Published:Updated:

'நம்மைக் காக்கும் 48' திட்டம்: சாலை விபத்து ஏற்பட்டால் எவ்வாறு உதவும்?! - ஒரு விரிவான பார்வை

தமிழகத்தில், சாலை விபத்து ஏற்பட்டால் `நம்மைக் காக்கும் 48’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், சாலை விபத்துகளைக் குறைப்பது தொடர்பாகவும் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், சாலை விபத்துகளைத் தடுப்பது குறித்தும், சாலை வடிவமைப்புகள் குறித்தும், சிறப்புச் சட்டங்களை இயற்றுவது தொடர்பாகவும், புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்தும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், மருத்துவத்துறை, போக்குவரத்துத்துறை, சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளும் இணைந்து வரைவுத் திட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. சாலைப் பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும் நடைமுறைக்குக் கொண்டுவரத் தேவையான நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களோடு, சாலைப் பாதுகாப்பு ஆணையம் (Road Safety Authority) என்ற பல்துறை நிபுணர்களை உள்ளடக்கிய அமைப்பு உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

போர்க்கால அடிப்படையில், சாலைப் பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளைக் களைவதும், புதிய தொழில்நுட்பங்களின் உதவியோடு அறிவியல்பூர்வமாக சாலை விபத்துகளைத் தவிர்ப்பதும் இந்த அமைப்பின் பிரதான நோக்கம். மேலும், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைக்கான செலவை அரசு மேற்கொள்ளும் வகையில், ``நம்மைக் காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்" என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இந்தத் திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 81 வகையான தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக, சாலையோரங்களில் உள்ள தனியார், அரசுத் தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்று மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடுத்த 12 மாத காலத்துக்குச் செயல்படுத்தப்படும். பின்னர் வருடாந்தர செலவுகளை மதிப்பாய்வு செய்து, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்துடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

`9 மாதக் குழந்தைக்கு ஹெல்மெட்'-பைக்கில் குழந்தையை அழைத்துச் செல்ல மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விபத்து நடந்தவுடன் எந்தவித தாமதமும் இல்லாமல் விபத்தில் சிக்கியவர்களைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும், அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். விரைவில், தமிழ்நாடு அவசர மருத்துவ சேவை சட்டம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், விரைவாக அணுகுதல், உயிர் மீட்பு சிகிச்சை, நிலைப்படுத்துதல், பாதிப்பைக் கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சைகள், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுத்தல், மறுவாழ்வு சிகிச்சை என ஐந்து அம்சங்கள் முக்கிய காரணிகளாக இருக்கும்.

சாலை விபத்து
சாலை விபத்து
மாதிரிப் படம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் `இன்னுயிர் காப்போம்-உதவி செய்’ திட்டம் செயல்படும். இந்தத் திட்டத்தில் நல்ல சாலைகள், நம்மைக் காக்கும் 48 மணி நேரம், அவசர மருத்துவ சேவைச் சட்டம் போன்றவை முக்கிய நோக்கமாக இருக்கும். தற்போதைய நிலையில் நம்மைக் காக்கும் 48 மணி நேரம் திட்டத்தில், முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் இல்லாதவர்கள்கூட இந்த திட்டத்தில் பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகள் உட்பட 609 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு