Published:Updated:

`புள்ளிவிவரங்களில் அரசியல் தலையீடு?'- விமர்சனங்களுக்குப் பிறகு சீர்திருத்தக்குழு அமைத்த மத்திய அரசு!

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

அரசுக்கு வழிகாட்டுவது மட்டுமன்றி, ஒரு அரசின் ஆட்சிக்காலத்தில் நாடு எப்படிச் செயல்படுகிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன புள்ளியியல் துறையின் விவரங்கள். தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில் புள்ளியியல் துறையின் தன்னாட்சி பறிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடு. இந்தியாவில் வாழும் 134 கோடி மக்களை நிர்வகிக்க, இந்திய அரசு தெளிவான திட்டங்களைத் தீட்ட வேண்டும். பொருளாதாரம், சமூகம், சுகாதாரம், சட்டம் ஒழுங்கு முதலான அனைத்து அம்சங்களையும் ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல இந்தத் திட்டங்கள் மத்திய அரசால் உருவாக்கப்படுகின்றன. ஒரு நாடாக இந்தியா எப்படி செயல்படுகிறது, ஒவ்வொரு சமூகமும் எப்படி இயங்குகின்றன, அரசின் திட்டங்கள் எப்படி மக்களைச் சென்று சேர்கின்றன முதலானவற்றை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டது புள்ளியியல் துறை. புள்ளியியல் துறை வெளியிடும் தரவுகளும் எண்களுமே அரசை வழிநடத்துகின்றன.

அரசுக்கு வழிகாட்டுவது மட்டுமன்றி, ஒரு அரசின் குறிப்பிட்ட பதவிக் காலத்தில் அது வகுத்த கொள்கைகள், திட்டங்கள் ஆகியவற்றின் வழியில் நாடு எப்படிச் செயல்படுகிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றன புள்ளியியல் துறையின் எண்கள். தற்போதைய பி.ஜே.பி ஆட்சியில், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ ஆகியவற்றின் வரிசையில், புள்ளியியல் துறையின் தன்னாட்சி பறிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

ஜி.டி.பி
ஜி.டி.பி

2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு, நிதி ஆயோக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. தேசிய புள்ளியியல் ஆணையம் கடந்த ஆண்டுகளில் கணித்து வைத்திருந்த ஜி.டி.பி எண்ணிக்கைகளைத் திருத்திய நிதி ஆயோக் அமைப்பு, புதிய ஃபார்முலாவைப் பயன்படுத்தி ஜி.டி.பி-யைக் கணக்கிடுவதாகக் கூறியது. இது கள நிலவரத்தைவிட அதிக ஜி.டி.பி எண்ணைக் காட்டுவதற்காகச் செய்யப்பட்டதாக அப்போதே சர்ச்சைகள் எழுந்தன.

எங்கள் பணியை எங்களால் செய்ய முடியவில்லை. சமீப காலங்களில் எங்கள் துறை ஓரம்கட்டப்படுவதோடு, நாங்கள் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை.
பி.சி.மோகனன், தேசிய புள்ளியியல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்

இந்தியப் பொருளாதாரத்தை அளவிடுவதற்காக, நாட்டின் ஒட்டுமொத்த ஜி.டி.பி, வேலைவாய்ப்பு, வறுமை, சுகாதாரம், கல்வி ஆகிய ஐந்து அம்சங்களின் புள்ளிவிவரங்களும், தரவுகளும் சரியாக இடம்பெற வேண்டும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இவற்றின் புள்ளிவிவரங்கள் சரியாக இருப்பதே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்; மேலும், இந்தப் புள்ளிவிவரங்கள் மக்களுக்கு எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும். புள்ளிவிவரங்களில் அரசு வெளிப்படைத்தன்மையோடு இருப்பதே ஜனநாயகத்தின் அடையாளம்.

பி.சி.மோகனன்
பி.சி.மோகனன்

கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பி.சி.மோகனன் இந்தியப் புள்ளியியல் பணிக்குழு உறுப்பினர் ஜே.வி.மீனாட்சி ஆகியோர் பதவி விலகினர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2017-18-ம் ஆண்டின் வேலையின்மை குறித்த தரவுகளைத் தேர்தலைக் காரணம் காட்டி வெளியிடாமல் தாமதிப்பதால், பதவி விலகுவதாக அறிவித்தனர். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பி.சி.மோகனன் பதவி விலகும்போது, "எங்கள் பணியை எங்களால் செய்ய முடியவில்லை. சமீப காலங்களில் எங்கள் துறை ஓரம் கட்டப்படுவதோடு, நாங்கள் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இல்லை" என்றார்.

பி.சி.மோகனன் பதவி விலகிய சில வாரங்களில், ஏறத்தாழ உலகம் முழுவதிலுமிருந்து 108 பொருளாதார வல்லுநர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். கடந்த ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ தம்பதியும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். அந்தக் கடிதத்தில், "இந்தியாவின் புள்ளியியல் துறை மீதான தேசிய, சர்வதேச நம்பிக்கை தகர்ந்து வருகிறது. அதைவிட, பொருளாதார திட்டங்களை வகுப்பதற்காக சேகரிக்கப்படும் புள்ளியியல் தரவுகள், அரசியல் ரீதியாக மாற்றப்படுகின்றன" என்று வருத்தம் தெரிவித்திருந்தனர்.

