Published:Updated:

தினம் 12 மணிநேர வேலை... தளர்த்தப்படும் தொழிலாளர் சட்டங்கள்... வலுக்கும் எதிர்க்குரல்கள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( vikatan )

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவிலிருந்து மீள, தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினம் 12 மணிநேர வேலை... தளர்த்தப்படும் தொழிலாளர் சட்டங்கள்... வலுக்கும் எதிர்க்குரல்கள்

கொரோனா நெருக்கடியால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார சரிவிலிருந்து மீள, தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ( vikatan )

சமீப காலங்களில், மனிதகுலம் சந்தித்த மிகப்பெரிய பேரிடராக உருவெடுத்துள்ளது கொரோனா. நீடித்த ஊரடங்குகளால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விளிம்புநிலை மற்றும் பின் தங்கிய மக்களின் வருமானம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்குப் பல்வேறு சிறப்பு சலுகைகளையும் பலன்களையும் அரசுகள் அறிவித்து வருகின்றன. கொரோனாவுக்கு முன்பிருந்தே கடும் சரிவிலிருந்த இந்தியப் பொருளாதாரம், தற்போது நாடு தழுவிய ஊரடங்கால் கடும் தேக்க நிலைக்குச் சென்றிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துவருகின்றனர்.

கொரோனா
கொரோனா

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, சரிவிலிருக்கும் பொருளாதாரத்தை மீட்க, ஒவ்வொரு இந்தியரும் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு வாரம் 60 மணி நேரம் உழைக்க வேண்டும் என இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி நாராயண மூர்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது, இணையத்தில் விவாதப் பொருளானது. தற்போது, நாளுக்கு 8 மணி நேர வேலை என வாரம் நாற்பது மணி நேரம் பணி என்றே உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில அரசுகள், தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துவதற்கான பணிகளில் இறங்கியுள்ளன. உத்தரப் பிரதேச அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட சில சட்டங்களைத் தவிர்த்து, பெரும்பாலான தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்மூலம், எட்டு மணி நேரம் வேலை என்பது 12 மணி நேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஏற்கெனவே, காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் உட்பட, பல அரசுகள் வேலை நேரத்தை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளன.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
AP

மத்திய அரசின் ஒப்புதல் பெற்றால், இவை தற்காலிக சட்டங்கள் ஆகிவிடும். இது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஒருபுறம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பொருளாதாரத்தை மீட்க இது அவசியமானது என மறுபுறம் எதிர் கருத்து வைக்கப்படுகிறது. மத்திய அரசு, ஏற்கெனவே சுற்றுச்சூழல் சட்டங்களைத் தளர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அவசர சட்டம் தொடர்பாக சி.ஐ.டி.யூ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதன்மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பதும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தப்பட்டுவிடும். மேலும், நிறுவனங்களின் பாதுகாப்பான பணிச்சூழல் போன்றவற்றில் சமரசம் செய்யப்பட்டுவிடும். கொரோனா நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு அவசர சட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் செயலில் அரசு ஈடுபடக்கூடாது” என்றுள்ளது.

வி.சி.க, சி.பி.எம் உள்ளிட்ட ஏழு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், சீர்திருத்தம் என்கிற பெயரில் தொழிலாளர்களுக்கு விரோதமான கடுமையான அம்சங்களை அரசுகள் கொண்டு வர முயல்கின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், “பொருளாதாரத்தை மீட்கிறோம் என்கிற பெயரில் தொழிலாளர், சுற்றுச்சூழல் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது ஆபத்தான முடிவாக அமையும்” என்றுள்ளார்.

இதைப்பற்றி ட்வீட் செய்துள்ள ராகுல் காந்தி, “பல மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்திவருகின்றன. கொரோனாவை நாம் ஒன்றிணைந்து எதிர்கொண்டுவரும் சமயத்தில், இதை சாக்காகப் பயன்படுத்தி தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து, அவர்களின் குரல்களை முடக்கக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாளர் அமைப்பான பாரதிய மஜ்தூர் சங், இந்த திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக பொருளாதார துறைத் தலைவர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் பேசுகையில், “இந்தியாவில் ஏற்கெனவே உள்ள சட்டப் பாதுகாப்புகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரியும் 20% தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் 80% -க்கு அதிகமானோர், முறைசாரா துறைகளிலே எந்த விதமான பணி பாதுகாப்பும் இல்லாமல்தான் வேலை செய்துவருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த முறைசாரா துறைகளில் பணிபுரிபவர்கள்தான். தொழிலாளர் சட்டங்களைத் தளர்த்துவதன் மூலம், நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் அளவுக்கு அதிகமாக வேலைவாங்கி, நினைத்த நேரங்களில் பணியிலிருந்து நீக்கிவிட முடியும். முதலாளித்துவ நாடான அமெரிக்கா செய்த முதல் செயல், தொழிலாளர்கள் வேலை இழக்காமல் இருக்க அவர்களுக்காக ஊதியத்தை அரசே செலுத்தியது. வேலை இழப்பவர்களுக்கு Unemployment insurance என்பதைக் கொண்டு வந்தது. பல ஐரோப்பிய நாடுகளும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார நிவாரணமும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.”

பேராசிரியர் ஜோதி சிவஞானம்
பேராசிரியர் ஜோதி சிவஞானம்

“சில மாநிலங்கள் இவ்வாறு சட்டங்களைத் தளர்த்துவதனால் மற்ற மாநிலங்களும் தொழில்கள், முதலீடுகளை ஈர்க்க இதுபோல செய்வதற்கு நிர்பந்திக்கப்படுவர். இது, தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை மேலும் அதிகரிக்கவே செய்யும். பொருளாதாரத்தை சீர்படுத்த, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தி, அவர்களின் வருமானத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், அரசுகள் அதற்கு நேர்மாறாக ஏற்கெனவே உள்ள சட்டங்களைத் தளர்த்தி, தவறான திசையில் பயணிக்கின்றன. இது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும். கொரோனாவுக்கு முன்பே மக்களின் செலவு செய்யும் திறன் மிகவும் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சரிசெய்யவே முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism