Published:Updated:

நாயைக் கொல்வதற்கும் பி.எஸ்.என்.எல்-க்கும் என்ன சம்பந்தம் - அனந்த் குமார் ஹெக்டே பேசியது சரிதானா?

பி.எஸ்.என்.எல் ஓவியம்
News
பி.எஸ்.என்.எல் ஓவியம்

‘தேசத்துரோகிகள்’, ‘சோம்பேறிகள்’. ‘வேலை செய்யாதவர்கள்’ என்று பா.ஜ.க எம்.பி ஒருவர் தங்களைச் சகட்டுமேனிக்கு விமர்சித்ததால், பி.எஸ்.என்.எல் அதிகாரிகளும் ஊழியர்களும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

கர்நாடகாவைச் சேர்ந்த அனந்த் குமார் ஹெக்டே, பா.ஜ.க-வின் மக்களவை உறுப்பினர். ஆறு முறை எம்.பி-யான அவர், மத்திய அமைச்சராகவும் இருந்திருக்கிறார். உத்தர கன்னடா தொகுதி எம்.பி-யான இவர், சமீபத்தில் தன் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைக் கடும் சொற்களால் சாடினார்.

அனந்த் குமார் ஹெக்டே
அனந்த் குமார் ஹெக்டே

"பி.எஸ்.என்.எல் நெட்வொர்க் எப்படி இருக்கிறது என்பது மக்களுக்குத் தெரியும். உத்தர கன்னடாவில் பரவாயில்லை. ஆனால், பெங்களூருவுக்குச் சென்றால் நெட்வொர்க் சுத்தமாகக் கிடைப்பதில்லை. பி.எஸ்.என்.எல் நிறுவனம் நம் தேசத்தின் இழிவு. இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் துரோகிகள். இந்த நிறுவனத்துக்கு உள்கட்டமைப்பு இருக்கிறது. அரசு நிதி அளித்திருக்கிறது. ஆனால், ஊழியர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை. சோம்பேறிகளாக இருக்கிறார்கள். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைச் சரிசெய்வதற்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறோம். அதாவது, ஒட்டுமொத்தமாக 85,000 ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்துவிட்டு, இந்த நிறுவனத்தைத் தனியாரிடம் கொடுக்கப்போகிறோம். இது மட்டும்தான் தீர்வு. வேறு வழியில்லை” என்று அனலைக் கக்கினார் அனந்தகுமார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பரம்பரைப் பகையாளியைத் தீர்த்துக்கட்டுவதற்கான எச்சரிக்கையைப்போல அனந்த் குமாரின் பேச்சு அமைந்திருந்தது. அவர் பேச்சின் வீடியோ வைரலாகப் பரவியது. எம்.பி-க்கு எதிராக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் பொங்கியெழுந்து பல இடங்களில் ஆவேச ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் செயல்பாடுகளில் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விமர்சனங்கள் உண்டு. வாடிக்கையாளர்களிடம் சில ஊழியர்கள் அகம்பாவத்துடன் நடந்துகொள்வதும் உண்டு. தொலைபேசி இணைப்பில் பழுது என்றால், அது குறித்து புகாரைப் பதிவுசெய்வதற்கே பல போராட்டங்களை வாடிக்கையாளர்கள் நடத்த வேண்டியிருக்கும். பழுதை நீக்குவதற்கு பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்கு நடையாய் நடக்க வேண்டியிருக்கும். பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களில் பலருக்கும் இது போன்ற கசப்பான அனுபவங்கள் நிறையவே இருக்கும். அதே நேரத்தில், இது போன்ற பிரச்னைகள் இருந்தபோதிலும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அதன் வாடிக்கையாளர்கள் புறக்கணிப்பதில்லை. பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடம் தவறு என்றால், அவர்களுடன் வாடிக்கையாளர்கள் உரிமையுடன் சண்டையிடுவதும் உண்டு. பல பிரச்னைகள் இருந்தபோதிலும், பி.எஸ்.என்.எல் சேவையிலிருந்து வேறு சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்திருக்கிறது. ஏனென்றால், `பி.எஸ்.என்.எல் என்பது ஒரு பொதுத்துறை நிறுவனம்; அதன் சேவை தரமானது; கட்டணம் நியாயமானது’ என்ற நம்பிக்கைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படியிருக்கும்போது, ஒட்டுமொத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளையும் ஊழியர்களையும் `தேசத்துரோகிகள்’ என்றும், `வீணர்கள்’ என்றும் பொறுப்புள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே வசைபாடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அரசு முதலீடு செய்திருக்கலாம். ஆனால், இந்த மிகப்பெரிய கட்டமைப்புகளைக்கொண்ட, ஒரு சாம்ராஜ்ஜியத்தைப்போல இதை நிறுவனமாகக் கட்டியெழுப்பியவர்கள் இதே அதிகாரிகளும் ஊழியர்களும்தான் என்பதை அனந்த் குமாரால்கூட மறுக்க முடியாது. ஜியோ மாதிரியான பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் களமிறங்கியதற்குப் பிறகும்கூட, அவற்றுக்கு மத்திய ஆட்சியாளர்கள் அளவு கடந்த சிறப்பு சலுகைகள் அளித்துவரும்போதும்கூட, வலுவான கட்டமைப்பைக் கொண்ட நிறுவனமாக இன்றைக்கும் இருப்பது பி.எஸ்.என்.எல்தான்.