பொருளாதார மந்தநிலை
பொருளாதார மந்தநிலை

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமராக மோடி மீண்டும் வென்ற 6 மாதங்களுக்குப் பிறகு, வேலையின்மை குறித்த தகவல்கள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் பதவி விலகிய போதும், பொருளாதார வல்லுநர்கள் கடிதம் எழுதியபோதும் அமைதி காத்த மத்திய அரசு, வேலையின்மை குறித்த தகவல்களை வெளியிட்டபோது கருத்து தெரிவித்தது.

"சர்வே எடுக்கப்படும் முறைகளைப் புதிதாக மாற்றியுள்ளதால், புள்ளிவிவரங்களைக் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடக் கூடாது" என்றது மத்திய அரசு. எனினும், ஒப்பிட்டுப் பார்த்தபோது, கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்தியா முழுவதும் வேலையின்மை பெருகி இருந்தது தெரிய வந்தது.

இந்தியா முழுவதும் வாழும் மக்கள் செலவு  செய்யும் விவரங்களின் அடிப்படையில் நாட்டின் சாமான்ய மக்களின் பொருளாதார வளர்ச்சி கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் தேசிய புள்ளியியல் துறை ஆண்டுதோறும் ஆவணம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு, மக்களின் செலவு குறித்த மத்திய அரசின் ஆவணம் வெளியிடப்படவில்லை. வட இந்திய ஆங்கில ஊடகங்களில் கசிந்த இந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, 40 ஆண்டுகளில் முதன்முறையாக மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளது தெரிய வந்தது. ஏறத்தாழ 200 பொருளாதார அறிஞர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி, இந்தத் தரவுகள் வெளியிடப்பட வேண்டும் எனவும், இதில் அரசியல் செய்வது உகந்தது அல்ல எனவும் கூறியிருந்தனர். எனினும் தற்போது வரை, இந்தத் தரவுகள் குறித்த கணக்கெடுப்பில் பிழை இருப்பதாகவும், தரம் குறைந்துள்ளதாகவும் கூறி, அதை வெளியிடாமல் தடுத்து வருகிறது மத்திய அரசு.

மோகன் பகவத்
மோகன் பகவத்

2017-ம் ஆண்டின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் குற்றச் செயல்கள் குறித்த தரவுகள் கடந்த 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்டன. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் தாமதமாக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் பல்வேறு தரவுகள் விடுபட்டிருந்தன. கும்பல் படுகொலைகள், சமூகத்தில் அதிகாரம் பெற்ற மனிதர்களால் நிகழ்த்தப்படும் கொலைகள், 'காப்' பஞ்சாயத்து தீர்ப்புகளால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள் முதலானவை வெளியாகவில்லை. இந்த தரவுகள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், "சில வன்முறைச் சம்பவங்களைக் கும்பல் படுகொலை எனப் பெயரிட்டு அழைக்கிறார்கள். இது இந்தியாவை அவமானப்படுத்துவதற்கே பயன்படுகிறது" எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளில், நாடு முழுவதும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை.

`புதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்!' -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்

சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எஃப் இந்தியாவில் இருந்து வெளிவரும் புள்ளிவிவரங்கள் தாமதமாகவே சமர்ப்பிக்கப்படுவதாகவும், சில சமயங்களில் முறையாக சமர்ப்பிக்கப்படுவதில்லை எனவும் கடந்த 2019ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்தது, மத்திய அரசுக்கு மிகப்பெரிய அழுத்தமாக அமைந்தது.

இத்தனை சர்ச்சைகளுக்குப் பிறகு, புள்ளியியல் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக ஆய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது மத்திய அரசு. முன்னாள் தலைமை புள்ளியியல் அறிஞர் பிரணாப் சென் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் 28 அறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பி.ஜே.பி அரசு புள்ளியியல் துறையில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதைக் கண்டித்து கடிதம் எழுதிய பொருளாதார அறிஞர்களுள் சிலரும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை முதலான பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை பயன்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவு
ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறைவு

ஒரு பக்கம் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு என நாட்டின் ஒவ்வொரு குடிமகன் குறித்த தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் வலுக்கட்டாயமாகப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறது மத்திய பி.ஜே.பி அரசு. மக்களின் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதிலும், அவற்றிற்காக பெரும் பணத்தையும் ஒதுக்கி, 'யார் இந்தியாவின் குடிமக்கள்?' என்று நிரூபிப்பதில் முனைப்பு காட்டும் பி.ஜே.பி அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக கணக்கிடப்படும் புள்ளிவிவரங்களில் அரசியல் கலக்காமல், வெளியிட்டால் மட்டும் போதும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

இத்தகைய புள்ளி விவரங்களையெல்லாம் வெளியிடத் தேவையில்லை என்று ஒரு சட்டத்திருத்தத்தை அரசு கொண்டு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அடுத்த கட்டுரைக்கு