Published:Updated:

ஜி.டி.பி. வளர்ச்சியில் இந்தியாவை விஞ்சும் வங்கதேசம்! - எப்படி சாத்தியமானது?

2021-ம் ஆண்டுக்குள் வளர்ந்துவரும் நாடுகளில் முதன்மை பெறுவதையும், 2041-ல் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது வங்கதேசம்.

Modi, Sheikh Hasina
Modi, Sheikh Hasina

``நான் பார்த்து வளர்ந்த பய, இப்ப என்னையவே எதிர்த்து பேசுறான்!" என்ற வசனத்தைப் பெரியவர்கள் பலரும் அவ்வப்போது உச்சரிப்பதைக் கேட்டிருப்போம். அதேபோல நம்மால் தனி நாடாக வடிவம் பெற்ற வங்கதேசம், தற்போது ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தில் நமக்கே போட்டியாக உருவெடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நான்கு நாடுகளின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில், 2016-ம் ஆண்டுக்குப் பின்னர் வங்கதேசம், இந்தியாவைத் தொடர்ச்சியாக முந்திவருவது தெரிகிறது. அடுத்ததாக பாகிஸ்தானும், இலங்கையும் ஜி.டி.பி வளர்ச்சியில் இந்தியா, வங்கதேசத்தை நெருங்கவே முடியாதபடி பின்தங்கியுள்ளன.

GDP growth rate
GDP growth rate
vikatan

2016-ல் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 8.2 சதவிகிதமாகவும், வங்காள தேசத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.1 சதவிகிதமாகவும் இருந்தது. அதே காலகட்டத்தில் பாகிஸ்தானின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.6 சதவிகிதமாகவும் இலங்கையின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 4.5 சதவிகிதமாகவும் இருந்தது. அடுத்த ஆண்டிலேயே இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. வங்காள தேசத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக 2018-ல் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாகவும், வங்காள தேசத்தின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் 7.9 சதவிகிதமாகவும் உள்ளது. அடுத்து, 2019, 2020-ம் ஆண்டுக்கான எதிர்பார்ப்பிலும்கூட வங்கதேசம், இந்தியாவைவிட மேம்பட்டே இருக்கிறது.

வங்காள தேசம் உருவானபோது, அங்கே ஏழ்மை, பஞ்சம், இயற்கை பேரிடரின் பாதிப்பு மிகுதியாக இருந்தது. அரசியல் பதற்ற நிலைக்கும் குறைவில்லாமல் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி நிலை கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானிலிருந்து பிரிந்து தனி நாடாக உருவான வங்கதேசம், பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கியது. இதன் விளைவாக, பாகிஸ்தானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியிருக்கிறது. அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகளைக் காண்போம்.

Economy
Economy

மாறும் முகம்

ஆடை மற்றும் அணிகலன்கள் தயாரிப்புத்துறை, வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 2016-17 நிதியாண்டில் அந்நாட்டின் ஜி.டி.பி வளர்ச்சியில் இந்தத் துறை 80 சதவிகிதம் பங்களிப்பைத் தந்தது. உலக அளவில் ஆடை மற்றும் அணிகலன்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு அடுத்ததாக மூன்றாவது இடம் வகிக்கிறது வங்கதேசம்.

தற்போது நவீனத் தொழில்நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளது. தென்கொரியாவுக்கு 12 தொழிற்துறை ரோபாட்டுகளை உருவாக்கிக்கொடுத்துள்ளது. கப்பல் கட்டுமானத்துறையிலும் பெரிய அளவில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் பெரிய கொள்ளளவுள்ள ரெஃப்ரிஜிரேட்டர்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளது.

இந்தியாவோடு போட்டி

தெற்காசியாவைப் பொறுத்தவரை, தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியில் இந்தியாவுக்குப் போட்டியாக உருவெடுத்துவருகிறது வங்கதேசம். அந்நாட்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதியில் 120 நிறுவனங்களுக்கு மேல் செயல்பட்டுவருகின்றன. உலகெங்கும் 35 நாடுகளுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்புக்கு வியாபாரம் நடக்கிறது.

2021-ம் ஆண்டுக்குள் ஏற்றுமதியின் மூலம் 5 பில்லியன் டாலர் வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆன்லைன் மூலமாகப் பணிகளைப் பெற்று ஃப்ரீலான்ஸராகப் பணியாற்றுபவர்களில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் வங்கதேசம் உள்ளது. அங்கு 6 லட்சம் பேர் ஐ.டி துறையில் ஃப்ரீலான்ஸர்களாகப் பணியாற்றுகிறார்கள்.

ஐ.டி துறை
ஐ.டி துறை

இணையத்தொடர்பைப் பொறுத்தவரை, நாம், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை முன்னெடுத்திருப்பதைப் போலவே வங்கதேசத்திலும் வரும் 2023-ம் ஆண்டுக்குள் அனைத்தையும் இணையவழிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளனர். இப்படித் திட்டமிட்டுச் செயல்படுவதன்மூலம், 2021-ம் ஆண்டுக்குள் வளர்ந்துவரும் நாடுகளில் முதன்மை பெறுவதையும், 2041-ல் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதையும் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தெற்காசிய அளவில் நமக்கான போட்டியாளர் பாகிஸ்தான் அல்ல; வங்காள தேசம்தான் என்பதும் தெரியவருகிறது.

Vikatan