பி.எஸ்.என்.எல் அலுவலகம்
பி.எஸ்.என்.எல் அலுவலகம்

அனந்த் குமார் ஹெக்டே தன் பேச்சில், ‘அனைத்து வசதிகளும் கட்டமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், அதிகாரிகளும் ஊழியர்களும் வேலை செய்யத் தயாராக இல்லை’ என்கிறார். `பி.எஸ்.என்.எல் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்' என்று அவர் கூறுகிறார். அவருடைய கூற்றை முற்றிலும் நிராகரித்துவிட முடியாதுதான். அதே நேரத்தில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நலிவுக்கு அதுதான் காரணமா என்பது மிகப்பெரிய கேள்வி.

முந்தாநாள் ஆரம்பிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களெல்லாம் 4ஜி சேவை வழங்கிக்கொண்டிருக்கின்றன. நீண்டகாலமாக மக்களுக்கு சேவை வழங்கிவருகிற, ஒரு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்றுவரை 4ஜி சேவை வழங்கவில்லையே ஏன்..? ஏனென்றால், 4ஜி-க்கான உரிமத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு அரசு வழங்கவில்லை. ஆனால், அம்பானியின் ஜியோ மட்டும் வரும்போதே 4ஜியுடன் வருகிறது. இது என்ன விநோதம். இன்னும் சொல்லப்போனால், விரைவில் 5ஜி சேவையை ஜியோ வழங்கப்போகிறது. ஆனால், பி.எஸ்.என்.எல் இன்னும் 3 ஜி-யிலேயே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. அனந்த் குமார் ஹெக்டேக்கள் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

பி.எஸ்.என்.எல் விளம்பரம்
பி.எஸ்.என்.எல் விளம்பரம்

தெருவில் போகிற பிள்ளைகளுக்கெல்லாம் சோறுபோட்டுப் பசியாற்றும் ஒரு தாய், தான் பெற்ற பிள்ளையை மட்டும் பட்டினி போடுகிறாள் என்றால், அதை எப்படிப் புரிந்துகொள்வது? ‘அம்மா… பசி தாங்கவில்லை. எனக்கு சோறு போடு’ என்று பெற்ற தாயைப் பார்த்து குழந்தை கதறுகிறது. ‘எங்களுக்கு 4ஜி சேவை உரிமத்தை வழங்குங்கள்’ என்று மத்திய அரசைப் பார்த்து, கடந்த பல ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கதறிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றுவரை 4 ஜி கிடைக்கவில்லை. பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலிருந்து பணி செய்வது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. இதனால், பெரும்பாலான மக்களுக்கு இணைய சேவை மிக அத்தியாவசியமானதாக இருக்கிறது. ஆனால், 4ஜி சேவை இல்லாததால், தன் வாடிக்கையாளர்களின் தேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் பூர்த்திசெய்ய முடியவில்லை. இது பற்றிய பெரும் வருத்தத்துடன் நம்மிடம் பேசினார் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுத் தலைவரான பாபு ராதாகிருஷ்ணன்.

பி.எஸ்.என்.எல் ஓவியம்
பி.எஸ்.என்.எல் ஓவியம்

"பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருக்கும் கட்டமைப்பை எடுத்துக்கொண்டால் ஜியோ, ஏர்டெல் உட்பட ஒட்டுமொத்த தனியார் நிறுவனங்களிடமிருக்கும் கட்டமைப்பைவிட அதிகம். இந்தியா முழுவதும் 65,000 செல்போன் டவர்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், எங்களுக்கு 4ஜி சேவைக்கான உரிமம் வழங்கப்படாததால், அந்தக் கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. `ஃபைபர் டு ஹோம்’ என்கிற வீடுகளுக்கு நேரடியாக இணைப்பு தருகிற கேபிள் ஒன்றே முக்கால் லட்சம் கிலோமீட்டர் தூரத்துக்கு எங்களிடம் இருக்கிறது. இது போன்ற வசதி வேறு யாரிடமும் கிடையாது. ஆனால், இந்த இணைப்பைக் கொடுப்பதற்கு இப்போது எங்களிடம் ஆட்கள் இல்லை. இதுதான் நிலைமை.

