விளாடிவோஸ்க் என்ற அதிகம் கேள்விப்படாத நகரத்தின் பெயர், கடந்த இரு நாள்களாக இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சென்னை நகரத்துடன் இணைத்துச் சொல்லப்படுகிறது, இந்த ரஷ்ய நகரம். ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுகம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உள்ளது. ரஷ்யாவுடனான இந்தியாவின் கடல் வர்த்தகம் இதுவரை மும்பை - பீட்டர்ஸ்பர்க் நகரங்களுக்கிடையே நடைபெற்றுவந்தது. பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து புறப்படும் கப்பல், பால்டிக் கடலில் தொடங்கி ஆடம் வளைகுடாவுக்குள் நுழைந்து, அரபிக்கடலில் புகுந்து மும்பையை வந்தடையும். இதற்கு, சுமார் 8,675 நாட்டிக்கல் மைல் பயணிக்கவேண்டும்.

ரஷ்யாவிலிருந்து ஒரு சரக்குக் கப்பல் இந்தியா வந்தடைய கிட்டத்தட்ட 40 நாள்கள் ஆகும். சிரமமான கடல் வழிப் பயணம் காரணமாக, நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவைவிட சீனாவுடன்தான் அதிகம் வர்த்தகம் புரிந்துவருகிறோம். இந்த ஆண்டு, சீனாவுடன் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக வர்த்தகம் புரிந்துள்ளோம். ரஷ்யாவுடன் 2025-ம் ஆண்டுதான் 30 பில்லியன் டாலர்களுக்கு வர்த்தகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விளாடிவோஸ்க் - சென்னை கடல்வழி உருவாக்கப்படும்போது அதன் தொலைவு, 5,600 (10.300 கி.மீ) நாட்டிக்கல் மைல்கள்தான். கிட்டத்தட்ட 3,000 கடல்மைல்கள் குறைந்துவிடுகிறது. மிகப்பெரிய சரக்குக் கப்பல், மணிக்கு 20 முதல் 25 நாட் வேகத்தில் செல்லும். அப்படியென்றால், மணிக்கு 45 கிலோ மீட்டர் பயணிக்கும். ஆதலால் விளாடிவோஸ்க்கில் இருந்து சென்னைக்கு 10 முதல் 12 நாள்களில் வந்துவிடலாம். 20 நாட் வேகத்தில் பயணித்தால், அதிகபட்சமாக 14 நாள்களில் இந்தியா வந்துவிட முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிளாடிவோஸ்க் நகரம், ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 'ரஷ்யாவின் பிஹார்' என்று இந்தப் பகுதியைச் சொல்லலாம். ரஷ்யாவின் மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில், முன்னேற்றம் காணாத பூமி. வட கொரியா மற்றும் சீனாவுக்கு அருகில் உள்ள பெரிய ரஷ்ய நகரம், விளாடிவோஸ்க் . பசிபிக் கடலில், ரஷ்யாவின் மிகப் பெரிய துறைமுக நகரம் இது. ரஷ்ய கடற்படையின் பசிபிக் பிராந்தியத்தின் தலைமையகமும் இங்கே உள்ளது. இந்தப் பகுதியைத் தலைநகர் மாஸ்கோவுடன் இணைக்கும் புகழ்பெற்ற டிரான்ஸ் சைபீரியன் ரயில்வேயின் கிழக்குப் பிராந்திய தலைமையகமும் இருக்கிறது.

முக்கியமாக, ஆட்டோமொபைல் இங்கே அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது. விளாடிவோஸ்க் - சென்னை கடல்வழி என்று பார்த்தால், ஜப்பான் கடல், கொரிய தீபகற்பம், தென் சீனக் கடல் கிழக்கு சீனக் கடல், அந்தமான் வழியாக சென்னைக்கு வர முடியும். இடையே சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், மலாக்கா, தைவான், இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளும் உள்ளன. இதனால், சென்னைக்கும் இந்த நாடுகளுக்குமிடையே வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும். இந்தியப் பெருங்கடலில் வர்த்தகம் என்ற பெயரில் புகுந்து சீனா அடாவடிகளைச் செய்வதோடு, ஆதிக்கம் செலுத்தவும் முயல்கிறது. இப்போது, தென் சீனக் கடல் வழியாக இந்தியாவும் ரஷ்யாவும் வர்த்தகம் புரியப்போகின்றன. ரஷ்யாவுடனான வர்த்தகம் என்பதால், இந்த விஷயத்தில் சீனா, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்தியாவை கட்டுப்படுத்தவும் முடியாது.

ஏற்கெனவே, தென் சீனக் கடல் பகுதி நாடுகளுடனும் சீனா மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. அதனால், தென் சீனக் கடலில் இந்தியா நுழைவது, அந்த நாடுகளுக்கும் கொண்டாட்டமாகிவிடும். இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் வந்துபோவதுபோல தென் சீனக்கடலில் இந்தியக் கப்பல்கள் புகுந்து செல்லப்போகின்றன. இந்தியாவுடனான ரஷ்ய வர்த்தகம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயரவும் வாய்ப்புள்ளது.
ரஷ்யாவின் தூரகிழக்குப் பகுதிக்கு விசிட் செய்த முதல் இந்தியப் பிரதமர், மோடிதான். இந்தப் பகுதியின் மேம்பாட்டுக்காக ரஷ்யா நடத்தும் Eastern Economic Forum மாநாட்டிலும் பங்கேற்றார். ரஷ்யாவின் தூரகிழக்குப் பகுதி மேம்பாட்டுக்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா கடனாக அளிக்க முன்வந்துள்ளது.

விளாடிவோஸ்க் நகரில் இந்தியா, துணைத் தூதரகத்தையும் திறந்துள்ளது. இந்த நகரில் தூதரகத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா என்பதும் குறிப்பிடத்தக்கது. விளாடிவோஸ்க் நகரத்துடன் சென்னை கடல் வழியாக இணைக்கப்படுவது, வருங்காலத்தில் சென்னையும் மும்பைபோல பெரும் பொருளாதார பலம் கொண்ட நகரமாக மாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.