Election bannerElection banner
Published:Updated:

``ரெய்டு போகிற அளவுக்கு பாஜக தலைவர்கள் வசதியானவர்கள் இல்லை!'' - வானதி சீனிவாசன் புதுவிளக்கம்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

''ரெய்டு என்பது அ.தி.மு.க 4, தி.மு.க 2 என்று கட்சி ரீதியாக கணக்கு வைத்துக்கொண்டு செல்லும் விஷயம் அல்ல. வருமான வரித்துறையினருக்கு வருகிற தகவல்களைக்கொண்டுதான் ரெய்டு செல்கிறார்கள்'' என்கிறார் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்.

தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக அளவில் அனைவரின் கவனம் ஈர்த்த தொகுதி கோவை தெற்கு தொகுதி. ம.நீ.ம கட்சித் தலைவர் கமல்ஹாசன், பா.ஜ.க வானதி சீனிவாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் என 3 கட்சிகளைச் சேர்ந்த வி.ஐ.பி-கள் களம் காண்பதால், ஊடக வெளிச்சமும் தொகுதி முழுக்கப் பரவியிருந்தது.

கமல்ஹாசனின் ஆட்டோ பிரசாரம், பா.ஜ.க தலைவர்களின் அதிரடி பிரசாரம் என தொடர்ந்து லைம்லைட்டில் இருந்துவந்தது தொகுதி. இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரான வானதி சீனிவாசனிடம் பேசினோம்...

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

``மகளிர் அணித் தலைவரான வானதி சீனிவாசனுக்கு வாக்கு கேட்டு வந்ததால், 'பெண்கள் பாதுகாப்பு' பற்றிப் பேசவேண்டிய கட்டாயம் பிரதமருக்கும், உ.பி முதல்வருக்கும் ஏற்பட்டுவிட்டதோ...?''

``தி.மு.க-வின் ஆரம்பக் காலகட்டத்திலிருந்து இன்றைக்கு இளவரசராக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் வரையில் அந்தக் கட்சியில் உள்ளவர்களுக்கு பெண்களைப் பற்றிய பார்வையிலும் விமர்சனத்திலும் தனிக் கலாச்சாரம் இருந்துவருகிறது. பெண் அரசியல்வாதிகளையும் அரசியல்வாதி வீட்டுப் பெண்களையும் அவர்கள் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில்தான் `தி.மு.க ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு கேலிக்கூத்தாகிவிடும்' என்று பிரதமரும் உ.பி முதல்வரும் பேசியிருந்தார்கள்.''

``சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்புகிற தேர்தல் ஆணையம், பா.ஜ.க-வினருக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்புவதில்லையே... ஏன் இந்த பாரபட்சம்?''

``அப்படியில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்த நடிகர் ராதாரவி, கோவையில் அநாகரீகமான முறையில் பேசியதாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் கமிஷன் இதில் பாரபட்சம் பார்ப்பதாக எனக்குத் தெரியவில்லை.

தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த அண்ணாமலை எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்து வன்முறையைத் தூண்டுகிற விதமாகப் பேசினார் என்று சொல்கிறார்கள். தொகுதியில் அண்ணாமலைக்கு என்னவிதமான மிரட்டல்கள் இருந்தன என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், வெறுமனே அண்ணாமலையின் பேச்சை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வரமுடியாது.''

இந்து கோயில்கள்
இந்து கோயில்கள்

``இந்து கோயில்களை, அரசின் பிடியிலிருந்து மீட்டெடுப்போம் என பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்டிருப்பது எந்தவகையில் நியாயம்?''

``கோயில்களை தனித்து இயங்கும் வாரியத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது பா.ஜ.க-வின் நீண்டகால கோரிக்கை. அதாவது இந்து சமயத்தின் ஆன்மிகப் பெரியவர்கள், இந்து மத நம்பிக்கை கொண்ட சமுதாயப் பெரியவர்களை உள்ளடக்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.''

``கார்ப்பரேட் சாமியார்களின் சொத்துகளை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று `தெய்வத் தமிழ்ப் பேரவை' கோரிக்கை வைத்துள்ளதே?''

``மதமாற்றத்தின் வழியே நமது பண்பாட்டு விழுமியங்களிலிருந்து மக்களை வேறொரு திசைக்கு திருப்பிக் கொண்டிருப்பதை இந்த தெய்வத் தமிழ்ப் பேரவையினர் உணர்ந்திருக்கிறார்களா? ஏன் அதற்கு எதிராக இவர்கள் குரல் எழுப்பவில்லை. அடுத்து, கோயில் சொத்துக்கள் இத்தனை ஆண்டுகளாக கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஏதாவது ஒரு போராட்டத்தை இந்தப் பேரவையினர் முன்னெடுத்திருக்கிறார்களா?