2004 –2005 காலகட்டத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 கோடி லாபம் ஈட்டியது பி.எஸ்.என்.எல் நிறுவனம். இப்போது இருப்பதைவிட இரண்டரை லட்சம் ஊழியர்கள் அதிகமாக அப்போது இருந்தார்கள். அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் போக, நாளொன்றுக்கு ரூ.30 கோடி லாபம் ஈட்டினோம். அப்போது தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவரின் தவறான ஒரு நடவடிக்கையால் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட சரிவு, இன்றைக்கு பா.ஜ.க ஆட்சியில் அதளபாதாலத்துக்குக் கொண்டுபோய்விட்டது.

பாபு ராதாகிருஷ்ணன்
பாபு ராதாகிருஷ்ணன்

4ஜி சேவைக்கான உரிமம் வழங்கக் கோரி நாங்கள் நடத்தாத போராட்டங்கள் இல்லை. எதையும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஒருவழியாக, கடந்த ஆண்டு அரசு ஒரு முடிவுக்கு வந்தது. 4ஜி உரிமம் வழங்குவது உட்பட பல்வேறு உறுதிகளை அரசு அளித்தது. நிதி நிலைமையைச் சீர்படுத்த, `பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்களைக் குத்தகைக்கு விடுவதற்கு அனுமதி தர வேண்டும்’ என்று அரசிடம் கேட்டிருந்தோம். ஆனால், `நிலங்களை விற்றுக்கொள்ளலாம்’ என்று அரசு கூறியது. அதுபோல, `கடன் பத்திரங்களை வெளியிடலாம்’ என்றும் அரசு கூறியது. அப்போதுதான் வி.ஆர்.எஸ் திட்டத்தில் 80,000 பேரை வீட்டுக்கு அனுப்புவது என்ற முடிவையும் அரசு எடுத்தது.

அதன்படி, 80,000 பேரை வி.ஆர்.எஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை மட்டும் கச்சிதமாக நிறைவேற்றிய மத்திய அரசு, நிலங்களை விற்பதற்கும், கடன் பத்திரங்களை வெளியிடவும் இன்றுவரை அனுமதி தரவில்லை. தொழில்நுட்பத்தை அதிகரிக்க உபகரணங்களை வாங்க வேண்டும். தனியார் நிறுவனங்களெல்லாம் சீனா நிறுவனத்திடம்தான் உபகரணங்களை வாங்குகின்றன. பி.எஸ்.என்.எல்-லும் அதே சீன நிறுவனங்களிடம் உபகரணங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு காரணங்களைச் சொல்லி அனுமதி மறுக்கிறது மத்திய அரசு. எங்களிடம் 65,000 டவர்கள் உள்ளன. ரூ.15,000 கோடி செலவு செய்து, இந்த டவர்களில் சிறிய அளவில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்தால் போதும்... இந்தியா முழுவதும் எங்களால் 4ஜி சேவையை வழங்கிவிட முடியும்.

2019-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து சொசைட்டிக்காக எங்கள் சம்பளத்திலிருந்து பிடிக்கப்பட்ட பணம் இன்னும் சொசைட்டியில் செலுத்தப்படவில்லை. டவர்கள் நிறுவப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு வாடகை செலுத்தப்படவில்லை, மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்ற பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் எங்கள் டவர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டார்கள். மின்கட்டணம், வாடகை போன்ற பிரச்னைகள் இப்போது ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒப்பந்த ஊழியர்களுக்கு 14 மாதங்களாகச் சம்பளம் வழங்கவில்லை. அவர்களையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இப்போது, கோளாறுகளைச் சரிசெய்வதற்கு ஆட்களில்லை. மின்தடை ஏற்பட்டால் செல்போன் டவரில் ஏறி டீசல் ஊற்ற வேண்டும். அதற்கு ஆள் இல்லை. கேபிள் ரிப்பேரைச் சரிசெய்ய ஆள் இல்லை. இதனால் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளன. வி.ஆர்.எஸ் திட்டத்துக்கு ரூ.20,000 கோடியை அரசு கொடுத்தது. அந்தத் தொகையை இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்வதற்கு கொடுத்திருந்தால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மீண்டும் கம்பீரமான நிலைக்கு கொண்டுவந்திருக்கலாம்” என்று ஆதங்கத்துடன் பேசினார் பாபு ராதாகிருஷ்ணன்.

