Published:Updated:

`அவர்களால் மக்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை; பயிற்சியும் இல்லை!’-தனியார்மயமாக்கப்படுகிறதா மெட்ரோ?

கலிலுல்லா.ச

அவுட்சோர்ஸிங் முறையில் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு எந்தவித பயிற்சியும் இல்லை. முறையான பயிற்சி இல்லாதது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

Metro rail
Metro rail

மெட்ரோ நிர்வாகம் தரப்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், நிலையப் பொறுப்பாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. `மெட்ரோ தனியார்மயமாக்கப்பட உள்ளது’ என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்புப் பணிகளில், தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் முக்கியப் பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் நிரந்தரப் பணியாளர்களிடையே தங்கள் வேலைக்கான ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

metro
metro

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் பணியாளர்கள் சங்கத்தைச்சேர்ந்த பெயர் கூற விரும்பாத ஒருவர் பேசுகையில்.``மெட்ரோ ரயில் நிலையத்தை முழுமையாக தனியார்மயமாக்கும் நோக்கத்தில்தான் செயல்படுகின்றனர். வேலைவாய்ப்பு இழப்பு என்பதையும் தாண்டி, இட ஒதுக்கீடு அடிப்படையில் இங்கு யாருக்கும் வேலை கிடைக்காது. ஊதியமும் குறைவாகத்தான் கொடுத்துவருகிறார்கள். சென்னை மெட்ரோவைப்பொறுத்தவரை 32 நிலையங்கள் உள்ளன.

இதில் மொத்தம் 250 நிரந்தரப் பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். 2013-ம் ஆண்டு வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2016-ம் ஆண்டு 250 பேரும் பணியில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 7 ஸ்டேஷன்களுக்கான பணியாளர்கள் மட்டும்தான். 32 ஸ்டேஷன்களைப் பொறுத்தவரை 1200க்கும் அதிகமான நிரந்தரப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், மீதி உள்ளவர்களை அவுட்சோர்ஸிங் முறையில் பணியமர்த்துகின்றனர். ஒவ்வொரு வேலைக்கும் தனியாரிலிருந்து ஆள்களை பணியமர்த்துகின்றனர். இப்படி அவுட்சோர்ஸிங் முறையில் ஆள்களை நியமித்தால், பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடுகிறது. 2014-ம் ஆண்டு வேலைக்குத் தேர்வானவர்கள் அனைவரும் டெல்லியில் பயிற்சி பெற்றவர்கள்; மேலும் பெங்களூரிலும் அவர்களுக்கு 1 மாத கால பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதற்கென தனியான இன்ஸ்டிட்யூட் வைத்து நடத்துகின்றனர். அப்படி பயிற்சி பெற்றுவந்தவர்கள்தான் இப்போதிருக்கும் நிரந்தரப் பணியாளர்கள். ஆனால், இதே அவுட்சோர்ஸிங் முறையில் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு எந்தவித பயிற்சியும் இல்லை. முறையான பயிற்சி இல்லாதது பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

metro
metro
`நிலாவில் தண்ணீரைக் கண்டுபிடித்தால்..!’ - இஸ்ரோவுக்கு சென்னை மெட்ரோ கோரிக்கை!

இதை நாங்கள் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறோம். எங்கள் கேள்விக்கு இதுவரை நிர்வாகம் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இப்போது எடுத்திருக்கும் முடிவு என்பது 3 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டதுதான். 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிரந்தரப் பணியாளர்களில் 60 பேர் 3 ஆண்டுகள் கழித்தும் இன்னும் பணியமர்த்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றமும் அவர்களுக்கு பணி வழங்கவேண்டும் என உத்தரவிட்டது. அப்போது, சிம்ஆர்எல் தரப்பில் ஸ்டேஷன் கன்ட்ரோலர் என்ற பதவியே இப்போது இல்லை என்று கூறிவிட்டனர். அதற்கு பதிலாகத்தான் இப்போது தனியாரிடமிருந்து, நிலைய பொறுப்பாளர் அதாவது ஸ்டேஷன் இன்சார்ஜ் என்ற புதிய பொறுப்பை உருவாக்கி ஆள்களை எடுத்துள்ளனர். இருவருக்கும் ஒரே வேலைதான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஆதங்கப்படுகிறார்.

மெட்ரோ ரயில்நிலையம் தரப்பில் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இது தனியார்மயம் என்பது முற்றிலும் தவறானது. நிலைய கட்டுப்பாட்டாளர் (station controller) அவர் அங்கேயே இருப்பார். இப்போது புதிதாக நியமிக்கப்படக்கூடியவர் நிலைய பொறுப்பாளர் (Station incharge). இதனால் நிலைய கடுப்பாட்டாளருக்கு எந்தவித பாதிப்போ, பணியிழப்போ ஏற்படப்போவதில்லை. முதல்கட்டமாக 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் நிலைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

metro
metro
சென்னை மெட்ரோ ரயில் - அறிந்ததும் அறியாததும்!

அடுத்து 9-ம் தேதி முதல் 9 ரயில்நிலையங்கள் என ஒவ்வொரு கட்டங்களாகப் பணிநியமனங்கள் நடைபெறும். இதில் தனியார்மயம் என்பதற்கு வேலையில்லை. நிரந்தரப் பணியாளர்களுக்கு எந்த அளவுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதோ, அதைவிட கூடுதல் பயிற்சி வெளியிலிருந்து நியமிக்கப்படும் பணியாளர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. நம்ம மெட்ரோவைப்பொறுத்தவரை, மத்திய, மாநில அரசுகள் இணைந்த நிர்வாகம். தனியாருக்கு இங்கே வேலையில்லை. நிரந்தரப் பணியாளர்களை வைத்துக்கொண்டு மட்டும் எல்லா வேலைகளையும் செய்துவிட முடியாது. கூடுதல் பணியாட்கள் தேவைப்படுகின்றனர். அதனால் வெளியிலிருந்து ஆள்களை நியமிக்கவேண்டியிருக்கிறது” என்றார்.