இந்து மதத்தின் மீது நம்பிக்கையில்லாத அரசுகள், அறங்காவலர்களாக அரசியல் கட்சி சார்புடைய- மத நம்பிக்கையற்றவர்களை நியமிக்கிறார்கள். இதனால் கோயில் நிர்வாகம் முறையாக நடைபெறுவது இல்லை. இதற்காகத்தான் அரசிடமிருந்து கோயில் நிர்வாகத்தை மீட்டெடுக்க நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.''

இந்து அறநிலையத்துறை
இந்து அறநிலையத்துறை

``தற்போது இந்து அறநிலையத்துறையில் பணிபுரிவோரும் இந்துக்கள்தானே... இவர்களை மீறி எந்த இந்துக்களிடம் கோயில் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்கிறீர்கள்?''

``கோயிலுக்குச் சொந்தமான இடங்களில், மற்ற மதப் பிரசாரங்களுக்கு அனுமதி கொடுப்பதும், கோயில் பணியாளர்கள் மதமாற்ற விஷயங்களில் ஈடுபடுவதுமான புகார்கள் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. 'இது கூடாது' என்று உயர்நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் வெளிவந்த பின்னரும்கூட இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதானிருக்கிறது.

அடுத்து, மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக்கொண்டு சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது மட்டுமே பணி என்று செயல்படுகிற அரசுகள் இருக்கிறபோது, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு கோயில்களை இந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்ற உணர்வு எழுகிறது.''

கொரோனா ஊரடங்கு:  திரையரங்குகள் முதல் திருமண நிகழ்வுகள் வரை..! - புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

``கோயில் புனிதமான இடம் என்று சொல்கிறவர்களே 'கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது' எந்தவகையில் நியாயம்?''

``தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் தான் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை எதிர்த்து நாங்கள் மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குள் அமர்ந்து 'பிரார்த்தனை போராட்டம்' செய்திருக்கிறோம். நடைமுறையில் உள்ள மாதிரி கோஷம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணாமல், தேவாரம், திருவாசகம் போன்ற ஆன்மிக நூல்களைப் படித்து நூதனமான வழியில்தான் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். எனவே, இதுபோன்ற அறவழி ஆர்ப்பாட்டங்களை மற்ற நடைமுறை ஆர்ப்பாட்டங்களோடு ஒப்பிட வேண்டாம்.''

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``மாணவர்களை பயமின்றித் தேர்வெழுதச் சொல்கிற பிரதமர் மோடி, பத்திரிகையாளர்களை சந்திக்க மட்டும் பயப்படுவது ஏன்?''

``ஊடகத்தை ஒட்டுமொத்தமாக பிரதமர் புறக்கணிக்கிறார் என்று சொல்லமுடியாது. இப்போதும்கூட ஊடகத்தில் அவ்வப்போது பிரதமரின் பேட்டிகள் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆக, தேவைப்படுகிற நேரத்தில் தேவையான இடத்தில் எங்கு பதிலளிக்க வேண்டுமோ அங்கு பிரதமர் பதிலளிக்கிறார். மற்றபடி, பா.ஜ.க தொடர்பான செய்திகளை கட்சி நிர்வாகிகளும், அரசின் கொள்கை முடிவுகள் பற்றிய தகவல்களை மத்திய அமைச்சர்களும் தொடர்ச்சியாக தங்கு தடையின்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தே வருகின்றனர்.''

கீழடி: அகழாய்வில் கிடைத்த எலும்புக்கூடுகள்... மரபணு ஆய்வுக்கு உட்படுத்தும் பணிகள் தொடக்கம்!

``தேர்தல் சமயத்தில், அ.தி.மு.க., தி.மு.க தலைவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் ஒன்றுகூட பா.ஜ.க தலைவர்களது வீட்டுப்பக்கம் செல்லவேயில்லையே?''

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``ரெய்டு என்பது அ.தி.மு.க 4, தி.மு.க 2 என்று கட்சி ரீதியாக கணக்கு வைத்துக்கொண்டு செல்லும் விஷயம் அல்ல. வருமான வரித்துறையினருக்கு வருகிற தகவல்களைக்கொண்டுதான் ரெய்டு செல்கிறார்கள். மற்றபடி, ரெய்டு போகிற அளவுக்கு வசதியான தலைவர்கள் யாரும் பா.ஜ.க-வில் இல்லை. பா.ஜ.க-வின் 2 தலைவர்கள் வீட்டுக்கு ரெய்டு போகலாம் என்பது மாதிரி யாராவது 2 பேரை நீங்கள்தான் காட்டுங்களேன்...'' (சிரிக்கிறார்)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு