்டும்.

சுற்றுச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்களில் ஆம்புலன்ஸ் மற்றும் டூவீலர்களுக்கு தனி வழி இல்லாததால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மதுரை விரிவாக்கப் பகுதிக்குள் குடியிருக்கும் மக்களும் சுற்றுச்சாலை டோல்கேட்களில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், பலரும் சுற்றுச்சாலையைத் தவிர்த்து நகருக்குள் உள்ள சாலைகளைப் பயன்படுத்துவதால், மதுரை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, விபத்துகளும் அதிகரித்துவிட்டன.

சேலம்

மாநகராட்சி எல்லையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் தள்ளித்தான் டோல்கேட் அமைக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அதன்படி, சேலம் மாவட்டத்தில் முன்பு தர்மபுரி செல்லும் வழியில் தொப்பூர் கணவாய் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே விதிமுறைகளை மீறி சேலம் மாநகர எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே டோல்கேட் அமைத்துவிட்டார்கள். இந்தச் சாலை, அரசு பராமரிப்பில் இருக்கும் தங்க நாற்கரச் சாலையாகும். இதில் பயணிக்க, மக்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தனியார் பராமரிக்கும் நான்குவழிச் சாலைக்குத்தான் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், தொப்பூர் கணவாய்க்கு சுமார் 50 கிலோமீட்டர் முன்னதாகவே அரசு பராமரிக்கும் சாலையில் டோல்கேட் அமைத்ததால், பெங்களூர் மார்க்கமாக சென்னை செல்பவர்கள், பெங்களூர் மார்க்கத்திலிருந்து கோவை, திருப்பூர், கேரளத்துக்குச் செல்பவர்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரியிலிருந்து சேலம் வருபவர்கள் அனைவரும் தொப்பூர் டோல்கேட் மட்டுமன்றி, தேவையில்லாத செலவாக கருப்பூர் டோல்கேட்டிலும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கரூர் மணவாசி டோல்கேட்
கரூர் மணவாசி டோல்கேட்

நியாயப்படிப் பார்த்தால், நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மல்லூர் பகுதியில்தான் கருப்பூர் டோல்கேட் அமைக்கப்பட வேண்டும். ஆனால், விதிமுறைகளை மீறி சேலம் மாநகர எல்லைக்கு அருகிலேயே அமைத்து அடாவடியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதைவிட கொடுமை, கேரளம் மற்றும் சென்னைக்குச் செல்லும் வாகனங்கள் மேற்கண்ட தொப்பூர், கருப்பூர் என இரு டோல்கேட்களில் கட்டணம் செலுத்துவது மட்டுமன்றி, அடுத்த 15 மற்றும் 20 கிலோமீட்டர் தூரத்தில் முறையே வைகுந்தம் மற்றும் மேட்டுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள டோல்கேட்களிலும் கட்டணம் செலுத்த வேண்டி யிருப்பதால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளா கின்றனர். மேற்கண்ட டோல்கேட் தரப்பினரிடமிருந்து அரசியல் பிரமுகர்கள் தொடங்கி அதிகாரிகள் வரை கமிஷன் சென்றுவிடுவதால் இதைத் தடுக்க முடியவில்லை.

திருச்சி

தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சியைச் சுற்றி சமயபுரம், துவாக்குடி, பூதகுடி, பொன்னம்பலப்பட்டி, லெட்சுமணப்பட்டி, திருப்பராய்த்துறை என ஆறு இடங்களில் டோல்கேட்கள் இருக்கின்றன. 2009-ம் ஆண்டு டோல்பிளாசாக்கள் தொடங்கப்பட்டபோது, ‘சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 40 பைசா எனவும், வணிகரீதியான வாகனங்களுக்கு 70 பைசாவும் வசூலிக்கப்படும்’ என அரசாணை வெளியிடப் பட்டது. அதே அரசாணையில், டோல்கேட்டி லிருந்து 10 கிலோமீட்டர் தூரத்துக்குள் வசிப்பவர்களின் கார், ஜீப் போன்ற வாகனங் களுக்கு மாதத்தவணை வசூலிப்பது குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அரசாணையை மதிக்காமல், ஒரு கிலோமீட்டருக்கு 1.50 ரூபாய் வசூலிக்கின்றன டோல்கேட்கள். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் டோல்கேட் கட்டணம் 35 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பல டோல்கேட்களில் வடமாநில இளைஞர்கள்தான் பணியில் உள்ளனர். டோல் கட்டணம்குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களை இந்த இளைஞர்கள் தாக்குவது வாடிக்கையாக உள்ளது. காவல்துறையும் டோல்கேட் நிர்வாகத்துக்குச் சாதகமாகத்தான் செயல்படுகிறது.

கரூர்

கரூர் மாவட்டத்தில், கரூர் - திருச்சி சாலையில் மாயனூர் மணவாசியில் ஒரு டோல்கேட் மற்றும் கரூர்-திண்டுக்கல் சாலையில் ஆண்டிபட்டிக் கோட்டையில் ஒரு டோல்கேட் என இரண்டு டோல்கேட்கள் உள்ளன. மணவாசி டோல்கேட்டில் எட்டு கவுன்டர்கள் உள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே கேஷ் கவுன்டர்கள். மீதி ஆறும் ‘ஃபாஸ்ட் டேக்’ கவுன்டர்கள்.

