ஒரே நாடு ஒரே அடையாளம், ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது ஒரே நாடு ஒரே டிஜிட்டல் ஐடி என்ற புதிய முன்னெடுப்பு ஒன்றை மத்திய அரசு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எப்படி இந்தியாவில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாள அட்டையாக ஆதார் எப்படிக் கொண்டுவரப்பட்டதோ, அதேபோல் டிஜிட்டலாகவும் நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து ஒரே ஐடியின் கீழ் பயன்படுத்தும் வகையில் திட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலம் நம்மிடம் இருக்கும் மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசின் அடையாள ஆவணங்களையும் ஒரே டிஜிட்டல் ஐடியின் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நம்மிடம் இருக்கும் அடையாள அட்டைகளான ஆதார், பாஸ்போர்ட், பான் கார்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களை அனைத்தையும் இணைத்து, ஒவ்வொருவருக்கும் தனித்துவமான டிஜிட்டல் ஐடி ஒன்றை வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். நம்முடைய ஆதார் அட்டையில் இருக்கும் ஆதார் எண் எப்படித் தனித்துவமானதோ, எப்படி நமக்கு மட்டும் உரியதோ, அதே போல இந்த டிஜிட்டல் ஐடியும் நமக்கு மட்டுமே உண்டான தனித்துவமான ஒரு டிஜிட்டல் அடையாளமாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் எந்தவொரு சேவையையும் டிஜிட்டலாக நாம் பெற வேண்டும் என்றால் நம்முடைய தனித்துவமான இந்த டிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்தியே நம்மால் அதனைச் செய்ய முடியுமாம். மேலும், ஆதார், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை நாம் பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதையும் நம்முடைய டிஜிட்டல் ஐடியைக் கொண்டே நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, நமக்குப் பல வங்கிக் கணக்குகள் இருந்தாலும், அவற்றை வைத்து நம்முடைய மொபைல் எண்ணைக் கொண்டே UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்கிறோம் அல்லவா, அதே போல ஒரு ஒரு டிஜிட்டல் ஐடியைக் கொண்டு நம்முடைய ஆவணங்களில் தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பரிந்துரைத்துள்ள இந்தப் புதிய டிஜிட்டல் ஐடி முறைக்கான வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. India Digital Ecosystem Architecture 2.0 (InDEA 2.0) திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாகவே இந்த டிஜிட்டல் ஐடிக்கான பரிந்துரையை முன்வைத்திருக்கிறது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம். IndEA திட்டமானது அரசு சேவைகளை டிஜிட்டலாக வழங்குவதற்காக 2018-ல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் மேம்படுத்தப்பட்ட வடிவமாகவே தற்போது இந்த InDEA 2.0 திட்டத்தை முன்வைத்திருக்கிறது MeitY. InDEA 2.0 திட்டம் குறித்த வரைவை தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது MeitY. இந்த வரைவு குறித்த கருத்துக்களை மக்கள் பிப்ரவரி 27-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் MeitY-ன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் InDEA 2.0 வரைவைப் படிக்க/பதிவிறக்கம் செய்ய இங்கே கிளக் செய்யவும்.

தற்போது மத்திய அரசால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய முறை பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், இந்த முறை குறித்த பாதுகாப்பு மற்றும் பயனர்களின் பிரைவசி தொடர்பான அம்சங்கள் எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. தற்போது இது தொடக்க நிலையில் இருப்பதால் இது குறித்த முழுமையான தகவல்களும் எதுவும் இல்லை. இந்தப் புதிய டிஜிட்டல் ஐடி முறை குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் போதுதான், இது எப்படிப்பட்ட திட்டம் என்பது நமக்குத் தெரியவரும்.
இந்தத் திட்டம் குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.