Published:Updated:

2019-ல் பா.ஜ.க அறிமுகப்படுத்திய திட்டங்களின் சாதக பாதகங்கள்- ஓர் அலசல்!

மோடி
மோடி

2019-ம் ஆண்டில், மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்திய திட்டங்களும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விளைவுகளும் குறித்த ஓர் அலசல்.

இந்திய அளவில், 2019-ம் வருடம் பல்வேறு தடங்களைப் பதித்துவிட்டுச் சென்றிருக்கிறது. 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல், 2019-ம் ஆண்டின் நிகழ்வுகளில் முக்கியமானது.

அரசியல் வரலாற்றின் திருப்புமுனையாக 2014-ம் ஆண்டு, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினர் இந்தியக் குடிமக்கள். 5 ஆண்டுகள் கழிந்து, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க தலைமையிலான அதே கூட்டணிக்கு அசுர பெரும்பான்மையை வழங்கியிருக்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மோடியும், 2019-ம் வருட இந்திய அரசியலில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், 2019-ம் வருடத்தில் மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசும்போது,

``வேலைவாய்ப்பை அதிகரித்து, அதன் தொடர்ச்சியாகப் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவருவோம் என்று வாக்குறுதி கொடுத்துதான் ஆட்சிக்கே வந்தது பா.ஜ.க. ஆனால், தகவல் தொடர்பு சேவைத்துறை மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் மட்டுமே இந்த வருடம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. மொத்தமாக, கடந்த 6 வருடங்களில் 90 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று புள்ளிவிவர ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

ஆட்டோமொபைல் துறையின் பொருளாதாரம் ஆரம்பத்தில் இருந்ததைவிடவும் 10.1 சதவிகிதம் கீழாகப் போய்விட்டது. இதேபோல், ரியஸ் எஸ்டேட் துறையிலும் முன்னேற்றம் இல்லை. கடந்த நவம்பர் மாத 1-ம் தேதி கணக்குப்படி, இந்தியாவில் இருக்கக்கூடிய 262 அனல்மின் உற்பத்தி நிலையங்களில் 133 நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. இதேபோல், மின் நுகர்வும்கூட இந்தக் காலத்தில் பெருமளவில் குறைந்துவிட்டது.

கிராமப்புற குடும்பவாரியான மாதாந்திர செலவுகளும்கூட, கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது. ஜிஎஸ்டி-யை அமல்படுத்தும்போது, `வரும் காலங்களில், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் அளவை படிப்படியாகக் குறைத்துக்கொள்வோம்' என்று மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தனர். மேலும், `ஜிஎஸ்டி வரி வசூலிப்பால், மாநில வருவாயில் ஏற்படும் குறைவை, மத்திய அரசே நிவர்த்திசெய்யும்' என்று மாநில அரசுகளுக்கும் உறுதி கொடுத்திருந்தார்கள். ஆனால் இப்போது, `மாநிலங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு ஜிஎஸ்டி வருவாய் இல்லை' என்று சொன்னவர்கள், `வரும் காலங்களில் ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க வரிவிகித அளவை மேலும் உயர்த்துவோம்' என்றும் சொல்லிவிட்டனர். இதற்கிடையில், ரிசர்வ் வங்கியிலிருந்து 1,45,000 கோடி ரூபாயைப் பெற்ற பிறகும்கூட இந்தியப் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க முடியவில்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

`மாநிலங்களின் ஒன்றியம் இந்தியா' என்ற நமது அரசியலமைப்புதான் இதுவரை பெருமைக்குரியதாக இருந்தது. மொழி வாரியாக ஒவ்வொரு இனமும் தனித்தனி மாநிலங்களாக வாழ்ந்துவருகிற சூழலில், அவரவருக்கென்ற சிறப்பு அந்தஸ்துகளும் பல காலமாக வழங்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்த ஒற்றுமையைச் சிதைக்கும் விதமாக, `ஒரே நாடு; ஒரே சட்டம்' என்று சொல்லி ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 -ஐ ரத்து செய்தார்கள். மேலும், `ஒரு மாநிலத்தின் பெயர் அல்லது பரப்பளவை மாற்றி அமைப்பது, இரண்டு மாநிலங்களை ஒன்றோடொன்று இணைப்பது உள்ளிட்ட மாற்றங்களைச் செய்யும் முன், சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றங்களில் இம்மசோதா குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற சட்ட விதியையே ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தின்போது நீக்கிவிட்டார்கள். இது, இந்தியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பேராபத்து.