ஃபாஸ்ட் டேக்கில் பதிவுசெய்யாத வாகனங்கள் தெரியாமல் ஃபாஸ்ட் டேக் லைனில் சென்றுவிட்டால், அவர்கள் அபராதத்துடன் சேர்ந்து இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. கேஷ்லெஸ் கவுன்டர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாததால், வாகன ஓட்டிகளுக் கும் டோல்கேட் பணியாளர்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுகின்றன.

திருநெல்வேலி

திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரியில் ஒரு டோல்கேட் உள்ளது. இந்தச் சாலையில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் கட்டணத்தைத் தவிர்ப்பதற் காக, மீனவன்குளம் கிராமச் சாலையைப் பயன்படுத்துகிறார்கள். இதனால், கடுப்பான டோல்கேட் நிர்வாகம், மீனவன்குளம் சாலையின் குறுக்கே டிராக்டரை நிறுத்திவைத்துள்ளது. இதனால், மீனவன்குளம் வழியாக அருகில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்களும் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கிராம மக்களுக்கும் டோல்கேட் பணியாளர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

கோவை

கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவை - நீலாம்பூரிலிருந்து வாளையாறு வரை உள்ள 40 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு டோல்கேட்கள் இருக்கின்றன. இந்த டோல்கேட்கள் பல ஊர்களுக்குச் செல்லும் குறுக்குச்சாலைகளைக் குறிவைத்து அமைக்கப்பட்டுள்ளன. ‘`இந்த டோல்கேட்களில் வாங்கும் கட்டணத்துக்கு ஏற்ப சாலையைப் பராமரிப்பதில்லை’’ என்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

வேலூர்

ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர நகரங்களுடன் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 52 கிலோமீட்டர் தூரத்துக்குள், வாலாஜாபேட்டை, பள்ளிகொண்டா, வாணியம்பாடி ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து மூன்று டோல்கேட்கள் அமைந்துள்ளன. இந்தச் சாலையில் பயணிக்கும் உள்ளூர் வாகனங்களும் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தச் சாலையில் பயணிப்போருக்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்து தரப்படவில்லை. ஏதேனும் விபத்து நடக்கும் சமயத்தில் டோல்கேட்டைத் தொடர்புகொண்டு உதவி கேட்டால், ஆம்புலன்ஸ், அவசரக்கால உதவி வாகனம் என எதையுமே டோல்கேட் நிர்வாகத்தினர் அனுப்புவதில்லை.

ஃபாஸ்ட் டேக் குளறுபடிகள்!

நெடுஞ்சாலை டோல்கேட்டில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, ஃபாஸ்ட் டேக் என்னும் முறை ஏற்கெனவே அமலில் இருக்கிறது. ஃபாஸ்ட் டேக் என்பது, ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர்தான். மொபைல் ரீசார்ஜ் செய்வதுபோல் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும்போது ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் சுங்கச்சாவடியில் காத்திருக்கும் நேரம் குறைவதோடு, கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும். 2019, டிசம்பர் 1-ம் தேதி முதல் இது கட்டாயம் என்றது மத்திய அரசு. இந்தத் தேதி, பிறகு டிசம்பர் 15 என மாற்றி அமைக்கப்பட்டது. எனவே, விரைவில் ஃபாஸ்ட் டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.

விதிகளை மீறும் டோல்கேட்கள்... கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!

ஆனால், ஃபாஸ்ட் டேக் எங்கு வாங்குவது என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது. அனைத்து வங்கிகளின் இணையதளங்களிலும் மொபைல் செயலிகளிலும் இதற்கான விளம்பரங்கள் வருகின்றன. ‘பேடிஎம்’ உள்ளிட்ட வாலெட்களிலும் ஃபாஸ்ட் டேக் கிடைக்கிறது. சில இடங்களில் இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டாலும் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு ஃபாஸ்ட் டேகை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் முன்பே பணம் செலவழித்து இதை வாங்கியவர்கள் அதிருப்தியடைந்தார்கள்.

ஃபாஸ்ட் டேகைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்பு உணர்வும் அவ்வளவாக இல்லை. ஆன்லைனில் ஃபாஸ்ட் டேகைப் பதிவுசெய்த ஒருவருக்கு தபாலில் டேக் வந்திருக்கிறது. ஆன்லைனிலேயே ரீசார்ஜும் செய்துவிட்டார். அவர் ஊரிலிருந்து காரில் சென்னைக்கு வந்தபோது தபால் மூலம் வந்திருந்த ஃபாஸ்ட் டேக் கவரை காரின் டேஷ்போர்டில் வைத்திருக்கிறார். வரும் வழியிலெல்லாம் அவர் டோல்கேட் கட்டணமும் கட்டியிருக்கிறார். ஃபாஸ்ட் டேகிலிருந்தும் கட்டணம் எடுக்கப்பட்டிருக்கிறது.

அவர் சென்னைக்கு வந்து மொபைலைப் பார்த்தபோதுதான் குறுஞ்செய்தி மூலம் பணம் எடுக்கப்பட்டது தெரிந்திருக்கிறது. காரில் எங்கு வைத்தாலும் அதை ஸ்கேன் செய்யக்கூடிய அளவுக்கு ஃபாஸ்ட் டேக் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனாலும், அதிலும் இப்படி ஒரு சிக்கல்!