செல்போன் நம்பரை மாற்றாமல், சேவையை மாற்றக்கூடிய வசதி இருக்கிறது. அந்த வசதியைப் பயன்படுத்தி, வெளியே போகும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தில் மிகவும் குறைவாகவே இருந்தது. தனியார் சேவையிலிருந்து பி.எஸ்.என்.எல் சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைதான் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த நான்கு மாதங்களில் பி.எஸ்.என்.எல் சேவையிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு 50,000 வாடிக்கையாளர்கள் மாறியிருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது தமிழ்நாட்டில் மட்டும். அந்த அளவுக்கு பி.எஸ்.என்.எல் சேவை கடும் வெறுப்புக்கும் எரிச்சலுக்கும் ஆளாகிக்கொண்டிருக்கிறது.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி

இந்தப் பிரச்னைகள் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். "அனந்த் குமார் ஹெக்டேவின் பேச்சு தேவையற்றது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவிட்டது. நிச்சயமாக 4ஜி சேவையை வெகு விரைவில் பி.எஸ்.என்.எல் வழங்கும். இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான உபகரணங்களைச் சில சீன நிறுவனங்களிடம் வாங்குவதாக இருந்தது. இதற்காக அரசு ரூ.12,000 கோடி கொடுக்கவிருக்கிறது. ஆனால், சமீபத்தில் சீனாவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக டெண்டர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. நம் நாட்டில் பி.எஸ்.என்.எல்-தான் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள நிறுவனம். அதன் பிரச்னைகளைச் சரிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவிட்டோம். சில நடைமுறைச் சிக்கல்களால் தாமதம் ஏற்படுகிறது. 4ஜி மட்டுமல்ல, 5ஜி கொடுக்கவும் அரசு தயாராக இருக்கிறது. அதற்கு ரூ. 30,000 – 40,000 கோடி தேவைப்படும். அதைக் கொடுப்பதற்கும் அரசு தயாராக இருக்கிறது” என்றார்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் உயர் பொறுப்பு வகிக்கும் ஓர் அதிகாரியைச் சந்தித்தோம். "நான் முப்பது ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறேன். வளர்ச்சியின் உச்சத்தில் இருந்ததையும், தற்போது இருக்கும் நிலையையும் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. ஜியோ நிறுவனம் வரும்போதே 4ஜியுடன்தான் வருகிறது. ஆனால், எங்களுக்கு ஏன் 4ஜி உரிமம் இத்தனை காலம் வழங்கவில்லை. இதை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் நோக்கம். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஒழித்துக்கட்டிவிட்டால், அவர்கள் விரும்பும் தனியார் நிறுவனங்கள் முதலிடத்துக்கு வந்துவிடும்.

பி.எஸ்.என்.எல் ஓவியம்
பி.எஸ்.என்.எல் ஓவியம்

எனவேதான், எங்கள் நிறுவனத்தின் மிகப்பெரிய பலமாக இருந்த ஊழியர்களை ஒட்டுமொத்த வி.ஆர்.எஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பினார்கள். இனிமேல், நிறுவனத்தை காலிசெய்வது மிகவும் எளிதான வேலை. `ஒரு நாயைக் கொல்ல வேண்டுமென்றால், அது ஒரு பைத்தியம் என்று முதலில் நிறுவு’ என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அந்த வேலையைத்தான் அனந்த் குமார் ஹெக்டே போன்றவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்’’ என்று கவலையுடன் கூறினார்.

அனந்த் குமார் ஹெக்டே கூறுவது அரசின் திட்டமாகக்கூட இருக்கலாம். அதேநேரத்தில், பி.எஸ்.என்.எல் முற்றிலும் ஒழிக்கப்பட மாட்டாது என்பது மட்டும் நிச்சயம். `முழு உயிரும் போய்விடாமல், கொஞ்ச உயிர் ஒட்டிக்கொண்டிருக்கட்டும்’ என்று விட்டுவைத்திருப்பார்கள். `எங்களிடமும் தொலைத் தொடர்பு நிறுவனம் இருக்கிறது’ என்று ஆட்சியாளர்கள் சொல்லிக்கொள்ள ஒன்று வேண்டுமல்லவா!