கடந்தகால நாடாளுமன்றக் கூட்டங்களில் தாக்கல் செய்யப்படும் முக்கியமான மசோதாக்கள், தேர்வுக்குழு, நிலைக்குழு ஆகிய குழுக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படும். ஆனால், 2019ல் முதல் நாடாளுமன்றக் கூட்டம் முடிகிற வரையிலாக தேர்வுக் குழு, நிலைக்குழு உள்ளிட்ட எந்தக் குழுவும் அமைக்கப்படவில்லை. ஆனால், இதைக்கூட `நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு சட்டங்களை நாங்கள்தான் மாற்றியமைத்திருக்கிறோம்' என்று பெருமையாகச் சொல்கிறார்கள்.

Narendra Modi
Narendra Modi
Photo: AP

கல்வித்துறையைப் பொறுத்தவரை, `ஆரம்பக் கல்வியில் குழந்தைகளுக்கு எந்தவித தடையும் இருக்கக்கூடாது' என்பதைத்தான் உலக நாடுகள் அனைத்துமே கடைபிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும்தான் 5, 8-ம் வகுப்புகளிலேயே தரப்படுத்துதல் என்ற பெயரில், வடிகட்டுகிற நடைமுறையை அறிமுகப்படுத்திவிட்டார்கள் இவர்கள். மருத்துவக் கல்வியிலும்கூட, அனைத்து மாநிலங்களிலுமிருந்து 15 சதவிகித இடங்களை எடுத்துக்கொள்ளும் மத்திய அரசு, அந்த 15 சதவிகிதத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்கள்.

2014 தேர்தல் அறிக்கையிலேயே, `வங்கிகளின் வாராக் கடனை நாங்கள் குறைத்துவிடுவோம்' என்று வாக்குறுதி கொடுத்தது பா.ஜ.க. ஆனால், வரலாறு காணாத அளவுக்கு வாராக்கடனும் மோசடிகளும் அதிகரித்திருப்பது 2019-ம் ஆண்டில்தான்.

மோடி
மோடி
குடியுரிமை திருத்தச் சட்டம்: எளிதானப் புரிதலுக்கு விகடனின் சிறப்புக் கவரேஜ்!

தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றிணைத்து, 4 சட்டங்களாக மாற்றப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில், ஒரு தொழில் நிறுவனம் குறைந்தபட்ச கூலியைக் கொடுக்காத பட்சத்தில், தொழிலாளி ஒருவர் வழக்குத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபருக்கு தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், இனிமேல் தொழிலாளி ஒருவர், இப்படியான வழக்குகளையெல்லாம் தொடுக்கவே முடியாது. அரசே, தொழில் நிறுவனங்களைக் கண்காணித்து, தவறு செய்பவர்களைக் கண்டுபிடிப்பார்களாம். தவறுகளைத் திருத்திக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்துவார்களாம். யாருக்கும் தண்டனை எல்லாம் கிடையாது. இதுவரை 32 விதமான தொழிலாளர் நலச் சட்டங்களை இந்த 4 சட்டங்களுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.

அடுத்து, மோட்டார் வாகன திருத்தச் சட்டம் கொண்டுவந்து ஒட்டுமொத்தமாக நாடு முழுக்கவே அபராதம் என்ற பெயரில், பொதுமக்களைப் படாதபாடு படுத்திவருகிறார்கள். இதிலும்கூட மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக, பாராளுமன்ற ஜனநாயகம் அதிக அளவில் தாக்கப்பட்டிருப்பது 2019-ம் ஆண்டில்தான். மகாராஷ்டிரா அரசியலில், ஒரே நாள் இரவில் எல்லாவித முறைகேடுகளையும் நடத்திமுடித்து, காலையில் பா.ஜ.க-வை அரியணையில் அமரவைத்தார்கள். அடுத்த 3 நாள்களில், பா.ஜ.க முதல்வர் ராஜினாமா செய்தது வரலாற்றிலேயே இல்லாத கேலிக்கூத்து. இதுமட்டுமல்ல... நீதித்துறையிலும்கூட அதானி வழக்குகள் மற்றும் நீதிபதி நியமனம் உள்ளிட்ட விஷயங்களில் ஒட்டுமொத்த நீதி அமைப்பையுமே சீர்குலைத்தனர். இப்போது, `குடியுரிமை சட்டத் திருத்தம்' என்ற பெயரில், ஒட்டுமொத்த மதச்சார்பின்மையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்.

கனகராஜ்
கனகராஜ்

`வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதே...' என்று பிரதமரிடம் கேட்டால், `பக்கோடா விற்றுக்கொள்ளுங்கள்' என்கிறார்; `பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதே...' என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்டால், `சினிமா டிக்கெட் வசூல் 120 கோடி ஆகிறதே...' என்கிறார். `வெங்காயம் விலை உயர்வை'ப் பற்றிக் கேட்டால், `நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை' என்கிறார் நிதி அமைச்சர். `சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துவிட்டதே...' என்றால், `சுற்றுச்சூழல் மாசுவால், இந்தியாவில் யாரும் இறந்துபோய்விட்டதாக இதுவரை எந்த ஆய்வும் இல்லை' என்று `பொறுப்பாக'ப் பதில் சொல்கிறார் பிரகாஷ் ஜவடேகர்.

130 கோடி மக்கள் வாழ்கிற ஒரு நாட்டின் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்கள் எத்தகைய இடத்தில் இருக்கிறோம் என்ற அடிப்படை உணர்வுகூட இல்லாமல், கேலிக்கூத்துகளை அரங்கேற்றுவதும் அதுபற்றிய எந்தவித குற்றவுணர்ச்சியுமே இல்லாமலும் இருப்பதையெல்லாம் என்னவென்று சொல்வது?'' என்றார் குமுறலாக.

ஆளும் பா.ஜ.க அரசின் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணனிடம் பேசினோம்...

``2019-ம் வருடத்தில் பல சிறப்பான திட்டங்களை பா.ஜ.க அமல்படுத்தியிருக்கிறது. ஆனாலும் எங்களின் ஆதார அடிப்படைக் கொள்கையும் வேட்கையுமான `ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்டத் திருத்தம்' என இவை இரண்டும்தான் எங்களின் சாதனை மைல்கல்கள்.

திருப்பதி நாராயணன்
திருப்பதி நாராயணன்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட 2016-17-வது ஆண்டும் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்திய 2017-18-ம் ஆண்டிலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு அதிகரித்தே இருந்திருக்கிறது. தற்போதைய பொருளாதாரச் சரிவு என்பது உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையின் தாக்கம்தான். ஆனாலும் கடந்த மாதத்திலிருந்து இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பது புதிய நம்பிக்கையைத் தருகிறது.

முறைசாரா தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரம் ஏதுமில்லா சூழலில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்று எதன் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன என்பது தெரியவில்லை. விவசாய உற்பத்தியும் தனிநபர் வருமானமும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் 2019-ம் வருட நிலவரம். சிறுகுறு தொழில் முனைவோர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.

``அமானுஷ்யத்தில் நம்பிக்கை இல்லை!'' - 11 பேர் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் குடியேறிய தில் டாக்டர்

காங்கிரஸ் ஆட்சிக்காலமான 2008-ம் வருடத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் அளித்திருந்த கடன் தொகை 18 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே 2014-ம் ஆண்டு மார்ச் மாத கணக்கில், 54 லட்சம் கோடியாக உயர்ந்திருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் ரியல் எஸ்டேட் துறையிலும் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நில மதிப்பு அதிகரித்தது. இவையெல்லாம் செயற்கையாக ஊதி ஊதி பெருக்கப்பட்ட பொருளாதாரம்.

பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து போலியாகக் கடன் வாங்கியிருந்த நிறுவனங்களைக் கண்டறிந்து, வசூல் நடவடிக்கையை எடுத்தது பா.ஜ.க அரசுதான். குறிப்பாக, நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றோரின் சொத்துகள் முடக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது 10.5 ஆக இருந்த பணவீக்கத்தின் மதிப்பு, இந்த ஆண்டு 3.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

விஜய் மல்லையா
விஜய் மல்லையா
இந்தித் திணிப்பு முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் வரை... 2019-ல் தமிழகம் எதற்கெல்லாம் போராடியது?

ஜிஎஸ்டி வரிவிதிப்பை முடிவுசெய்யக்கூடியது அனைத்து மாநிலங்களும் உள்ளடங்கிய `ஜிஎஸ்டி கவுன்சில்'தான். எனவே, பா.ஜ.க அரசுதான் வரியை உயர்த்தப்போகிறது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அதேசமயம், பொருளாதார மந்த நிலை காரணமாகக் கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாத உபரி வரிவருவாய் போதிய அளவு வசூலாகாத காரணத்தால், மாநிலங்களுக்கான நிதியைப் பிரித்துக்கொடுப்பதில் தடை ஏற்பட்டது உண்மைதான். இது சகஜமான ஒன்றுதான்... இதுவும் விரைவிலேயே தீர்க்கப்பட்டுவிடும்.

தொழிலாளர் நலச் சட்டங்களில் நிலவிவந்த குழப்பங்களைச் சரிசெய்வதோடு, அதிக ஊதியம், பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு நல்ல அம்சங்களை உள்ளடக்கி, 4 புதிய சட்டங்களாக மாற்றியமைப்பதென்பது வரவேற்கக்கூடிய ஒன்று. ஆனால், அதையும்கூட அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன'' என்கிறார் நாராயணன்.

அடுத்த கட்டுரைக்கு